Monday, December 19, 2011

தங்கிய தங்கப் பூக்கள்


sri venkatesh











தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்
கரி சேர் பூம்பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!
அரியே! வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.

உண்மையான பக்தியே விரதத்திற்கு தேவையான பொருள்.
 தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. , 
பாவச்சுமை தாங்காத பூமாதேவிக்கு அனுக்கிரகம் செய்ய, சீனிவாசன் எனும் பெயரில் பெருமாள் அவதாரம் எடுத்து. திருப்பதி மலையில் தங்கினார்.
திருப்பதி மலையின் அருகிலுள்ள கிராமத்தில், பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், சீனிவாசனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக இவர் உறுதியேற்றுக் கொண்டார்.

ஆனால், இதற்கு பலனாக, "மிக உயர்ந்த செல்வம்...' வேண்டும் என, அவர் பெருமாளிடம் வேண்டுதல் வைத்தார். அது என்ன தெரியுமா?
பெருமாளின் திருவடியிலேயே நிரந்தரமாக வசிக்க வேண்டும் என்பது தான்.
இவர் தினமும் மண்பாண்டம் செய்வார் அல்லவா... பாண்டம் செய்து முடித்த பிறகு, கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை வீணாக்க மாட்டார். அந்த மண்ணைக் கொண்டு சிறு, சிறு பூக்கள் செய்வார். திருப்பதி பெருமாளை மனதில் எண்ணி, தன் முன் இருந்த மண் சிலைக்கு,"ஏடுகுண்டல வாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, பத்மநாபா, சீனிவாசா...' என்றெல்லாம் பெருமாளின் திருநாமங்களைச் சொல்லி, திருப்பதி பெருமாளின் திருவடியிலேயே அந்த மண் பூக்களை தூவுவதாக பாவனை செய்து, தூவி பிரார்த்திப்பார்.
மண் எடுத்துப் பிசைந்து
அளவாய் நீர் சேர்த்துகுடமொன்று ஏற்றி
குவிவாய் வாய் செய்துகனக்கக் கனக்க
பாண்டம் பிசையும் தொழில்
பாரினிலே படைத்தல் தொழில்
காக்கும் திருமாலாம் சீனிவாசனுக்கு
படைக்கும் பிரம்மாவாய் குயவனார் 
வணைந்து திருவடியில் அளவற்ற அன்புடனும் 
அளக்கலாகா பக்தியுடனும் அர்ப்பணித்த மண்வண்னப்பூ...

பொன் வைத்த இடத்தில் 
பூ வைத்து பக்திசெலுத்தினான் பீமன்..


மண்ணாயினும் மனிதனாயினும்
படைப்பு உயிராகும்
சொல்லாயினும் எழுத்தாயினும்
பொருள் கொண்டால் படைப்பாகும்.
பக்தி சேர்த்து குழைத்ததால் பொன்னினும் 
மகிமைமிக்கதாகிவிட்டன மண்பூக்கள்....

அப்போது, திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான் தொண்டைமான் எனும் மன்னன் ஒருநாள் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான். பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப் பூக்களை உபயமாக அளித்திருந்தான்.

அங்கு போய் பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன. தங்கப் பூக்களை அர்ச்சகர்கள் அபகரித்துக் கொண்டனரோ என சந்தேகப்பட்டான். எனவே, காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான்.
மறுநாள் அவன் சன்னிதிக்கு வந்தான். அப்போதும், மண்பூக்களே பெருமாளின் திருவடியில் கிடந்தன. குழம்பிப் போன அவனது கனவில், சீனிவாசன் தோன்றினார். "மன்னா... பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன் மண் பூக்ககளால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும், மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன...' என்றார்.
மறுநாளே, பீமனைப் பார்க்க சென்றான் மன்னன் . அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார்.
  "எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள் கூட கிடைக்கவில்லையா?' என்றான்.
"அரசே... நான் பரம ஏழை. இந்த வேலையை விட்டு, விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம் செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில் தவிக்கும். அதனால் தான், என்னிடம் என்ன இருக்கிறதோ, அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன். கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும் தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே என் நோக்கம்...' என்றார்.
இதைக் கேட்ட தொண்டைமான் மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். 

ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். 
அந்த நாள் புரட்டாசி சனிகிழமை.. எனவே புரட்டாசி சனிக்கிழமைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன..

நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார். 

இதனால் தான், இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப் பாத்திரங்கள் எதுவும் குலசே கரப்படியைத் தாண்டச் செல்லாது. 


ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட புனித மண் சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற் றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.











19 comments:

  1. கண்ணுக்கினிய படங்கள் தெரிந்திராத தகவல்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மண் சட்டியில் நைவேத்தியம் படைக்கப்படுவதற்கான, இது வரை அறியாத, காரணத்தை அழகாக விளக்கிவிட்டீர்கள்.நன்றி.

    ReplyDelete
  3. மனம் கவரும் படங்கள்.அனைத்து தகவல்களும் எனக்கு புதியவை.

    ReplyDelete
  4. பீமன் என்ற பெயரில் பக்திமானாக விளங்கிய ஏழைக்குயவன் ஒருவரின் சரித்திரத்தை நன்கு அறிய முடிந்தது.

    படங்கள் யாவும் வழக்கம் போல மிகச் சிறப்பாக உள்ளன. நன்றி.

    ReplyDelete
  5. நல்ல ஒரு பூ - கதையும் பக்தியும். மிக அருமையான படங்களும: மிக்க நன்றி சகோதரி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. மண்பூக்கள் பொன்பூக்களாய் மாறிய
    அற்புதக் கதை....

    ReplyDelete
  7. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    திருப்பதி தரிசனம் அருமை - படங்கள் அத்தனையும் சூப்பர் - வை.கோ கொஞ்சம் பிஸி போலிருக்கிறது. ஆமாம் உலகிலேயே பணக்கார சாமியான் வெங்கடாசலபதிக்கு மண் சட்டியில் தயிர் சாதம். ..... ம்ம் - இது தான் திருவிளையாடலா ..... தத்துவங்கள் புரிந்து கொள்வது தனித் திறமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. படங்களை விட்டுக் கண்ணை எடுக்க முடியலை.. அத்தனையும் அழகு.

    ReplyDelete
  9. அருமையான தகவல்கள் படங்கள் சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  10. தயிர்சாதக் கதை இந்தப் பதிவுல வருதா? நன்றி.
    நடுவில் இருக்கும் இரவு நேரக் கோவில் புகைப்படம் அற்புதம். மலைச்சரிவில் இத்தனை பூக்கள் - குளிர்ச்சி.

    ReplyDelete
  11. அறியாத அரிய தகவல்
    கண்ணுக்கு விருந்தாகும் அருமையான படங்கள்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. படங்கள் அனைத்தும் அருமை.

    /// இராஜராஜேஸ்வரி said...

    இன்று முதல் பிரபல பதிவர் ஆகப்போகும் நக்கீரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். ///

    நம்ம வலைப்பக்கத்திற்கு வந்ததற்கு நன்றிம்மா. பிரபல பதிவர் நாய் நக்ஸ் நக்கீரன் வாழ்க வாழ்க.

    ReplyDelete
  13. படங்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  14. சமீபத்தில் திருப்பதியில் நடைபஐம் நித்தியப்படி சம்பிரதாயங்களில் தெரியாத விவரங்கள் என்று எங்கோ படித்தேன். அதில் இதுவும் ஒன்று. முன்கதை இப்போதுதான் அறிகிறேன். அற்புதமான படங்கள்.

    ReplyDelete
  15. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி-- நாங்கள் நம் பாவைக்கு(திருமதி.ராஜராஜேஸ்வரி) சாற்றி நீர் ஆடினால்,
    தீங்கின்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்!!!

    ReplyDelete
  16. தங்க ரோஜா தகவல்கள் புதியவை.

    ReplyDelete
  17. எத்தனை தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் அணிந்தாலும், காசு, பணமாக சேர்ந்தாலும், சாப்பிடுவது மண்சட்டியில் தயிர் சாதம் மட்டுமே ... எந்நேரமும் நின்று கொண்டே இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்து உழைத்து சேர்த்தாலும் சாப்பிடுவது மண்சட்டியில் தயிர் சாதம் மட்டுமே ... எது சேர்ந்தாலும், அது தங்க.. எளிமையாக இரு, தொடர்ந்து உழை என்பதை பாடமாக சொல்கிறார் கடவுள்..

    பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. அருமையான தகவல்களுடன் அழகான பதிவு. பெருமாளுடன் தங்கியது தங்க(மண்) பூக்கள். தங்களின் பதிவு அனைவர் மனதிலும் தங்கியது. நன்றி அம்மா

    ReplyDelete