Wednesday, February 8, 2012

சஞ்சலம் தீர்க்கும் ஸ்ரீசஞ்சீவிராயர்






ஸ்ரீகுரு சரண் சரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் 
பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார் 

எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப்படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகிற ரகுகுலதிலகமான ஸ்ரீ ராமனின் களங்கமற்ற புகழை விளக்கத் தொடங்குகிறேன். -ஹனுமான் சாலீசா 


 தல யாத்திரை செய்வதில் பெரு விருப்பம் கொண்ட விஜயநகரை ஆட்சி செய்த வேங்கடபதியின் அவையில் அமைச்சராக இருந்த லட்சுமிகுமார தாததேசிகர் காஞ்சிபுரம் பெருமாள் தரிசனத்துக்கு வந்தபோது திடீர் என திருடர்கள் வழிமறித்து பெருமானுக்காகப் பார்த்துப் பார்த்து அவர் எடுத்து வைத்திருந்த அத்தனை திரவியங்களையும் கொள்ளை அடித்தனர்


எதிர்க்கத் திராணியில்லாத லட்சுமிகுமார தாததேசிகர் அதே இடத்தில் அமர்ந்து அனுமனை நினைத்து அனுமந்தஸ்ரீ என ஒரு ஸ்தோத்திரத்தை மனமுருகிக் கூறினார். 


அடுத்த நிமிடம், அந்தத் திருடர்களுக்கு பார்வை பறிபோனது. திருடர்கள் பயந்து அலறினர். தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு வேண்டினர். பிறகு, தங்களிடம் இருந்த பொருட்களையும் சேர்த்து தாததேசிகரிடமே திருப்பிக் கொடுத்தனர். அனுமனின் திருவருளால் வந்த ஆபத்து நீங்கியதை எண்ணி மனம் நெகிழ்ந்த அவர், அந்தச் செல்வங்களை வைத்து அதே இடத்தில் அனுமனுக்கு அழகான ஒரு கோயிலைக் கட்டினார். அவர் கட்டிய கோவிலால் ஊருக்கு அவர் தொடர்பிலேயே பெயர் அமைந்தது.


அய்யங்கார்குளம். காஞ்சிபுரத்தில் இருந்து கலவைக்குச் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் தென்புறத்தில் இயற்கை எழிலுடன் காட்சி தருகிறது.
 


அய்யங்கார்குளம் கிராமத்துக்கு சிறப்பு சேர்ப்பது ஆஞ்சநேயர் கோயில். 
இங்கே கோயில் கொண்ட அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனை சஞ்சீவிராயர் என்று போற்றி வணங்குகிறார்கள். 
அழகான கற்றளிக் கோயில் ..கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி., சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்டது. 


ஆலயத்தின் முன்புறம் நெடிதுயர்ந்த தூண்களுடன் கூடிய கோபுரம், மூலவர் விமானம், மூன்று சுற்று பிராகாரங்கள்... உள் பிராகாரத்தில் கல்யாண மண்டபங்கள், வெளிபிராகாரத்தில் நான்கு திசைகளிலும் அலங்கார மண்டபங்கள், வடக்கு வாயில் கோபுரம் என அழகிய வடிவமைப்புடன் திகழ்கிறது கோயில்.

Hanuman.jpg
மூன்று சுற்று பிராகாரங்களுடன் கூடிய இந்த ஆலயத்தின் உள்ளே சென்றவுடன் 50 தூண்களுடன் கூடிய மகாமண்டபத்தையும், 25 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபத்தையும் காண்கிறோம். ஆலயத்தின் உள்ளே செல்லும் முன், அஞ்சனை மைந்தனின் பூரண அருளைப் பெற்றுச் செல்லவேண்டும் என்பதற்காக அனுமனைப் போற்றும் 20 ஸ்லோகங்களை கல்வெட்டுகளில் வடித்து அர்த்த மண்டப வெளிச்சுவரில் பதித்து வைத்துள்ளனர்.



மூலவரின் திருநாமம் ஸ்ரீசஞ்சீவிராயர். வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். அண்டி வந்தவருக்கு அருளை அள்ளி அள்ளி வழங்கும் அழகுக் கோலம். தான், தாசரதியான ராமபிரானின் தாசானுதாசன் என்பதால், அயோத்தி இருக்கும் வடக்குத் திக்கைப் பார்த்தபடி இருகரம் கூப்பிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீசஞ்சீவிராயர்.
 Hanuman
ராம-ராவண யுத்தத்தின்போது, இந்திரஜித் விடுத்த கொடிய அஸ்திரத்தால் மூர்ச்சையடைந்த லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தபோது, அதன் ஒரு பகுதி இங்கே விழுந்ததாம். அதில் இருந்து சுயம்புவாகத் தோன்றியவர் இங்குள்ள சஞ்சீவிராயர் என்கிறார்கள். இந்தக் கோவிலுக்கே உரிய சிறப்பான அம்சங்கள் சிலவும், இந்தக் கோயிலின் பெருமையைப் பறை சாற்றுகின்றன... அவை... 

தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோவில்... இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு என்று அமைந்திருப்பது... அதுவும், ராஜகோபுரம் உள்ள அனுமனின் தனிக்கோயில்... இவையெல்லாம் மிகவும் சிறப்பான ஒன்று.
 இந்த ஆலயத்தின் அர்த்த மண்டப மேற்கூரைகளில் உள்ள கருங்கல் வளையங்கள், சிற்பக் கலை நயத்தை நமக்குக் காட்டுகின்றன. ஆயினும், சிற்பங்கள் சில சிதிலமடைந்து காணப்படுகின்றன.
 sankat mochan
சித்ரா பெளர்ணமி நன்னாளில் காஞ்சிப் பேரருளாளன் ஸ்ரீ வரதராஜப் பெருமான் இந்த ஆலயத்துக்கு எழுந்தருள்கிறார். இங்கே திருமஞ்சனம் கண்டு, இங்குள்ள நடவாவி திருக்கிணற்றுக்கும் எழுந்தருள்கிறார் ஸ்ரீவரதராஜர்.


 இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மூல நட்சத்திர நாளிலும் ஸ்ரீசஞ்சீவிராயப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. 


அனுமத் ஜெயந்தியான மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெறுகிறது. அன்றைய அனுமனின் தரிசனம் சகல தடைகளையும் நீக்கி, சகல நலன்களையும் வாரி வழங்கும் அழகு தரிசனமாகும்.



ஒருமுறை இந்த ஆலயத்தில் இருந்த விக்ரஹத்தை மூன்று பேர் திருடிச் சென்றுவிட்டனராம். திருடியவர்களின் வீட்டுப் பெண்மணிகள், சேலைகள் வாங்குவதற்காக தென்மாவட்டத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார்களாம். அங்கே கடைக்குச் சென்று, சேலையை எடுத்துப் போடு என்று சொல்ல முயன்றபோது, அவர்களின் வாயிலிருந்து சிலை சிலை என்றே பேச்சு வந்ததாம். இவர்களின் பேச்சில் சந்தேகப்பட்ட கடைக்காரர், போலீசுக்கு தகவல் சொல்ல, போலிசார் வந்து அவர்களை விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டதாம். அதன்பிறகு கோயில் சிலைகளை திருடர்களிடம் இருந்து மீட்டார்களாம். 


அதன்பிறகு, இந்த சஞ்சீவிராயரை வணங்கினால், கைவிட்டுப் போகும் பொருள்கள் திரும்பக் கிடைத்துவிடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

கோயிலின் பின்புறத்தில் படித்துறையுடன் கூடிய மிகப்பெரிய குளம் - மன்னர் கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுததேவராயர் உதவியுடன் லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் இந்தக் குளத்தை சுமார் 133ஏக்கர் பரப்பில் வெட்டினாராம். 


அதனால்தான் இந்த கிராமத்துக்கு அய்யங்கார் குளம் என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். 


ஸ்ரீதாதசமுத்திரம் என்றும் இந்தக் குளத்துக்கு ஒரு பெயர் உண்டாம்.
 
இந்த ஆலயத்தின் இன்னுமொரு சிறப்பம்சம், இங்குள்ள நடவாவி கிணறு. இது இங்கே அமைந்த விதமே சுவாரசியமானதுதான்
 இந்த ஆலய வளாகத்துக்கு உள்ளேயே ஒரு கிணறு தோண்ட முயன்றபோது, கோழி கூவியது போல் குரல் கேட்டதாம். அதனால் அந்தப் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்களாம். 


பின்னர் மீண்டும் ஒரு முறை தோண்ட முயன்றபோது, எண்ணெய் விற்பதுபோல் குரல் கேட்டதால், அப்போதும் பணி நிறுத்தப்பட்டதாம். 


அதன் பிறகு, மூன்றாவது முறையாக கோயிலுக்கு நேர் எதிரில் குளக்கரைக்கு கீழே கிணறு வெட்டப்பட்டது. 


அதுவே பாதாளக் கிணறாக, நடவாவி கிணறாக விளங்குகிறது. 


சித்ரா பெüர்ணமியில் திருவிழாக் காணும் அன்றைய தினம் பக்தர்கள் படியிறங்கிச் செல்லும் விதமாக கிணறு அமைந்துள்ளது. கிணற்றில் உள்ள தூண்களில் சித்திர வேலைப்பாடுகள் கண்களைக் கவர்கின்றன. 


நாலாபுறங்களிலும் உள்ள பக்கவாட்டுக் கற்களில் சப்தகன்னியர் சிலைகள் அழகுறக் காட்சி தருகின்றன. 


கிணற்றுக்குள் வடமேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில்தான் காஞ்சிப் பேரருளாளன் ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருள்கிறார்.

கிணற்றுக்குள் செல்லும் வழியில் கஜலட்சுமியுடன் கூடிய பிரபை ஒன்றும் உள்ளது. வற்றாத கிணறாக இது உள்ளது என்பது சிறப்பம்சம். 


சித்ரா பெüர்ணமி நடவாவி திருவிழா அன்று மட்டும் பக்தர்கள் உள்ளே செல்ல நீர் இறைக்கப்படுகிறது. 


அதற்கு பிறகு அடுத்த ஆண்டுதான் உள்ளே செல்ல முடியும்.

ஸ்ரீசஞ்சீவிராயர் திருக்கோவிலில் புத்தாண்டு மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 


பெருமான் தெப்பத்தில் எழுந்தருளும் தெப்போற்ஸவமும் இங்கே வெகுசிறப்பாக நடக்கின்றது. 


பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது, ஸ்ரீ சீதாகல்யாண வைபவமும் மிக விசேஷமாக நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில், ஸ்ரீசீதாபிராட்டியார் சமேத ஸ்ரீராமபிரான், இளையாழ்வார் ஸ்ரீலட்சுமணர் ஆகியோரும் எழுந்தருளியுள்ளதால் நவராத்திரிப் பெருவிழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகின்றது. 


அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துக்கொண்டு வரும்போது அதன் சில பகுதிகள் இங்கே விழுந்தன என்பதால், இந்த கிராமத்தில் சஞ்சீவி மூலிகை பரவிக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். 


எனவே, இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு விஷ ஜந்துக்களால் தீங்கு ஏதும் ஏற்பட்டதில்லையாம்.

மனதுக்கு நிம்மதி அளிக்கும் இந்தத் தலத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாலும் கொஞ்சமும் சலிக்காமல் மனம் ஒருவயப்படுவதை உணரலாம்.

BANGALORE, காரிய சித்தி ஆஞ்சநேயர்பெருமாள் ...


ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர்,காய்கறி அலங்காரம், ராகிகுட்டா, ஜெயநகர், பெங்களூர்











KARYA SIDDHI ANJANEYAR, BANGALORE



ANJANEYAR, ALANKARAM, MALAYSIA






20 comments:

  1. காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயரையும், வடை மாலை சாற்றிய ஆஞ்சநேயரையும், சஞ்சீவி பர்வதம் தாங்கிய அனுமனையும் கண்ணாரக் கண்டு வணங்கினேன். அய்யங்கார் குளம் கோயிலின் சிறப்பையும், நடவாவிக் குளத்தின் சிறப்பையும் அறிந்து நெகிழ்ந்தேன். நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் ஆன்மீகப் பதிவிற்கு வர முடிந்ததில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. நல்லதொரு பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  2. பதிவும் படங்களும் அருமை. கைவிட்டுப் போகும் பொருள்கள் கிடைக்கவும் நல்ல எண்ணங்கள் வளரவும் வணங்குவோம் ஸ்ரீசஞ்சீவிராயர்.

    ReplyDelete
  3. காய்கறி ஆஞ்சநேயர் மிக வித்தியாசம், காணத காட்சியாக உள்ளது.6 பாக், 8 பாக் ஆஞ்சநேயரும் மிக அருமை. தெரியாத கதைகள் அறிந்தோம். மிக்க நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. ஆஞ்சநேய ஸ்தலம் பற்றி அறிய உதவியது.

    ReplyDelete
  5. வியாழக்கிழமைக்கு [குருவாரம்]ஏற்ற நல்ல பதிவு.

    ஹனுமனைப்பற்றி நிறைய தாங்கள் இதுவரை எழுதியிருப்பினும், இந்தக்கோயிலைப்பற்றி தாங்கள் எழுதியுள்ள செய்திகள் யாவும் புத்தம்புதியதாகவே மிகச்சிறப்பாக உள்ளன.

    ReplyDelete
  6. சேலம், பெங்களூர், மலேசியா ஹனுமார்கள் புதியதாய் காட்டியுள்ளது சிறப்பு.

    ”சஞ்சலம் தீர்க்கும் ஸ்ரீ சஞ்சீவிராயர்”
    தலைப்புத்தேர்வும் அருமையே!

    ReplyDelete
  7. ’ஹனுமான் சாலீசா’ ஸ்லோகத்தின் தமிழாக்கம் கொடுத்துள்ளது, சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

    காஞ்சீபுரம் - கலவை இரண்டுக்கும் போய் இருந்தும் ஏனோ நடுவில் உள்ள இந்த அய்யங்கார்குளம் கிராமமோ அங்குள்ள சிறப்பு வாய்ந்த ஹனுமன் கோயிலுக்கோ நான் செல்லவில்லை.

    இதுபோல ஒரு மிகச்சிறப்பு வாய்ந்த கோயில் அங்கு உள்ளது என்று இப்போது நீங்கள் சொல்வதால் அல்லவோ தெரிகிறது!

    [நான் கலவை சென்றது 1975 ஆம் ஆண்டு.]

    ReplyDelete
  8. தமிழகத்திலேயே வடக்குப் பார்த்த ஆஞ்சநேயர் கோயில், இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு, அதுவும் ராஜகோபுரம் அமைந்த கோயில், சிற்பக்கலை நயத்திற்கு எடுத்துக்காட்டு,
    கருங்கற்களால் மட்டுமே கட்டப்பட்ட கோயில், கருங்கல் வளையங்களால் மேற்கூறை அமைந்தது என்ற அனைத்துத் தகவல்களும், தகவல் களஞ்சியத்திடமிருந்து கிடைத்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. //சஞ்சீவிராயரை வணங்கினால் கைவிட்டுத் தொலைந்துபோன பொருட்கள் திரும்பக்கிடைத்துவிடும்//

    அடடா! எவ்வளவு நல்லதொரு விஷயமாக மனதுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது, இது!

    நடவாவி பாதாளக்கிணறு பற்றிய செய்திகளும், சித்ரா பெளர்ணமி அன்று மட்டுமே கிணற்றில் இறங்கி தரிஸிக்க முடியும் என்ற செய்திகள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

    ReplyDelete
  10. எனக்கு மிகவும் பிடித்தமான ஒருசில ஹனுமன் படங்களைக் காட்டியுள்ளதற்கு மிகவும் சந்தோஷம்.

    வழக்கம் போல மிகவும் அழகழகான படங்களுடனும், புதிய செய்திகளுடனும் இந்தப்பதிவு ஜொலிக்கிறது.

    இத்துடன் நீங்கள் எனக்குச் சுடச்சுட முறுகலாக, ருசியாக, மெத்தென்று பூப்போல 424 வடைகள் பிரஸாதமாகத் தர வேண்டியுள்ளன. ஞாபகம் இருக்கட்டும். ஏனெனில் இது 424 ஆவது பதிவு. இப்போதே எனக்குப் பசிக்குது. ;))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ஆஞ்சநேயா!
    ராம தூதா!!
    ராம பக்தா!!!

    அனைவரையும் காத்தருளப்பா!

    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!

    ReplyDelete
  11. பவுர்ணமி அன்று ஆஞ்சனேயர் தரிசனம், மிகவும் விசேஷம். நன்றி.

    ReplyDelete
  12. மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. மன உறுதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் நான் வணங்குவது ஆஞ்சநேயர்தான். அவரது வித்தியாசமான அலங்காரப்படங்கள் அனைத்தும் மிக அருமை.

    ReplyDelete
  14. Thanks for this detailed post. Liked the title too.

    In the anjaneyar alangaram, Malaysia-could you please tell me what is used to make that special mala (big bonda like thing).

    thanks for brining the sanjeevirayar to my house :-)

    ReplyDelete
  15. பதிவும் படங்களும் அருமை

    ReplyDelete
  16. காய்கறி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் கண் கொள்ளாக் காட்சி.....

    கோவிலின் சிறப்பும், படங்களும் அருமை....

    ReplyDelete
  17. படைப்புத்திரத்தலே-எமைப்
    படைத்தவர் பண்புகளையும்-எம்
    பண்பாட்டை பார் எங்கும்
    பறைசாற்றும் உங்கள் பணி-இன்னும்
    படர்ந்து மலரனும்.

    ReplyDelete
  18. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete