மண்ணச்ச நல்லூரில் அருளும் ஞீலிவனேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் பத்ர விமானம் எனப்படும். இத்தல விநாயகர் வசந்த விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஐந்து பிரகாரங்களுடன் உள்ள இக்கோயிலில்
(1) விசாலாட்சி
(2) எமன்
(3) கல்யாண
(4) அக்னி
(5) தேவ
(6) அப்பர்
(7) மணியங் கருணை
என மொத்தம் ஏழு தீர்த்தங்கள் இருக்கிறது.
பிரகாரத்தில் உள்ள விநாயகர் சிவன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் எனும் பெருமாளுடன் சேர்ந்தபடி இருப்பதும், தெட்சிணாமூர்த்தியின் கீழ் நந்தி இருப்பதும் வித்தியாசமானதாகும். கொடிமரத்திற்கு அருகில் சுயம்பு நந்தி இருக்கிறது திருக்கடையூரில் எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவன். இதனால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் உயிர்கள் அனைத்தும் நீண்ட ஆயுளுடன் இருந்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவனிடம் முறையிட்டாள்.
ஒரு தைப்பூச தினத்தன்று சிவன், இத்தலத்தில் எமனை தன் பாதத்தின் அடியில் குழந்தையாக எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடக்கும்படி அறிவுறுத்தி அவருக்கு மீண்டும் பணி கொடுத்தார்.
இதன் அடிப்படையில் இங்கு பிரகாரத்தில் எமனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இச்சன்னதியில் சிவன் அம்பாள் மற்றும் முருகனுடன் சோமாஸ்கந்தராக இருக்க, சுவாமியின் பாதத்தின் கீழ் குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.
இச்சன்னதி குடவறையாக அமைந்திருப்பது சிறப்பு. இங்கு அறுபதாம் கல்யாணமும், ஆயுள் விருத்தி ஹோமமும் அதிகளவில் நடத்துகின்றனர்.
மதிலின் மேற்றளம் புலிவரிக் கற்களால் ஆனவை. (இவ்வகைக் கற்கல் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இத்தலம் வியாக்ரபுரி என்னும் பெயரைப் பெற்றதுபோலும்.)
குடைவரைக் கோவிலில் சில படிகள் இறங்கி உள்ளே செல்லவேண்டும்.யாகம் செய்வத்ற்கான இடப்பரப்புடன் கூடிய அற்புத அமைப்புடன் குகையைச் சுற்றி மரங்களுட்ன் சோலைவனமாக பராமரிக்கிறார்கள். எலுமிச்சை மரங்கள் நிறைய இருந்தன.
சனி பரிகாரத்தலமாக இருப்பதால், காகங்கள் மிகுதி. எமன் சனிக்கு அதிபதி என்பதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. நந்திக்கு முன்புறம் உள்ள தீபங்களையே கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.
கோயில் ராஜகோபுரத்தை "ராவணன் வாயில்' என்கின்றனர். இக்கோபுரத்திற்கு கீழே சுவாமி சன்னதிக்கு செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இருக்கிறது. இந்த படிகள் ராவணனிடம் அடிமையாக இருந்த நவக்கிரகங்களை குறிப்பதாக சொல்கிறார்கள். இந்த நவக்கிரகப் ப்டிகளில் இற்ங்க இற்ங்க நம் நவக்கிரக தோஷங்களும் அகன்று விடுமாம்.
இறைவனின் திருவிளையாடல்: திருத்தலயாத்திரை சென்ற திருநாவுக்கரசர் ஞீலிவனநாதரை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவர் பசியால் களைப்படைந்து ஓரிடத்தில் நின்றார். அப்போது, அர்ச்சகர் ஒருவர் அவர் முன் சென்று, சோறு (அன்னம்) கொடுத்து அவரது பசியை போக்கினார். பின் நாவுக்கரசர் அவரிடம் திருப்பைஞ்ஞீலி தலம் எங்கிருக்கிறது? எனக் கேட்டார்.
தான் வழிகாட்டுவதாகச் கூறிய அர்ச்சகர் அவரை இங்கு அழைத்து வந்தார். வழியில் அவர் திடீரென மறைந்துவிடவே கலங்கிய நாவுக்கரசர் சிவனை வேண்டினார். சிவன் அவருக்கு காட்சி தந்து தானே அர்ச்சகராக வந்ததை உணர்த்தினார். அவரது வேண்டுதலுக்காக லிங்கமாக எழுந்தருளினார்.
இவர் “சோற்றுடைய ஈஸ்வரர்” என்ற பெயரில் கோயிலின் முன்புறத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். சித்திரை மாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் இச்சன்னதியில் சோறு படைத்த விழா நடக்கிறது.
ஓவிய நடராஜர்: வசிஷ்ட முனிவர் சிதம்பரம் நடராஜரை தினமும் அர்த்தஜாம நேரத்தில் தரிசனம் செய்யும் வழக்கம் உடையவர். ஒருசமயம் அவர் இத்தலத்திற்கு வந்தபோது இரவில் இங்கேயே தங்கிவிட்டார். அவர் நடராஜரிடம் தனக்கு நடனக்காட்சி தரும்படி வேண்ட சுவாமி இங்கே நடனக்காட்சி தந்தருளினார்.
இதனை உணர்த்தும் விதமாக சுவாமி சன்னதிக்கு முன்புறம் நடராஜர் சித்திர வடிவில் வரையப்பட்டு இருக்கிறார். எதிரே வசிஷ்டர் ஓவியமும் இருக்கிறது. இத்தலத்திற்கு மேலச்சிதம்பரம் என்ற பெயரும் உள்ளது.
பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்தனர்.
இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.
இரு அம்மன் சந்நிதிக்கு இடையில் புனிதக் கிணற்றில் இருக்கும் மீன்களுக்கு பழத்தைக் கிள்ளிப் போட்டால் ஆவலுடன் விழுங்கும் அழகே தனி.
ஞீலி என்பது
ஒருவகை வாழை; தனி இனம். வேறிடத்தில் பயிராவதில்லை. இதன் இலை, காய், கனி அனைத்தும் இறைவனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் பிணி வருதல் இன்றும் கண்கூடு. இக்கனியைச் சுவாமிக்கு நிவேதித்து தண்ணீரில் விட்டுவிடுவார்கள்.
மரத்திலேயே பழுக்கும் பழங்களை கிளி, அணில் போன்ற உயிரினங்கள் ஆனந்தமாய் சாப்பிடுகின்றன.பூக்களில் இருக்கும் தேனை பூஞ்சிட்டுக்களும்,தேனிக்களும் மொய்க்கின்றன.
பெண்ணிற்கும் வாழை மரத்திற்கும் பொருத்தமாக சிலெடை வெண்பா புலவர்கள் மத்தியில் வெகு பிரசித்தம்
தலைவிரிக்கும் பூச்சூடும் தண்டை அணியும்
இலைவிரித்து நல்லுணவை ஈயும் -விலைமதிக்க
ஒண்ணாப் பரம்பரையை உற்பத்தி செய்திடு நற்
பெண்ணாகும் வாழை மரம்.
வாழை மரம் தலையை விரித்தது பொல் தன் இலைகளை விரித்த படி வளரும்.
பெண்கள் குளித்து முடித்ததும் தலையை விரித்து உலர்த்துவார்கள்.
வாழைமரம் பூச்சூடுவது போல் பூப்பூக்கும்.
பெண்கள் தலையில் பூச்சூடுவார்கள்.
வாழைமரம் வாழைத்தண்டை காலில் அணிந்திருக்கும்
பெண்கள் காலில் தண்டை என்னும் கொலுசு அணிவார்கள்.
வாழைமரம் தன் இலை, தண்டு, காய்,கனி, பூ,சாறு என அத்தனை உறுப்புகளையும் உணவாக வழங்கும்.
பெண்கள் வாழை இலையை விரித்து வகை வகையாய் நமக்கு உணவு பரிமாறுவார்கள்.
வாழைமரம் தன் இனம் வளரும் வண்ணம் கன்றுகளை ஈனும்.
பெண்கள் மனித இனம் வளரும் வண்ணம் மக்கட் செல்வத்தைப் பெறுவார்கள்.
இவ்வாறு பெண்ணாகும் வாழை மரமாகி நின்ற சப்தகன்னியரை வலம் வந்து வணங்கினோம்.
முன் வாசலில் மாடுகளுக்காக தொட்டி கட்டி வைத்திருக்கிறார்கள். நைவேத்திய பழங்களை வைத்தால் அங்கு மாடுகள் வந்து சாப்பிடுகின்றன.
திறந்த வெளியில் காகங்கள் அதிகமாக இருக்கின்றன. உணவு அளித்தால் தோஷப் பரிகாரமாகும்.
முற்றுப் பெறாத முதல் கோபுர வாசலின் முன் இருக்கும் மண்டபத்தில் குரங்குச் சிற்பம் பாயும் தோற்றத்தில் அற்பதமாக சிற்பியின் கைவண்ணத்தில்
உயிர்த்துடிப்புடன் விளங்குகிறது.