ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்
செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்லக் குருடனின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்
மக்களுக்கு நல்வழி காட்ட வந்த மகான் இயேசு கிறிஸ்துவின் தியாக குணமும் மன்னிக்கும் மாண்பும் பாரதியைக் கவர்ந்தன. நல்லவை எங்கு இருந்தாலும் யாரிடம் இருந்தாலும் அதைப் பாராட்டத் தயங்காத பாரதி இயேசுவை வணங்குகிறார். ஒரு கிறித்தவர் எப்படி உருகிப் பாடுவது போல் பாரதியின் விளங்கும் பாடல்....
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்து உயிர்த்தனன் நாள்ஒரு மூன்றில்
நாசம் இன்றி நமைநித்தம் காப்பார்
நம்அகந் தையை நாம்கொன்று விட்டால்!
வானம் வால் நட்சத்திரம் இட்டு மகிழ்ச்சி காட்ட, ஏஞ்சல் பண் இசைத்து வாழ்த்த, நடுங்கும் குளிர் இன்பம் பொழிய என காட்சிப் பிம்பம் செதுக்கிய அற்புத திருவிழா கிறிஸ்துமஸ். உலகின் மிகப் பரவலான கொண்டாட்டம்
கிறிஸ்து பிறப்புவிழா கிறிஸ்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.
பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது .
மாட்டுக் குடிலில் வைக்கோல் படுக்கையில் அன்பான மரியன்னைக்கு கிடைத்த பரிசுதான் யேசு எனும் இறைமகன்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வண்ணமயமாக, கேளிக்கைகள், உறவினர், நண்பர்களுடனும் விருந்துகளுடனும் உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்..
ஒளிரும் நட்சத்திரங்களை வீட்டின் முன்பு தொங்கவிட்டும், பல வகை வண்ண விளக்குகளால் வீடுகள், கடைகள், அலுவலகங்களை அலங்கரித்தும் பிரியமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பியும், பரிசு வழங்கியும் சுவை மிகுந்த கேக்குகள், பலகாரங்கள் வழங்கியும் அறுசுவை உணவுகளை உண்டும் ஆனந்தமாகக் கொண்டாடுவார்கள்.
இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டு
ஓ, எவ்வளவு அதிசயச் செயல் சூரியன் பிறந்த நாளில்…கிறிஸ்துவும் பிறந்தது”என்பார்கள்..
டிசம்பர் 25 குளிர்கால சம இரவு பகல் நாள்..
அன்பின் திருவுருவம், கருணையின் வடிவம், தேவகுமாரன் இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாள் ஆகும்.
இயேசுபிரான் “அன்பே வாழ்வின் நெறி” என்று வாழ்ந்து காட்டிய திருமகன், இன்னா செய்தவர்கள் நாணும்படி அவர்களுக்கு நன்னயம் செய்த பெருமகன்.
அவர் அன்பை போதித்தார்.
அந்த போதனைகளுக்கு தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாக ஆக்கினார்.
அன்பு வார்த்தையாலும், அன்பு வாழ்க்கையாலும் உலகை ஆட்கொண்ட இரக்கத்தின் வடிவமாம் இயேசுபிரான் பிறந்த நன்னாளாம் இனிய திருநாளில் உலகமெங்கும் அன்பு தவழவும், அமைதி நிலவவும்,சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்திப்போம்..
அன்பின் ஒளியாய் கருணையின் வடிவாய் அவதரித்த இயேசுபிரான் பிறரின் பாவங்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்.
தன்னை சிலுவையில் அறைந்தவர்களைக் கூட மன்னிக்கும்படி பரமபிதாவிடம் மன்றாடியவர்.
மன்னிப்பதன் மூலம் மன்னிக்கிறவர் மட்டுமல்லாமல், மன்னிக்கப்படுகிறவரும் உயருகிறார் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும் இயேசுபிரான் அவர்கள் அவதரித்த கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பமும் தன் உறவுகளோடும் நட்புகளோடும், நேசங்களோடும் பகிர்ந்து கொள்கிற இதுபோன்ற விழாக்கள் ஒருநாட்டின் பண்பாட்டையும் கலாச்சார உறவுகளையும் வெற்றிடமின்றி நிரப்பிட உதவுகிறது ..
இயேசு கிறிஸ்து ஏழைகளிடம் இயலாதவர்களிடம் கருணை கொண்டவர்.
அன்பு, மனிதநேயத்தை உலகுக்குஉணர்த்தி தானும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்.
அன்பும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் பெருமைக்குரியது.
அது நன்மை மட்டுமே செய்யும், பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது. ஏசுகிறிஸ்து அன்பே உருவானவர், நிபந்தனை இல்லாத அன்பு தான் அவருக்கு ஆயுதமாய், கேடயமாய், அனைத்துமாய் இருந்தது.
அப்படி, அன்பால் மக்களின் வாழ்வை நெறியாக்க இறைவனின் மகனாய் இயேசு கிறிஸ்து மண்ணில் உதித்த இந்த புனித நாளே கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மக்களின் வாழ்க்கையின் பின்னிப் பிணைந்த ஒரு அம்சமாக கிறிஸ்துமஸ் பண்டிகையில் கிறிஸ்துமஸ் மரம் மணிகள், எடை குறைந்த வர்ண உருண்டைகள், நகைகள், இனிப்புகள், மலர்கள், வண்ண அலங்காரங்கள், சிறிய தேவதைகளின் திரு உருவங்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப் படுகின்றது.
கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் ஒரு உலோகத்தால்/ரப்பரால் ஆன ஒரு நட்சத்திரம் அல்லது ஒரு தேவதையின் உருவம் வைக்கப்படும். இது தேவ குமாரனாம் இயேசு பெத்லகேமில் பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தை - தேவதைகளை 'சம்மனசுகள்'- நினைவூட்டுவதற்கான சின்னமாகும்.
உலகம் முழுவதும் குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது ஆஸ்திரேலியாவில் மட்டும் உச்ச வெப்பகாலமாக இருக்கிறது ...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிறிஸ்மஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து கலந்துகொண்டனர்.
தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் ஓட்டபந்தயத்தில் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்த பலர் நீரில் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினர்.