திண்ணில யங்கொண்டு நின்றான் றிரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்து முளகழற் சேவடியே ----
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப்போல்
காற்றிற் கடுத்துல கெல்லாந் திரிதர்வர் காண்பதற்கே
உலகாளும் சிவபெருமானின் தாண்டவத்தை தரிசித்த அன்னை உமையவள் படைப்புகளிலே மேலான இடம் எது? மேலான உயிரினம் எது?’’ என்று அனைத்தும் அறிந்தவளாக இருந்தும் உள்நோக்குடன் கேட்டாள்..
அனைத்தும் அறிந்த ஈசன். அங்கிருந்த அனைவருக்கும் விளங்கும்படி, ‘‘நான் படைத்த பலகோடி அண்டங்களில் பூலோகமே சிறந்தது. அதிலும் பாரதமும் சைவம் தழைத்திருக்கும் தென்னாடுமே சிறந்தவை. ஏனெனில் அப்பகுதியில்தான் அர்ச்சாவதாரமாக பல்வேறு தலங்களில் அருளாட்சி புரிகிறோம். உயிரி னங்களில் மனிதகுலமே பெரும் பாக்கியம் பெற்றது. என்னை நினைக்க நெஞ்சமும் வாழ்த்த வாயும் தாழ்த்தி வணங்க சிரத்தையும் தந்துள்ளேன்.
தங்களது கண்களால் என்னை தரிசிக்கவும் கரங்களால் ஆலய உழவாரப்பணி செய்யவும் நாவினால் நமசிவாய எனும் ஐந்தெழுத்தையும் ஓதி என்னை வணங்கும் அடியார்க்கு பிறவித் தளையை விடுவிப்பேன்’’ என திருவாய் மலர்ந்தருளினார்.
அதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்த அங்கிருந்த நந்தியம்பெருமான் மாணிக்கவாசகராக பூமியில் அவதாரம் செய்தார்.
அப்போது ஈசன் அருளிய உபதேசங்களை தன் திருவாசகத் தேனில் எடுத்துரைத்தார்.
பார்வதிதேவி ஈசனிடம், ‘‘எவ்வளவோ மலர்கள் பூமியில் இருக்க, தாங்கள் ஏன் வில்வத்தில் பிரியம் கொண்டுள்ளீர்கள்?’’ எனக் கேட்டாள்.
‘‘தேவி, என் பக்தர்கள் விலையுயர்ந்த மலர்களைத் தேடி அலையக்கூடாது என்பதால்தான் நான் வில்வத்தோடு, எளிதில் கிடைக்கும் எருக்கு, கொன்றையைக் கூட விரும்பி ஏற்கிறேன்’’ என்றார்.
ஈசனின் திருநடனத்தை மலர்கள் சூழ்ந்த வனத்தில் மீண்டும் தரிசனம் செய்யும் தேவியின் விருப்பத்தை நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார் ஈசன். தென்னாட்டில் பல்வேறு மலர்கள் பூத்துக் குலுங்கும் கதம்ப வனமும் கொன்றை மரங்களும் நிறைந்த இடத்தில் கதம்பவனேஸ்வரர், கொன்றைவனநாதர் எனும் திருப்பெயர்களில் கோயில் கொண்டு தன் திருநடனத்தை பார்வதிதேவிக்கு ஆடிக்காட்டினார் ஈசன்.
ஈசனின் நடனத்தை தன் கண்களால் தரிசித்து மகிழ்ந்த தேவி, காமாட்சி எனும் பெயரோடு அங்கு நிலைகொண்டாள்.
ஈசனும் தேவியும் நிலை கொண்ட இடம் திருநல்லூர்.
தற்போது அந்த ஈசன் கருப்பனீஸ்வரர் என வணங்கப்படுகிறார். கதம்பவனேஸ்வரரே மருவி கருப்பனீஸ்வரர் ஆனார்.
இங்கு சனி பகவான் ஈசனை வழிபட்டதால் கருப்பனான சனி வழிபட்டவர் என பொருள்படும்படி கருப்பனீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார் என்றொரு கருத்தும் நிலவுகிறது.
ஆயுட்காரகனான சனிபகவான் வழிபட்ட தலமாதலால் இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகவும் பக்தர்களால் போற்றப்படுகிறது.
வேறு எங்கும் எளிதில் காண முடியாத தோற்றத்தில் இத்தலத்தில் சனீஸ்வரனின் நேர் பார்வையில் மகாலட்சுமி வீற்றிருக்கிறார்.
அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது. ,
இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெற்றாலும் தீபாவளியன்று மகாலட்சுமிக்கும், சனீஸ்வர பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த பூஜையில் கலந்து கொண்டால் ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி போன்ற சனி தோஷங்கள் நீங்குவதுடன், கல்விச்செல்வம், பொருட்செல்வம் போன்ற செல்வங்கள் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நல்லூர் அஷ்டபுஜமாகாளி கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது.
பொதுவான கோப முகத்தினளாக இல்லாமல், மாகாளி புன்னகை பூக்கும், மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள்.
மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள்.
அவளின் இரு கைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார் கள்.
தீபாவளி அன்று மகாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். சமயத்தில் காளி அம்மன் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் குழந்தை இல்லாத தம்பதிகள், அம்மனை மனம் உருக வேண்டிக் கொண்டு படியில் நெய் இட்டு மெழுக வேண்டும்.
அவ்வாறு செய்தால் எளிதில் குழந்தை பாக்கியம் கிட்டுவதாக நம்பிக்கை ..!
பிரதோஷ வழிபாட்டின்போது எட்டு திக்குகளிலும் ஈசன் எழுந்தருளி
விசேஷ வழிபாடு நடக்கிறது.
ஆலய கும்பாபிஷேகத்தின் போது ஐந்து கோடி நமசிவாய மந்திரம் எழுதப்பட்டு மூலவரின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பங்குனி உத்திர தினத்தன்று சர்வமங்கள காமாட்சி தேவிக்கும் கருப்பனீஸ்வரருக்கும் திருக்கல்யாண மகோற்சவம் விமரிசையாக நடைபெறும் ..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூருக்கு கிழக்கில் 12 கி.மீ தொலைவிலும் குன்றத்தூருக்கு தென்மேற்கில் 10 கி.மீ தொலைவிலும், திருநல்லூர் தலம் அமைந்துள்ளது.