தந்தை தாயாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பம் நமக்காவானும்- எந்தமுயிர்
தானாகுவானும் சரணாகுவானும் அருட்கோனாகுவானும் குரு.
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறுஅங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைத்து
பவத் தொடக்கை வெல்லாம்.
ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே
மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹா.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்லோகம்
குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.
குரவே ஸர்வ லோகாநாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யாநாம் தட்சிணாமூர்த்தயே நமஹா.
அப்ரமே த்வயாதீத நிர்மல ஞான மூர்த்தயே
மநோ இராம் விதூராய தட்சிணாமூர்த்தயே நமஹா.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோயிலில், ஒரே கோபுரத்தின் கீழே, கிழக்கு நோக்கியவாறு கைலாசநாதரும், தெற்கு நோக்கியவாறு தட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர்.
ஐந்தடி உயரத்துக்கு அழகான வேலைப்பாடு அமைந்த பீடத்தில் பத்மாசனத்தில் குரு பகவான் வீற்றிருக்கிறார்
தட்சிணாமூர்த்திக்கு "தேங்காய் தீபம்' ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
பிரம்மா
கோவிந்தன், கருடாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேவி, பூதேவி என்று `குடும்பத்தோடு' வந்து தங்கியிருந்து வழிபட்ட தலம் என்பதால், கோவிந்தபாடி என்று பெயர் பெற்றது.
இப்போது கோவிந்தவாடி என்று வழங்கப்படுகிறது.
ஒருசமயம் மகாவிஷ்ணு பக்தன் ஒருவனை காக்க போரிட்டபோது, அவரது சக்கரம் அங்கு தவம் செய்து கொண்டிருந்த ததீசி எனும் முனிவர் மீது பட்டு, முனை மழுங்கியது.
மகாவிஷ்ணு அச்சக்கரம் தனக்கு மீண்டும் கிடைக்க சிவனை வணங்கி அருள்பெற "சிவதீட்சை' பெற வேண்டும் என்பது நியதிப்படி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவனை எண்ணி தவம் செய்து வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து சிவதீட்சை செய்து வைத்து உபதேசம் செய்தார்.
""இத்தலத்திற்கு அருகில் உள்ள ஓர் தலத்தில் (திருமால்பூர்) லிங்க வடிவத்தில் இருக்கும் தன்னை ஆயிரம் மலர்கள் கொண்டு பூஜை செய்து வழிபட்டு வர உரிய காலத்தில் சக்ராயுதம் கிடைக்கப்பெறும்'' என்றும் கூறினார்.
அதன்படி மகாவிஷ்ணு, அருகில் உள்ள திருமால்பூர் சென்று சிவனை வணங்கி தவம் செய்து சக்ராயுதம்பெற்றார்.மகாவிஷ்ணுவிற்கு குருவாக காட்சி தந்த சிவன், "தட்சிணாமூர்மூர்த்தியாக' அருளுகிறார்.
கோயில்களில் பெருமாளுக்கு திருமண்ணால் நாமம் போட்டுத்தான் அலங்காரம் செய்வர்.
சிவதீட்சை பெற்ற பெருமாள் என்பதால் சந்தனம், குங்குமத்தையே நாமம் போல நெற்றியில் பூசி வழிபடுகின்றனர். .
விநாயகர் ஆவுடையார் மீது அமர்ந்தபடி "ஆவுடை விநாயகர்' என்ற திருநாமத்துடன் இருப்பது சிறப்பு
குரு பகவானின் திருச்சுற்றில் விஷ்ணு, பிரம்மா, துர்க்கை இடம் பெற்றிருக்கிறார்கள்.
துர்க்கை
தனிக்கருவறையில் மூலவராக தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு பின்புறத்தில் கைலாசநாதரும் தனியே உள்ள கருவறையில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார்.
அதாவது ஒரே விமானத்தின் கீழ் உள்ள இரண்டு கருவறைகளின் இருபுறமும் சிவனும், தட்சிணாமூர்த்தியும் இருப்பது சிறப்பான அமைப்பாகும்.
இங்கு தட்சிணாமூர்த்தியே பிரதானமானவர் என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகத்தின் போதுகூட தட்சிணாமூர்த்திக்கே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவனே, தட்சிணாமூர்த்தியாக இருந்து உபதேசம் செய்தார் என்பதால்
நெற்றியில் மூன்றாம் கண், தலையில் பிறைச்சந்திரன் மற்றும் கங்காதேவியுடன் காட்சி தருகிறார்.
தட்சிணாமூர்த்தி இங்கு கூர்மம் (ஆமை), எட்டு யானைகள், பஞ்ச நாகங்கள், சிம்மம், அஷ்டதிக்பாலகர்கள் ஆகியோர் பஞ்ச ஆசனங்களாக இருக்க அதன் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
பெருமாளுக்கு தனித்து காட்சி தந்தவர் என்பதால் இவருக்கு மேலே கல்லால மரம் இல்லாமல் "கைலாயம்' போன்ற அமைப்பில் மண்டபம் மட்டும் இருக்கிறது. இவரது காலுக்கு கீழே வலதுபுறம் திரும்பியபடி இருக்கும் முயலகன், இங்கு இடது பக்கம் திரும்பியபடி இருக்கிறான்.
குரு பகவான் சந்நிதிக்கு இரு புறமும் அழகான சிற்ப வேலைப்பாடுகளில் துவார பாலகர்கள் உள்ளனர்.
குரு பகவான் வலக்கரத்தில் சின் முத்திரை, மற்றொன்றில் நாகம், இடது கரத்தில் அக்னி, மற்றொரு இடது கையில் வேதநூல் என்று நான்கு கைகளோடு அருள்கிறார்.
இங்கே விபூதி பிரசாதம் தான் விசேஷம்.
சித்திரையில் நடக்கும் திருவிழாவின்போது வித்தியாசமாக தட்சிணாமூர்த்திக்கு "விபூதிக்காவடி' எடுத்து வழிபடுகின்றனர்.
அந்த விபூதியையே சுவாமிக்கு அபிஷேகம் செய்து பிரசாதமாக தருகின்றனர். இதனை நீரில் கரைத்துக் குடித்தால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை இருக்கிறது.
"விபூதி' சிவனது சின்னம் என்பதை உணர்த்தும் விதமாக இங்கு தட்சிணாமூர்த்திக்கு காவடி எடுப்பது புதுமையான வழிபாடாகும்..
செனை - பெங்களூர் நெடுஞ்சாலையில் `வெள்ளை கேட்' டிலிருந்து வலது புறம் திரும்பி, அரக்கோணம் செல்லும் வழியில் இருக்கிறது கோவிந்தவாடி. .
ஆதிசங்கரர் வந்து இங்கே வழிபட்டிருக்கிறார். ஒரே கோபுரத்தின் கீழே இரண்டு சந்நிதிகள் உள்ளன. அதில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள சந்நிதியில் கைலாசநாதரும், தெற்கு நோக்கிய சந்நிதியில் குரு பகவானும் உள்ளனர்.
தாண்டவராய சுவாமி என்கிற மகானுக்கு, தட்சணா மூர்த்தி காட்சி தந்து, விபூதி பிரசாதம் வழங்கி உபதேசம் செய்தாராம்.
கோவிலுக்கு சற்று தொலைவில் கோவிந்தவாடி அகரம் என்கிற பகுதியில் தாண்டவராய சுவாமி மடம் இருக்கிறது. அவருடைய குரு பூஜையின் போது, சித்திரை விசாகத்தன்று குரு பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
ஒவ்வொரு வியாழனும் திருவிழா கோலமாக திகழ்கிறது.
அந்த நாட்களில் காஞ்சீபுரத்தில் இருந்து குரு கோவில் என்ற பெயரில் சிறப்பு பேருந்து விடுகிறார்கள்.
இங்குள்ள குரு பகவானுக்கு பச்சை கடலை மாலை விசேஷம்.
பிரார்த்தனை செய்து கொண்டு ஐம்பத்து ஒன்று, நூற்றியெட்டு, ஆயிரத்தெட்டு என்ற எண்ணிக்கையில் கொண்டைக் கடலையை ஊற வைத்து, மாலையாக்கி குரு பகவானுக்கு அணிவிக்கிறார்கள். ,