அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||
அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே!
சங்கரனின் பிராண நாயகியே!
மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம்
ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்!
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||
எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!
"அன்னம் பிரஜாபிஸ் சாக்ஷாத்
அன்னம் விஷ்ணு சிவ'
- நம்மை போஷிக்கும் அன்னமே மும்மூர்த்திகளின் வடிவமாகும் ..!
"அன்னமானது பிரத்யட்சமான பிரம்ம சொரூபம், விஷ்ணு சொரூபம்,
சிவ சொரூபம் என்று வேதம் சொல்வதால், அது மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
அன்னம் ஸ்வயம் பிராணா'- அன்னமே ஜீவன் என்கிறார்கள்
வேதம் அறிந்தவர்கள்.
"அன்னம் அளி. ஓயாமல் அன்னம் அளி' என்கிறது பவிஷ்ய புராணம்.
""அன்னத்தை இகழாதே. அன்னத்தை அலட்சியம் செய்யாதே.
அன்னத்தைப் பெருக்க முயற்சி செய்' என்கிறது தர்மசாஸ்திரம்.
"பசி என்று வந்தவர்களுக்குத் திருப்தியாக அன்னமிடு. அது, உனக்கும் உன் வாரிசுகளுக்கும் புண்ணியத்தைச் சேர்க்கும்; போதும் போதும் என்று சொல்லும்வரை அன்னமிடுவதால் உன் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும்' என்கின்றன ஞான நூல்கள்.
அதனால்தான் பல ஆலயங்களில் அன்னக்கூடம் அமைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னத்தினை பிரசாதமாக வழங்கி, பசிப்பிணியைப் போக்குகிறார்கள்.
கங்கை நதி ஓடும் காசியில் பல அன்னச் சத்திரங்களும், மடங்களும் உள்ளன.
தமிழகத்தில் ஐப்பசி பௌர்ணமியில் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது போல , காசியில் கங்கைக் கரையிலுள்ள மீராகாட் என்னும் படித்துறையில் தீபாவளி (அமாவாசை) அன்று காலையில் "அன்ன சிவன்' வழிபாடு நடைபெற்று வருகிறது.
அகன்ற நடைபாதையில் தரையைத் தூய்மை செய்து கங்கை நீரால் நன்கு கழுவி, மிகப்பெரிய மாக்கோலமிட்டு, பெரிய வாழை இலைகளை தரையில் விரித்து, சுமார் நான்கு சதுர அடி பரப்பளவிலும் இரண்டடி உயரத்திலும் அன்னத் தினாலேயே லிங்கம் ஸ்தாபித்து. அதில் காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்து, அந்த அன்னலிங்கத்திற்கு விபூதி, சந்தனம், குங்குமமிட்டு, மலர் மாலை, ருத்ராட்ச மாலை சாற்றி, அன்னலிங்கத்தைச் சுற்றி லட்டு, வடைகளை சமர்ப்பித்து, பெரிய தட்டுகளில் இனிப்பு களையும் பழங்களையும் படைப்பார்கள்.
ஒரு சிறு நந்தியின் உருவத்தை அன்னத் தினால் உருவாக்கி, பச்சை மிளகாயினால் காது, வால் வைத்து, புளியங்கொட்டையினால் கண்கள் வைத்து அலங்கரித்து அன்னலிங்கத்தின்முன் வைப்பார்கள்.
காலை சுமார் பத்து மணியளவில், அங்கு கூடியுள்ள பக்தர்கள் மற்றும் காசிக்கு வந்திருக்கும் யாத்திரிகர்கள் முன்னிலையில், வேதம் அறிந்த அந்தணர்கள் கணபதி பூஜையில் ஆரம்பித்து அன்ன சிவனுக்குப் பூஜை செய்வார்கள்.
பிறகு, அங்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவரும் பூஜை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் பூஜை செய்தபின் தேங்காய் உடைத்து, அன்னதானத்திற்காக தயார் செய்திருக்கும் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயசம், இனிப்பு வகைகள் முதலியவற்றை நைவேத்தியமாக சமர்ப்பிப்பார்கள்.
மீண்டும் அனைவரும் பூஜை செய்தபின், அந்த அன்னலிங்கத் திலிருந்து சிறிதளவு அன்னத்தையும் இனிப்பு மற்றும் காய்கறிப் பதார்த்தங்களையும் இலையில் வைத்து, எதிரில் ஓடிக்கொண்டிருக்கும் கங்கை நதிக்கு சமர்ப்பித்து வழிபடுவார்கள்.
அதற்குப்பின் பூஜை செய்த இடத்திற்கு அருகிலேயே பக்தர்கள் வரிசையாக அமர்ந்த தும், இலை போடப் பட்டு அன்ன சிவலிங்கத்திலிருந்து அன்னத்தை எடுத்து அவர்களுக்கு வழங்கி, மற்ற பொருட்களையும் பரிமாறுவார்கள்.
கங்கை நதியில் நீராடிவிட்டு அந்தப் பாதை வழியாக மகான்கள், புனிதர்கள், பக்தர்கள் நடந்து சென்றிருப்பதால், அவர்கள் பாதங்கள் பட்ட புண்ணிய இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதை உயர்வாகவே நினைக்கிறார்கள்.
இதுபோல் அன்னம் உண்பது வருடத்திற்கு ஒருநாள் மட்டும் என்பதால் அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
அனைவருக்கும் அன்னசிவன் பிரசாதம் கிடைக்கும் என்பது சிறப்பாகும்.
ஒவ்வொரு அன்னத்திலும் சிவலிங்கம் காட்சி தருவதாக ஐதீகம் என்பதால் அன்னத்தை சிறிதளவுகூட வீணாக்காமல் உண்பார்கள்.
இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும். அதற்குப்பின் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவது வழக்கம்.
இந்த வைபவத்தை காசியிலுள்ள மகாலட்சுமி யாத்ரா சர்வீஸ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், காசி விஸ்வநாதரையும் அன்னை விசாலாட்சி யையும் தரிசித்தபின் அன்னபூரணி ஆலயத்திற்குச் சென்று, தங்கத்தாலான அன்னபூரணியை தரிசிப்பார்கள்.
பிறகு லட்டு தேரில் அன்னபூரணி பவனி வருவதைக் கண்டுகளித்து, அந்த லட்டுகளையே பிரசாதமாகவும் பெற்று மகிழ்வர்.
விக்கிரகத்தை தரிசித்து, தீபாவளி தினத்தை புனிதம் மிக்க வகையில் கழிக்கிறார்கள்.
மாலை ஆறு மணிக்குமேல் கங்கை நதிக்கு நடைபெறும் ஆரத்தி மிகவும் ஜெகஜோதியாய்த் திகழும்.
அங்கு கங்காதேவியின் தங்க விக்கிரகத்தை பஞ்ச கங்கா படித்துறையில் எழுந்தருளச் செய்து, சப்தரிஷிகள் பூஜையாக ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி கண்கொள்ளாக் காட்சியாகும