Tuesday, December 31, 2013

ஸ்ரீ சைலம் - ஸ்ரீ சக்ர நாயகி பிரமராம்பிகை






அர்ஜுனா எனப்படும் மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்ட புனிதத்  தலங்களில் ஒன்றாக கர்னூல் மாவட்டத்தின் தலைமருதூர் ஸ்ரீசைலம் விளங்குகிறது. 

சிலாத முனிவர் தவம் செய்து பேறு பெற்ற இடமாதலால் 
ஸ்ரீசைலம் எனப்பட்டது.
 பீடத்தின் நாயகி மகாலக்ஷ்மி (பிரமராம்பிகை). பைரவர் சம்பரானந்தர் (மல்லிகார்ஜுனர்) என்று அழைக்கப்படுகிறார். 

பரமேஸ்வரன் ஒரு முறை அர்த்தநாரீஸ்வரராக, மகரிஷி பிருங்கிக்குக் காட்சி அளித்த போது பார்வதியைத் தவிர்த்துவிட்டு சிவனை மட்டும் வலம்  வர விரும்பி வண்டு உருவத்துக்கு மாறி அவர்களுக்கு இடையே ஒரு துளை போட்டு ஈசனை மட்டும் பிரதட்சிணம் செய்தாராம். 

இதனால் சினம் கொண்ட பார்வதி, அந்த வண்டின்  சக்தி முழுவதையும் கிரகித்துக் கொண்டதால் முனிவர் செயலிழந்து தவித்தார். 

பிருங்கி முனிவரின் ஆழ்ந்த தூய ஈஸ்வர பக்தியை ஈசனிடமிருந்து
கேட்ட தேவி, பிருங்கிக்குப் புத்துயிர் அளித்தார். 
Lord Shiva
வண்டு  உருவில் இருந்த மகரிஷியை ஆட்கொண்டதால், 
அன்னை பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள். 
"பிரமர' என்றால் வண்டு எனப் பொருள். 

அன்னையும் அவளது பரிவார தேவதைகளும் ஒரு  முறை கருவண்டுகளாக மாறி, அருணா என்ற அசுரனின் உடல் முழுவதையும் கொட்டி சம்ஹரித்ததால் பிரமராம்பிகை எனப் பெயர் பெற்றாள் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

அன்னையின் கருவறை பின்புறச் சுவரில் தென்படும் துவாரத்தில் காதை வைத்துக் கவனித்தால், வண்டின் ரீங்காரத்தை இப்போதும் கேட்கலாம். தேவியின் பீஜாட்சரமான ஹ்ரீம் இந்த பீடத்தில்  விசேஷமாக இடம்
பெற்றுள்ளது.
அன்னையின் சந்நிதியில் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தை தரிசிக்கலாம். அதிலிருந்து வரும் அதிர்வலைகளை உணரும் போதே, பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. 
 ஸ்ரீசைலம் கோயில்  கொண்டுள்ள தேவி பிரமராம்பிகை காளி, பார்வதி, சந்திரவதி, மஹாலட்சுமி எனப் பலவாறு போற்றப்படுகிறார் ...
ஆந்திராவில், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரமராம்பிகை ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் கழுத்தின் கீழ்ப்பகுதி விழுந்த இடமாகக் கருதப்படும் இது, 51 சக்தி பீடங்களில் 15வது பீடமாகத்  திகழ்கின்றது.

* தொடர்புடைய பதிவுகள்..

**ஸ்ரீசைல நாயகி ஸ்ரீபிரம்மராம்பா தேவி

***மகிழ்ச்சிதரும்  ஸ்ரீ மல்லிகார்ஜுனசுவாமி




Srisailam dam



Monday, December 30, 2013

ஆனந்தம் அளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்



நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.

சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை

கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும் கூந்தலின் குலைவாரி
ஓடுநீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடிலா மணியைத் தொழல் அல்லது கெழு முதல் அறியோமே

என்று நெக்குருகிப் பாடுகிறார் ஞானசம்பந்தப் பெருமான்.மாந்துறை பெருமானைத் துதிக்க,எமபயம்இல்லையென்றும் சொல்கிறார்- 

திருஞானசம்பந்தர் போற்றி  பதிகம்  பாடித் துதிக்கும் மாந்துறை, 'காவிரியின் வட கரையில் இருப்பதால் வடகரை மாந்துறை' எனப்படுகிறது.
இலவம், குங்குமப்பூ, ஈச்சம், சுரபுன்னை, இளமருது, இலவங்கம், கோங்கு, செண்பகம், குருந்தை, பாதிரி, குரவம், நறவ மல்லிகை (தேன் சிந்தும் மல்லிகை), முல்லை ஆகியவற்றுடன், மௌவல் (ஒரு வகை காட்டு மல்லிகை) மலர்கள் போன்ற . வித வித மலர்களைக் கொண்டு வரும் காவிரியின் பெருமைகளைப் புகழ்ந்துள்ளார்.

தேவர்கள் தொழும் மாந்துறை ஈசனை சிவாகம முறைப்படி தூப, தீபங்கள் மற்றும் தோத்திரப் பாடல்களால் மலர் தூவி, வணங்கி வழிபடுவோர், தவப்பயனதனைப் பெறுவார்கள் என்றும், எக்காலமும் தொழும் அடியவர்களின் உள்ளத்துள் எழுந்து, ஆனந்தம் தருவார் என்றும் போற்றுகின்றார். 

மாமரங்கள் நிறைந்திருந்ததால் ஆம்ரவன க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட தலம், திருமாந்துறை. தற்போது, மாந்துறை  என்று வழங்கப்படுகிறது..!

ஆம்ரவனம், பிரம்மானந்தபுரம், அஹாபஹாரி, மிருகண்டீஸ்வரபுரம் என்றெல்லாம் போற்றப்பட்ட தலம்.

அருள்மிகு ஆம்ரவனேஸ்வரரான மாமரநாதர். அழகான சுயம்புநாதர். ஆதிரத்னேஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர், மிருகண்டீசர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்

மிருகண்டு முனிவர் புத்திரன் வேண்டி இத்தலத்தில் தவமியற்றியுள்ளார்.
மிருகண்டு முனிவர் வழிபடும் ஓவியக் காட்சிகள் காணலாம்..!
மிருகண்டு வழிபட்டதால், மிருகண்டீஸ்வரம்; துன்பம் போக்கும் தலம் என்பதால் அகாபஹாரி என்றும் வழங்குவர். 

பொய் சொன்னதால் தண்டனைக்குள்ளான பிரம்மா, தனது பாவம் தீர வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. எனவே, பிரம்மதீர்த்தபுரம், பிரம்மானந்தபுரம் என்றும் பெயர்கள் உள்ளன.

இந்திரனுக்கு கௌதமரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்
அவன் செய்த பூஜையால் நிவர்த்தியானது. 

வேதமித்திரன் என்பவரது தந்தையின் அஸ்தி, தூய ரத்தினமானது இங்கே

தட்ச  யாகத்தில் கலந்து கொண்ட பாவத்துக்காகச் சூரியன் ஒளி மங்கியது  தனது ஒளியைத் திரும்பப் பெறுவதற்காகக் கதிரவன் மாந்துறையிலும் பூஜை செய்ததான

கணவனான சூரியனின் வெப்பத்தைத் தாங்குவதற்காக
சஞ்சனாதேவி பூசித்த தலம்;

ஈசனைத் துதித்த சந்திரன் இரவுக்கு அதிபதியாக பதவி பெற்றான்.

இரவியும் மதியமும்- சூரியனும் சந்திரனும். இந்திரனும் பார் மன்னர் பணிந்தேத்த- உலக மன்னர்கள் பலரும் பணிந்தார்கள்

பலவகை அழுக்குகளும் சேருவதால் மாசுபட்டுப் போகும் தனது மேனியைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சமுத்திரராஜன் வணங்கிய தலம்...

தாயை இழந்த மான் குட்டிகளுக்காக  ஈஸ்வரனும், அம்பிகையும் தந்தை மான், தாய்மானாக உருவெடுத்து, அந்த மான் குட்டிகளைக் காப்பாற்றியுள்ளனர்.
கஹோல ரிஷியின் மகன் மருதாந்தன் அடைந்த தோஷம்
மாந்துறை திருத்தலத்தில் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது. 

அந்த தோஷத்தால் அவனது கழுத்தில் ஏற்பட்டு இருந்த இரும்பு குண்டுகள் ரத்தினக் கற்களாக மாறின. இதை முனிவர்கள் அவனிடம் கூறி அவன் பாபவிமோசனம் அடைந்து விட்டதை உணர்த்தினர். 

மருதாந்தனும் ஆம்ரவனேஸ்வரரைத் துதித்து போற்றினான். 

பின்னர் மாந்துறைக்கு அடுத்துள்ள அகம்ஹர எனப்படும் ஆங்கரை எனும் ஊரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். 

அந்த லிங்கமூர்த்தி மருதாந்த நாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த இயற்கை எழில்
நிறைந்த ஊரே மாந்துறை. 

இந்த ஊருக்கு அருகே ஆங்கரை, திருத்தவத்துறை, அன்பிலாந்துறை
ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. 

சாலையை ஒட்டி பூஞ்சோலைகளுக்கும், மாஞ்சோலைகளுக்கும்
இடையே ஆலயம் அழகுற அமைந்துள்ளது. 

அற்புதமான இயற்கை எழிலின் ரம்யமான சூழலில் இறைவனை
தரிசிப்பதால், அருளோடு மன அமைதியும் கிடைக்கிறது.

வர்ணங்களின் ஜொலிப்பில் நம் கண்கள் மலர, அழகிய மூன்று நிலை 
கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் ஆலயம் அற்புதமாக அமையப் பெற்றுள்ளது. 

மகாமண்டபம் மிகவும் கலைநயம் மிக்க தூண்களைக் கொண்டு விளங்குகிறது. அர்த்த மண்டபம் மற்றும் ஈசனது கருவறை. 

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற கோல நாயகியான அம்பாளுக்கு, அழகம்மை என்றும் பாலாம்பிகை என்றும் திருநாமங்கள். பாலாம்பாள் என்பதே வாலாம்பிகை என்றும் வழங்கப்படுகிறது.
மேலிரு கரங்களில் தாமரை புஷ்பங்களோடும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகக் கொண்டு பாலாம்பிகை என்கிற திருநாமத்தோடு நின்ற வண்ணம் எழில் சிந்தும் திருக்கோலத்தில் இறைவி தரிசனம் அளிக்கிறாள். 
[Gal1]
அம்பிகையின் வாகனமாக நந்திதேவர் வீற்றிருப்பதால் 
இந்த ஆலயத்தின் பழைமை புரிகிறது.
கருவறையில் ஆம்ரவனேஸ்வரர் கிழக்கு முகமாக 
சுமார் ஐந்தடி உயரத்தில் வீற்றருள்கிறார். 

மூலவர் சந்நிதி சுற்றில்   நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா மற்றும் துர்கை. தெற்குப் பகுதியில் ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
மகாமண்டப கிழக்கு வாயிலில் மான்குட்டிக்கு தாயாக 
அம்மையப்பர் விளங்கிய நிகழ்வுகள் சுதைச் 
சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன.
[Gal1]
 உயரிய மதில்கள். ஆலயத்தினுள் நீண்ட மண்டப வரிசை. வலப்பக்கம் விநாயகர் சந்நதியும் தல விருட்சமான மாமரமும் அமைந்துள்ளன. வில்வமரமும் உடன் உள்ளது.
வள்ளி- தெய்வானையுடன் மயிலேறும் முருகன். 
அடுத்து தண்டபாணி. தொடர்ந்து கஜலட்சுமி சந்நிதி.  
பைரவர் சந்நிதியும் உண்டு. 

நவகிரக சந்நதியுள் சூரியன் மேற்கு நோக்கி இருக்க, அவரைப் பார்த்தபடி மற்றைய கிரகங்கள் உள்ளது, வித்தியாசமான அமைப்பாகும். 

ஹர ஹர என்று சொல்லும் பணியை செய்யும் சம்பந்தன் எனத் தன்னை சுட்டிக் காட்டிக் கொள்ளும் ஆளுடையப்பிள்ளையார் இடைவிடாது அரன் நாமத்தைச் சொல்லி அவனருளை பரிபூரணமாய் அடைந்திட வழி காட்டுகின்றார்.

வள்ளல் ராமலிங்கரும் தனது அருட்பாவில் இப்பதியை ஆராதித்துள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

தல தீர்த்தமாக காயத்ரி நதி என அழைக்கப்படும் கொள்ளிட நதி, ஆலயத்தின் வலப்புறம் ஓடுகிறது. 
 இந்நதியில் நீராடி அங்காரக சதுர்த்தியன்று (செவ்வாய்க் கிழமையன்று வரும் சதுர்த்தி) ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால் அனைத்துவித ரோகங்களும் நீங்கும். 

மனதில் தோன்றும் நியாயமான ஆசைகள் நிறைவேறும். துன்பங்கள்
அகன்று இன்பங்கள் பெருகும்.

ஆலயத்தை சோழமன்னன் சுவேதகேது கட்டியுள்ளார். 

திருபுவனச் சக்ரவர்த்தி மற்றும் ராஜராஜதேவர் ஆகியோரது
கல்வெட்டுகள்  காணப்படுகின்றன.

ஆலயத்தில் தினமும் மூன்று கால பூஜைகள் நடக்கின்றன. காலை 6 முதல் 11 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும். 

ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், சங்கரஜெயந்தி, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் ஆலயத்தில் விசேஷமாக நடத்தப்படுகின்றன. 

பங்குனி மாதம் 1, 2, 3 தேதிகளில் காலையில் சூரிய கதிர்கள் ஈசன் மீது படர்கிறது. அந்த சமயம் இங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

திருச்சி-லால்குடி பேருந்து சாலையில் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது மாந்துறை. சாலையை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளது. 
சுயம்பு மூர்த்தமாக மாமரத்தடியில் வெளிப்பட்ட மாந்துறையானை 'மருத்துகள்' எனப்படும் தவசீலர்களும் (இவர்களே மருதவானவர் என்றும் அழைக்கப்பட்டனர்.

வேதங்களின்படி, பூலோக வாழ்க்கையை முறையாக வாழ்ந்து, அதனால் வானுலக வாழ்க்கையைப் பெற்றவர்கள் மருத்துகள் ஆவர்),

கண்வ மகரிஷியும் வழிபட்ட தாக செய்திகள் உண்டு..! சுவாமி சந்நிதியிலேயே உற்சவ மூர்த்தங்களும் உள்ளன.

காவிரி நதியையே தீர்த்தமாகக் கொண்ட மாந்துறைக்குச் சோழ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். ராஜராஜ சோழ மன்னர் காலத்துக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில், சிறப்பான- சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

மக்கள் வரி கட்ட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். வரி தர முடியாத நிலையில் இருந்தவர்கள், நகரை விட்டு வெளியேறத் தலைப்பட்டுள்ளனர். இதையறிந்த மன்னர், உடனடியாக வரியைத் தள்ளுபடி செய்து, அவர்களை மீண்டும் நகருக்குள் வரும்படிக்கு வேண்டியுள்ளார்.

மக்களின் பெருமிதமும் மன்னரின் பெருமையும் ஒருசேர விளங்கும் இந்தத் தகவலுடன், நந்தவனப் பராமரிப்பு நிலம் விடப்பட்ட செய்திகளும், பல்வேறு திருப்பணி நிவந்தங்களும் காணப்படுகின்றன.
எளிமையாகவும் எழிலார்ந்தும் காட்சி தரும் மாந்துறை திருக்கோயிலை வணங்கி  வளமான வாழ்வு பெறலாம்..!

கோயிலுக்கு வெளியில் நந்தி மண்டபம், பலி பீடம். நந்தி மண்டபத்துக்கு முன்பாக, தரையில் காணப்படும் இரண்டு நந்தி சிலைகள். மண்ணுக்குள் புதைந்ததுபோல் கிடந்தாலும், சோழர் சிற்பக் கலைக்கு அழகான எடுத்துக்காட்டுகள்; கண்களோடு கருத்தையும் கவரும் கம்பீரங்கள்.

நந்தி மண்டபத்துக்குச் சற்று வடக்காக, ஊரின் காவல் தெய்வங்கள். பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி. பக்கத்திலேயே பண்டிதர்சாமி மற்றும் மதுரை வீரன். கருப்பசாமிக்குச் சிறப்பு பூஜைகள் உண்டு.
இங்கிருக்கும் ஆல மரத்து மண்ணை, பிரசாதமாகத் தருவது வழக்கம்
சிவன் கோயில் திருநீறு- குங்குமத்துடன்,
இந்த மண்ணையும் சிறிய பொட்டலத்தில் தருகிறார்கள்.
தொடர்புடைய பதிவு 
ஆதரவளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்



Sunday, December 29, 2013

பயணங்கள் முடிவதில்லை..........






80/20 விதி

கோவை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் சோதனை நடந்துகொண்டிருந்தது...

அப்போதுதான் பியூட்டிபார்லரிலிருந்து அலங்காரம் செய்துவந்த ஃபுல் மேக் அப்பில்  பெண்கள் தகதகக்கும் உடையுடன் அனைவர் கருத்தையும் கவரும் விதமாக கூட்டமாக டிக்கெட் பரிசோதனை பெண் அதிகாரியிடம் மாட்டி கண்கலங்க நின்றுகொண்டிருந்தனர்..

திருமண விழாவில் கலந்துகொண்டு அப்படியே வழியனுப்பவந்த கொண்டாட்டம் போலும் ..!

அதிகாரியோ அத்தனை பேருக்கும் அபராதம் தீட்டிக்கொண்டிருந்தார் .. அவர்களிடம் அத்தனை பணம் இல்லையோ என்னவோ யாரையோ செல்போனில் பதட்டத்துடன் தொடர்புகொண்டு பணம் கேட்டுக்கொண்டிருந்தனர்..

தீபாவளி கூட்டத்தில் 80 சதவிதத்தினர் பிளாட்பார்ம் 
நுழைவுச்சீட்டு வாங்குவதே இல்லையாம் ..
80/20 விதி இங்கும் பொருந்திப்போவது ஆச்சரியம் தான் ...
ஐந்து ரூபாய் டிக்கெட் வாங்காத தவறுக்கு 
ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது..

பிளாட்பாரம் டிக்கெட் வாங்குமிடத்திலும் ஒரே கூட்டம் ..

டிக்கெட் வாங்கிக்கொண்டிருந்தால் ரயிலைத் தவறவிடும் அபாயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை..எனது மகன் பிளாட்பாம் டிக்கெட் எடுக்கச்சென்று ரயில் புறப்பட  சில நிமிடங்கள் இருக்கும் நேரத்திலேயே திரும்ப வரமுடிந்தது..

அத்தனை படிகளையும் ஏறி லக்கேஜ்களை ரயிலில் ஏற்ற மிகவும் சிரமப்பட் நேர்ந்தது .. உதவ முடியாததில் மகனுக்கும் வருத்தம் ..

உடன் வந்தும் டிக்கெட் எடுக்கச்சென்று தாமதமானதால் அவதிகள்..!



போக்குவரத்து நெரிசல் , சரியான நேரத்தை கடைப்பிடிக்காமல் கடைசி நேர சாகசத்தை , அபாயகரமான துணிச்சலுடன் செய்யநேரிடுகிறது..

ரயில் பணங்கள் மிகவும் தொல்லை பயணங்களாக மாறிவருகிறது .. 

ரயில் பயணங்கள் என்றாலே கொண்டாட்டமான மனநிலை 
மாறி வெறுக்கவைக்கவைக்கும் காட்சிகளே தென்படுகின்றன...

திருநங்கைகள் சிலர் கைதட்டியும் , மிரட்டியும் பணம் வாங்கி ஏதோ பஸ்டிக்கெட்டுகள் மாதிரி ஐம்பது  ரூபாய்  ,பத்து ரூபாய் நோட்டுகளை கைவிரல் இடுக்குகளில் நீளமாக மடித்து வைத்து காண்போர்களை அச்சப்பட வைத்தனர்..

ஒருவர் பாக்கெட்டிலிருந்து சில்லறைகளையும் நோட்டுகளையும் எடுத்து உள்ளங்கையில் கொட்டி  அவருக்குத் தர எண்ணிக்கொண்டிருந்தபோது ,
அந்த திருநங்கை ஏமாற்றுச்சிரிப்புடன் அத்தனை தொகையையும்
வழித்து எடுத்துக்கொண்டார் ..! தன் நிரம்பி வழியும் பெரிய கைப்பைக்குள் அழுத்தி பணத்தை அடைத்துக்கொண்டார்..

மாதம் பூராவும் கஷ்டப்பட்டுச்சமபாதித்தாலும் இத்தனை பணத்தை கண்ணால் கூட முதல் தேதியில் கூட பார்க்கமுடிந்ததில்லையே என ஏங்கினார் ஒருவர்..!

ஒரு குழந்தையிடம் முதலில் வந்த பொம்மைக்காரரிடம் வாங்கிய பொம்மையைப் பார்த்த மற்றொரு பொம்மைக்காரர் அது சீனாவில் தயாரான பொம்மை ..இதை வாங்கினால் நம்  பிரதமர் மன்மோகன் சிங்குக்கு - ஆட்சி நடத்த பணம் எப்படி கிடைக்கும் ?? எப்படி அவர் ஆட்சி நடத்தமுடியும் ..??! நீங்கள் இந்த பொம்மைதான் வாங்கவேண்டும் ..இந்திய தயாரிப்பு ..என்று ஒரு பொம்மை கொடுத்து ஆட்சியின் மாட்சிமையை காட்சியாக்கி பாடம் நடத்திவிட்டுச்சென்றார்..

கடலைப்பொட்டலம் ஒன்று உருண்டு வந்துகொண்டிருந்தது ..
பலபேர் எடுக்க போட்டியிட்டு ஒருவர் கையில் அது கிடைக்க அது யாரோ கடலை கடலை சாப்பிட்ட பின் காலியானதை அதேமாதிரி மடித்துப்போட்ட காலியான காகிதம் ...!! 

நுழைவாயிலிலும் , லிப்டுக்ளிலும் CCTV  காமிரா கண்காணிப்பு , 
இரண்டு காவலாளிகள் , 24 மணிநேர பாதுகாப்பு , நூற்றுகணக்கான இல்லங்கள் கொண்ட அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட் ஒன்றில் , 
காய்கறி ,கீரை விற்பவர் , பேப்பர் போடுவர் என்று யார் வந்தாலும் சோதனை , அவர்கள் வெளியே சென்றாலும் பொருட்களை பார்வையிட்டுத்தான் அனுப்புகிறார்கள்.. 

ஏதேனும் உணவுப்பொருள்களோ உடையோ அவர்களிடமிருந்தாலும் வீட்டு எண் எழுதி நாங்கள் தான் கொடுத்திருக்கிறோம் என்று கையொப்பமிட்டிருந்தால்தான்  அனுமதிக்கிறார்கள்..

இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் அனைவரும் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் மாலை வேளையில்  வந்து ஒரு பெண்ணை தாக்கி இருக்கிறார்கள்..
அந்தப்பெண்ணின் முகத்தில் கைவைத்து அழுத்தும் போது அந்தப்பெண்மணி அவன் கையை பலமாக கடித்துவிட்டு அலறி இருக்கிறார் ..
அவன் பய்ந்து லிப்டில் ஏறி தப்பித்துவிட்டானாம் .. 

பெண்மணி புகார் செய்தபின் காமிரா மூலம் நேரத்தை வைத்து ஆளைக்கண்டுபிடித்துவிட்டார்களாம் .. 
அந்த ஆள் அவர்கள் வீட்டில் டிரைவராக இருந்தவராம் ..

அந்தப்பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேறி வருகிறார் ..!
அவரின் மகள் ஒரு மருத்துவர் ..!
அவர்கள் இல்லத்தில் வளர்ந்த அருமையான நாய் ஒன்றை சமீபத்தில் இழந்திருக்கிறார்கள்.. மர்மம் இன்னும் விலகவில்லை..!

அபார்ட்மெண்ட் மீட்டிங் போட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படியும் பாதுகாப்புகள் பலப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தாலும் ,   
அது நான் சென்ற இல்லத்திற்கு அடுத்தவீடு என்னும் போது திகில் பரவுவதை தவிர்க்கமுடியவில்லை..!

ஒரு முறை கோயமுத்தூர் என்கிற பெயர்ப்பலகையைப் பார்த்ததும் வருடக்கணக்கில் கோவையைப் பிரிந்திருந்த மாதிரி சட் என  பெட்டியுடன் இறங்கி பார்த்தால் கோயமுத்தூர் வடக்கு என்று இருந்தது..உடனே இல்லத்திற்கு கைபேசியின் வழியே தொடர்புகொண்டு வட கோவையில் இறங்கிவிட்டதாக தகவல் தெரிவித்தேன் ...

அப்போதுதான் ரயில் நிலயத்திற்கு என்னை வரவேற்க கிளம்பிக்கொண்டிருந்தவர்கள் உடனடியாக வாகனத்தை வட கோவை நோக்கி திருப்பிவந்தார்கள்..

ரயில் கிளம்பியபிறகு பார்த்தால் விளக்கு வெளிச்சமே இல்லை ..அமாவாசை இருட்டு..ஆளரவமே இல்லை.. சுற்றிலும் நாய்களின் குரைப்பொலி.அவற்றின் கண்கள் ம்ட்டுமே மினுங்கி பயத்தை வரவழைத்தன ..
காலபைரவரைப்பற்றி இன்றுதானே பதிவு எழுதினோம்  .. இப்போது இத்தனை பைரவர்கள் தரிசனமா .. என்று நினைத்து சட் என கையில் இருந்த சிறிய டார்ச்விளக்கை   உயிர்ப்பித்தேன்.. குரைப்பொலி அடங்கியது .. வாலாட்ட ஆரம்பித்தன்..!

அந்த டார்ச் சேலத்தில் ஒரு கண்பார்வை   குறைந்த பொம்மை விற்கும் பெண்மணியிடம் அவர்கள் குழந்தைகளின் படிப்புச்செலவுக்கு வைத்துக்கொள்ளும் படி கொஞ்சம் பணம்  கொடுத்தேன் .. 

அவர் ஏதாவது பொம்மை எடுத்துக்கொள்ளும்படி சொன்னார் .. 

நம் வீட்டில் விலை உயர்ந்த பொம்மைகள் ஏராளமாக வைத்து விளையாடும் வாரிசுகள் இந்த பொம்மையை கொடுத்தால் ஏளனமாக நினைப்பார்களே  என நினைத்து மறுத்துவிட்டேன் .. 

அவர் இறங்கும் சமயம் வைத்துக்கொள்ளுங்கள் அம்மா . இன்று என் வீட்டில் கல்வி விளக்கு ஏற்றியதற்கு  என்று கையில் கொடுத்துவிட்டார்..

அந்த சின்னஞ்சிறு பொருள் இப்போது எனக்கு பேருதவி செய்தது .. 
அதே சமயம் காரின் விளக்கொளியில் குடும்பத்தினர் வருகை பார்த்ததும் நிம்மதி வந்தது..

நடு இரவில் இந்த மாதிரி எல்லாம் ஸ்டேஷனில் இறங்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்கள்.. 

அது கொஞ்சம் அதிகமான உபதேசமாகப்போய் அடுத்தமுறை கோவை ரயில் நிலையத்தில் இறங்காமல்  ரயில் கிளம்பியதும்தான் கோவை ஜங்ஷன் தாண்டியது தெரியவந்தது..நடை மேடை பராமரிப்புப் பணியால் இரு தடுப்புகளுக்கு நடுவில் ரயில் நின்றதால் ரயில் நிலையம் போலவே இல்லாததால் இறங்க்வில்லை..1 
டிக்கெட் பரிசோதகரிடம் சொல்லலாம் என எழுந்தபோது அருகில் இருந்த் குடும்பத்தினர் அடுத்த ஸ்டேஷன் போத்தனூரில் இறங்கிக்கொள்ளுங்கள்.. 
காட்டுப்பகுதியாக இருப்பதால் பிளாட்பார்ம் இல்லாமல் ரயிலில் இருந்து இறங்க முடியாது என்றும் அறிவுறுத்தினார்கள்..!

அவர்கள் கோவாவுக்கு கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டத்திற்கு கலந்து கொள்ளச்செல்வதாகவும் , அங்கே சர்ச்சில் பாதிரியாரின் உடலை வருடம் ஒருமுறையே தரிசிக்க கிடைக்கும் என்றும் தெரிவித்தார்கள்..!     
 கோவை ரயில் நிலையம் சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமானத்தில் இருந்தபோது  போத்தனூர் ரயில் நிலையம் வந்துதான் பயணம் செய்யவேண்டி இருந்தது..
அப்போது உறவினர் மகனும் , நண்பரின் மகனும் படிக்க வெளிநாடு செல்ல போத்தனூர் வந்துதான் வழியனுப்பி வைத்தோம்.. 
சரியான  நடைமேடை வசதியோ அடிப்படை வசதிகளோ இல்லாமல் சிரமப்பட்டு ரயில் ஏறி பயணம் செய்து சென்னை சென்று விமானப்பயணம் செய்து சென்ற அவர்கள் இருவரும் அந்த நாட்டின் கலாச்சாரம் சரியில்லை என்ற காரணத்தோடு இந்தியா திரும்பிவிட்டனர்..!

கோவை  இல்லத்திற்கு  கைபேசியில் தொடர்புகொண்டு 
போத்தனூருக்கு வரச்சொல்லி தகவல் தெரிவித்தோம் ...

சில ஆண்டுகளில் போத்தனூர் ரயில் நிலையம் சிறப்பான அடிப்படை வசதிகளுடன் அருமையாக மாறி புது பொலிவுடன் காட்சியளித்தது மகிழ்வளித்தது..!

சென்ற வாரம் பெங்களூரில் மற்ற மாநில  பதிவுஎண் கொண்ட வாகனங்களிடம் அபராதம் விதித்தார்கள்..டாக்டர்களின் வாகனங்களுக்கு விதிவிலக்கு  ..பிடித்தவுடன் விட்டுவிட்டார்கள்..!

இந்த வருடத்தில் நிறைய அலைச்சல் , மன உளைச்சல் மருத்துவமனையில் காத்திருப்பு ,சிகிச்சை என கடந்துவிட்டது....வரும் புத்தாண்டாவது மலர்ச்சியாக மலர பிரார்த்திக்கிறோம்..!