Friday, February 28, 2014

மகத்துவம் மிக்க மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அன்னை..!


ருத்ரம் கேட்கலாம்..பார்க்கலாம்..





“ஓம் காளிகாயை வித்மஹே, மாதாஸ்வரூபாயை தீமஹி!” 
தன்னோ அங்காளி ப்ரசோதயாத்” 
என்கிற அங்காளம்மன் காயத்ரியை ஜபித்தபடி மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி வலம் வருவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். 
இடது பாதம் மடித்து வலதுபாதம் அரக்கனின் தலைமேல் பதித்து முன்னிரு திருக்கரத்தில் கத்தி, கபாலமும், பின்னிருதிருக்கரத்தில் டமருகமும், சூலமும் தரித்து, நாகமகுடம் சூடி அங்காளம்மன் அமர்ந்திருக்கும் அழகை தரிசிக்கும்போதே கவலைகள் நீங்கி மனம் லேசாக்குகிறாள் அன்னை..!

மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி  கோயிலில் அமாவாசை தோறும் நடை பெறும் அர்த்த ஜாம பூஜையைக் காண்பதால் வாழ்வில் துன்பங்களும், பிரசினைகளும் தீரும். 
அன்று சிறப்பு அபிஷேகமும், சந்தனக்காப்பும் நடு நிசியில் அம்மன் ஊர்வலமும், உற்சவமும் நடக்கிறது. 
பேய், பிசாசு பிடித்தவர்களும், பில்லி, சூன்யத்தால் அவதிப்படுவோரும், புத்திர பாக்கியம் வேண்டுவோரும், திருமணமாகாதவர்களும், தீராத நோய்வாய்ப்பட்டோரும் அமாவாசையன்று ஆலயத்தில் தங்கி எல்லா தரிசனமும் கண்டால் அவர்கள் குறைகள் விரைவில் நீங்கும். அந்த இரவிலும் கூட்டம் கோயில் கொள்ளாமல் நிரம்பி வழிகின்றது. 

இது தவிர வெள்ளி, செவ்வாய் சிறப்பு வழிபாடும், ஆடி மாதம் பத்துநாள் திருவிழாவும் (குறிப்பாக தேரோட்டத்தன்று கூட்டம் நெரியும்) விசேஷமாய் கொண்டாடப்படுகின்றன. மாசி மாத அமாவாசையில் மயானக் கொள்ளை உற்சவம் திமிலோகப்படுகிறது.

மாசி அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி. அன்று தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவ பெருமான் அங்காளம்மனை வழிபட்டதாகவும், மறுநாள் அமாவாசையன்று ஜனங்களைக் கஷ்டப்படுத்தும் பைசாசங்களை அடக்கி ருத்ரன் தாண்டவமாடு வதாகவும் ஐதீகம் - அதன் அடையாளமாக பக்தர்கள் காளி வேஷமிட்டு மயானத்திற்குச் சென்று சூறையிடுவார்கள். 
வல்லாள கண்டன் என்ற அரக்கன் பரமசிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்து” பெண்ணைத் தவிர வேரெவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக் கூடாது. நினைத்த வடிவம் எடுக்கும் ஆற்றல் வேண்டும் என்கிற வரங்களைக் கோரி வரம் பெற்றவுடன் ஏற்பட்ட அகந்தையால் . இந்திரனையும் திக்பாலர்களையும் வென்றான். 

பூவுலகிலுள்ள கோவில்களில் உள்ள விக்கிரகங்களை அகற்றி தன் சிலையை நிறுவி அதற்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்த ஆணையிட்டான். பணியாதவர்கள் அவனது வாளுக்கு இரையாயினர். யாக அவிர்ப்பாகத்தையும் தானே பெற்றுக் கொண்டான். தேவர்கள் அவனுக்குப் பணி புரிந்தனர். 


அமரர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். திருமால் “தேவர்களே! பிரம்ம கபாலத்தோடு சிவபெருமான் அலைகிறார். அகிலாண்டேஸ்வரி அதற்கு நேரே நின்று அவல் பொரியை இறைத்தால் அதை ஏற்க கபாலம் கீழிறங்கும்.  போய் உமையிடம் சொல்வோம். அவளால் தான் அரக்கன் மடிவான்” என்றார். 


கைலாயம் சென்று அன்னையிடம் பிரம்ம கபாலம் இறங்கும் வழியைக் கூற, அம்பிகை கணவனைத் தேடி பூலோகம் வந்து. மேல்மலையனூர் மயானத்தில் சிவபெருமானைக் கண்டு அவல் பொரியை அள்ளிச் சூறையிட்டாள் அன்னை..!

சிவன் கைக் கபாலம் கீழே இறங்கி பொரியை ஏற்றது 

 சரஸ்வதிக்குச் சினம் பொங்க சிவனின் தண்டனையைக் குறைத்தவளே! மயான பூமிதான் உன் இருப்பிடம்! மயானக் கரிதான் உனக்கு அலங்காரம்! இரத்த வெறி கொண்டு அகோர ரூபமாக எரியும் பிணங்களையே உணவாகக் கொண்டு வாழக்கடவது” என சாபமிட்டுவிட்டாள்..!

சாபம் பெற்ற பர்வதவர்த்தனி விரித்த சடையும் , மூன்று கண்களும், உயர்ந்த எடுப்பான பல்லும், இருண்ட மேனியும் கொண்டு சுடுகாட்டில் சுற்றித்திரிந்தாள். 

வல்லாள கண்டன் ஏற்கெனவே கயிலையில் பார்வதியைப் பார்த்து மயங்கியிருந்தான். மலையனூரில் சக்தி சிவனைப் பிரிந்து வாழ்வதாகக் கேள்விப்பட்டு சிவனைப் போல் வடிவெடுத்து காளியாக வீற்றிருக்கும் அம்பிகையை  நெருங்கிய போது . தேவி கோபக்கனல் தெரிக்க கத்தி, கபாலம், பிரம்பு, அம்பு, வில், கதை, வீச்சரிவாள், சூலம், கேடயம், சங்கு இவற்றுடன் அவனோடு போர் புரிந்தாள். 

முடிவில் ஆயுதங்களை வீசி எறிந்து தன் கூரிய நகங்களால் அவனது வயிற்றைக் கிழித்துப் பெருகிய உதிரத்தை உறிஞ்சிகுடலை மாலையாக அணிந்து நர்த்தனமிட்ட .அன்னையை  தங்கள் துயர் தீர்த்த தேவியாக பூமாரி பொழிந்து தேவர்களும், முனிவர்களும் வணங்கித் துதித்தனர்..!

சிவபெருமான் தேவியிடம் “இதே சுடலையில் கோயில் கொண்டு எழுந்தருளி நாடி வரும் அன்பர்களின் குறை தீர்த்து அருள் புரிய வேண்டும். எனது பிரம்மஹத்தி தோஷம் தீர்த்து சரஸ்வதியின் சாபத்தைப் பெற்றுக் கொண்ட உன் அங்கமெல்லாம் லிங்க சொரூபமாக நான் உறைவேன். அதனால் நீ இன்று முதல் அங்காள பரமேஸ்வரி என்று பெயர் பெறுவாய்!” என அருளினார். 

மலையனூரிலுள்ள ஏரிக்கரை அருகில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஏரியில் மீன் பிடித்து வாழும் செம்படவர் அங்கு வாழ்கின்றனர். 

ஒரு சமயம் ஊழி வெள்ளம் போல் மழை பொழிந்தது. கூடவே புயலும் அடித்தது. ஏரியின் கரை உடைந்து மரங்கள் வேரோடு அடித்துச் செல்லப்பட்டன. ஊருக்குள் நீர் புகுந்தது. மக்கள் “தாயே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என கோயிலில் கூடி முறையிட்டனர். 

அன்னை விஸ்வரூபம் கொண்டு ஏரியின் கரை உடைந்த இடத்தில் படுக்க வெள்ளம் அடங்கியதாம்..!. மக்கள் உயிர்பிழைத்தனர். வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்ற போதும் திரிசூலி அசையவில்லை! 
பெரிய + ஆயியாய் = பெரியாயியாய். திறந்த வெளியில் சயனித்திருக்கும் பராசக்திக்கு சேலை சாற்றுவது சிறந்த காணிக்கையாகக் கருதப்படுகிறது. 


தோல் நீக்கிய வாழைப்பழம் ஒரு பங்கு, பசுவின் பால் முக்கால் பங்கு, தேன் அரைப்பங்கு கலந்து தயாரிக்கப்படும் திரிமதுரம் அங்காளம்மனுக்குப் பிரியமான நைவேத்யம். பொங்கலிடுவோரும், பானகம், இளநீர் படைப்போரும் உண்டு. மாவிளக்குப் போடுவோர் ஏராளம். 

நல்லெண்ணெய், ஆமணக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காயெண்ணெய், பசுநெய் ஐந்தையும் சம அளவு கலந்து வெள்ளி அல்லது செவ்வாய்கிழமை ராகுகாலத்தில் சிகப்பு நிறப் புதுத் துணியைத் திரியாக்கி வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி 108 அங்காளம்மன் போற்றியைச் சொல்லி குங்குமத்தால் அர்ச்சித்தால் திருமணம் கைகூடும். 
இந்த ஐந்து எண்ணெய் கொண்டு எலுமிச்சம் பழமூடியில் சிவப்புத் திரியிட்டு தீபமேற்றி (கிழக்கு அல்லது வடக்குமுகம்) செம்பருத்திப்பூமாலை அணிவித்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) வணங்கினால் சந்தான பாக்கியம் கிட்டும். 

பூர்த்தி நாளன்று வெண்கலப் பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் நிரப்பி மஞ்சள் நிற ஆடையணிந்து தானம் வழங்க வேண்டும். 

அமாவாசை பகல் அல்லது இரவு உச்சிப் பொழுதில் பூஜை செய்து 
இரவு கோயிலில் தங்கினால் பேய் பிடித்தவர் சுகமடைவர் 

கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ஒரு மண்டலம் புற்றுக்கு பால் ஊற்றி கிழக்கு நோக்கி விளக்கேற்றினால் தோஷம் விலகும். 
சந்நிதிக்கு நேரே மலை போல் புற்று இருக்கிறது. 

புற்றில் நாக வடிவாக அம்மன் அருள்பாலிக்கிறாள். புற்றுமண் இங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

சன்னதிக்குச் செல்லும் வழி குறுகியதாக, இருட்டாக உள்ளது. 



Thursday, February 27, 2014

மகத்துவம் மிக்க மஹாசிவராத்திரி விழா..!













உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை 
சிவராத்திரி என்கிறோம். 

வருடத்தின் பன்னிரண்டு சிவராத்திரி நாட்களில், 
மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியையே மகா சிவராத்திரி ஆகும். 

மாசி மாத  மகா சிவராத்திரி நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். 
ஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிரினங்கள் 
அனைத்தும் அழிந்து பிரபஞ்ச நாயகனான சிவபெருமானும், 
நாயகியான பார்வதி தேவியும் மட்டும் எஞ்சினர்.
அப்போது பார்வதி தேவி, மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனிதகுலம் தழைக்கவும் ஓர் இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜை செய்து பரம்பொருளை வழிபட்டார். 

அதனை ஏற்று சிவபெருமான் மீண்டும் பிரபஞ்ச சிருஷ்டியை தோற்றுவித்தார். அதனால் மீண்டும் பூமியில் உயிரினங்கள் தோன்றின. 
இவ்வாறு பார்வதிதேவி பரமனைப் பூஜித்த அன்றைய தினமே 
மகா சிவாராத்திரியாக கொண்டாடப்படுகிறது. 

அவர் பூஜை செய்த நான்கு காலங்களும், தற்போது சிவாலயங்களில் 
மகா சிவராத்திரி சிறப்பு பூஜையாக செய்யப்படுகின்றது.

விஞ்ஞான ரீதியாகவே மகா சிவராத்திரி நாள்,  மனிதனின் 
ஆன்ம வளர்ச்சிக்கு மிகப்பெரும் உறுதுணையாக இருக்கிறது. 

மகா சிவராத்திரி நாளன்று, கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருப்பதால் அந்த நாளன்று விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே  சூழ்நிலை உருவாகிறது. 
 இந்தியாவின் பல்வேறு புனிதத் தலங்களிலும் ஆலயங்களிலும் 
மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 
புராணங்கள், இதிகாசங்கள், சான்றோர்கள் கூற்றுப்படி, இந்நாளின் இரவன்று உறங்காமல் விழித்திருப்பதற்கான பலன்கள் எடுத்துரைக்கப்பட்டு, மக்களை விழித்திருக்கச் செய்வதற்காகப் பல உபாயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

யோக மரபில் சிவபெருமான் ஒரு கடவுளாகவும், ஆதி குரு - 
முதலாவது குருவாகக் கருதப்படுகிறார். 
ஆன்மிகப் பாதையில் இருக்கும்  மனிதர் அந்த நாளில்தான் கயிலாய மலையுடன் ஒன்றிணைகிறார்.  ஒரு மலையைப்போல முழுமையான நிச்சலனமாகிறார். பல்லாண்டு ஆத்ம சாதனைகளுக்குப் பின்னர், ஒரு நாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆழ்கிற அந்த நாள்தான் மகா சிவராத்திரி  நாளில் அவருள் இருக்கும் அனைத்து அசைவுகளும் நின்று போகின்றன. எனவே அந்த நாளினை அவர்கள் நிச்சலனத் திற்குரிய நாளாகக் கருதுகிறார்கள்.
மதங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையைச் சாராமல், அறிவியல் ரீதியாகவே அனைவருக்கும் ஆன்மிக வளர்ச்சிக்குத் துணைபுரிவதால், மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் ஒரு இறைவிழாவாக நிகழ்கிறது.


ஒரு வேடன் காட்டில் சென்று கொண்டிருந்தபோது,  புலி ஒன்று அவனை விரட்ட ஓடிச் சென்று ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.  மரத்தின் கீழே, புலி படுத்துக் கொண்டது. ..!

செய்வதறியாமல் திகைத்த வேடன், பொழுதைக் கழிக்கவும், தூக்கத்தை விலக்கவும் - தூங்கினால், கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவேனோ என்று பயந்து -  அந்த வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான். 

கீழே விழுந்த இலைகள், அந்த மரத்தினடியில் இருந்த 
சிவ லிங்கத்தின்மேல் விழுந்தன. 
வேடன் தான் செய்வது என்னவென்று அறியாமல் செய்த அந்தச் செயல், சிவனுக்குரிய அர்ச்சனையாக மாறி, அவனுக்குச் சிவனின் அருள் கிடைத்தது. அன்று சிவராத்திரியாதலால், கண் விழித்துப் பூஜை செய்த பயனும் கிடைத்தது.
சிவராத்திரியின் மகிமையைஉணர்ந்து சிவராத்திரியன்று 
முழு இரவும் கண்விழித்துச் சிவபெருமானைப் போற்றி 
வழிபாடு செய்து, அருள் பெறலாம்..!




















Wednesday, February 26, 2014

சிறப்பு மிகுந்த சிவராத்திரி விரதம்


 


கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, 
தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, 
மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். 

மகாசிவராத்திரி விரத தினத்தன்று சிவபெருமானின் 
எட்டு திருநாமங்களை ஓயாமல் ஜபிக்க வேண்டும் ..அவை:
ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம.

மாசிமாதத் தேய்பிறைக் காலத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி விரத தினமான சதுர்த்தசி திதி இரவில்தான் சிவபெருமான் ஜோதிலிங்கமாக அடியும் முடியும் காணமுடியாத லிங்கோற்பவ மூர்த்தியாக தரிசனம் தந்த நேரம்.
லிங்கோற்பவ மூர்த்தி என்பது அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் 
எனப்படும் 64 சிவ வடிவங்களில் ஒன்று. 

அர்த்தநாரீஸ்வரர், நடராஜர், பைரவர், úஸôமாஸ்கந்தர், தக்ஷிணாமூர்த்தி, கால ஸம்ஹாரர், ஊர்த்துவத் தாண்டவர் முதலிய 64 வடிவங்கள் சிவமூர்த்தங்கள் எனப்படும்...
 லிங்கோத்பவ மூர்த்தி தோன்றுவதற்குப் புராணக் கதை உண்டு. . 

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இருவரில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் ஏற்பட்டு,  முற்றிய சண்டையை நிறுத்தவும், உண்மையில் பெரியவர் யார் என்று அவர்களுக்கு உணர்த்தவும், சிவபெருமான் பெரும் நெருப்பை உமிழும் ஜோதி ஸ்தம்பமாக வானளாவ உயர்ந்து நின்றார். 

இதன் அடியையும் முடியையும் யார் முதலில் கண்டறிந்து வருகிறார்களோ அவரே பெரியவர் என்று ஓர் அசரீரியை ஒலிக்கச் செய்தார். 
உடனே பிரம்மா அன்னப் பட்சியாக விண்மீது பறந்து முடியைக் காண விரைந்தார். 

விஷ்ணு வராக வடிவம் கொண்டு நிலத்தை தோண்டிக் கொண்டே அடியைக் காண விரைந்தார். முடிவில் விஷ்ணு தன்னால் அந்த ஜோதியின் அடியைக் காணமுடியவில்லை என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.
முடியைத் தேடிச் சென்ற பிரம்மனோ வழியில் மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த ஒரு தாழம்பூவைப் பிடித்து விசாரிக்க, அது ஜோதிஸ்தம்பத்தின் உச்சியிலிருந்து தவறிக் கீழே ரொம்ப காலமாய் வந்து கொண்டிருப்பதாகச் சொல்ல, பிரம்மாவுக்குச் சடாரென்று ஒரு யோசனை. தாழம்பூவைச் சரிகட்டி ஒரு பொய்சாட்சி தயார் செய்துவிடுகிறார். அதாவது அவர் முடியைப் பார்த்து விட்டதாகவும் அதற்குத் தாழம்பூவே சாட்சி என்றும்! 
ஆனால் இறுதியில் உண்மை தெரிகிறது, இருவருமே அடியையும் முடியையும் காணாதவர்கள்தான் என்று. பிரம்மா பொய் சொன்னதால் அவருக்குப் பூலோகத்தில் தனியாகக் கோயில் இல்லாமல் போனது.

தாழம்பூ பொய் சாட்சி சொன்னதால் அதுவும் சிவபெருமான் 
தன் தலையில் சூடும் அரிய பெருமையையும் இழந்தது. 

இவ்வாறு அயன், அரி இருவருக்கும் தானே முழுமுதற் கடவுள் என சிவன் உணர்த்திய வடிவம்தான் லிங்கோத்பவர். ஜோதிலிங்கமாக ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பரமசிவன் தோன்றிய அந்த இரவே மகா சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.
 சிவன் கோயில்களில் கர்ப்பக்கிருஹத்தின் சுவரில் மேற்குப் பாகத்தில் லிங்கோத்பவ மூர்த்தியின் பிம்பம் இருக்கும். 

அதில் லிங்கத்திற்குள் ஓர் அற்புதமான உருவம் இருக்கும். 
அதன் ஜடாமகுடம் லிங்க வட்டத்திற்குள் அடங்காததாக இருக்கும். 

அதன் பாதங்களும் லிங்கத்தின் அடியில் முடிகிற வரைக்கும் தெரியாது. 

இந்த உருவத்தின் கீழே ஒரு வராகமூர்த்தி இருக்கும். 

மேலே அன்னத்தின் உருவில் ஒரு மூர்த்தி இருக்கும். இதுவே லிங்கோத்பவ மூர்த்தி. 
இறைவன் லிங்கோத்பவராகத் தோன்றியது திருவண்ணாமலையில் நிகழ்ந்தது. இங்கு சிவன் தீ மலையாக வெளிப்பட்டதால் இது பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமாக வணங்கப்படுகிறது.
 பிரம்மா, விஷ்ணு சண்டைக் கதையில் பொதித்திருக்கும் உண்மையை நாம் உணரவேண்டும். அதுதான் நாம் சிவராத்திரி விரதம் இருப்பதற்கான உண்மையான பலன். 

பிரம்மா அறிவு வடிவினர். திருமாலோ லஷ்மியையே 
தன் இருதயத்தில் வைத்திருக்கும் செல்வத்தின் நாயகன். 

வெறும் அறிவாலோ, செல்வத்தாலோ இறைவனைக் காண முடியாது. 

அறிவும் செல்வமும் அகங்காரத்தைத்தான் வளர்க்கும். 

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முடியும் அடியும் அகப்படவில்லை என்று சொல்வதன் தாத்பரியம் , பரமாத்மா ஆதியும் அந்தமும் இல்லாத, சிருஷ்டி பரிபாலனம் எல்லாவற்றையும் கடந்த வஸ்து என்பதுதான். 
இப்படி அடி, முடி தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் பெற முடியாதவரையே, என் சாமர்த்தியத்தால் அறிய முடியும்' என்கிற அகங்காரமில்லாமல் அன்போடு பக்தி செய்து உருகினால் வெகு சுலபத்தில் அவர் நமக்கு அகப்பட்டுவிடுவார். 

அன்பினாலே மிகமிக விரைவில் திருப்தி பெற்று அனுக்கிரகிப்பவர் சிவபெருமான் என்பதினாலேயே அவருக்கு "ஆசுதோஷி' என்று ஒரு பெயர் இருக்கிறது. 
"ஆசுகவி' என்றால் கேட்டவுடனே கவி பாடுகிறவர் அல்லவா? 

இப்படியே ஸ்மரித்த மாத்திரத்தில் சந்தோஷித்து அநுக்கிரகம் பண்ணுகிற வள்ளல்தான் ஆசுதோஷி. (காஞ்சிப் பெரியவரின் வார்த்தைகள் இவை)

ஆன்மா நற்கதி அடையவே விரதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 

மகா சிவராத்திரியன்று காலையில் நித்திய கடன்களை 
முடித்துவிட்டு சிவாலயம் சென்று வழிபட வேண்டும். 
உண்ணா நோன்புடன் திருமுறைகளைப் பாராயணம் செய்யவேண்டும். 
இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் நடைபெறும் சிவபூஜையில் கலந்து கொள்ள வேண்டும். 

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 6 மணிவரை  4 ஜாமங்களிலும் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக, அர்ச்சனைகளைக் கண்டும், சிவபுராணம், பன்னிரு திருமறைகள் ஆகியவற்றை ஓதியும் சிவசிந்தனையில் இருக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் தத்தம் இல்லங்களிலும் இவ்வாறு பூஜிக்கலாம்.
சிவதரிசனத்திற்குப் பிரதோஷ காலம் மிக ஏற்றது . 

இந்தப் பிரதோஷ காலத்தைப் போலவே ""லிங்கோத்பவ காலமும் சிவதரிசனத்திற்கு மிகமிக உகந்தது. 
மகா சிவராத்திரி தினத்தன்று இரவு 11.30 மணிமுதல் பின்னிரவு 1.00மணி வரை (ஒன்றரை மணி நேரம்) உள்ள நேரமே லிங்கோத்பவ காலம். 

ஏனெனில் இந்தநேரத்தில்தான் சிவன் ஜோதி லிங்கமாகத் 
தோன்றிய நேரம் என்பது ஐதீகம். 
இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.
பன்னிரு கோடி சிவலிங்கத் திருமேனிகளைத் தரிசிப்பதால் கிடைக்கும் சிவ புண்ணியத்தை சிவராத்திரி தினத்தில் ஒரு சிவலிங்கத்தைப் பூஜிப்பதால் பெற்றுவிடலாம் என்பது நம் முன்னோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சிவராத்திரியில் உண்ணாநோன்பும், கண்விழித்து சிவதியானம் செய்வதும்  புலன்களை வெல்வதற்கான முயற்சிக்கு ஒரு தூண்டுகோலாகும்..!. புலன்களை அடக்கினால் மனத்தை அடக்கலாம். மனத்தை அடக்கிவிட்டால் கிட்டாதபேறு வேறு இருக்காது.. 
சிவராத்திரி விரதமிருந்து சிவனை உளமாற மனம், மொழி, மெய்யால் வழிபடுபவர் உடல் நலம் சிறக்கும். மனவளம் பெருகும். 
இவற்றிற்கும் மேலாக  கண்களுக்கு ஒரு நண்பன் கிடைப்பான். அந்த நண்பன் நம் கண்கள் இரண்டு. அவற்றிற்கு ஒரு நண்பன் கிடைத்தால் இன்னொரு கண். அதாவது மூன்றாவது கண். சிவனுக்கே உரியது மூன்றாவது கண். 
அது  கிடைத்தால்... சிவ சாரூப்யம் அடைந்து...  பிறவிப்பயன் பெறலாம்..!