Sunday, August 31, 2014

உவகை தரும் உலர் மலர்கள்..!








இயற்கையாக கிடைக்கும் மலர்களை உலரவைத்து 
உலர் மலர்கள் தயாரிக்கப்படுகின்றன. 

நீண்ட காலம் வாடாமல் இருக்கும் உலர்  மலர்கள் 
அலங்காரத்திற்கும், பரிசளிக்கவும் பயன்படுகின்றன. 

உலர்  மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன், உள்நாட்டிலும் விற்பனை செய்யப்படுகின்றன. 

கோவை, ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் உலர் மலர் கண்காட்சிகளும் அவ்வப்போது நடைபெறுகின்றன.

உலர் மலர்களையும், உலர் இலைகளையும் தயாரிக்க நல்ல சூரியவெளிச்சம் நிலவும் நாட்களில் செடியின் மீதுள்ள காலைப்பனி நீங்கிய பின்னர் சேகரிக்க வேண்டும். 

அறுவடை செய்த பின்னரும் மலர்களில் பனி நீர்த்துளிகள் காணப்பட்டால் அவற்றை உறிஞ்சும் காகிதம் கொண்டு ஒற்றி அகற்றிவிட வேண்டும். 

நீர் பாய்ச்சிய உடன் மலர்களைப் பறிக்காமல் நீர்பாய்ச்சி ஓரிரு நாட்கள் கழித்து, பின்னரே செடிகளிலிருந்து மலர்களைப் பறிக்க வேண்டும்.

வெளிறாமல் புதிதாக மலர்ந்த மலர்களைத் தேவையான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். 

அறுவடை செய்தவுடன் காலந்தாழ்த்தாமல் உலர்த்த வேண்டும். இல்லாவிடில் இதழ்கள் வாடி தேவையான மலர் வடிவத்தினை இழந்துவிடும். 

உலர்த்தும் முன்னர் தேவையற்ற பாகங்களை வெட்டி அகற்றிவிட வேண்டும். 

காகிதங்களுக்கிடையில் வைத்து அதன் உருவ அமைப்பு போன்றே அழுத்தி வைக்க வேண்டும். உறிஞ்சும் காகிதங்களுக்கு இடையிலோ அல்லது உலர் கலன்களில் செயற்கையாக பராமரிக்கப்படும் வெப்பத்திலோ மலர்களை உலர்த்தலாம்.

மலர் வகைகளுக்கேற்றவாறு உலர்த்தும் வெப்பநிலையும் உலர்த்தும் காலமும் மாறுபடுகிறது. 

மலர் வகைகளைத் தனித்தனியே உலர்த்த வேண்டும்.

கெலிகிரைசம், லிம்மோனியம் போன்ற மலர்களைத் தலைகீழாக கட்டி விடுவதன் மூலம் காற்றில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்துவதால் இம்மலர்கள் தங்கள் புத்தம் புதுத் தன்மையில் இருந்து மாற்றங்களையும் அடைவதில்லை.
இலைகளையும் மலர்களையும் வெள்ளை மணல், சிலிக்கா ஜெல், போராக்ஸ் போன்றவை அடங்கிய உலோக, பிளாஸ்டிக் அல்லது மண் கலன்களில் வைத்துஅறை வெப்ப நிலையிலேயே உலர்த்தலாம். 
உலர் ஊடகத்தில் வைக்கப்பட்ட மலர்களை தினமும் சூரிய ஒளியில் உலர வைப்பதன் மூலம் மலர்கள் விரைவில் உலர்ந்துவிடும். மின்சாரம் மூலம் வெப்பப்படுத்தப்படும் ஓவன்களிலும் மலர்களை மிக விரைவாக உலர்த்தலாம். 

ஒவ்வொரு வகை மலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படும். உதாரணமாக ரோஜா மலர்களை 40-45 டிகிரி செ. வெப்பநிலையில் 48 மணி நேரம் வைப்பதன் மூலம் உலர்த்தலாம். 

கிளாடியோலஸ் மலர்கள் இந்த வெப்பநிலையில் உலர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

கோழிக் கொண்டை, மல்லிகை கீரை வகைகள், பாக்கு(கமுகு) மற்றும் தென்னை இலைகள், வெட்டப்பட்ட மலர்கள் அனைத்தும் உலர் மலர்கள் வகையை சார்ந்ததாகும்

மலர்களுடன் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவையும் அழகிற்காக சேர்க்கப் படுகின்றன.

பலவகை வண்ணங்களையும் நறுமணங்களையும் கொண்ட உலர் மலர்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தாவர பாகங்கள் வீட்டுக்கு அழகும் புத்துணர்ச்சியும் தருகின்றன. 
தனித்தன்மையும் வடிவமும் அழகும் கொண்ட காய்ந்த தாவர பாகங்களான இலைகள், பூக்கள், விதைகள், மரப்பட்டைகள், பூஞ்சாணங்கள் பல வகை தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. 
சேகரிக்கப்பட்ட காய்ந்த தாவர பாகங்கள் பல வகை உலர் மலர் தொழில்நுட்பங்கள் (உலரவைத்தல், நிறம் நீக்குதல் மற்றும் சாயம் ஏற்றுதல்) மூலம் பதப்படுத்தப்படுகின்றன.

உலர் மலர்கள் கொண்ட நறுமணக்கலவைகள் (பாட்புரி) நறுமணப்பைகள், வாசனைத் திரவியங்களை வெளியிடும் கருவிகள், தைலங்கள். ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. . 


பல விதமான செடிகள் இந்தியாவில் இருப்பதால், உலர் மலர்கள்  ஏற்றுமதியில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது.

உலர் மலர்கள் என்றால் மலர்கள் மட்டுமல்லாது உலர்ந்த கிளைகள், விதைகள் மற்றும் பட்டைகளையும் குறிக்கும்

உலர் மலர்கள் மற்றும் செடிகள் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு
அந்நிய செலாவணி கிடைக்கிறது. 

சுமார் 500 வகையான உலர் மலர்கள் இருபது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 கைவினைக் காகிதம், பெட்டிகள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள், சணல் பை, அலங்கார புகைப்படம் மற்றும் பலவிதமான பரிசுப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது. 
உலர் மலர்களைக் கொண்டு இப்பொருட்கள் செய்யப்படுவதனால அதன் அழகு கூடுகிறது. சிலிக்கா மற்றும் சிலிக்கா பசையை உபேயாகப்படுத்துவதால் மலர்களின் தரம் மேம்படுத்தப்படுவதுடன். மலர்கள் உதிர்வதும் தடுக்கப்படுகிறது.

மிக மெல்லிய மலர் மற்றும் செடிகள் மணமூட்டப்பட்ட மலர்கள் பிளாஸ்டிக் பைகளில வைக்கப்படுகிறது.  அலமாரி, டிராயர் மற்றும் குளியலறைகளில் வைக்கப்படும்.தாவர வகைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில், பேச்சிலர் பட்டன், கோழிக் கொண்டை, மல்லிகைப் பூ, ரோஜா இதழ்கள், காகிதப் பூ, வேப்ப மர  இலைகள் மற்றும் பழக் கொட்டைகள் ஆகியவை பாட்பொரி செய்யப்பயன்படுகிறது.
இங்கிலாந்து, இவ்வகை தயாரிப்புகளை நமது நாட்டிலிருந்து கொள்முதல் செய்கிறது..
உலர் மலர் தொட்டி - உலர்ந்த தண்டு மற்றும் சிறு கிளைகள் பயன்படுத்தப்படுகிறது.
 
பொதுவாக உலர்ந்த பருத்தியின் கூடு, பைன் மலர்கள், காய்ந்த மிளகாய், மற்றும் சுரைக்காய், புல், மர மல்லிகை, அஸ்பராகஸ் இலைகள், பெரணி இலைகளை, மரப்பட்டைகள் மற்றும் சிறு குச்சிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.உலர்மலர் கைவினைப் பொருட்கள்
 உலர் மலர் வர்த்தகத்தில்மிக அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
வாழ்த்து அட்டைகள், கவர்கள், மெழுகு தாங்கி, கண்ணாடி கிண்ணங்கள் ஆகியவை பல வகை நிறமுள்ள உலர் மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது













 photo Epiphyllum_oxypetalum_animation.gif

Saturday, August 30, 2014

பொய்யாமொழி விநாயகர்


விதியோடு விளையாடி, விக்னங்களை விரட்டி, 
விநயமாக காப்பவர் விநாயகர்..!
அம்சமான இடத்தில் அமர்க்களமாக அமர்ந்து கோயிலின் வெளியே நவகிரகங்களின் அமைப்பில்  பலிபீடம்.  ஒன்றின் மீது இரண்டு விரல்களை வைத்து மனதில் நினைத்த காரியம் நிறைவேறுமா என வேண்டிக் கேட்க, நடக்குமென்றால் விரல்கள் இரண்டும் நகர்ந்து ஒன்று சேருமாம். பல காரியங்களுக்கு இங்கு வந்து இப்படியொரு உத்தரவு பெற்று செல்கிறார்கள், 
[Gal1]
கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல அங்கே மூன்று வாகனங்கள். அதிசயம் , விநாயகர் இங்கு லிங்க ரூபமாய் இருக்கிறார். ஆதலால் நந்தி. 
இவருக்கே உரிய மூஞ்சூறு, யானைத் தலையர் என்பதால் யானையும் வாகனமாய் இங்கே இருக்கிறது . 

நாகர், தனிச்சந்நதியில் ஜோதிர்லிங்கேஸ்வரர் அருள்கிறார். முன் மண்டபத்தில் நவகிரக சந்நதி.
[Gal1]
 பிராகாரத்தை ஒட்டி வெளியே ஒரு கல்மேடை.நிழல் பரப்பி நிற்கிறது . அடிவேரிலிருந்து மூன்று பிரிவாக வளர்ந்திருக்கிறது கல்லால மரம்
[Gal1]
இம்மூன்றும் மும்மூர்த்திகள் என்றும் தீவனூர் விநாயகரை தரிசிக்க வந்தவர்கள் தம் நினைவு மறந்தவராய் இப்படி கல்லால மரமாய் சமைந்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த மரத்துக்கு நூல் சுற்றி வழிபட திருமண வரமும் குழந்தை பாக்கியமும் உடனே கிடைக்கிறதாம். 

ஆடு மேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமி நீக்கி, சோறு பொங்கி சாப்பிட சேகரித்த நெல்மணிகளை குத்தி அரிசியாக்க கல் தேடிய போது ஒரு கல் யானைத் தலை போன்று இருக்க, இது உதவாது என ஓரமாய் வைத்துவிட்டு வேறு கல் தேடிப் போனார்கள். 

வேறு கல்லைத் தேடி எடுத்து வந்தபோது  யானைக்கல் அருகே இருந்த நெல்லெல்லாம் அரிசியாகி இருந்தது! சிறுவர்களுக்கு வியப்பு. நெல் எப்படி அரிசியானது? இந்த அதிசயக் கல் செய்த வேலைதான் இது என உணர்ந்து அந்தக் கல்லை ஒரு இடத்தில் மறைத்து வைத்தார்கள். 

ஆனால் மறுநாள் அவர்கள் மறைத்து வைத்த இடத்தில் கல் இல்லை. தேடியபோது அருகில் இருந்த குளத்திலிருந்து நீர்க்குமிழ்கள் எழுந்தன. பளிச்சென்று குளத்தில் பாய்ந்து, மூழ்கி கல்லை மீட்டெடுத்து, ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டிப் போடுகிறார்கள்.

இதே காலகட்டத்தில் வயலில் நெற்கதிர்கள் திருடு போக, ஊர்ப் பெரியவர்களின் விசாரணையில் ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பிடிபட்டார்கள். 

இந்த விசாரணையில் தங்களுக்கு கிடைத்த இரண்டு கல் பற்றி சொல்ல, ‘நெல்குத்தி அதிசயக் கல்’ விவரமும் தெரியவந்தது. 
அந்த இரண்டு கற்களையும் ஊர்ப் பெரியவர் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார். 

அன்று இரவு அவர் கனவில் தோன்றிய கணநாதன், ‘‘தான் விநாயகர் என்றும் எனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபட, குலம் காப்பேன் என்றும் கூறி, தன்னோடு கிடைத்த இன்னொரு கல்லையும் கருவறையில் வைக்க வேண்டும் என்றும் தான் வளர வளர அது தேயும்’’ என்றும் கூறி அருளினார். 
[Gal1]
மறுநாள் கனவை ஊராரோடு பகிர்ந்து கொண்ட பெரியவர் விநாயகருக்கு ஆலயம் அமைத்து குடமுழக்கும் செய்தார். அன்று முதல் இவர் நெற்குத்தி விநாயகர் என் அழைக்கப்பட்டார்.
இவரை, பொய்யாமொழி பிள்ளையார் என்றும் போற்றுகிறார்கள். 

திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வியாபாரத்திற்கு மிளகு ஏற்றிச் சென்ற வியாபாரி மரத்தடியில் வண்டியை நிறுத்தி விட்டு கோயிலில் படுத்து ஓய்வெடுத்தார். 
[Gal1]
 நைவேத்தியத்திற்கு  கோயில் பணியாளர்கள் வியாபாரியிடம் கொஞ்சம் மிளகு கேட்டார்கள்.

வியாபாரியோ, ‘‘இது மிளகு இல்லை, உளுந்து’’ என்று சொன்னான். காலையில் எழுந்து மூட்டையைத் திறந்து பார்த்த வியாபாரி, அதிர்ந்து போனான். அத்தனை மூட்டையும் உளுந்தாகிவிட்டது! பதறியவன் விநாயகரிடம் விழுந்து மன்னிப்பு கேட்க, உளுந்து மூட்டைகள் மீண்டும் மிளகாகின. 

அன்று முதல் இவருக்கு பொய்யாமொழி விநாயகர் என பெயர் உண்டானது. 

இன்றும் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை என்றாலும் திருடு தொடர்பான வழக்கு என்றாலும் இவர் சந்நதிக்கு அவ்வாறு வரும் பஞ்சாயத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது. 

லிங்க ரூபமாய் அருளும் விநாயகருக்கு பாலபிஷேகம் செய்யும்போது நாம் துதிக்கையில் அவரும்  தும்பிக்கையோடு தரிசனம் தருவது அற்புதக் காட்சி. 
கற்பூர ஆரத்தியால் மின்னும்  திருமேனி தரிசனம் நம் வாழ்வை பொலிவாக்கும். 

பொய்யாமொழி விநாயகரை வணங்க மும்மூர்த்திகளின் அருளும் கிடைக்கும். 
திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், 
செஞ்சி செல்லும் சாலையில் இருக்கிறது, தீவனூர். 
தீவனூர்  பிள்ளையார்  கோயில்

[Image1]