Friday, October 31, 2014

செல்வம் அருளும் ஸ்ரீசென்றாயப் பெருமாள்



திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் 
சேலம்-திருச்செங்கோடு சாலையில் ராசிபுரத்தை 
அடுத்துள்ள காளிப்பட்டியில் புகழ்பெற்ற  முருகன் கோவில் உள்ளது

காளிப்பட்டி கந்தசாமி ஆலயத்திற்குப் பின்புறம் சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முற்பட்ட சுயம்புவான புற்றினால் ஆன 
ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயில்  அமைந்துளளது..

மூலவரைசுற்றி கோபுரத்தில் தசாவதாரசிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கர்ப்பகிரஹத்துக்குள் புற்று மூன்று பிரிவாக அமைந்திருக்கிறது .. நடுவில் சற்றே உயரமாக இருக்கும் புற்று சென்றாயப்பெருமாளாகவும் , இருபுறமும் உள்ளவை ,ஸ்ரீதேவி பூதேவியாகவும் வழிபடப்படுகின்றன. புற்றின் முன்புறம் சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


ஆலய வளாகத்தில் சுற்றுப்புறத்தில் எங்குமே காணப்படாத குளத்தி மரம் மிக விஷேசமாக வளர்ந்துளளது  சிறப்பாகும் ..

மரத்தைப்பற்றி தாவரவியாலாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்களாம்..

ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வீரபக்த ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி, சொர்க்க வாசல் அமைக்கப்பட்டுள்ளது..
ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிற்பங்கள்..



.
துவஜ ஸ்தம்பத்தில் சௌகந்திகா மலருடன் அனுமனும் ,, 
மறுபுறம் கருடனும் அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது..

[hindugod_laxmi1.jpg]Ganesh Laxmi Devi Puja Tirupati Balaji Lord Wallpapers Ipad

Thursday, October 30, 2014

மஹிமை மிக்க துலா ஸ்நானம்


மஹிமையுள்ள கங்கையும், இந்த உலகிலுள்ள மூன்றரைக் கோடி புண்ய தீர்த்தங்களுடன் இறைவனின் உத்தரவினால் துலா மாதமான ஐப்பசியில்  
 தங்களிடம் சேர்ந்துவிட்ட பாவத்திலிருந்து விடுபட ஐப்பசியில் காவிரியை நாடி வருவதாக பல புராணம் கூறுகிறது. 

சங்கல்பம், மந்த்ரம் முதலிய எதுவும் இல்லாமலும் வேறு ஞாபகத்துடனும், உலக்கையை அமிழ்த்துவது போல் தலையை அமிழ்த்தி ஸ்நாநம் செய்பவருக்கும் ஏழ் பிறவியில் உண்டான பாபங்கள் நீக்கும் புனிதத்தன்மை மிக்கது. 
பாவசுத்தியுடனும், நியமத்துடனும் ஸ்நானம் செய்பவருக்கு 
பலன் மிகஅதிகம்.
நூறு வருஷ காலம் கங்கையில் விடாமல் நியமத்துடன் ஸநானம் செய்தால் அடையும் பலனைத் துலா மாஸத்தில் அரங்கநகரப்பனைச் சூழந்துள்ள காவேரியில் துலா ஸ்நாநம் செய்வதனால் அடைந்துவிடுகிறான்.
துலா ஸ்நானத்திற்கு மிகவும் முக்கியமான தலங்கள் சிவாலய சிறப்புடைய மயிலாடுதுறையும், விஷ்ணுவாலய சிறப்புடைய ஸ்ரீரங்கமும் ஆகும். 
இந்த ஸ்நானத்திற்கு கடை முழுக்கு  என்று பெயர்.
 
துலா மாதம்  அம்மாமண்டபம் காவிரிப் படித்துறையில் இருந்து காலையிலே ஐந்தரை மணிக்கு ஆலய யானை தலையில் தங்கக் குடத்தில் நீர் எடுத்துச்செல்வது வழக்கம்.. 
 
: Lord Anjaneya, Amma Mandapam, Srirangam
அம்பிகை பார்வதி மயில் உருவம் எடுத்து சிவனை வழிபட்ட தலம் மாயூரம் என்று வடமொழியிலும், மயிலாடுதுறை என்று தமிழிலும் வழங்கப்படும் தலம் தஞ்சாவூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது. 
திருக்கடையூரில் சிவன் எமனை பதவியிலிருந்து நீக்கி விட்டார். அப்போது எமன் (தர்மதேவன்) மாயூரத்தில் உள்ள மாயூரநாதரை வழிபட்டு மீண்டும் அந்த பதவியை பெற்றான். எனவே இத்தலம் தர்மபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. 
ஆயிரமானாலும் மாயூரமாகுமா என்பது பழமொழி. ஆயிரம் வருஷம் கங்கையில் தினம் குளித்தால்  கிடைக்கும் புண்ணியம் ஐப்பசி மாதத்தில் மாயவரம் காவிரியில் ஒரு நாள் குளித்தாலே கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

Wednesday, October 29, 2014

வெற்றி வேல் முருகனின் சூரசம்ஹாரம்




விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும் அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே!

நல்ல மணவாழ்க்கை அமைய  இந்த திருமணத்திருப்புகழ் பாடல் உகந்தது.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று திருநாமங்கள் கொண்டு போற்றப்படும்  தமிழ் கடவுள் முருகப்பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் பல புரிந்து வந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டியின் சூரசம்ஹாரம்..!..

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் 
கந்தா முருகா  வருவாய் அருள்வாய்

குன்றுதோராடி குறைகள் களையும் குமரன் அருள்பொழியும்
அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா  சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளுடன், சூரசம்ஹாரம்  கடற்கரையில் நடைபெறும் நாளில் அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, அபிஷேகம், சாயரட்சை தீபாராதனையுடன் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி சூரனை வதம் செய்கிறார்..

 சந்தோஷ மண்டபத்தில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு புஷ்ப சப்பரத்தில்எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.

அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வதை சாயாபிஷேகம் என்பர்.
"சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள்

போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும்.

 இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.



 முருகன் சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அதற்கு பதிலாக காவிரி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட் காட்சியளித்து சாமந்தி, ரோஜா, துளசி, கதம்பம், மல்லி, வில்வம் உள்பட 99 வகையான வண்ண மலர்களால் முருகனுக்கு புஷ்ப லட்சார்ச்சனை நடக்கும். 

திருத்தணி மூலவர் முருகனுக்கு  
புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

பள்ளி குழந்தைகள், நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்கும் 
கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்..!. 

திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் உள்ள வள்ளிகுகையின் 
மேற்கூரையில் அமர்ந்திருக்கும் மயில்கள்.