Sunday, November 30, 2014

கார்த்திகை நீராடல்




மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்

பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்

எய்திடின் அன்னதீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்

செய்திரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே".


காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்கள்

 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர்
5. திருவெண்காடு. 6.ஸ்ரீவாஞ்சியம் ..

திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் - திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.

அத்திரி மகரிஷிக்கும் அனுசுயாவுக்கும் தத்தாத்ரேயர் மகனாகப் பிறக்க அருள் கிடைத்தது  எமதர்மனை வாகனமாகக் கொண்டு சிவபெருமான் எழுந்தருளிய தலம் ஸ்ரீவாஞ்சியம் தலத்தில்தான். . 
காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்; ஆனால் பைரவ தண்டனை உண்டு. வாஞ்சியத்தில் முக்தி கிடைக்கும்; பைரவ தண்டனை இல்லை. இங்கு வழிபட்டால் பாவங்கள் குறைவதுடன் புண்ணியம் பெருகும் என்பர்.
  ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் இறப்போரின் காது மட்டும் (எந்த ஜீவன் ஆனாலும்) மேற்புறம் இருக்கும் படி கிடக்கும். அப்போது சிவபெருமான் அந்தக் காதில் பஞ்சாட்சர உபதேசம் செய்வார் எனக் கூறப்படுகிறது. அத்தகைய புண்ணியத் தலம் திருவாஞ்சியம்.

ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்தில் உள்ள திருக்குளம் குப்த கங்கை, முனி தீர்த்தம் எனப்படுகிறது. கங்கை 999 பாகம் ரகசியமாக இந்த குப்த கங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம் தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே, கங்கையின் சக்தி காசியைவிட இங்கு அதிகம் என்பர். இந்த குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி, இறைவனை வழிபட்டால் பஞ்சமா பாதகங் களும் விலகும். கார்த்திகை ஞாயிறு இங்கு விசேஷம். இப்படி நீராடுவதை கார்த்திகை நீராடல் என்பர்.
கார்த்திகை நீராடல் உற்சவம்தான் இங்கு விசேஷம். அந்நாளில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் ஈசனும் தேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பதே புண்ணியம்.
முதல் ஞாயிறு நீராடினால், பிரம்ம ஹத்தி தோஷம் விலகும். விஸ்வபத்ரனின் பிரம்மஹத்தி தோஷம் இங்குதான் நீங்கியது. இரண்டாம் ஞாயிறு நீராடினால், கள் உண்டு மயங்கிய பாவம் விலகும். மூன்றாம் ஞாயிறு நீராடினால், திருட்டுத் தொழிலால் ஏற்பட்ட பாவம் நீங்கும். 
நான்காம் ஞாயிறு நீராடினால், மனசஞ்சலம், ஜென்ம பாவம் விலகும். ஐந்தாம் ஞாயிறு நீராடினால், சம்சர்க்க தோஷம் விலகும். 
குடந்தை- நன்னிலம் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீவாஞ்சியம்  உள்ளது.
கார்த்திகை கடை ஞாயிறு விரிஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் திருத்தலம். "விரிஞ்சிபுரம் மதிலழகு' என்பர். மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் ஆலய சுயம்புலிங்கமாக உள்ளார்.
பிரம்மனின் பெயர் விரிஞ்ஞன். பிரம்மன் வழிபட்ட இத்தலத்திற்கு விரிஞ்சிபுரம் எனப் பெயர். திருவண்ணாமலையில் அடிமுடி காண திருமாலும் பிரம்மனும் முயன்றனர். தாழம்பூவுடன் சேர்ந்து பிரம்மன் பொய் சொல்லி சாபம் பெற்றார். அந்தச் சாபம் நீங்க என்ன பிராயச்சித்தம் என ஈசனிடமே பிரம்மன் கேட்க, அதற்கு ஈசன் தேவரூபமாக காட்சி தராமல் உபாயம் செய்தார்.
விரிஞ்சிபுரம் தலத்தில் வசித்து சிவத்தொண்டு செய்யும் சிவநாதனுக்கும் நயனா நந்தினிக்கும் மகனாகப் பிறக்கும்படி செய்தார். பிரம்மன் சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார். ஆலய தலைமை பூஜா உரிமையைப் பெற விரும்பிய தாயாதிகள் பூஜா உரிமை, வீடு, நிலம் யாவற்றையும் தங்களுக்கு எழுதித் தருமாறு சிறுவனை மிரட்டினர்.

இதனால் மனமுடைந்த சிறுவனின் தாய் ஈசனிடம் முறையிட்டு அழுதாள்; பின் வீடு திரும்பி உறங்கினாள். அப்போது கனவில் ஈசன் தோன்றி, ""நாளை ஆலய பிரம்ம தீர்த்தத்தில் உன் மகனை நீராட்டி வை'' எனக் கூறி மறைந்தார். அன்று கடை ஞாயிற் றுக்கிழமைக்கு முதல் நாளான சனிக் கிழமை.

அவ்வாறே தாய் மகனை நீராட்டி குளக்கரையில் காத்திருந்த போது, ஈசன் கிழவர் வேடத்தில் வந்து சிறுவனை தன்னுடன் தீர்த்தத்தில் மூழ்க வைத்தார். ஒரு முகூர்த்த காலத்தில் அந்தச் சிறுவனுக்கு உபநயனம், பிரம்மோ பதேசம், சிவதீட்சை அனைத்தும் வழங்கி, பின் கரை ஏறிவந்து மகாலிங்கமாக மறைந்துவிட்டார். இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

அப்போது தேவர்கள் பூமாரி பெய்தனர். சுற்றுப்புற மன்னர்கள் (ஈசன் தங்களுக்கு கனவில் ஆணையிட்டபடி) பாலகனை யானைமீது ஏற்றி தீர்த்த திருமஞ்சன குடத்துடன்- மேளதாளத்துடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ஆலயக் கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன.

சிறுவன் ஆகம விதிப்படி எல்லாம் அறிந்தவன்போல பூஜைகள் செய்தான். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் முடி எட்ட வில்லை. அதனால் ஈசன் திருமுடியை வளைத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார். 
அதேகோலத்தில் இப்போதும் முடிசாய்ந்த மகாலிங்கமாக இவ்வாலய இறைவனை நாம் காணலாம்.

திருவண்ணாமலையில் முடிகாண இயலாத பிரம்மன், இங்கே சிறுவனாகப் பிறந்தபோது இத்தலத்தில் இறைவனைப் பூஜித்து, அவரே முடி வளைந்து காட்சி கொடுத்த அதிசயத் தைக் காணலாம். அப்படி திருமுடி வளைந்த தினம்தான் கார்த்திகை மாத கடைஞாயிறு  தினம்.

இதனை  பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். 
குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சிம்ம குளத்தில் நீராடி, ஈரத்துணியுடன் ஆலய வலம் வந்து பகவானை வணங் கினால் புத்திர பாக்கியம் கிட்டும். மேலும் பில்லி, சூன்யம் போன்ற வற்றால்
 பாதிக்கப்பட் டோரும்  நீராடி வழிபட்டால் இன்னல்கள் நீங்கப் பெறுவர்


Saturday, November 29, 2014

சகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்



 நான்கு முக்கியமான. சதுர் மாதங்களில், கடைசியாக வருவது  தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமானது

விஷ்ணுவின் பன்னிரு பெயர்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பனவற்றை தமிழ் மாதங்களில் பொருத்தி அழைப்பார்கள்..!


தமிழ் மாதங்களில் கார்த்திகையைப் போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பார்கள்

""புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதிபுண்ணிய மாதம் தாமோதர மாதம்'' என்று புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.

 கார்த்திகைமாதம் முழுவதும் தமோதரரான ஸ்ரீகிருஷ்ணருக்கு தினசரி நெய் தீபம் காட்டுவது, 3. "ஹரே கிருஷ்ண' மஹாமந்திர ஜபத்தை இயன்ற அளவு செய்வது ஆகியன இந்த விரதத்தின்  விதிமுறைகளாகும்..

""யார் ஒருவர் இம்மாதத்தில் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவருடைய பல கோடானு கோடி பாவங்கள்கூட அவரிடமிருந்து நீங்கி விடுகின்றன'' என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. 

இஸ்கான்-ஹரே கிருஷ்ணா கோயில்களில் தினசரி மாலை, 
தீபம் காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கிருஷ்ணரை சிறப்பாக வழிபடுவதற்குரிய மாதத்தை 
"தாமோதர மாதம். என்பர். 

"தாம' என்றால் கயிறு. "உதர' என்றால் வயிறு. கிருஷ்ணரை, அன்னை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும், 

கிருஷ்ண பக்தையான ராதாராணியை வழிபடும் பொருட்டும் தாமோதரத் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 

இந்த மாதத்தில் ராதாகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டுவதால் நற்பலன் பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கண்ணணுக்கு அவல் கொடுத்த குசேலருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அன்று கொடுத்தது போல கண்ணபெருமான் தான் தாமோதரன் என்ற திருநாமம் கொண்ட இந்நாளில் தன்னை நினைத்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறார்.

தாமோதஷ்டக பாடல்கள் -தினசரி தீபம் காட்டும்போது "தாமோதர அஷ்டகம்' என்று கூறப்படும் சத்யவிரத முனிவரால் இயற்றப்பட்ட துதியைப் பாடினால் அது தாமோதரரை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்

 தாமோதரத் திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

, துளசி பூஜை மற்றும் சந்தியாக் கால பூஜையைத் தொடர்ந்து தாமோதர தீப ஆரத்தி சமயம் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான தாமோதஷ்டக பாடல்கள் பாடப்பட்டு  பக்தர்கள், தங்கள் கரங்களால் நேரடியாக சுவாமிக்கு  நெய் தீப ஆரத்தி காட்டுவது விழாவின் சிறப்பம்சமாக அமையும்.  ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப தியானமும், நரசிம்ம பிரார்த்தனையும் நடைபெறும்..

கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டினால் நிலைத்த செல்வத்தையும், நல்ல குழந்தைகளையும், புகழையும், வெற்றியையும் பெற முடியும். 

பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் முழுவதும் அழியும். 

அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன், யாகங்கள் செய்த பலன் கிடைக்கும். 

முன்னோர்களையும் நற்கதியடையச் செய்யலாம் என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு மரத்துண்டுகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்தால் நெருப்பு உண்டாவது எப்படி நிச்சயமோ, அதேபோல் தாமோதர மாதத்தில் கிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதால் நிச்சயம் அதன் நற்பலனை சந்தேகத்திற்கு இடமின்றி பெறலாம் என பத்மபுராணம் கூறுகிறது. 

தாமோதர மாதத்தில் கிருஷ்ண பிரசாத அன்னதானம் செய்வதும் மிக மிக விசேஷமானது.

புரட்டாசி மாதம் பாசாங்குஷ ஏகாதசியை தொடர்ந்து வரும் பவுர்ணமி முதல் உத்தாண ஏகாதசியை அடுத்து வரும் பவுர்ணமி வரையிலான மாதத்தில், பகவான் கிருஷ்ணரை அன்னை யசோதா உரலில் கட்டிய
லீலை நடந்ததால், வைஷ்ணவர்கள் இம்மாதத்தை தாமோதர மாதமாக அழைக்கின்றனர்.

ஆண்டின் 12 மாதங்களில் தாமோதர மாதமே பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும்

இம்மாதத்தில் எவரொருவர் பகவான் ஸ்ரீஹரியின் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபடுகின்றாரோ அவருக்கு முன் ஜென்மத்தில்  செய்த பாவங்கள் யாவும் தீர்ந்துவிடும் என நம்பப்படுகிறது

Friday, November 28, 2014

கார்த்திகை உற்ஸவம்







திருவண்ணாமலையில் மட்டுமே கார்த்திகை தீபத்தின் போது 217அடி உயர ராஜ கோபுரத்தின் முழு உயரத்திற்கும் மாலை தயாரிக்கப்பட்டு அணிவிக்கப்படுகிறது ..

அகல் விளக்கு ஏற்றுவதே உத்தமமானது என்கிறது ஆன்மீகம். அகல் என்பதற்கு விரிவடைதல் என்ற அர்த்தமும் உண்டு. வாழ்க்கை அனைத்து வசதிகளுடன் விரிவடைந்து வளம் பெருக வேண்டும் என்பதற்காகவே இந்த வழிபாடு



கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.

மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.




நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.

தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.

கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.

வைஷ்ணவக் கோயில்களில், 'பாஞ்சராத்ர தீபம்' என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம்.

ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஸ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை 'ஸ்ரீமுகம்' என்பர்.

கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.

ஈசனின்... ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை நாளில்தான்!

சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.

தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

திருநெல்வேலி- ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.

கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த உற்சவம் , காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!