வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.
ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை
நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், 105 மாணலூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் தொன்மை வாய்ந்த சிவாலயம் அதீத சிறப்பம்சம் கொண்ட திருக்கோயில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகின்றது.
சிவபக்தர் ஒருவர் தான தருமங்களை செய்து வந்தார்.
தானம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமானதால் பக்தரால் தானதருமங்களை நிறைவாக வழங்கமுடியவில்லை.
மிகவும் வேதனையடைந்த அவர், சிவபெருமானை வணங்கி
கண் கலங்கினார்.
அவ்வழியே தானம் பெற வந்த ஒருவர், சிவபக்தரின் மனக்கவலையை அறிந்து "தான் ஒரு ஜோதிடர் என்றும் தங்களின் ஜாதகத்தை தாருங்கள் பலன் சொல்லுகிறேன்' எனவும் கூறி சிவபக்தரின் ஜாதகத்தை பார்த்து ""ஐயா! தாங்கள் அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசிக்கு சொந்தக்காரர், எனவே பெரிய பணக்காரராக நீங்கள் இருந்தாக வேண்டும்'' என்று கூறி சென்றார்.
நிறைய தானம் செய்ய வேண்டும் என்று எண்ணிய சிவபக்தர், சிவபெருமானை நோக்கி புன்னை வனத்தில் தவமிருந்தார்.
தவத்தினை கண்ட பிரம்மாவும், விஷ்ணுவும் பக்தருக்கு வேண்டும் வரம் அளிக்கக்கூடியவர் சிவ பெருமான் என்பதை உணர்ந்து, வரத்தை கும்பராசிக்கு மட்டும் தந்துவிட்டால் மற்ற கிரகங்களுக்கு பலன் இல்லாமல் போய்விடுமே என்று வருணணை அழைத்து மழை பெய்து சிவ பக்தரின் தவத்தினை கலைக்க வேண்டினர்.
உடனே வருண பகவான் மழை பொழிய வைத்தார். அப்போது சிவ பக்தர் கவலையுற்று மழையை நிறுத்துமாறு விநாயகரை வேண்டினார்.
விநாயகர் தனது ஆள்காட்டி விரலை தனது தலைக்கு மேல் சுற்றினார். இதனால் மழையானது இவ்வூரில் மட்டும் நின்று பிற்பகுதியில் பெய்தது.
பக்தரின் தவம் நிறைவடைய, சிவபெருமான் நேரில் தோன்றி ஆசி வழங்கி, "கிரகங்கள் தனது பணியை சரியாகச் செய்யும்போது அதை நாம் தடுக்க இயலாது. உனது நோக்கத்தை மெச்சி வரம் தருகின்றேன்'' என்று கூறி, ""கும்பராசி அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய கிரக கோளாறுகள் நீங்க, இத்திருத்தலம் வந்து என்னை வழிப்பட்டு நிவர்த்தி பெறட்டும். மேலும் உனது வீட்டில் தவிட்டு பானையெல்லாம் தங்கமாய் இருக்கும்! உனது தரும காரியம் தடையில்லாமல் நடக்கும்'' என அருளாசி வழங்கினார்.
மழையை நிறுத்தி சிவபக்தனின் தவத்தை காத்ததால் விநாயகர் தலையில் குடையுடன் காட்சி அளிக்கின்றார்.
குடை விநாயகரை வழிபடுவோர் விபத்துக்களிலிருந்து காப்பாற்றப்படுவார் என்பதுடன் குபேர யோகமும் கிடைக்கும் என்பது ஐதீகம்!
இங்கு சுந்தரவள்ளி அம்மனை வழிபடுவோருக்கு அழகிய மேனியையும், திருமண யோகத்தையும் அருள்கிறார்.
அதோடு வெண்புள்ளி நோய் உள்ளவர்கள் ஆலயத்திற்கு எதிரில் உள்ள திருத்தேர் குளத்தில் நீராடி தாமரை மலர்களை அம்மனுக்கு சாற்றி 11 வாரம் வியாழக்கிழமையில் வழிபட்டால் அந்த நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
சிவன் புன்னை வனத்தில் தோன்றியதால் புன்னைவன நாதர் எனவும் விநாயகர் மழையை தடுத்ததால் குடை தந்த விநாயகர் எனவும் அம்மன் அழகு மேனியை அருள்வதால் சுந்தரவள்ளி எனவும் தானதருமங்கள் சிவபக்தர் நிறைய செய்ததால் அவர் வாழ்ந்த ஊர் மாநல்லூர் எனவும் அழைக்கப்படுகிறது.
இன்றளவும் மழையானது இவ்வூரைச் சுற்றி பெய்து விட்டு கடைசியில் இங்கு பெய்யும் அதிசயம் நடைபெறுகிறது.
இத்தகைய தலவரலாற்றுப் பெருமைமிக்க இக்கோயிலில்திருப்பணியில் பங்குபெற்று இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
தொடர்புக்கு: 89405 87036/ 90036 99973. (மாணலூருக்குச் செல்ல: கீழ்வேளூர்} திருத்துறைபூண்டி மார்க்கத்தில் கிள்ளுக்குடி என்கிற ஊரில் இறங்க வேண்டும்.