Sunday, February 15, 2015

"மகாதேவ ஸ்ரீ சைலம்


மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே !

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஸ்ரீ சைலேஸ்வரா தவ சரணம்

நந்தி வாஹனா நாக பூஷனா
சந்திர சேகரா ஜடாதரா......

மதுரையம்பதியில்   வாழ்ந்து வந்த பெருஞ்செல்வந்தராகிய சிவனடியார் நாள்தோறும் அடியார்கட்கு அமுது செய்வித்து அரனாரின் திருவடிகட்கு அன்புடையவராக விளங்கினார்.

முதுமைப் பருவத்தில் , ஸ்ரீசைலம் சென்று மல்லிகார்ச்சுனேசுவரரை வணங்க விரும்பினார்.

அடியார்குழாம் சூழ காடு, தள்ளாத வயதில் மலையெல்லாம் கடந்து சென்றதால் தளர்வுற்றார்.

ஒரு மாலை வேளையில் மகாதேவமலை எனும் ஓர் உத்தம தலத்தினை அடைந்தபிறகு அதற்குமேல் அவரால் நடக்க இயலவில்லை.

உடன் வந்த அடியார்கள் அவரை விட்டுச் சென்றனர்.

மலையடிவாரத்தில் வருத்தத்துடன் அமர்ந்திருந்தவர் , "சிவராத்திரிக்குள் ஸ்ரீசைலத்தை எப்படி அடைவேன்! எம்பெருமானைக் காண்பதெங்ஙனமோ!' என்று கண்ணீர் மல்கினார்.

பக்தரை ஆட்கொள்ள விரும்பிய சிவனாகிய மகாதேவர், ஒரு முனிவர் வேடத்தில் அங்கு தோன்றினார்.

அம்முனிவரிடம் தம் குறைகளைச் சொன்னார் தரிசனன். இறைவனான சைலமலை நாதர் இங்கும் வருவார்; ஆதலால் இந்த மலையினை மூன்றுமுறை வலஞ்செய்து மகிழ்ச்சியுடன் இங்குள்ள பெருமானைப் பூசித்திருப்பாய் என்று கூறி, மலையினை வலஞ்செய்தற்குத் தானே வழிகாட்டிச் சென்றார்.

ஒரு சிவராத்திரி நாளில் மகாதேவ மலை ஸ்ரீ சைல பர்வதமாக காட்சியளித்ததால் இதற்கு, "மகாதேவ ஸ்ரீ சைலம்' என்றொரு திருப்பெயரும் உண்டு ...

மகாதேவ மலைமீது சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்புவரை தினமும் நண்பகலில் இரண்டு கழுகுகள் இங்கு வந்து உணவருந்தியுள்ளன. அவை தவறாது வந்து உணவருந்தியதற்கு இங்குள்ள பழைய நூலில் உள்ள புகைப்படம் சான்றாகும்.

அகிலத்துக்கு தாயாகிய உமையம்மையே மகாதேவ மலையாக இருந்து சிவபெருமானை மணம் செய்து கொண்டு அருளும் தலம் இது. தேவர்களும் பூதகணங்களும் வாழ்த்தொலி எழுப்பி, இந்தத் திருமலையினை காவல் செய்து வருகின்றனர் என்று கூறப்படுவதுண்டு.


மகாதேவ மலையில் புண்ணியத் தீர்த்தங்கள் பல உள்ளன. ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள ஒரு சுனையில் முழுகி மகாதேவமலையை வலம் வந்து சுவாமியை வணங்கினால் நல்ல சிந்தனைகளும் சிறந்த தமிழறிவும் வாய்க்கும் .

திங்கட்கிழமை சுனையில் புனித நீராடி வழிபாடு செய்தால் பெருஞ்செல்வம் உண்டாகும். செவ்வாய்க் கிழமை - பாவங்கள் தீரும்; சனிதோஷம் விலகும். புதன்கிழமையில் உலகம் புகழும் உயர்நிலை வாய்க்கும்.

வியாழக்கிழமையில் பகை நீங்கும்; நினைத்தவை கைகூடும்.

வெள்ளிக்கிழமையில் மலைவலம் வந்து வணங்க மக்கட்பேறு உண்டாகும். சனிக்கிழமைகளில் மலைவலம் வந்தால் செல்வமுண்டாகும்; நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

எண்ணற்ற மூலிகைகளும் நிறைந்துள்ள இம்மலைமீது கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்கத்திருமேனியாக மகாதேவ சுவாமி காட்சியருளுகின்றார்.

பிரகாரத்தில், காமாட்சி தேவி, விநாயகர், முருகன், சண்டேசர் சந்நிதிகள் உள்ளன. அஷ்ட லிங்கங்களும் உள்ளன. குகைகளும், அதற்கருகில் பதிணெண் சித்தர்களின் சிற்பத் திருமேனிகளும் உள்ளன.

மகாதேவ புராணம் எனும் நூல் மகாதேவ ஸ்ரீ சைல தலத்தின்
மகிமைகளைப் பற்றி எடுத்துரைக்கின்றது.

கார்த்திகை தீபத்தன்று மூலவருக்கும் பிற தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்படுகின்றது. மிகப்பெரிய அகண்ட கொப்பரையில் நெய்யும், எண்ணெய்யும் ஊற்றப்பட்டு மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்படுகின்றது. அப்போது "அரோகரா' எனும் கோஷம் விண்ணை முட்ட எழும்.

மகாதீப தரிசனத்தைக் கண்டு களிக்க சுற்றிலும் உள்ள ஊர்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகாதேவ மலைக்கு வருகின்றனர். தீப தரிசனம் சுற்றிலும் 20 கி.மீ தூரத்திற்குத் தொடர்ந்து மூன்று நாட்கள் தெரிகின்றது.  மகாதேவமலைக்குச் சென்று மகாதீபத்தைக் கண்டு களித்து வாழ்வில் மாபெரும் பேறுகளைப் பெறலாம்.

அற்புதங்கள் பல நிறைந்த மகாதேவ மலை, வேலூரிலிருந்து காட்பாடி வழியாக குடியாத்தம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.