Monday, October 12, 2015

நவராத்ரி நாயகி ஸ்ரீமனோன்மணி அம்மன்




வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே



அகிலாண்டகோடிபிரம்மாண்டநாயகியாக ஜகன்மாதாவாக 
ண்டசராசரங்களையும் படைத்து ரட்சிக்கும்  
அன்னை பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருட்கடாட்சிக்கும் அற்புதமான புண்ணிய காலமான  நவராத்திரி தினங்களில் அம்பிகையின் திருக்கதைகளையும்,  போற்றும் துதிப்பாடல்களையும் பாடி வழிபடுவது சிறப்பாகும்...
புதுக்கோட்டை  ஸ்ரீமனோன்மணி அம்மன் ஆல்லயத்தில்  ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டிருப்பது  சாந்நித்தியத்தை உணர்த்துகிறது. 

அம்மன்  சிவ- சக்தி சொரூபமாக, சிவனாரின் சக்தியையும் கொண்டு காட்சி தருகிறாள். அதாவது, சிவலிங்கத்தில் உள்ள ஆவுடையார் எனும் பகுதிக்கும் மேலே, நின்ற திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீமனோன்மணி அம்மன். எனவே, சிவனாருக்கு உரிய ரிஷப வாகனத்தையே இங்கு அம்மனும் கொண்டிருக்கிறாள்.

சப்த கன்னியரில் ஒருவரான ஸ்ரீபிராம்மியின் அம்சமாகத் திகழ்வதால், தினமும் இரவில் நடை சார்த்தப்படுவதற்கு முன்னர், நடைபெறும் விசேஷ பூஜையின் போது, அம்மனுக்கு ஸ்ரீசரஸ்வதிதேவி போல் வெண்பட்டாடை உடுத்தி, பூஜை செய்வது வழக்கம்.

மனிதனின் மனத்தை ஒருநிலைப்படுத்தக்கூடியவள். 
மனோபலத்தைத் தந்தருள்பவள். 
மனத்தில் தேவையற்ற குழப்பம், திடீர் திடீரென வந்து தாக்குகிற பயம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் தரும் நாயகி நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன், ஸ்ரீபிரம்மாவுக்கு உரிய அட்ச மாலையும், கமண்டலமும் கொண்டு அழகுறக் காட்சி தருகிறாள் அம்பாள். சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு, புதுக்கோட்டையின் மையப்பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அரளிப்பூ மாலை சார்த்தி, தாமரை மலர்கள் அணிவித்து அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.

ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை மற்றும் பௌர்ணமி 
ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

அம்மன் இங்கே, பஞ்சமி திதியில் குடியமர்ந்ததாக ஐதீகம். எனவே, ஒவ்வொரு பஞ்சமி திதி நாளிலும் ஐந்து விதப் பழங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு வழிபட்டால், நினைத்த காரியம் அனைத்தையும் மனோன்மணி அம்மன் நிறைவேற்றித் தருவாள் என்பது ஐதீகம்!

 தினமும் ஸ்ரீசரஸ்வதி ரூபமாகக் கொண்டு இரவில் பூஜை செய்யும்போது, ஐந்து விளக்குகள் ஏற்றி அவளை வழிபட்டால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

தை மாதம் ராஜமாதங்கி நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரி, ஆடியில் ஆஷாட நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி என வருடத்துக்கு நான்கு நவராத்திரிகளுமே கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

புரட்டாசி- சாரதா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஜொலிப்பாள் அம்மன். 

நிறைவு நாளில், ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதியுலா வரும் அழகே அழகு!

நவராத்திரி நாட்களில்- ஸ்படிகத்தால் ஆன ஸ்ரீசக்ர தரிசனம்,  கோயிலின் சிறப்பம்சம். 

நவராத்திரியில்  ஸ்ரீமனோன்மணி அம்மனையும், ஸ்ரீசக்கரத்தையும் தரிசித்து வழிபட, மங்கல வாழ்வும் மனத்தில் நிம்மதியும் கைகூடும்.விசேஷம்'ஸ்ரீமனோன்மணி அம்மன் எனத் திருநாமம் கொண்ட தேவி, தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர்களையெல்லாம் துடைத்து, இன்பமும் நிம்மதியுமாக அவர்களை வாழச் செய்து அருள்கிறாள்..

ஒருகாலத்தில், தென்னந்தோப்பு ஒன்றில் அம்மனின் விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டு, சிறியதொரு கோயிலாக அமைக்கப்பட்டு, வழிபட்டு வந்ததாம்..!
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது 
கீழ ராஜவீதியில் அமைந்துள்ள , சுமார் 200 வருடங்கள் பழைமை மிக்கது கோயில்.