Sunday, November 30, 2014

கார்த்திகை நீராடல்




மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்

பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்

எய்திடின் அன்னதீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்

செய்திரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே".


காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு காவிரித் தலங்கள்

 1. திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர்
5. திருவெண்காடு. 6.ஸ்ரீவாஞ்சியம் ..

திருமால் சிவபெருமானை வழிபட்டு, இலக்குமி தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற தலம். (திருவை வாஞ்சித்த தலம் - திருவாஞ்சியம்) எமன் வழிபட்ட தலம். இங்கு எமனுக்குத் தனிக்கோயிலுள்ளது.

அத்திரி மகரிஷிக்கும் அனுசுயாவுக்கும் தத்தாத்ரேயர் மகனாகப் பிறக்க அருள் கிடைத்தது  எமதர்மனை வாகனமாகக் கொண்டு சிவபெருமான் எழுந்தருளிய தலம் ஸ்ரீவாஞ்சியம் தலத்தில்தான். . 
காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்; ஆனால் பைரவ தண்டனை உண்டு. வாஞ்சியத்தில் முக்தி கிடைக்கும்; பைரவ தண்டனை இல்லை. இங்கு வழிபட்டால் பாவங்கள் குறைவதுடன் புண்ணியம் பெருகும் என்பர்.
  ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் இறப்போரின் காது மட்டும் (எந்த ஜீவன் ஆனாலும்) மேற்புறம் இருக்கும் படி கிடக்கும். அப்போது சிவபெருமான் அந்தக் காதில் பஞ்சாட்சர உபதேசம் செய்வார் எனக் கூறப்படுகிறது. அத்தகைய புண்ணியத் தலம் திருவாஞ்சியம்.

ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்தில் உள்ள திருக்குளம் குப்த கங்கை, முனி தீர்த்தம் எனப்படுகிறது. கங்கை 999 பாகம் ரகசியமாக இந்த குப்த கங்கையில் வசிக்கிறாள். மீதி ஒரு பாகம் தான் காசியில் உள்ள கங்கையில் உள்ளாள். எனவே, கங்கையின் சக்தி காசியைவிட இங்கு அதிகம் என்பர். இந்த குப்த கங்கையில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி, இறைவனை வழிபட்டால் பஞ்சமா பாதகங் களும் விலகும். கார்த்திகை ஞாயிறு இங்கு விசேஷம். இப்படி நீராடுவதை கார்த்திகை நீராடல் என்பர்.
கார்த்திகை நீராடல் உற்சவம்தான் இங்கு விசேஷம். அந்நாளில் அதிகாலை ஐந்து மணி முதல் ஆறு மணிக்குள் ஈசனும் தேவியும் அஸ்திர தேவரோடு பிரகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்குவார்கள். இதை தரிசிப்பதே புண்ணியம்.
முதல் ஞாயிறு நீராடினால், பிரம்ம ஹத்தி தோஷம் விலகும். விஸ்வபத்ரனின் பிரம்மஹத்தி தோஷம் இங்குதான் நீங்கியது. இரண்டாம் ஞாயிறு நீராடினால், கள் உண்டு மயங்கிய பாவம் விலகும். மூன்றாம் ஞாயிறு நீராடினால், திருட்டுத் தொழிலால் ஏற்பட்ட பாவம் நீங்கும். 
நான்காம் ஞாயிறு நீராடினால், மனசஞ்சலம், ஜென்ம பாவம் விலகும். ஐந்தாம் ஞாயிறு நீராடினால், சம்சர்க்க தோஷம் விலகும். 
குடந்தை- நன்னிலம் வழியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீவாஞ்சியம்  உள்ளது.
கார்த்திகை கடை ஞாயிறு விரிஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் திருத்தலம். "விரிஞ்சிபுரம் மதிலழகு' என்பர். மரகதாம்பிகை சமேத மார்க்கபந்தீஸ்வரர் ஆலய சுயம்புலிங்கமாக உள்ளார்.
பிரம்மனின் பெயர் விரிஞ்ஞன். பிரம்மன் வழிபட்ட இத்தலத்திற்கு விரிஞ்சிபுரம் எனப் பெயர். திருவண்ணாமலையில் அடிமுடி காண திருமாலும் பிரம்மனும் முயன்றனர். தாழம்பூவுடன் சேர்ந்து பிரம்மன் பொய் சொல்லி சாபம் பெற்றார். அந்தச் சாபம் நீங்க என்ன பிராயச்சித்தம் என ஈசனிடமே பிரம்மன் கேட்க, அதற்கு ஈசன் தேவரூபமாக காட்சி தராமல் உபாயம் செய்தார்.
விரிஞ்சிபுரம் தலத்தில் வசித்து சிவத்தொண்டு செய்யும் சிவநாதனுக்கும் நயனா நந்தினிக்கும் மகனாகப் பிறக்கும்படி செய்தார். பிரம்மன் சிறுவனாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார். ஆலய தலைமை பூஜா உரிமையைப் பெற விரும்பிய தாயாதிகள் பூஜா உரிமை, வீடு, நிலம் யாவற்றையும் தங்களுக்கு எழுதித் தருமாறு சிறுவனை மிரட்டினர்.

இதனால் மனமுடைந்த சிறுவனின் தாய் ஈசனிடம் முறையிட்டு அழுதாள்; பின் வீடு திரும்பி உறங்கினாள். அப்போது கனவில் ஈசன் தோன்றி, ""நாளை ஆலய பிரம்ம தீர்த்தத்தில் உன் மகனை நீராட்டி வை'' எனக் கூறி மறைந்தார். அன்று கடை ஞாயிற் றுக்கிழமைக்கு முதல் நாளான சனிக் கிழமை.

அவ்வாறே தாய் மகனை நீராட்டி குளக்கரையில் காத்திருந்த போது, ஈசன் கிழவர் வேடத்தில் வந்து சிறுவனை தன்னுடன் தீர்த்தத்தில் மூழ்க வைத்தார். ஒரு முகூர்த்த காலத்தில் அந்தச் சிறுவனுக்கு உபநயனம், பிரம்மோ பதேசம், சிவதீட்சை அனைத்தும் வழங்கி, பின் கரை ஏறிவந்து மகாலிங்கமாக மறைந்துவிட்டார். இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

அப்போது தேவர்கள் பூமாரி பெய்தனர். சுற்றுப்புற மன்னர்கள் (ஈசன் தங்களுக்கு கனவில் ஆணையிட்டபடி) பாலகனை யானைமீது ஏற்றி தீர்த்த திருமஞ்சன குடத்துடன்- மேளதாளத்துடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ஆலயக் கதவுகள் தாமாகத் திறந்து கொண்டன.

சிறுவன் ஆகம விதிப்படி எல்லாம் அறிந்தவன்போல பூஜைகள் செய்தான். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் முடி எட்ட வில்லை. அதனால் ஈசன் திருமுடியை வளைத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார். 
அதேகோலத்தில் இப்போதும் முடிசாய்ந்த மகாலிங்கமாக இவ்வாலய இறைவனை நாம் காணலாம்.

திருவண்ணாமலையில் முடிகாண இயலாத பிரம்மன், இங்கே சிறுவனாகப் பிறந்தபோது இத்தலத்தில் இறைவனைப் பூஜித்து, அவரே முடி வளைந்து காட்சி கொடுத்த அதிசயத் தைக் காணலாம். அப்படி திருமுடி வளைந்த தினம்தான் கார்த்திகை மாத கடைஞாயிறு  தினம்.

இதனை  பெருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். 
குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள சிம்ம குளத்தில் நீராடி, ஈரத்துணியுடன் ஆலய வலம் வந்து பகவானை வணங் கினால் புத்திர பாக்கியம் கிட்டும். மேலும் பில்லி, சூன்யம் போன்ற வற்றால்
 பாதிக்கப்பட் டோரும்  நீராடி வழிபட்டால் இன்னல்கள் நீங்கப் பெறுவர்


7 comments:

  1. இதுவரை சென்றிராத ஆலயத்தின் சிறப்புகளை அறிந்தேன் அம்மா... நன்றி...

    ReplyDelete
  2. கார்த்திகை நீராடல் அறிந்தேன்
    உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. அருமையான படங்கள் ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஸ்ரீ வாஞ்சியம், விரிஞ்சி புர ஆலயத் தகவல்கள் அறிந்துகொண்டேன்! அழகிய படங்களுடன் பகிர்வு அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. கார்த்திகை நீராடல் காட்டிய நன்மைபல!
    சேர்த்திடத் தந்தீர் சிறப்பு!

    மிக அருமை!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. காசியை விட வீசம் அதிகம் என்று சொல்லும் திருவெண்காட்டில் ஏழுவருடம் வாழ்ந்து இருக்கிறேன்.
    இப்போது மாயவரத்தில் இருக்கிறேன் இறைவன் அருளால்.
    விரிஞ்சிபுரம் கோவில் பற்றி தெரிந்து கொண்டேன். படங்கள் அழகு.
    வாழத்துக்கள்.

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் தங்களது பதிவுஅறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள். தங்களது இப்பதிவின் மூலமாக இதுவரை செல்லாத கோயிலுக்குச் சென்றேன். நன்றி.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete