Monday, August 24, 2015

உயிர்களை உய்விக்கும் உஜ்ஜீவநாதர் கோவில்



 ஓம் ருத்ரம் பசுபதிம் ஸ்தாணும் நீலகண்டம் உமாபதிம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுகரிஷ்யதி!
காலகண்டம் கால மூர்த்திம் காலாக்னிம் கால நாசனம்
நமாமி சிரஸா தேவம் கிம்னோ ம்ருத்யுங்கரிஷ்யதி!

-- மார்க்கண்டேயர் அருளிய மார்க்கண்டேய ஸ்தோத்திரத்தை 
தினமும் பாராயணம் செய்பவர்களுக்கு எமபயம் நீங்கும். 
நீண்ட ஆயுள் உண்டாகும்.
.
16 வயது முடிவில் தனது உயிரை எடுக்க எமதர்மன் வருவான் என்பதை உணர்ந்த மார்கண்டேயர், சிவ தலங்கள் பலவற்றிற்கும் சென்று சிவபெருமானை பூஜித்து வந்தார். 
அதன் ஒரு பகுதியாக திருச்சியில் இருந்து குமாரவயலூர் செல்லும் வழியில் 4 கிலோமீட்டர் தொலைவில் உய்யக்கொண்டான் திருமலை தலத்தில் உள்ள உஜ்ஜீவநாதர் கோவில் தலம் வந்த மார்கண்டேயருக்கு, ஈசன் காட்சி கொடுத்து, மார்கண்டேயரின் உயிரைக் காப்பாற்ற வரம் கொடுத்த தலமாகும். பின்பு திருக்கடவூரில் ஈசன், எமனை அழித்து மார்கண்டேயரின் உயிரைக் காப்பாற்றினார்.
 :
சிவ தலங்கள் தோறும் தன்னை பூஜித்து வந்த மார்கண்டேயரின் பக்தியை மெச்சி, ஆடி பவுர்ணமி நாளில் ஈசன் உஜ்ஜீவநாதர் கோவில் தல கருவறையை விட்டு வெளியே வந்து மார்கண்டேயருக்கு காட்சி கொடுத்தார். 

மார்கண்டேயரது உயிரைக் காப்பதாகவும் வரம் கொடுத்தார். மார்கண்டேயருக்காக ஈசன் கருவறையை விட்டு வெளியே வந்ததற்கு அடையாளமாக, சுவாமியின் திருப்பாதம்,  ஆலயத்தில் ஈசனின் கருவறைக்கு இடது புறம் உள்ள கொடிக்கம்பத்தின் கீழே அமைந்திருக்கிறது. 

மார்கண்டேயருக்கு, ஆடி பவுர்ணமி இரவில் சிவபெருமான் காட்சி கொடுத்ததால், அந்த நாளில் இங்குள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். 

பின்பு மார்கண்டேயருக்கு, ஈசன் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடத்தப்படும். 

ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும்,  ஈசனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. உயிர்களை உய்விக்கும் பொருட்டு உஜ்ஜீவநாதர் கோவில் தலத்தில் ஈசன் எழுந்தருளியுள்ளதால், ‘உய்யக்கொண்டான் திருமலை’ என்ற பெயரை பெற்றுள்ள இத்தலத்தின் புராணக்கால பெயர் திருக்கற்குடி என்பதாகும். 

இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சிறப்புக்குரிய உய்யக்கொண்டான் திருமலை’   ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு உஜ்ஜீவநாதர்,கற்பக நாதர், விழுமிய நாதர், முத்தீசர், உச்சிநாதர் போன்ற பெயர்களும் உள்ளன.  

 உடனுறை சக்தியாக வீற்றிருக்கும் ‘மைவிழியம்மை’ என்னும் அஞ்சனாட்சி அம்பாள்  அன்னையை ‘மையார் கண்ணி’ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றிப் புகழ்ந்துள்ளார். 

மற்றொரு அம்பிகை ‘ஸ்ரீபாலாம்பிகை’ என்ற திருநாமத்தில் 
வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

 அஞ்சனாட்சி அம்மனை வழிபட சகல விதமான கண் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. 

அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரது பாடல் பெற்ற தலம். நாரதர், உபமன்யு முனிவர், மார்கண்டேயர், கரன், திரிசிரன், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம் என்ற சிறப்புகளை பெற்றுள்ள ஆலயம், சிறிய மலைக்கோவில் மலையின் மீது கிழக்கு நோக்கியபடி ஆலயம் அமைந்துள்ளது. 














மலையில் செதுக்கப்பட்ட 64 படிகளை ஏறிக் கடந்து, ஆலயத்தை அடையலாம். தருமபுரம் ஆதீனத்தின் கீழ்  கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தை நந்திவர்மப் போத்தரையன் என்ற பல்லவ மன்னன் கட்டியுள்ளார். 

ஆலயத்தில் ‘இடர் காத்தார்’ என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்று தனிச் சன்னிதியில் உள்ளது. ராவணனுடைய சகோதரர்களில் ஒருவரான கரன் என்பவன் இந்த சிவலிங்கத்தை வழிபட்டு பேறு பெற்றுள்ளான். 

நமது இடர்களை களைவான் இந்த கயிலைநாதன். கோபுர வாசலின் உள்ளே நுழைந்து சென்றால், நேராக ஆறுமுகப் பெருமானின் சன்னிதியும், தென் புறம் ஞானவாவி (முத்தி தீர்த்தம்) என்று அழைக்கப்படும் திருக்குளமும் உள்ளது.  கோவில் பிரகாரம் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் அமைந்திருப்பது விசேஷமானது. 

பிச்சாடனர், சந்திரசேகரர், அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிகளில் வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது   நம்பிக்கை.  கருவறையை அடுத்துள்ள உட்பிரகாரத்தில் இருக்கும் பிச்சாடனர் வரப் பிரசாதியாக திகழ் கிறார். அவரது இடையில் படம் எடுக்கும் பாம்பு, இடக்காலை ஊன்றி, வலக்காலை சற்று உயர்த்தியபடி காட்சியளிக்கிறார். 

அவரது இடதுபக்கம் குட்டி பூதம், வலது பக்கம் மேல் நோக்கி தாவும் மான் என மிக அழகிய திருக்கோலத்தில் பிச்சாடனரின் திருக்காட்சி அமைந்துள்ளது. மூலவர் கருவறையின் பின்புறம், அர்த்தநாரீஸ்வரர் காளையின் பின்னணியுடன் அற்புதத் திருக்கோலம் கொண்டு அருள்கிறார். பங்குனி மாதத்தில் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. 

உஜ்ஜீவ நாதருக்கு பாலாபிஷேகமும், அவரது திருப்பாதத்திற்கு பானமும் படைத்து வேண்டிக்கொண்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும். சுவாமியின் திருப்பாதத்திற்கு பானகம் படைத்து வழிபடுவது, பிறத் தலங்களில் காண இயலாதது. மேலும் ஈசனுக்கு நெய், மிளகு, சீரகம் சேர்க்கப்பட்ட அன்னம் படைத்து வழிபட்டால், தீராத நோய்களும் குணமாவதுடன், தீர்க்காயுள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 


 வசந்த மண்டபத்தில் ஆறுமுகப் பெருமானுக்கு, ஈசன் ஆறுமுகங்களின் தத்துவங்களை உபதேசம் செய்ததாக ஐதீகம். இங்கு வந்து இரட்டை பிள்ளையாரை வழிபட்டு, ஆவுடை மேல் உள்ள முருகப்பெருமானுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வழிபட்டால், தந்தை– மகன் உறவு பலப்படும். 

 எம பயம் இல்லாதிருக்கும் வகையில், தெற்கில் கொடிமரமும், அதன் அருகில் சிவனுடைய மழு முதலிய படைகளும் வைக்கப்பட்டுள்ளன. 
ஈசனையும், அம்பாளையும் வழிபட உயிருக்கு வந்த ஆபத்து நீங்கி விடும். 
பொன்னொளி ஓடை என்னும் வற்றாத தீர்த்தம், குடமுருட்டி ஆறு, ஆலயத்தின் தெற்கே நான்காம் பிரகாரத்தில் உள்ள மூர்த்தி தீர்த்தம், வடக்கில் உள்ள எண்கோணக் கிணறு தீர்த்தம், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நாற்கோண தீர்த்தம் என இந்த ஆலயத்தில் 5 தீர்த்தங்கள் உள்ளன.

8 comments:

  1. உஜ்ஜீவநாதர் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். தங்கள் பதிவால்மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  3. சிறப்பான விடயங்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  4. திருச்சியில் குமார வயலூர் சென்றிருக்கிறேன் இக்கோவில் பற்றி அறிந்திருக்கவில்லை, பதிவுக்கு நன்றி.

    ReplyDelete

  5. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  6. நிறைய தெரிந்து கொண்டோம் சகோதரி! இக்கோயிலைப் பற்றி...உய்யக்கொண்டான் குறித்துக் கொண்டோம்..

    ReplyDelete