Showing posts with label மஹாலஷ்மி. Show all posts
Showing posts with label மஹாலஷ்மி. Show all posts

Tuesday, March 11, 2014

வாத்ஸல்யமாய் அருளும் வாத்ஸல்ய தேவி





திருவல்லவாழ்

தந்தை தாய் மக்களே சுற்றமென்று  உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்லவாழ் சொல்லும வல்லையாய் மருவு நெஞ்சே

-என்று நெக்குருகிப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நாமங்கள் ஆயிரம் உடைய நம்பெருமான் அடிமேல்
சேமம் கொள் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர்மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே 


பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில்  
70 வது திவ்ய தேசம்.திருவல்லவாழ் ...
பெருமாள் இங்கு பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறார். எனவே, ஐயப்பன் கோயிலைப் போல, இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்றும், சித்திரை விஷு அன்றும் இவரது மார்பு தரிசனம் விசேஷம் என்பதால், இந்த நாட்களில் மட்டும் பெண்களை அனுமதிப்பார்கள். 


இந்த உருக்கத்துக்குக் காரணமானவர், திருவல்லவாழ் பெருமாளான கோலப்பிரான் ஐயனை, திருவாழ் மார்பன், ஸ்ரீவல்லபன், அலங்காரப் பிரான், அலங்காரத் தேவன் என்றெல்லாமும் அழைத்து பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.

திருமங்கையாழ்வார் தன் மனதை நோக்கிப் பேசுகிறார்: ‘‘பற்று என்ற உணர்வால் மயங்கி கிடக்கும் மனமே, தந்தை, தாய், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் என்று பலவாறாக உலகியல் பந்தங்களில் உழன்று நீ தவிக்கிறாய்.

ஒரு கட்டத்தில் இதெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட தொடர்புகள் என்றும் விரக்தி கொள்கிறாய். 

அதனால், உண்மையான பற்று எது என்று புரியாமல் மயங்குகிறாய். பிரளய காலத்திலும்கூட, பிரபஞ்சமே அழிந்திடும் நிலையிலும்கூட, புகலிடமாய்த் திகழ்பவன் எம்பெருமான். 

அதுமட்டுமா, படைப்புக் காலத்தில் முதலில் தோன்றும் இடமாகவும் திகழ்பவன் அவன். 

இத்தனை பராக்கிரமங்களுக்கும் சொந்தக்காரனான அவன்தான் எப்படிக் காட்சியளிக்கிறான்? எளியனாய், ஓர் இடையனாய் அல்லவா தோன்றுகிறான்!

அப்படிப்பட்ட பரந்தாமன், அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறான், திருவல்லவாழ் என்ற திருத்தலத்தில். 

உலகப் பற்றறுக்க விழையும்  மனமே, அந்த திவ்ய தேசத்தின் பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே இரு, போதும். உண்மையான பற்றினையும், அதன் அர்த்தத்தையும் நீ புரிந் துகொள்வாய்.’’ 

அப்படி, தலத்துப் பெயரைச் சொன்னாலேயே தவறாது நற்பேறு அளித்திடும் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தை  தரிசித்து நலம் பெறலாம் ..!

ஆலயத்துக்கு முன்னால் செம்பால் ஆன உயர்ந்த துவஜஸ்தம்பம் 
நேர் கோணத்தில் கோயிலைப் பார்த்து இராமல், 
சற்று விலகி அமைந்திருக்கிறது. 


கோயிலுக்குள்ளே ஒரு கொடிமரம் நேராக கர்ப்பகிரஹ 
கோணத்தில் நிற்கிறது!’ 

பிரதான நுழைவாயிலின் உச்சியில் திருவாழ்மார்பன் நின்ற 
கோலத்தில் சுதை சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

கோயிலுக்குள் கருவறையிலும் உலோகத் திருமேனியில் பெருமாள் இதே கோலம்தான் காட்டுகிறார்,

உள்ளே  நிமிர்த்திவைத்த நிலையில் சங்கு ஒன்று சுதை சிற்பமாகக் காணப்படுகிறது. அந்த சங்கைச் சுற்றி, ‘ஓம்சங்கபதே நமஹ; 
ஓம் விஷ்ணுபதே நமஹ’ என்று மலையாளத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். 

முன் மண்டபத்தில் திருமால் பாற்கடல் சயனனாக அருள் காட்சிதருகிறார்

இடது பக்கம்  நிர்மாணிக்கப்பட்டிருக்கும் பெரிய கலா மண்டபம் ஆன்மிகக் கலை நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட விசேஷ நாட்களில்  கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள்.
[​IMG]
கருவறை மண்டபத்துக்கு எதிரில் கோபுர வடிவிலான மண்டபத்தில் மிகப் பெரிய கருடாழ்வார் ஓவியமாகத் திகழ்கிறார். 
பொதுவாக, கருடாழ்வார் பெருமாளுக்கு எதிரில் அருள்பாலிப்பார். ஆனால், இங்கு 50 அடி உயரத்திலுள்ள கல் தூணின் மீது பறக்கும் நிலையில் அருள்பாலிக்கிறார். 

கருடனுக்கு தங்ககவசம் சாத்தப்பட்டுள்ளது. பெருமாளை வணங்குவோர் தங்களது நியாயமான வேண்டுகோளை அவரிடம் வேண்டியவுடனேயே, கருடன் அவரை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம். 

கேரளாவின் பிரசித்தி பெற்ற கதகளி நிகழ்ச்சியை 
கோயிலில், நேர்ச்சையாக நடத்துகிறார்கள்.

பக்தர்களின் சிதறு தேங்காய் வழிபாட்டுக்காக கருடாழ்வார் மண்டபத்துக்கு முன்னால் சாய்வாக ஒரு பாறை நிறுவப்பட்டுள்ளது -

பிரதான மண்டபத்துக்கு முன்னால் சம்பிரதாயமான துவஜஸ்தம்பம். அருகில் காண்டாமணி கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது. 

துவஜஸ்தம்பத்தைக் கடந்தால் மிகப் பெரிய பலிபீடம். அருகே துலாபாரம் காணிக்கைப் பகுதி. வெளிப்பிராகாரச் சுற்றில் விக்னேஷ்வர் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். அவரைப் போலவே ஐயப்பனும் தனியே விளங்குகிறார். 

மேற்கூரையில்லாத சந்நதியில் ‘குறையப்ப சாமி’ அருள்கிறார்.  பக்தர்களின் குறைகளை எல்லாம் களையச் சொல்லி திருவாழ்மார்பனுக்கு சிபாரிசு செய்பவராம்!

வட்டவடிவ கருவறைச் சுற்றில், இடது மண்டபத்தில் துலாபார காணிக்கைகளான வாழைக்காய்கள், வாழைப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. 

கருவறைச் சுவரில் விஷ்ணுவின் பல கோலங்களும், கிருஷ்ணனின் லீலைகளும் ஓவியங்களாக மிளிர்கின்றன. 
பூஜையின் ஓர் அங்கமாக மஹாவிஷ்ணுவின் புகழை 
மேளதாள ஒத்துழைப்புடன்  பாடுகிறார்கள். 

 மேற்கு பார்த்து சுதர்ஸன மூர்த்தி தனியே தரிசனம் தருகிறார். கருவறை சுற்று மண்டபத்தைப் பல தூண்கள் தாங்கிப் பிடித்துள்ளன.

அங்கே, விஷ்ணு, சிவன், பார்வதி, நிருத்த கணபதி, சுப்பிரமணியர், விஷ்வக்சேனர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். 

 கோயிலுக்குள் ஆண்கள் மேலுடலில் பாதிப் பகுதியைச் சட்டையால் மறைத்துக் கொண்டு வருகிறார்கள். முழுச் சட்டையையும் கழற்றுவதிலிருந்து இங்கே சலுகை போலிருக்கிறது! 

வியாசரும், துர்வாசரும் வந்து தங்கி பெருமாளை வழிபட்டிருக்கிறார்கள். இவர்களில் துர்வாசர் பிரதிஷ்டை செய்த மூலவர்தான் திருவாழ்மார்பன் 

இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவள் சங்கரமங்கலத்து அம்மை. குழந்தைப் பேறு வேண்டி ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்தாள் அவள். ஏகாதசி அன்று நீர்கூடப் பருகாமல், கடும் விரதம் அனுசரித்த அவள், அடுத்த நாள், நீராடிவிட்டு ‘பாரணை’ செய்வாள். அதாவது, உணவு எடுத் துக்கொள்வள். இப்படி நீடித்து இந்த விரதத்தை மேற்கொண்டாளானால், அவளுடைய வேண்டுகோள், இறையருளால் நிறைவேறும் என்பது அவளுடைய திடமான நம்பிக்கை.
[Vallaban.jpg]
 விரதத்தை சரியாக முடிக்க இயலாதவகையில், இடையூறு செய்தான் தோலகாசுரன் என்ற  அரக்கன் ஒரு துவாதசி நாளில், சங்கரமங்கலத்து அம்மை பாரணை மேற்கொள்ள முடியாதபடியும், அவளுக்கு ஊரார்  எந்த உதவியையும் செய்துவிடாத படியும் தடுத்தான்.

திடுக்கிட்ட அம்மை, பரம்பொருளின் அருள் வேண்டிட - 
பிரம்மச்சாரி கோலத்தில் பூமியில் இறங்கினார் பகவான். 
தோலகாசுரனுடன் கடும் போர் புரிந்தார். இறுதியில் தன் சக்கரத்தை அவன் மீது ஏவிவிட, அவன் உருக்கு லைந்து நிர்மூலமானான். 

பிறகு சக்கரமும் அந்த தோஷம் நீங்க, பூமியைத் துளைத்து ஒரு நீர்நிலையை உருவாக்கி, அதில் நீராடி, இத்தலத்துப் பெருமானின் வலது கரத்தில் போய் அமர்ந்தது. 

இப்படி, இந்தத் தலத்தில் சக்கரத்துக்குப் புராண முக்கியத் துவம் இருப்பதாலோ என்னவோ, சங்குக்கும் மேன்மையளிக்க வேண்டி, அதற்குக் கோயிலின் முற்பகுதியிலேயே பகவான் தனி இடம் வழங்கி சிறப்பித்திருக்கிறார் போலிருக்கிறது!

அசுரனை வதைத்துத் தன் விரதத்தைக் காத்த பிரம்மச்சாரியைக் கண்ணுற்றாள் அம்மை. தான் அணிந்திருந்த மான்தோல் ஆடையால் தனது இடது மார்பை அவன் மறைக்க முயற்சிப்பதையும் கவனித்தாள். 

உடனே அது பரந்தாமன்தான் என்பதும், அவன் மறைக்க முயற்சிப்பது தன் இடபாகத்தில் எழுந்தருளியிருக்கும் மஹாலக்ஷ்மி யைத்தான் என்பதையும் புரிந்துகொண்டாள். 

தோலகாசுரனை ஒரு பிரம்மச்சாரியால்தான் வீழ்த்த முடியும் என்ற நிபந்தனை காரணமாகவே எம்பெருமான் பிரம்மச்சாரியாக வந்தான் என்பதையும் தெரிந்துகொண்டாள்.

உடனே அவர் பாதம் பணிந்து தன்  நன்றியைத் தெரிவித்தாள். 

அதோடு, ‘‘நீ உன் மார்பை மறைத்தாலும், அதனுள் உறையும் மஹாலக்ஷ்மியை நான் அறிவேன். மறைக்க முயற்சிக்கும்  அந்த நொடியில் நான் தாயாரை தரிசித்துவிட்டதால், இதே திரு வாழ் மார்பனாக, இங்கே உன்னை தரிசிக்க வரும் அடியார் அனைவருக்கும்  ஆனந்த தரிசனம் நல்க வேண்டும்,’’ என்று நெகிழ்ந்து கேட்டுக்கொண்டாள். 

திருமாலும் அதற்கிணங்கி, இந்தத் தலத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரும்  தன்னை தரிசித்தாலேயே தாயாரையும் சேர்த்து தரிசிக்கும் பாக்கியமும் கிட்டுமாறு விதி செய்தார்.

 சங்கரமங்கலத்தம்மையார் பிரம்மச்சாரிகளுக்கு தானம் செய்த போது, பெருமாளும் பிரம்மச்சாரி வடிவில் வரிசையில் நின்றார். 

தனக்களித்த உணவை ஏற்ற அவர், இப்பெண் விரதம் முடித்து தான் சாப்பிடுவதற்காக வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டாராம். 

அவள் அதை பாக்கு மரத்தின் இலையில் வைத்து பெருமாளுக்கு அளித்தார். 

அன்றிலிருந்து தினமும் இத்தலத்தில் கமுகு இலையில் சாதமும் உப்புமாங்காயும் நைவேத்யமாக வைக்கப்படுகிறது. 

இத்தலத்தில் கேரளாவுக்கே உரித்தான சந்தனத்துடன் விபூதியும் தரப்படுவது விசேஷம். 

மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரது கோலத்தைக் காண வந்தாராம். அதனால், விபூதியும் கொடுப்பது வழக்கமாயிற்று.

இப்படி அரூபமாக, பரந்தாமனுக்குள் விளங்கும்  தாயாரின் பெயர் வாத்ஸல்ய தேவி! எந்த பாரபட்சமும் பார்க்காத, எல்லா பக்தர்களையும் ஒரே வாத்ஸல்யத்துடன் (பாசத்துடன்)  பரிபாலிக்கும் தாயார் இவர்! 
இந்தக் கருவறையை தரிசித்தாலே வாழ்வில் நல்திருப்பங்கள் ஏற்படும் என்பது பலரது அனுபவம்.

திருவண்வண்டூர் தலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருவல்லவாழ்.கேரள மாநிலம், ஆலப்புழாவில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும், செங்கணூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும்... பந்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது திருவல்லா எனும் திருவல்லவாழ் திருத் தலம்




ஆராட்டு விழா


Friday, March 7, 2014

வரம் வர்ஷிக்கும் அன்னை வரமஹாலக்ஷ்மி





ஓம் யாதேவி ஸர்வ பூதேஷு லஷ்மி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம’


வரமஹாலக்ஷ்மி சுப்ரபாதம் பார்க்க..கேட்க .. சுட்டவும் ..! 






தும்கூர் தாலுக்கா கோரவனஹல்லி  கிராமத்தில்  உள்ள மகாலஷ்மி தாயார் ஆலயம் மிகவும் பழமையானது. மகிமை வாய்ந்தது.

கோரவனஹல்லி கிராமத்தில் அப்பையா என்ற பால் வியாபாரம் செய்பவர்  தினமும் தனது பசு மாட்டை வயல்வெளிக்கு கொண்டு சென்று புல் மேயவிட்டு அவர் உணவு அருந்திக் கொண்டு இருந்தபோது  அசரீரியாக ஒரு குரல்.' என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்கிறாயா'. என்று கேட்டதாம்..

 மனப்பிரமையாக இருக்கும் என்று எண்ணி  வீடு சென்று விட்டார்.

ஆனால் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் அதே குரல் அதே இடத்தில் கேட்கவே பேயோ  பிசாசோ தன்னை துரத்துகிறது என பயந்துகொண்டு வீட்டிற்கு ஓடி வந்து விட்டார்.

அடுத்த  நாள் அவர் கனவில் லஷ்மி தேவி தோன்றி அவரை குரல் கொடுத்து அழைத்தது தான்தான் எனவும், தான் அங்கு மறைந்துள்ள இடத்தில்  இருந்து தன்னை எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜித்தால் அவர் வாழ்வு வளம் பெறும் என்று கூறிவிட்டு, தான் இருந்த இடத்தையும் கூறினாளாம்.

மறுநாள் கனவில் லஷ்மி தேவி காட்டிய இடத்தில் சென்று பார்க்க அவருக்கு அங்கு   கிடைத்தமகாலஷ்மியின் சிலையை வீட்டிற்கு எடுத்து வந்து வணங்கி வந்தார்.
நாளடைவில் அவர் வியாபாரம் செழித்தது. நிலபுலன்களை வாங்கி செல்வந்தர் ஆனார்.  மகாலஷ்மியை விடாமல் பூஜித்து வந்தார்.

ஒரு நாள் அவர் கனவில் மீண்டும் தோன்றிய மகாலஷ்மி தனக்கு ஒரு ஆலயம் அமைத்து பூஜைகளை செய்யுமாறு கட்டளையிட, தான் இந்த நல்ல நிலைக்கு ஆளானது மகாலஷ்மியின் அருளினால்தான் என்பதை உணர்ந்தவர்  சிறிய தனியார் ஆலயம் ஒன்றை அமைத்து பூஜைகளை செய்யத் துவங்கினார்.

நாலு சுவற்றுக்குள்  தன்னால் முடிந்த அளவு சிறிய அளவில் ஆலயம் அமைத்ததோடு கிராமத்தில் தான தருமங்கள் செய்து வந்தார்.

பூஜைகள் துவங்கின. அந்த ஆலயத்துக்கு வரத் துவங்கியவர்கள் அற்புத அனுபவங்களைப் பெற்றார்கள். வாய்மொழி வாய்மொழியாக ஆலய மகிமை பக்கத்து கிராமம், நகரம் எனப் பரவியது. அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்து கொண்டவர்களின்  வாழ்வில் வசந்தம் பெறத் துவங்கின.

ஆலயத்தில் கூட்டம் பெருகியது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நீண்ட வரிசையில் நிற்க வேண்டுமாம்.

கார்த்திகை மாதங்களில் லக்ஷ தீப விழா விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

வேண்டிக் கொண்டவர்கள்  இல்லத்தில் மகாலஷ்மியே வந்து அமர்ந்து உள்ளதைப் போல வளம் வர்ஷிக்கவே  மகிழ்ந்தனர்..

கோரவனஹல்லி ஆலயம் பெங்களூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. Kempe Gowda கெம்பகௌடா பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இங்கு செல்ல KSRTC பஸ் வசதி உள்ளது.



[GoravanahalliTemple2.jpg]

Friday, February 1, 2013

சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லஷ்மி பூஜை







ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். 


1. சௌந்தர்ய லட்சுமி

 முதல் வரவேற்பு கிடைக்கச்செய்யும் முக வசீகரத்திற்கு "சௌந்தர்ய லட்சுமீ கரம்' பெற முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.

2. சௌபாக்கிய லட்சுமி

சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

3. கீர்த்தி லட்சுமி

எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், சமூகத்தில் வேண்டும்.  கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.

4. வீரலட்சுமி

மக்கள், செல்வம் , செல்வாக்கு அனைத்தையும்  காப்பாற்றிக் கொள்ள வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.

5. விஜயலட்சுமி

எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.

6. சந்தான லட்சுமி

 அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், நல்ல  குழந்தை பேறு பெற்று பெருமை அடைதற்கு அருள் புரியும்  
ஸ்ரீசந்தான லட்சுமி. வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

7. மேதா லட்சுமி

பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.

8. வித்யா லட்சுமி

கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.
ashta lakshmi maa check out my durga maa videos at youtube

9. துஷ்டி லட்சுமி

எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந் தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.

10. புஷ்டி லட்சுமி

வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்கும்  பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.

11. ஞான லட்சுமி

வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. 
அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.

12. சக்தி லட்சுமி

இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம்  பெற சக்திலட்சுமியை வணங்க வேண்டும்.

13. சாந்தி லட்சுமி

எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.

14. சாம்ராஜ்ய லட்சுமி

மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

15. ஆரோக்கிய லட்சுமி

மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.

16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது.  

ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.

 பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம். 
maa maha lakshmi devi laxmi goddess of wealth