Thursday, February 2, 2012

தண்ணருள் பொழியும் தைப்பூசத்திருநாள்.



வள்ளிக் கணவன் பேரை,வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே,ஊனும் உருகுதடி!

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும்..

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில்
ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம்

தைப்பூசம் நம் மகத்தான கலாச்சார வேற்றுமையையும், பல வேறுபட்ட மதங்களின் வெளிபடைப்பும் வழக்கத்தையும் ஏற்கும் நம் திறந்த மனப்போக்கையும் பாராட்டும் மாபெரும் அனைத்துலக நிகழ்வாகி விட்டது.
தம்பதியர் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகக்
கொண்டாடப்படும் விழா தைப்பூசத்திருநாள்.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து நடனமாடுவார் சிவபெருமான்.

நடன நிலையிலுள்ள சிவனை, “நடராஜர்’ என்று அழைக்கிறோம்.

தைப்பூசத் திருநாளில் அவர் உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். சிவனின் இந்த நிலையை, “உமா மகேஸ்வரர்’ என்பர்.
சிவகாம சுந்தரிசமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் ...

அவன் அசைந்தால் தான் உலகம் அசையுமென்ற
நியதியை எடுத்துச் சொல்வதே நடன தத்துவம்.

ஐந்துவித தொழில்களை நடத்துகிறான் இறைவன்.
அவை: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

தைப்பூசம் நன்னாளில் சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தார்.

என்வே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு
அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்

அருட்பெரு ஜோதி தனிப்பெரும் கருணை எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஜோதியுள் கலந்தார்..

வடலூரில் தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி
வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது.

சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது.

சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை

சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு
இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை
விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர்.

அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் பொன் நாள்.

தைப்பூச நன்னாளில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும்

வாழ்வில் ஒளியேற்றும் இத்தைப் பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது.

ஏடு தொடக்கம், புதிர்எடுத்தல்,புதிதுண்ணல்,பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல்,திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தான் தைப்பூசம்!
தாராகாசுரனை மலையில் வேலெறிந்து வீழ்த்திய நாள் ..
மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும், வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள்!

அதுவரை மதுரை ஆலயத்தில் பூசைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்

அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில்
துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே
காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்..

அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன்.

அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான்.

“மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்…’ என்பதே காவடி தத்துவம்.

இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பர்.

தைப்பூசம் நன்னாளில் தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன் கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி வருவோம்.

 உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. 

அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது 

எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் 
தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும்.

சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது.

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்..

இத்தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி.

எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப்படைத்து,காத்து, அருளி,அழித்து,மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும்.

இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும்.எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச்செய்யும்.

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்...

அரகர சிவாய என்று, தினமும் நினையாமல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ?
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே! பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!


அரகர சிவாய என்று
தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்


அசனம் இடுவார்கள் தங்கள்
மனைகள் தலைவாசல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ?


( லேடீஸ் ஸ்பெஷல் ஜனவரி மாத இதழில் வெளியான ஆக்கம்..
இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்..)

தைப்பூச நாளில் காலை ஆறு மணி அளவில் கிழக்கு வானில் தன் பொற்கிரணங்களப் பரப்பி தத்தகாயமாய் உதிக்கவும், அதே நேரம்... மேற்கு வானில் கதிரவனுக்கு நேர்க்கோட்டில் தண் கிரணங்களைப் அளித்தபடி சந்திரனும் காட்சிப்படும் வானியல் அற்புதம் நிகழும் பொன்னாள்.


சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.

முருகன் தலங்களில் தேரோட்டம் நிகழும் திருநாள் தைப்பூசம்...
கோலாலம்பூர் மற்றும் பழனி போன்ற திருத்தலங்களில் 
காவடிகள் ஆடிவரும் கண்கொள்ளாக்காட்சி கிடைக்கும் திருநாள்.. 
திருவண்ணாமலை கிரிவலம் வர உகந்த நாள்..


மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் 
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா


கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன் 
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக 
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்


சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்


பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே


காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா


அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2)
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
வருவாய்....குகனே... வேலய்யா



Wednesday, February 1, 2012

கருணை பொழியும் மூங்கிலணை காமாட்சி



                                


காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். 

தேனி மாவட்டத்திலிருக்கும் சில முக்கியக் கோயில்களில் ஒன்று பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்....
காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதால் காஞ்சியைப் போல் இங்கும் புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி குறி கேட்டலும் வழக்கமாக உள்ளது.  

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருப்பது போல் இங்கும் அம்மன் பூஜை மண்டப மேல் விதானத்தில் கௌலி உருவம் உள்ளது. 

சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்த, வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சூலபாணி எனும் அசுரன் மன்னன் ..தனக்கு தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்ற அரிய வரத்தின்படி பிறந்த வச்சிரதந்தன் என்ற அசுரன்காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். 

அவன் பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால்
அசுரனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.

துர்க்கையம்மனாக வந்து வதம் செய்த காஞ்சிகாமாட்சியம்மன், அசுரனைக் கொன்ற பாவம் நீங்க மஞ்சள் நீராடிய பின்பு தலையாறு நீர்வீழ்ச்சிக்கருகே மூங்கில் புதருக்குள் தவம் இருந்தாள். 

எதேச்சையாக இதை பார்த்துவிட்ட பசு மேய்க்கும் ஒருவருக்கு கண் பார்வை பறிபோனதையறிந்த அவ்வூர் ஜமீன்தாரும் பூஜை செய்து வழிபட்டார்.

அம்மன் அசரீரியாக ., ஒரு வாரம் கழித்து ஆற்றில் வரும் வெள்ளத்தில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து வரும் என்னை எடுத்து வழிபட்டால் கண்பார்வை தெரியும் என்று கூற, அதன்படியே பெட்டி வந்தது. அதை எடுத்து வழிபட்டு அந்த இடத்தில் சின்ன குச்சு கட்டி வழிபட்டனர்.

மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என வழங்கப்படுகிறது..
அடைத்த கதவுக்குதான் பூஜை என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கர்ப்பகிரகமும் உள்ளது.
கருவறை திறக்கப்பட்டதே இல்லை. 

அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கர்ப்பகிரக 
கூரை மேயும் ராஜகம்பளத்தார் கூறுகின்றனர்.

 தேவதானப்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது.

இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை.

கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது.

உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது.

குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை
குலதெய்வமாக வழிபடலாம்.

இங்கு ஆடு, மாடு, கோழி பலியிடுவது கிடையாது.
பொங்கல் வைக்கும் பழக்கமும் இல்லை.

துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.

தேவதானப்பட்டி கோயிலுக்கு மேற்கே 3 கி.மீ., தொலைவில் மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள அருவியில் அம்மாமெச்சு என்று ஒரு இடம் உள்ளது. அங்கிருந்துதான் இந்த அம்மன் இருந்த பெட்டி மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.

இங்கு மூலவரோ, உற்சவரோ கிடையாது. 

எனவே 5 நாள் திருவிழா காலத்தில் முதல் நான்கு நாட்கள் கோயில் அருகில் உள்ள ஆற்றுக்கு மூங்கில் தட்டில் மா, பலா, வாழைப்பழம், தேங்காய், மாலை, அபிஷேக சாமான் எடுத்து செல்வர். 

கோடாங்கி நாயக்கர் மேள தாளத்துடன் பூஜை பொருள்களை கோயிலுக்கு எடுத்துவந்து இரவு முழுவதும் வைத்திருப்பார். 

மறுநாள் காலையில்தான் பூஜை செய்கின்றனர்.  

இதற்கு பள்ளயம் என்று பெயர்.
 5வது நாள் வரும் பள்ளயம் ஜமீன்தார் வீடு செல்லும். 

நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது. 

திருவிழா காலத்தில் சேரும் இந்த 50  பானை நெய் 
வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். 

இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.

காமாக்காள் திவசம் : பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீன்தார் மனைவி காமாக்காள். இவர் தன் கணவர் மறைவிற்கு பின் ஒரே மகனுடன் கோயில் கட்டடத்தில் தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்தார்.

இந்த காமாக்காள் அம்மனிடம் நேரில் பேசும் சக்தி பெற்றவர். இவர் இரவில் தனியே கோயிலுக்கு செல்வதில் பயந்த மகன், தானும் அம்மனை பார்க்க தாய் தடுத்தும் கேளாமல் தாயுடன் சென்றான். இதனால் அவர் தலை வெடித்து இறந்தான்.

காமாக்காள் தை மாதம் ரத சப்தமியில் மறைந்தார்.

அம்மனின் வாக்குப்படி ராஜ கம்பள நாயக்கர் அவருக்கு திவசமிட்டனர்.

அதுமுதல் ஒவ்வொரு வருடமும் ரத சப்தமியில் கோயிலில் காமகாக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது.

காமாக்காள், அவரது மகன் இருவரின் சமாதியும் கோயிலுக்கு
கிழக்கே ஒரு பர்லாங் தூரத்தில் உள்ளது.

திவசம் முடிந்த அன்றே கோயிலின் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. 

பகைவர்கள் வெல்லும் சக்தியை மூங்கிலணை காமாட்சி அம்பாள் தருகிறாள்.

 திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி
ஆகியவை கிடைக்கப் பெறலாம்..




KASI VISWANATHAR, DEVADANAPATTI 

மூலவர் விமானம்






தங்கத்தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் உற்சவர்