Thursday, February 2, 2012

தண்ணருள் பொழியும் தைப்பூசத்திருநாள்.



வள்ளிக் கணவன் பேரை,வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே,ஊனும் உருகுதடி!

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும்..

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில்
ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம்

தைப்பூசம் நம் மகத்தான கலாச்சார வேற்றுமையையும், பல வேறுபட்ட மதங்களின் வெளிபடைப்பும் வழக்கத்தையும் ஏற்கும் நம் திறந்த மனப்போக்கையும் பாராட்டும் மாபெரும் அனைத்துலக நிகழ்வாகி விட்டது.
தம்பதியர் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகக்
கொண்டாடப்படும் விழா தைப்பூசத்திருநாள்.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து நடனமாடுவார் சிவபெருமான்.

நடன நிலையிலுள்ள சிவனை, “நடராஜர்’ என்று அழைக்கிறோம்.

தைப்பூசத் திருநாளில் அவர் உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். சிவனின் இந்த நிலையை, “உமா மகேஸ்வரர்’ என்பர்.
சிவகாம சுந்தரிசமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் ...

அவன் அசைந்தால் தான் உலகம் அசையுமென்ற
நியதியை எடுத்துச் சொல்வதே நடன தத்துவம்.

ஐந்துவித தொழில்களை நடத்துகிறான் இறைவன்.
அவை: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

தைப்பூசம் நன்னாளில் சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தார்.

என்வே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு
அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்

அருட்பெரு ஜோதி தனிப்பெரும் கருணை எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தன்று தான் ஜோதியுள் கலந்தார்..

வடலூரில் தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி
வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.

தைப்பூச நன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது.

சிவசக்தி ஜக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது.

சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை

சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு
இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.

இயற்கையை வழிபடும் பாரம்பரியத்தின் ஒரு வெளிபாட்டை
விளக்கும் தினமாகவும் தைப்பூசம் பெருமை பெறுகின்றது.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பர்.

அந்த அவனாகிய இறைவன் இறைவியுடன் இணைந்து கலந்தமையாலேயே உலக இயக்கம், இயற்கையின் அதாவது பஞ்சபூதங்களினூடாக நிகழ்கின்றது என்பதை நினைவில் கொள்ள வழிவகுக்கும் பொன் நாள்.

தைப்பூச நன்னாளில் புண்ணிய நதிகளில் நீராடுவது சிறப்பாகும்

வாழ்வில் ஒளியேற்றும் இத்தைப் பூச நன்னாள் பல்வேறு நற்செயல்கள் தொடங்கும் நாளாக அமைகின்றது.

ஏடு தொடக்கம், புதிர்எடுத்தல்,புதிதுண்ணல்,பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல்,திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்படுகின்றன.

முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் தான் தைப்பூசம்!
தாராகாசுரனை மலையில் வேலெறிந்து வீழ்த்திய நாள் ..
மதுரையம்பதியில் அன்னை மீனாட்சியும் அப்பன் சொக்கனும், வண்டியூர் மாரியம்மன் குளத்துக்கு வந்து தெப்பம் காண்பார்கள்!

அதுவரை மதுரை ஆலயத்தில் பூசைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்

அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான முருக அடியார்கள் பாத யாத்திரையாக வருகிறார்கள்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில்
துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே
காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்..

அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன்.

அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான்.

“மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்…’ என்பதே காவடி தத்துவம்.

இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பர்.

தைப்பூசம் நன்னாளில் தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன் கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி வருவோம்.

 உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. 

அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது 

எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் 
தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


திருவிடைமருதூர் கோயிலில் பிரம்மோற்சவம் தைப்பூசத்தன்று நடைபெறுகிறது.

அங்கு தைப்பூசத்தன்று முறைப்படி தரிசனம் செய்து, அங்குள்ள அசுவமேதப் பிரகாரத்தை வலம் வந்தால், பிரும்ம ஹத்தி தோஷம் நீங்கும்.

சோழ மன்னர் ஒருவரைப் பின் தொடர்ந்து வந்த பிரும்மஹத்தி கோயில் வாசலில் நின்று விட்டதால், அங்கு கோயிலின் வாயிலில் ஒரு பிரும்மஹத்தி வடிவம் அமைக்கப் பட்டுள்ளது.

சிவபெருமான் தனது அம்பிகை உமாதேவியுடன் இருந்து ஞானசபையான சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த புண்ணியத் திருநாள் தைப்பூசம்.

வேத ஒலியும், வாத்திய ஒலியும், வாழ்த்தொலியும் - ஒலிக்க சிவபெருமான் நடத்திய அந்த ஆனந்தத் திருநடனத்தை; வியாக்கிர பாத முனிவர், பதஞ்சலி முனிவர், தில்லை மூவாயிரவர், தேவர்கள், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்டோர் சிவபெருமானை தரிசித்து ஆனந்தமடைந்தார்கள். பிறகு பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா ஆன்மாக்களும் உயர்வு அடைவதற்காக சிதம்பரத்திலேயே, என்றும் ஆனந்த நடனக் கோலத்தைக் காட்டி அருள் புரிந்து கொண்டிருக்கிறார்..

இத்தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும். நம்பிக்கையே வாழ்வை வழி நடத்தும் சக்தி.

எமக்கும் மேலான சக்தியொன்று உண்டு. அந்தச் சக்தியின் மீது அதாவது உலகைப்படைத்து,காத்து, அருளி,அழித்து,மறைக்கும் அந்த மாபெரும் சக்தி மீது பக்திகொண்டு நம்பிக்கையுடன் வழிபட்டால் தன்னம்பிக்கை தானே நமக்கு வந்துவிடும்.

இறை சக்தியாகிய அதற்கு மேலான சக்தியொன்றில்லாத மாபெரும் சக்தி நமக்குத் துணைசெய்யும்.எம்மை வழிநடத்தும் என்ற நம்பிக்கை நம்மனதில் மேலோங்கிவிட்டால் தன்னம்பிக்கை தானே வந்து நம் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளச்செய்யும்.

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்...

அரகர சிவாய என்று, தினமும் நினையாமல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி அழிவேனோ?
பழநிமலை மீதில் நின்ற பெருமாளே! பழநிமலை மீதில் நின்ற பெருமாளே!!


அரகர சிவாய என்று
தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்


அசனம் இடுவார்கள் தங்கள்
மனைகள் தலைவாசல் நின்று
அனுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ?


( லேடீஸ் ஸ்பெஷல் ஜனவரி மாத இதழில் வெளியான ஆக்கம்..
இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்..)

தைப்பூச நாளில் காலை ஆறு மணி அளவில் கிழக்கு வானில் தன் பொற்கிரணங்களப் பரப்பி தத்தகாயமாய் உதிக்கவும், அதே நேரம்... மேற்கு வானில் கதிரவனுக்கு நேர்க்கோட்டில் தண் கிரணங்களைப் அளித்தபடி சந்திரனும் காட்சிப்படும் வானியல் அற்புதம் நிகழும் பொன்னாள்.


சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.

முருகன் தலங்களில் தேரோட்டம் நிகழும் திருநாள் தைப்பூசம்...
கோலாலம்பூர் மற்றும் பழனி போன்ற திருத்தலங்களில் 
காவடிகள் ஆடிவரும் கண்கொள்ளாக்காட்சி கிடைக்கும் திருநாள்.. 
திருவண்ணாமலை கிரிவலம் வர உகந்த நாள்..


மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் 
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா


கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன் 
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக 
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்


சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்


பரமனின் திருமகனே அழகிய தமிழ் மகனே


காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா


அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2)
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
வருவாய்....குகனே... வேலய்யா



29 comments:

  1. முருகனுக்கு அரோகரா
    எல்லா அருளும் உங்கள் குடும்பத்துக்கும் அனைவருக்கும் கிடைக்கட்டும்

    பொறுமையான பொறுப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  2. Aha arputhamana post Rajeswari.
    This is the first time i am hearing that both sun and moon are visible at 6.00A.M. in this day. The photos are very fine as usual.
    viji

    ReplyDelete
  3. அச்சுப்பதிவில் தங்கள் பதிவு வெளி வந்ததிற்கு
    என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ராஜி.
    தைப்பூசம் முருகனுக்கு மட்டுமே உகந்தது
    என்றல்லவா இது நாள் வரையில்
    எண்ணி இருந்தேன். தங்கள் பதிவைக் கண்ட பின் தான்
    அது சிவ வழிபாடு செய்வதற்கும் உகந்தது
    என தெரிந்து கொண்டேன்.
    பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. தைப்பூசத்திற்கு இவ்வளவு சிறப்பா என் ஆச்சரிய பட வைக்கும் தகவல்கள். அனைத்தும் படித்து பயன் பெற்றேன்.அழகான படங்களுடன்,அருமையான பதிவுக்கு நன்றி,மேடம்.

    ReplyDelete
  5. தைப் பூசத்தின்  அருமை பெருமையினைச் சொல்லும் பதிவு இன்நாளில் மலேசியா பத்துக்கேஸ் முருகன் விழாவையும்  காவடியையும் பார்த்த பரவசம் இன்னும் கண்களுக்குள்  கலம் கடந்தாலும் கூட வரும் நினைவுகள்.

    ReplyDelete
  6. தைப்பூசத்தை பற்றிய சிறப்பான பகிர்வு...

    கந்தனுக்கு அரோகரா....முருகனுக்கு அரோகரா....

    ReplyDelete
  7. முருகன் அன்னையிடம் வேல் வாங்கிய ஸ்தலம் "சிக்கல்". அன்று முருகன் சிலையில் வேலின் உக்கிரத்தால் "வேர்வை" துளிர்க்கும். முடிந்தால் இது பற்றிய பதிவு வெளியிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  8. சிவபெருமானின் படம் மற்றும்,மயக்கும் காலை, மயக்கும் மாலை படம் அருமை.

    ReplyDelete
  9. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

    தைப்பூசம் பற்றிய பதிவு அருமை. மொட்ட்டவிழ்ந்து விரியும் ரோஜா மலருடன் துவங்கும் பதிவு பாராட்டுக்கு உரியது. கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்பதன் அடிப்படையில் கோபுர தரிசனத்துடன் துவங்கியது நன்று.

    தை மாதத்தில் பூச நட்சத்திரம் பௌர்ணமியில் வருவதும் - ஐதீகப்படி உலகம் தோன்றிய தினமானதும் - சிவபெருமான் உமா தேவியுடன் இணைந்து ஆனந்த நடனம் ஆடிய நாளும் தைப்பூசத்தன்றே.

    திருவாதிரை அன்று தனித்து நடனமாடி மகிழ்ந்த மகிழ்வித்த நடராஜர் பூசத்தன்று உமா மகேஸ்வரியுடன் நடனம் ஆடுவது நன்று.

    நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

    ReplyDelete
  10. நானசைந்தால் அசையும் அகிலமெலாமே என்ற நியதியை எடுத்துச் சொல்லும் நடன தத்துவம் .....அடடா - எவ்வளவு படங்கள் - எவ்வளவு விளக்கங்கள் - சிவன் கோவிலில் தைப்பூசம் சிறப்பு அபிஷேகங்களுடன் ந்டைபெறுவதும் புதிய செய்தி.

    நல்வாழ்த்துகள் - நட்ப்புடன் சீனா

    ReplyDelete
  11. அன்பின் இராஜ் இராஜேஸ்வரி

    அருட்பெருஞ்சோதி - தனிப்பெரும் கருணை - வள்ளாலாரைப் பற்ரியும் விளக்கமளித்தது நன்று. குருவழிபாடு செய்தல் நலம்.

    எத்தனை எத்தனை செய்திகள் - கோலாலம்பூர் பழனி யில் நடக்கும் தைப்பூசத் திருவிழாவினைப் பற்றி எழுதியதும் நன்று.

    மதுரை சோமுவின் மருதமலை மாமனீயே முருகையா ..... என முழுப்பாடலையும் பகிர்ந்ததும் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. தைப்பூசத்தை பற்றிய அழகான பதிவுக்கு மிக்க நன்றி மேடம்...படங்கள் அழகு!! கந்தனுக்கு அரோகரா.........முருகனுக்கு அரோகரா!!

    ReplyDelete
  13. தைப்பூசத்திற்கு இவ்வளவு சிறப்பா என் ஆச்சரிய பட வைக்கும் தகவல்கள். அனைத்தும் படித்து பயன் பெற்றேன்.அழகான படங்களுடன்,அருமையான பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  14. ஆரம்பத்தில் காட்டப்பட்டுள்ள தைப்பூசவிழா வளைவுடன் கூடிய, கோபுர தரிஸனமும், அதனடியில் அழகாக மொட்டிலிருந்து மலரும் ஐந்து புஷ்பங்களும் பட்டுரோஜா போல, வெகு அழகாக அமைந்து மனதை மகிழவைப்பதாக உள்ளன.

    ReplyDelete
  15. //தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

    சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம்//

    அடடா! ஆனந்தம் அளிக்கும் ஆச்சர்யமான அருமையான தகவல்கள்!

    ReplyDelete
  16. //தைப்பூசம் நம் மகத்தான கலாச்சார வேற்றுமையையும், பல வேறுபட்ட மதங்களின் வெளிபடைப்பும் வழக்கத்தையும் ஏற்கும் நம் திறந்த மனப்போக்கையும் பாராட்டும் மாபெரும் அனைத்துலக நிகழ்வாகி விட்டது.//

    முருக பக்தர்கள் இன்று உலகம் பூராவும் பரவியிருப்பதால், இது உலகளவில் கொண்டாடப்படும் விழாவாகி விட்டதோ! ஆச்சர்யமான வரவேற்க வேண்டிய நிகழ்வு தான்.

    ReplyDelete
  17. //தம்பதியர் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகக் கொண்டாடப்படும் விழா தைப்பூசத்திருநாள்.//

    தன் சரீரத்திலேயே சரி பாதியைத் தன் அன்பு மனைவிக்குத் தந்தவரல்லவா! அந்த அர்த்தனாரீஸ்வரர்!! தம்பதியின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகக் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமே!

    //மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து நடனமாடுவார் சிவபெருமான். நடன நிலையிலுள்ள சிவனை, “நடராஜர்’ என்று அழைக்கிறோம். தைப்பூசத் திருநாளில் அவர் உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். சிவனின் இந்த நிலையை, “உமா மகேஸ்வரர்’ என்பர்.//

    சிவ நடனம் [ருத்ர தாண்டவம்] அதுவும் சக்தியுடன் என்றால் கேட்கவா வேண்டும்!

    உமா மஹேஸ்வராய நம:

    ReplyDelete
  18. //அவன் அசைந்தால் தான் உலகம் அசையுமென்ற நியதியை எடுத்துச் சொல்வதே நடன தத்துவம். ஐந்துவித தொழில்களை நடத்துகிறான் இறைவன். அவை: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.//

    ஓங்கி உயர்ந்த சமுத்திர அலைகள் அப்படியே நிற்பது போலவும், வானில் பறக்கும் பறவைகள் நடுவானில் அசைவற்ற நிலையில் நிற்பது போலவும் காட்டிவிட்டு,

    ”நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே”

    என்ற பாடல் வரிகளின் போது “திருவிளையாடல்” என்ற படத்தில்
    மீண்டும் அலைகள் ஆட்டம் போடுவது போலவும், பறவைகள் சந்தோஷமாகப் பறப்பது போலவும் காட்டிடும் அழகிய காட்சி என் கண் முன் வந்து நிற்குது, இதைப்படித்ததும். ;)

    ReplyDelete
  19. //தைப்பூசநன்னாளானது உலக சிருஷ்டியின் ஆரம்ப நாளாகவும் கொள்ளப்படுகின்றது. சிவசக்தி ஐக்கியம் இந்நாளிலேயே நிகழ்ந்ததாகக் கொள்ளப்படுகின்றது. சிவனின்றேல் சக்தியில்லை, சக்தியின்றேல் சிவனில்லை சிவனும் சக்தியும் இணைந்ததாலேயே உலகம் சிருஷ்டிக்கப்பட்டு இயக்கம் நிகழ்ந்தது என்பது பொருளாக அமைகின்றது.//

    ஐக்கியம் ஆன ஆனந்தத் திருநாளாக இருப்பதால் தான் இன்றும் அது மகிழ்ச்சியோடு அனைவராலும் கொண்டாடப்படுகிறது போலும்.
    தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. //“மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்…’ என்பதே காவடி தத்துவம். //

    தத்துவ விளக்கம் வெகு அருமை.

    பழநி மலை, சபரிமலை, திருப்பதி மலை மூன்றிலும் எப்போதுமே பக்தர்களின் கூட்டத்திற்கு பஞ்சமில்லை.

    ReplyDelete
  21. //தைப்பூசம் நன்னாளில் தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன் கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி வருவோம்.//

    இது கேட்கவே நல்ல தித்திப்பான செய்தியாக உள்ளது. கோயிலில் கும்பலிலும் பிரிந்துவிடாமல் இருக்கும் சந்தர்ப்பமும் உங்களுக்கு அமையட்டும்.வாழ்த்துகள். ;)

    //உலக சிருஷ்டியில் தண்ணீரே முதலில் படைக்கப் பெற்றது. அதிலிருந்தே பிரம்மாண்டம் உண்டானது எனும் ஐதீகத்தை உணர்த்துவதற்காகவே, கோயில்களில் தெப்ப உற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.//

    அற்புதமானதோர் விளக்கம்.

    ReplyDelete
  22. // லேடீஸ் ஸ்பெஷல் ஜனவரி மாத இதழில் வெளியான ஆக்கம்..

    இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்..)//

    அச்சேறிய முதல் பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    அச்சேறிய முதல் பதிவே “அச்சா” வாக அமைந்துள்ளது, அதிர்ஷ்டமே!

    மனமார்ந்த சிறப்பு வாழ்த்துகள்!

    லேடீஸ் ஸ்பெஷலுக்குள் நான் கஷ்டப்பட்டு நுழைந்து படித்து மகிழ்ந்தது என் நினைவில் நிழலாடியது. ;)))))

    ReplyDelete
  23. தேரோட்டமும், காவடியாட்டமும் படத்தில் வெகு அருமையாகக் காட்டப்பட்டுள்ளன.

    சுற்றிலும் வேல்களுடனும், கையில் ஓர் வேலுடனும், மயிலைக் கட்டியணைத்துக்கொண்டு, காலடியில் பாம்பு+சேவலுடன் காட்டப்பட்டுள்ள கீழிருந்து மூன்றாவது முருகன் படம் ஜோர்! ஜோர்!!

    நடுவில் காட்டப்பட்டுள்ள ஓம் என்ற பிரணவ மந்திரத்துடன் கூடிய சரவணபவன் + முருகன் + கோயில் கோபுரம் கூட ஓரளவு நன்றாகத்தான் உள்ளது.

    மேலிருந்து மூன்றாவது படத்தில் ஸ்வாமியும் அம்மனும் நல்ல அழகு!

    வள்ளலார் பற்றி செய்திகளும் அருமை.

    மொத்தத்தில் எல்லாமே மிகச்சிறப்பாகவே உள்ளன.

    இன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல இடங்களுக்கு, பல வேலைகளாகச் சென்றதில் ஒரே அலைச்சல். கணினி பக்கமே வர முடியாமல் போய் விட்டது. அதனால் இந்தப்பதிவை இப்போது தான் நிறுத்தி நிதானமாகப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. தாமதமாக வருகை தந்ததற்கு மன்னிக்கவும்.

    பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  24. என் பத்து வயது முதல் இருபது வயது வரை தைப்பூசம் என்றால் நான் மிகவும் குஷியாகிவிடுவேன்.

    அதற்குக் காரணம் எங்கள் தெருவில், எங்கள் வீட்டருகே உள்ள தெருமுனையில் ஓர் கருப்பர் கோயில் வடக்கு பார்த்து, நேர் எதிரே தெற்கு பார்த்து ஒரு அரசமரத்தடி விநாயகர் கோயில். இந்த இரு கோயில்களுக்கும் நடுவே தெருவை அடைத்து ஒரு பெரிய பந்தல் நல்ல உயரமாகப் போட்டு அலங்காரம் செய்து விடுவார்கள், தைப்பூசத்திற்கு 2-3 நாட்கள் முன்பே.

    அந்தப்பந்தலின் நடுவே ஒரு கிணற்று ஜகடைபோல ஒன்றும், மிக நீளமான கயிறும் போட்டு, பந்தல் காலில் கீழாக அந்த இரண்டு கயிறுகளைக் கட்டி வைத்திருப்பார்கள்.

    அந்த கிணற்று ஜகடை போன்ற பகுதிக்கும் கயிற்றுக்கும் இணைத்து, உயரத்தில் தொங்கும் நிலையில் ஒரு தங்க விக்ரஹரம் போன்ற வெகு அழகான ஒரு வயது குழந்தை போன்ற, தவழும் கிருஷ்ணர் பொம்மை தொங்கவிட்டிருப்பார்கள்.

    அந்த கிருஷ்ணனின் கைகள் இரண்டையும் ஒரு புல்லாங்குழல் போன்ற ஜிகினா காகிதங்கள் சுற்றிய குச்சியொன்றினால் இணைத்திருப்பார்கள். அந்தக்குச்சியில் மாலையை மாட்டிவிடுவார்கள்.

    திருச்சியில் உள்ள அனைத்துக்கோயில் உற்சவ ஸ்வாமிகளும், காவிரிக்கு, தைப்பூசத்திற்கு தீர்த்தவாரிக்காகச் சென்று, அழகாக அலங்கரிக்கப்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள், வேன்கள், சிறு லாரிகள் மூலம், ஜெனெரேட்டர் செட் சீரியல் லைட் போட்டு, ஒவ்வொன்றாக விடிய விடிய எங்கள் தெரு முகனைக்குத்தான் முதன் முதலாக வரும். அதன் பிறகே மலைக்கோட்டையை பிரதக்ஷனமாகச் சென்று, பிறகு அந்தந்த கோயில்களைச் சென்றடையும்.

    நடுவில் மேள நாயனக் கச்சேரிகளும் வந்து நடு ரோட்டில் அமர்ந்து அமர்க்களப்படும்.

    இவ்வாறு எங்கள் தெருமுனைக்கு வந்து சேரும் அனைத்து ஸ்வாமி அம்பாளும் அந்தக்கொட்டகையில் நிற்கும்போது, அந்த ஆடும் குட்டிக்கிருஷ்ணரில் கையில் தொங்கவிடப்பட்டுள்ள மாலை மிகச் சரியாக அந்த புறப்பாட்டு ஸ்வாமி கழுத்தில் விழவேண்டும்.

    அதற்குத் தகுந்தாற்போல அந்த நீண்ட கயிற்றைப்பிடித்து வாகாக ஆட்டிக்கொண்டே இருப்பார்கள், அதற்கான சிறப்புப்பயிற்சி பெற்றவர்கள். ஸ்வாமியின் கழுத்தில் மிகச்சரியாக ஆடும் கிருஷ்ணரால் மாலையிடப்படும் வரை, புறப்பாட்டு ஸ்வாமி அம்பாள் நகரவே நகராது.

    தொடரும்.....

    ReplyDelete
  25. இந்தக்குட்டிக்கிருஷ்ணரால் ஸ்வாமி அம்பாளுக்கு மாலை மிகச்சரியாகக் கழுத்தில் விழுமாறு, கஷ்டப்பட்டு, அந்தக்கயிற்றை ஆட்டிக் கொண்டிருக்கும் ஆட்கள் அருகே நானும் என் சிறு வயது நண்பர்களும் கூட்டமாக நின்று விடிய விடிய வேடிக்கை பார்த்து மகிழ்வோம்.இந்தத் திருப்பணி செய்யும் அவர்களையும் உற்சாகப்படுத்துவோம்.

    எங்களுக்கும் அந்தச்சிறிய வயதில் மிகமிக உற்சாகம் தந்த நிகழ்ச்சி இது.

    அந்த நாட்களின் அந்த சந்தோஷத்தை என்னால் எழுத்தில் முழுவதுமாக வடிக்க இயலவில்லை.

    இப்போதும் கூட அதேபோல மிகச்சிறப்பகத்தான் நடைபெற்று வருகிறது.

    நடுவில் BHEL Quarters இருந்த சுமார் 20 வருடங்களில் கூட [1982-2001] இந்தத் தைப்பூச ஸ்வாமி புறப்பாடுகளைக் கண்டு களிக்கவும், ஏராளமான கோயில்களின் வெள்ளி ரிஷப வாகனக் காட்சிகளையும் தரிஸிக்கும் ஆசையிலும், இந்தக் குட்டிக் கிருஷ்ணர் மாலையிடும் கண்கொள்ளாக் காட்சிகளைக் காணவும் இங்கு, என் பெரிய அக்கா இல்லத்துக்கு வந்து இரவு பூராவும் கண் விழித்திருந்து பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.

    இப்போது திரும்ப அதே இடத்திற்கு என் 50 ஆவது வயதில் சொந்தக் கிரஹம் அமைந்து குடிவந்து விட்டதில், எனக்கு மிக மிக மகிழ்ச்சியே.

    இருப்பினும் அந்தக் குழந்தைப் பருவத்தில், இதில் நான் கொண்டிருந்த தனி ஈடுபாடும் ஆசையும், இப்போது ஏனோ எனக்கு அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    இன்றும் தைப்பூசமும், ஏராளமான ஸ்வாமி புறப்பாடுகளும், கண் கொள்ளாக்காட்சியாக, FLAT வாசலிலேயே காண முடிகிறது.

    ரோட்டைப்பார்த்த வீடாக 2 ஆவது மாடியில் அமைந்துள்ளதால், ஜன்னல் வழியாகவே தரிஸிக்க முடிகிறது, என்பதிலும், ”எந்தையும் தாயும் இருந்து குலாவி மகிழ்ந்ததும் இந்த இடமே”, என்பதிலும் எனக்கோர் தனி மகிழ்ச்சியும் பெருமையும் உள்ளது.

    ஏனோ இதை இந்தத் தைப்பூசப் பதிவிலேயே தங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்ற ஓர் ஆசையில் சொல்லி விட்டேன். இதைத் தனிப்பதிவாகவே எழுதும் அளவுக்கு என்னிடம் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து மோதுகின்றன vgk

    ReplyDelete
  26. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  28. 2. ஸ்ரீ வெங்கடேஸா கோவிந்தா

    ReplyDelete
  29. 2191+12+1=2204

    Not even a single reply for my lengthy comments. ;(

    ReplyDelete