Wednesday, November 12, 2014

ஞான விளக்கு பொய்கையாழ்வார்




பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!
செய்ய துலா வோணத்தில் செகத்துதித்தான் வாழியே

திருக்கச்சி மாநகரம் செழிக்க வந்தோன் வாழியே
வையம் தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே

வனச மலர் கரு அதனில் வந்து அமைந்தான் வாழியே
வெய்ய கதிரோன்தன்னை விளக்கு இட்டான் வாழியே

வேங்கடவர் திருமலையை விரும்பும் அவன் வாழியே
பொய்கை முனி வடிவு அழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியும் திருமுகமும் பூதலத்தில் வாழியே!



என் உள்ளம் அவனது அன்பையே எக்காலமும் சிந்தித்து மகிழ்கிறது.
என் நாக்கோ, மகாலட்சுமித் தாய் உறையும் திருத்துழாய் மாலை சூடிய அவன் மார்பை, செங்கமலக் கண்களை, சக்ராயுதம் தரித்த கையை, கழல்கள் அணிந்த கால்களை, வெண்ணெய் ஒழுகும் செம்பவழ வாயை எப்போதும் பாடிக்கொண்டேயிருக்க விழைகிறது.

 என் கண்களோ, மாயக் கள்ளன் திருமகள் நாதனான கண்ணபிரானைக் காண் என்கின்றன. என் செவிகளோ, அவன் புகழையே எப்போதும் கேள் என்று கேட்க விழைகின்றன.

- இப்படியே பொய்கை ஆழ்வார் எந்நேரமும் சொல்லிக் கொண்டிருப்பார். கண்கள் இரண்டும் ஆனந்தக் கண்ணீர் சொரிய, அகம் கரைந்து உள் ஒடுங்கி திருமாலின் திவ்விய ரூப சௌந்தர்யத்தில் தன்னையும் மறந்திருப்பார்.

இயல்பிலேயே இறையருளால் இயல் இயற்றும் வரம் கைவரப் பெற்ற பொய்கையார், பகவானின் கல்யாண குணங்களைப் பாடி பக்தரோடு பரவசராய் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்வார்.

அப்படி இருக்கும்போது, ஒரு நாள் பூதத்தாழ்வாரோடும் பேயாழ்வாரோடும் இவரைச் சந்திக்க வைத்து, இம்மூவருக்கும் தன் திவ்விய ரூப அழகைக் காட்டி, இவர்களின் பக்தியை ஊரறியச் செய்ய எண்ணம் கொண்டான் நாரணன்.

அதன் பிறகு இவர் அமுதனைப் போற்றி பாசுரங்கள் பாடினார். அது நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் முதல் திருவந்தாதியாக இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொகுப்பில் நூறு அந்தாதிப் பாடல்கள் உள்ளன.

 இந்தப் பாசுரங்கள் அனைத்தும் அழகிய வெண்பா நடையில் அமைந்திருக்கின்றன. வெண்பா என்ற பா வகையையும் ஏற்று, அந்தாதியையும் எடுத்துக்கொண்டு இவர் செய்த முதல் நூற்றந்தாதியில்  பாசுரங்கள் அமுதெனத்தித்திருப்பவை..

சைவ- வைணவ ஒற்றுமை பேசியவர்:
‘அரனும் அரியும் ஒன்றே’  என்று கூறும் முதல் குரல், முதலாழ்வார்களில் முதல்வரான பொய்கையாழ்வாரின் குரல்.





வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று

பொய்கையாழ்வார் இம்மண்ணுலகத்தையே தகளியாகக் கொண்டார்; அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் உதயஞாயிற்றையே (சூரியன்) அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் கருதியிருக்கும் ஆன்மாக்களுக்கு வீடுபேறளிக்கும்..!

காஞ்சிமாநகரில் உள்ள திருவெஃகா என்ற வைணவத் திருப்பதியின் வடபகுதியில் இருந்த ஒரு பொய்கையில், ஒரு பொற்றாமரை மலரில் திருமால் கைச்சங்கான  பாஞ்சசந்நியத்தின் அம்சமாய் திருஅவதாரம் செய்தவர். 



பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியில்

,  “அரன்,  நாராயணன் ஆகியவை உனது பெயர்கள். எருது, கருடன் ஆகியவை உம் வாகனங்கள். ஆகமமும் வேதமும் உன் பெருமை பறைசாற்றும் நூல்கள். மலையும் (கைலாய மலை) கடலும் (திருப்பாற்கடல்) உன் இருப்பிடங்கள். அழித்தலும், காத்தலும் நினது தொழில்கள். வேற்படையும், சக்கரப் படையும் நின் ஆயுதங்கள். தீயின் சிவப்பும், கார் மேகத்தின் கருப்பும் நின் உருவம். ஆயினும் உடல் – ஒன்றே!” என்கிறார்.

அரியும் அரனும் சேர்ந்த உருவமான சங்கரநாராயணர் தத்துவத்துக்கு இந்தப் பாசுரத்தை மேற்கோள் காட்டுவர்.

 பொய்கையாழ்வார் தம்  பாசுரத்தில், ஒருவருக்குள் ஒருவர் உறைவதை எடுத்துக் காட்டியிருப்பார்.


“பொன் நிற உடலும் பின்னிய சடையும் கொண்ட சிவபெருமானும், 
நின்று கொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், 
எப்போதும் இரண்டு வடிவங்களில் திரிவார்கள் என்றாலும், 
சிவன் திருமாலின் உடம்பாக இருக்கிறான். 
திருமால் சிவனுக்குள் உறைபவனாய் அவன் வாழ்வுக்குக் காரணம் ஆகிறான்” என்று விசிஷ்டாத்வைத தத்துவப் பொருளையும் பேசுகிறார்.

 சமரச உணர்வைப்  பாசுரத்தில்,  “காளை வாகனம் கொண்ட சிவன் முப்புரங்களை எரித்தவன். சாம்பல் பூசியவன். உடல் பாதியில் பெண்ணைக் கொண்டவன். சடையையும் அதில் கங்கையினையும் உடையவன். 

ஆயின் இச்சிவபிரானைக் காக்கும் திருமாலோ வேத புருஷனான கருடனை வாகனமாகப் பெற்றவன். இரணியன் மார்பைக் கிழித்தவன்; நீலமணி நிறத்தான்; திருமகளைத் தன் மார்பில் ஏற்றவன்; திருமுடியுடன் கங்கையின் பிறப்பிடமாகிய திருவடி கொண்டவன். 

ஆகவே திருமாலே சிவனின் ஆத்மாவாக அவன் உள்ளிருந்து காக்கும் பேரிறைவன்” என்று, சிவனுள்ளும் திருமாலைக் காணும் நோக்கை ஏற்படுத்தித் தருகிறார்.


“கையில் சங்கு, சக்கரம் கொண்டு இலங்கும் மேகவர்ண மேனி கொண்டவனான நின் அருகில் லக்குமி இருக்கிறாள். 
உன் உந்திக் கமலத்தில் பிரமன் இருக்கிறான். 
முப்புரம் எரித்த சிவபெருமானும் உன் உடலின் ஒரு பாகம்தான்” என்கிறார். 

இப்படி அனைவரும் அவன் ஒருவனிடம் உறைகின்றனர் என்கிற கருத்தைக் கொண்டிருந்தாலும் அதைக் காட்டினும் சிறப்பாக, நாம் எந்த உருவில் அவனை வேண்டுகிறோமோ அந்த உருவில் அவன் நமக்கு அருள்வான் என்கிற உலகளாவிய தத்துவ உண்மையை எடுத்து இயம்புகிறார் பொய்கையாழ்வார்.

தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே;
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர்;  தமர் உகந்து
எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே,
அவ்வண்ணம் ஆழியான் ஆம் 

“அடியார்கள் எந்த உருவத்தை விரும்புகிறார்களோ, அதுவே அவன் உருவம். 
எந்தப் பெயரைக் கொடுக்கிறார்களோ அதுவே அவன் பெயர். 
எந்த விதமாக சிந்தித்து இடைவிடாமல் தியானம் செய்கிறார்களோ அந்த விதமாகவே இருப்பான் சக்கரக் கையான்” என்று சமரச தத்துவ நிலையைச் சொல்கிறார்..
  “இந்த உலகத்து உயிர்கள் எல்லாம் அந்தத் திருமாலிடமே அடங்குகின்றன, எல்லா தெய்வங்களும் அவனிடமே ஒடுங்குகின்றன, எனில் அவனைக் காட்டிலும் வேறு ஒரு தெய்வத்தைத் துதிக்கவும் வேண்டுமோ?”  என்று நாராயண பரத்துவத்தை நிலை நாட்டுகிறார் பொய்கையாழ்வார்.



“எப்படி ஆகாசத்திலிருந்து மண்ணில் விழும் நீரானது ஆறுகளின் வழியே ஒன்றாகிக் கடலில் சேர்கிறதோ, அதுபோல் மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கின்ற நமஸ்காரங்கள் கடல் வண்ண நிறனான கேசவனுக்கே செல்கின்றன ”  என்று சொல்வதைப் போல் இவரும் பேசுகிறார். அதனால் நான் எதற்காக மற்ற தெய்வங்களை ஏத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.

நயவேன் பிறர் பொருளை; நள்ளேன் கீழாரோடு;
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்;  வியவேன்
திருமாலை அல்லாது தெய்வம் என்று ஏத்தேன்;
வரும் ஆறு எம்மேல் வினை?

என்று,  “பிறன் பொருளை யான் விரும்பேன்;  (அல்லது திருமாலுக்கே உரிமையான ஆத்மாவை என்னுடைய பொருளாக எண்ணி ஆசைப்படமாட்டேன் என்ற பொருளிலும் எடுத்துக்கொள்ளலாம்).

கீழான தன்மை உடையவரோடு நட்புப் பூணேன்; உயர்ந்தவரோடு சேர்ந்திருப்பேனே அல்லாது மற்றவரோடு சேரேன்
(அல்லது உலக வாழ்வில் உழல்பவரோடு சேராது திருமாலடியாரோடே கூடிக் களித்திருப்பேன் என்றும் கொள்ளலாம்).
திருமாலைத் தவிர வேறு தெய்வம் எதையும் தெய்வம் என்று துதிக்க மாட்டேன். ஆதலால் பிறப்பு, இறப்புத் துன்பம் தரும் பாவ வினை என்னை நாடி எப்படி வரும்?… நிச்சயம் வராது”  என்று கூறும்போது, நாராயணனையே தெய்வம் என்று ஏத்துவேன் என்பதையும் இறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

9 comments:

  1. பொய்கையாழ்வார் திருவடி சரணம்.

    உயர்ந்தவரோடு சேர்ந்து இருப்போம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. படங்கள் அருமை
    காலப் பெட்டகம் உங்கள் வலைப்பூ

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு அம்மா

    ReplyDelete
  5. படிக்கத் தெவிட்டாத பொய்கை ஆழ்வார் பாசுரங்களின் மேற்கோள்கள். இலக்கிய இன்பத்தினை நுகர்ந்தேன்.

    ReplyDelete
  6. பொய்கையாழ்வார் குறித்த தகவல்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  7. தற்போது தொடர்ந்து திவ்யப் பிரபந்தம் படித்துக்கொண்டிருக்கின்றேன். பொய்கையாழ்வார் பற்றிய பதிவு, படங்களுடன் மிக சிறப்பாக இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  8. பொய்கை ஆழ்வார் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றிசகோதரியாரே

    ReplyDelete