
அமிர்தசரஸில் தங்கக்கோவில் , வேலூர் தங்கக் கோவில் போல, கர்நாடக மாநிலம், மைசூரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் "பைலாகுப்பே' என்னும் ஊரில், குஷால் நகர் என்னுமிடத்தில் தங்கக்கோவில் ஒன்று அமைந்துள்ளது.
திபெத்திலிருந்து இந்தியா வந்து மைசூர் அருகே குடியேறிய திபெத் நாட்டவர், தங்கள் நாட்டு பாணியில் தற்சமயம் தாங்கள் வசிக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என்னும் ஆர்வத்துடன் கட்டிய பௌத்த மதக் கோவில் தங்கக் கோவில்!
அவர்களது முயற்சிக்கு அரசாங்கமும் தாராள குணம் கொண்ட புரவலர்களும் பொது மக்களும் ஏராளமாக உதவி செய்திருக்கின்றனர்.
தலாய் லாமாக்கள் புத்த்துறவி ஆவார்.

புத்தமதக் கொள்கையின்படி, புத்தரின் ஆத்மா என்றும் அழிவதில்லை என்றும்; மக்களின் துயரத்தைப் போக்க மீண்டும் மீண்டும் அவதாரம் செய்கிறார் என்றும் நம்புகிறார்கள்.
இந்த தங்கக்கோவிலுக்கு அதன் கலையழகுக்காக மட்டும் ரசித்து விட்டுச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம் வருகின்றனர். இங்கே நடக்கும் மதச் சடங்குகள் பலவற்றைப் பார்க்கும்போது, பல சடங்குகள் இந்து மதத்தின் வழிபாட்டு முறைபோலவே அமைந்திருக்கிறது..
தங்கக்கோவில் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. கோவிலுக்குச் செல்ல அகலமான பாதை உள்ளது. சுற்றிலும் பச்சைப் பசேலென புல்தரைகள் அழகாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது கண்களில் தென்படுவது இந்தக் கோவிலின் தர்மச் சக்கரம்தான்.

நமது கோவில்களின் கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் இருப்பது போல இவர்களது கோவிலின் உச்சியில் தர்மச் சக்கரம் காணப்படுகிறது. இது மிகவும் புனிதமான சின்னம். கோபுரத்தின் உச்சியில் ஒரே ஒரு கலசமும் உண்டு.

கோவிலின் கோபுரம் தங்க நிறத்தில் மூன்று அடுக்குகள் கொண்டதாக அமைந்துள்ளது. சிறிய புத்தர் சிலைகள், புத்த மதத்தின் மதச் சின்னங்கள் தங்க நிறத்தில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கோபுரத்தின் உச்சியையும் கீழே உள்ள பாகங்களையும் இணைத்து பல வண்ணத் துணியினாலான நான்கு தோரணக் கொடிகள் உள்ளன. இவை வெறும் அலங்காரக் கொடிகள் அல்ல. வழிபாட்டில் பயன்படுத்தப்படும் அர்த்தமுள்ள கொடிகள்.

கோவில் நுழைவாயிலில் இரண்டு பக்கமும் புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்களை விளக்கும் இரண்டு பெரிய சித்திரங்கள் உள்ளன. உள்ளே சிவப்பு நிற மேலங்கி அணிந்த லாமாக்கள் புன்சிரிப்புடன் கைகூப்பி நம்மை வரவேற்கின்றனர். பளபளக்கும் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட பெரிய கூடம் உள்ளது.

மண்டபத்தின் கோடியில் அமைந்துள்ள மேடையில், தனித்தனி பீடங்களின் மேல் மூன்று புத்தர் சிலைகள் உள்ளன. நடுவில் உள்ள புத்தர் சிலை பீடத்துடன் சேர்த்து 40 அடி உயரம் கொண்டது. மற்ற இரு புத்தர் சிலைகளும் ஏறக்குறைய அந்த அளவிலேயே உள்ளன.

இந்த மூன்று திருமேனிகளிலும் ஸ்வஸ்திக் சின்னம் பல இடங்களில் காணப்படுகின்றது.

மூன்று புத்தர்களும் தங்க நிறத்தில் தகதகவென்று மின்னுகின்றனர்.
புத்தர்கள் அமர்ந்திருக்கும் பீடங்களின் மேல் சிங்கம், யானை, குதிரை, மயில் மற்றும் மனிதத் தலையோடும் பறவையின் உடலோடும் காணப்படும் ஒரு பறவை சிற்பங்கள் புடைப்பு சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இவை நல்ல சின்னங்களாகக் கருதப்படுகின்றன.
இரண்டு பக்கச் சுவர்களிலும் புத்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விளக்கும் ஏராளமான ஓவியங்கள் உள்ளன. மேடையின் மேல் வழிபாட்டுச் சடங்குகளுக்கு உபயோகிக்கப்படும் பல பொருட்கள் காணப்படுகின்றன. மேடைக்கு எதிரே வரிசையாக பெஞ்சுகள் போடப்பட்டிருக்கின்றன. அதனையொட்டி தரையில் மரப்பலகைகள் உள்ளன. பெஞ்சின் மேல் அவர்கள் பிரார்த்தனையின்போது படிக்கும் புனித நூல்கள் பட்டுத் துணியினால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனையின்போது பட்டுத்துணிகளை எடுத்துவிட்டு புனித நூல்களைப் படிக்கிறார்கள். இந்த புனித நூல்கள் ஓலைச்சுவடிகளைப்போல உள்ளன.

இந்த புனித நூல்களில், திபெத்தியர் வழிபடும் புத்த மதப் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் திபெத்திய மொழியில் எழுதப் பட்டிருக்கின்றன. தலைமைப் பொறுப்பை ஏற்று வழிபாட்டை நடத்தும் லாமாக்களுக்கென்று தனியாக ஒரு இடம் உண்டு. அருகில் இசைக்கருவியான நீண்ட குழல்கள் இரண்டு உண்டு. ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாக முரசுகள் காணப்படுகின்றன. இவர்களின் வழிபாட்டுச் சமயத்தில் மணிகள் ஒலிக்கின்றன. சங்குகள் ஊதப்படுகின்றன. வழி பாட்டை நடத்தும் லாமாக்களின் கையில் சிறிய மணிகள் காணப்படும். இந்த மணிகளை அடித்தால் வழிபாடு நடக்கும் இடத்தில் தீயசக்திகள் அணுகாது என்று கருதப்படுகிறது. அதைப்போலவேதான் சங்கின் ஒலியும்.

வெண்ணெய்யால் எரியும் விளக்குகள் ஏற்றி வைக்கப் படுகின்றன. நறுமணம் கமழும், புகை எழுப்பும் ஊதுவத்தி போன்ற பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைத்திருக்கிறார்கள். மலர்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.


வழிபாடு சமயத்தில் அங்கே இருக்கும் லாமாக்களும் மற்றவர்களும் "ஓம் மணி பத்மே ஹம்' என்னும் மந்திரத்தை ஓதுகின்றனர். அவர்கள் ஓதும் மந்திரங்களில் மிகவும் முக்கிய மான மந்திரம் இது. "ஓம்' என்னும் சொல் அவர்கள் கருத்துப்படி புத்தரின் இதயத்தைக் குறிப்பிடு வதாகவும்; மணி என்னும் சொல் செல்வம் என்பதைக் குறிப்பிடுவதாகவும்; பத்மே என்னும் சொல் தாமரைப் பூவைக் குறிப்பிடுவதாகவும்; ஹம் என்னும் சொல் புத்தரை அடைய, ஒவ்வொருவரும் புத்தராக மாற உதவுகிறது என்றும் கூறுகிறார்கள். அங்கு பிரார்த்தனை செய்ய வரும் ஒவ்வொருவரும் புத்தரோடு நெருக்கமாக ஆகமுடியும்; அல்லது அவர்களே புத்தராக மாற முடியும் என்று வழிபாட்டை தலைமையேற்று நடத்தும் லாமாக்கள் கூறுகிறார்கள்.

புத்த மதத்தின் மிக முக்கியமான அம்சம் தியானம்.

தன்னை உணர, ஞானம் பெற, புத்தரை அடைய, புத்தராக மாற தியானம் உதவுகிறது என்பது இவர்களுடைய கொள்கை.

அவர்கள் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதில்லை. கண்களைத் திறந்து கொண்டுதான் தியானம் செய்கிறார்கள்.
![Golden Temple [A Budhist Monastery] in Kushalnagar [Coorg], Karnataka.](http://static.panoramio.com/photos/large/40330494.jpg)
அவ்வாறு கண்களைத் திறந்து கொண்டு தியானம் செய்யும்போது, சுற்றிலும் இருக்கும் காட்சிகளால்- ஏற்படும் சலனங்களால் மனம் அலைபாயாமல் இருக்க, உடலும் மனமும் ஒன்றுபட்டு தியானம் செய்ய "மண்டலா' என்னும் ஓவியத்தைப் பயன்படுத்துகின்றனர்.


இது பிரபஞ்சத்தைப் பிரதிபலிக்கும் சின்னமாம். இந்த ஓவியத்தின் நடுப்பகுதியை உற்று நோக்கி தியானம் செய்தால், தியான நிலையை மனம் வெகு சீக்கிரமாக அடையும் என்றும்; மனம் மிகவும் உன்னதமான நிலையை அடையும் என்றும் கூறுகிறார்கள்.

(மண்டலாவின் நடுவில் காணப்படும் சித்திரம் நாம் வணங்கும் ஸ்ரீசக்கரம் போல இருக்கிறது. வட்டத்தைச் சுற்றி வேறு உருவங்களும் வரையப்பட்டிருக்கின்றன.)



மனதை கவரும் படங்கள்... அருமையான விளக்கங்கள் அம்மா...
ReplyDeleteபதிவினைப் படிக்கும் போதே - மனம் அமைதியடைகின்றது.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி..
பல அறியாத தகவல்களுடனும் அருமையான படங்களுடனும் கூடிய பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅரிய தகவல்கள். படங்களுடன் சிறப்பு.
ReplyDeleteஅழகிய படங்களுடன் கோவில் பகிர்வு சிறப்பு!
ReplyDeleteஅருமையான பதிவு. தியானத்தின் மேன்மை ஓம் மணி பத்மே ஹம் விளக்கம் மிக அருமை.
ReplyDeleteஅருமை நாங்களே சென்று பார்த்த உணர்வு...வாழ்த்துகள்.
ReplyDeleteமண்டலா சக்கரம் பற்றிய விளக்கம் அறிந்தேன். மிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteஅழகிய படங்கள். புதிதாக ஒரு கோவில் பற்றித் தெரிந்து கொண்டேன்...
ReplyDeleteநன்றி.
அழகிய படங்களைக் கண்டு வியந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
முதல் படம் நீங்கள் எடுத்ததா?
ReplyDeleteஅருமையான படம் ...
செமை.
வாழ்த்துக்கள்
எம்மதமும் சொல்லும் தத்துவத்தின் அடிநாதம் ஒன்றாகவே உள்ளது!! பதிவின் முழுமையான தகவல்களும் படங்களும் பார்க்க, படிக்கவே மன நிறைவைத் தருகிறது.
ReplyDeleteho,,,good
ReplyDelete