

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ
மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும் அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே!
நல்ல மணவாழ்க்கை அமைய இந்த திருமணத்திருப்புகழ் பாடல் உகந்தது.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று திருநாமங்கள் கொண்டு போற்றப்படும் தமிழ் கடவுள் முருகப்பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் பல புரிந்து வந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டியின் சூரசம்ஹாரம்..!..

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்
குன்றுதோராடி குறைகள் களையும் குமரன் அருள்பொழியும்
அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளுடன், சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெறும் நாளில் அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, அபிஷேகம், சாயரட்சை தீபாராதனையுடன் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி சூரனை வதம் செய்கிறார்..
சந்தோஷ மண்டபத்தில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு புஷ்ப சப்பரத்தில்எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.
அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வதை சாயாபிஷேகம் என்பர்.
"சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள்.
போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும்.
இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.







முருகன் சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அதற்கு பதிலாக காவிரி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட் காட்சியளித்து சாமந்தி, ரோஜா, துளசி, கதம்பம், மல்லி, வில்வம் உள்பட 99 வகையான வண்ண மலர்களால் முருகனுக்கு புஷ்ப லட்சார்ச்சனை நடக்கும்.
திருத்தணி மூலவர் முருகனுக்கு
புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
பள்ளி குழந்தைகள், நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்கும்
கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்..!.




திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் உள்ள வள்ளிகுகையின்
மேற்கூரையில் அமர்ந்திருக்கும் மயில்கள்.























