Friday, March 2, 2012

கோலாஹல கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி









யாதேவி ஸர்வ பூதேஷு லக்ஷ்மிரூபேண ஸமஸ்திதா 
நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமோ நம:



மகிஷனை அழிக்க,முப்பெரும் தேவியாக உருக் கொண்டு வந்த ஜகன்மாதாவான பராசக்தியே மகாலக்ஷ்மி என்கிறது தேவி மகாத்மியம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது தோன்றி விஷ்ணுவை மணந்து அவர் மார்பிலே நித்ய வாசம் செய்யும் லக்ஷ்மியைத் துதித்தாலே நாரணனும் கூட வந்து “லக்ஷ்மி நாராயணனாக” நமக்கு அருள்கிறான்.  
லக்ஷ்மியைத் துதிக்கப் பல ஸ்லோகங்கள், முக்கியமாக ஸ்ரீசூக்தம், லக்ஷ்மி சகஸ்ரநாமங்கள் உள்ளன.

மகாராஷ்டிர மாகாணத்தில் உள்ள கோல்ஹாபூர் மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் முழுவதுமாகக் கிட்டியுள்ளதால், மும்பை பணக்கார நகரமாகத் திகழ்கிறது எனலாம். 
கோல்ஹாபூர் என்றாலே எல்லார் நினைவிலும் எழில் கோலமாய் திகழ்வது, மகாலக்ஷ்மி அன்னைதான்.

 மிகச் சிறந்த புண்ணிய க்ஷேத்திரமான் கோல்ஹாபூரில் கோவில் கொண்டருளும்  மகாலக்ஷ்மியின்  பெருமை பத்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது..


ஜகதாம்பாளின் வலக்கை விழுந்தபடியால் “கரவீர க்ஷேத்திரம்” என்றும், 
இங்கு உறையும் மகாலக்ஷ்மிக்கு “கரவீர நிவாசினி ஸ்ரீ மகாலக்ஷ்மி பிரசன்ன” என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள். 


இந்த கோல்ஹாபூர் மகாபிரளயத்தில் கூட அழியாதது என்றபடியால் “அவிமுக்த க்ஷேத்ரம்” என்றும் அழைக்கப்படுகிறது. 
108 சக்தி பீடங்களுள் ஒன்று இந்தக் கரவீர பிரதேசம் ..
அம்பாளின் வலக்கை வீழ்ந்த சக்தி பீடமாக விளங்குவதால் இயற்கை அழிவிற்கு அப்பாற்பட்ட நகரம் ...


வைகுண்டம், பாற்கடலை விட மகாவிஷ்ணு பெரிதும் போற்றி,  வாசம் செய்வதால் தேவாதி தேவர்கள், முனிவர்கள், ஆகியோர் விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் காண இங்கு வருகிறார்களாம். 

ஸ்ரீதத்தாத்ரேயர் தினமும் பிக்ஷைக்காக பகலில் இங்கே வருகிறார் என்பது ஐதீகம். 
தக்ஷிண காசி என்று அழைக்கப்படுவதால் இவ் உலகு நீப்போரின் காதில் சிவனே ராமராம மந்திரத்தை ஓதுகிறார் என்றும் நம்பப்படுகிறது

 புராண காலத்தில் கோலஹாசுரன் என்னும் அரக்கன், தேவர்களைத் துன்புறுத்தியதால் அவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவனை வேண்டினர், 
மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மகாலக்ஷ்மி கோலஹாசுரனைக் வென்று தேவர்களைக் காத்தாள். 

இறக்கும் தருவாயில் அசுரன் தேவியை வேண்டினான். 
ஹே தேவி! நான் இறந்த இடம் ஒரு நகரமாக விளங்க வேண்டும்” என்றான். தேவியும், அவன் விருப்பப்படி “அப்படியே ஆகட்டும்” என்றாள். அவன் இறந்த இடம் கோல்ஹாபூர் என்று அழைக்கப்படலாயிற்று. 
அழகான “சாயத்திரி” மலைப்பகுதியில் பஞ்ச கங்கா நதிக்கரையில் எழுந்துள்ளது இந்த கோல்ஹாபூர்.

40கிலோ எடை கொண்டுள்ள சுமார் 3அடி உயரத்தில் வைரத் துணுக்குகள் மின்ன மிகவும் விலை உயர்ந்த கல்லால் வடிவமைக்கப்பட்ட விக்ரஹம் அருளை அள்ளி வர்ஷிக்கிறது...
சதுர வடிவில் அமைந்துள்ள ஒரு கல் மேடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது...

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

அன்னை நான்கு கரங்களில் மேலே உள்ள வலக்கரத்தில்தரையைத் தொடும் வண்ணம் உள்ள “கௌமோதக் கதிர்” தாங்கி,  
கீழே உள்ள வலக்கையில் “மதுலிங்கம்” என்ற பழத்தைத் தாங்கியுள்ளாள். இட மேல் கரத்தில் கத்தி, கேடயமும், இடக் கீழ்ககரத்தில் பொற் கிண்ணத்தைத் தாங்கியுள்ளாள்.  
தலைக்கு மேல் கிரீடம், அதன் மேல் சேஷநாகம். சிலையின் பின்புறம் சிம்ஹவாகனம் உள்ளது.
மேற்கு நோக்கிய வண்ணம் அருள் புரியும் அன்னையை மேற்குப் புறச் சுவரில் ஒரு திறந்த ஜன்னல்.  வழியாக வருடத்தில் குறிப்பிட்ட தினத்தில் மாலைச் சூரியன் தன் பொற்கிரணங்களால் அன்னையை  ஆராதிப்பது அற்புதம்...
கிரணோத்சவம்
வருடாவருடம் ஜனவரி 31ஆம் தேதியும், நவம்பர் 9ஆம் தேதியன்று சூரியனின் கிரணங்கள் அம்மனின் பாதத்தில் விழுகின்றன. 
 பிப்ரவரி 1ஆம் தேதியும், நவம்பர் 10ஆம் தேதியும் சூரியனின் கிரணங்கள் அம்மனின் மார்பில் விழுகின்றன.
பிப்ரவரி 2ஆம் தேதியும், நவம்பர் 11ஆம் தேதியும் சூரியனின் கிரணங்கள் அம்மனின் முழு மேனியில் விழும் காட்சி தரிசிக்கத் தக்க மிகவும் அபூர்வமானது... 

சூரியன் தன் பொற்கிரணங்களால் அன்னையைத் தொழுவதாக ஐதீகம். இவ்வகையில் சூரியகிரணம் விழும் வகையில் கர்ப்ப கிரகத்தில் ஜன்னலை அமைத்தது அந்நாளைய கட்டடக் கலைஞரின் திறன் வியந்து போற்றத்த்குந்தது...
தென்னாட்டில் சிவாலயங்களில் அபிஷேகம்
விஷ்ணு ஆலயங்களில் அலங்காரம், 
திருவண்ணாமலை தீபம் என்பது போல், 
கோல்ஹாபூர் மகாலக்ஷ்மி கோவிலில் ஆரத்திகள் மிகவும் சிறப்பு மிக்கது.


காலை 4.30 மணிக்கு லக்ஷ்மியின் பாத பூஜை தொடர்ந்து எடுக்கப்படும் ஆரத்தி “காகட்” ஆரத்தி..


மஹாபூஜையில் வாசனை மிகுந்த மலர்களாலும், குங்குமத்தாலும் பூஜிக்கப்படுகிறாள் அன்னை.அரிசியால் செய்த விசேஷ நைவேத்தியம் படைக்கப்பட்டு மங்கள ஆரத்தியும், கற்பூர ஆரத்தியும் காட்டப்படுகிறது. 


இரவு 10மணிக்கு சக்கரை கலந்த பால் நைவேத்தியம் செய்யப்பட்டு இரவு ஷேஜ் ஆரத்தி எடுக்கப்படும். பள்ளி அறைக்குச் செல்லும் சமயம் நித்ர விதா என்னும் பாட்டு பாடப்படும். 


ஒவ்வொரு வெள்ளி அன்று விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, நைவேத்தியம், ஆரத்தியும் செய்த பின்னர் அன்னையின் ஆபரணங்களைக் கழற்றி, கோவில் கஜானாவில் சேர்க்கிறார்கள்.


ஒரு நாளைக்கு 5முறை ஆரத்தி 4ஆரத்தி வெள்ளித் தட்டிலும், 
ஓர் ஆரத்தி தாமிரத் தட்டிலும் எடுக்கிறார்கள். 


திருவிழாக்காலம், ரதோத்ஸ்வம், அஷ்டமி ஜாகர், கிரகண புண்ய காலம், நவராத்திரி உற்சவம், கிரஹணோச்சவம் நாளிலும் விசேஷ ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன.



தீபாவளி பௌர்ணமியிலிருந்தும் கார்த்திகை பௌர்ணமி வரை திருவிழா நடத்தப்பட்டு விசேஷ ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன.

ஏப்ரல் மாதத்தில் ரத உற்சவம் கொண்டாடப்படுகிறது. 


வெள்ளி ரதத்தில் அன்னையை அலங்கரித்து வீதி உலாவாக எடுத்து வரப்படுகிறாள். 
ரதம் கோவிலை அடைந்ததும் பீரங்கி வெடிக்கச் செய்கிறார்கள்.  
மிலிட்டரி பேண்ட் வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
 ரதம் செல்லும் வழியில் பல வர்ணங்களில் ரங்கோலி போடப்பட்டு, வாணவெடியும் வெடிக்கச் செய்து மக்கள் உற்சாகத்துடன் ரத உற்சவத்தில் கலந்து கொள்கிறார்கள்.
வெள்ளி , பௌர்ணமி அன்றும் அன்னை வீதி உலா வருவதுண்டு.

அக்டோபர் மாதம் வரும் நவராத்திரி ஒன்பது நாளும் கோல்ஹாபூரில் கோலாஹலம்தான். 
தினமும் அபிஷேகம், ஆரத்தியுண்டு. 
பலவித ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. 
பலவிதப் பூக்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகாலக்ஷ்மி ஊர்வலம் வருகிறாள்.  
கருட பந்தலில் அம்மன் வைக்கப்பட்டு பலவித கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

Goddess_Mahalaxmi_Kolhapur.jpg














Thursday, March 1, 2012

கல்வி தெய்வத்தின் கவின் மிகு ஆலயம்



ஓம் தம் வாகீச்வராய வித்மஹே ஹயக் ரீவாய தீமஹி 
தந்நோ ஹஸென ப்ரசோதயாத்.

கல்வி, கேள்விகளில் ஞானம் பெற தினமும் 
பதினெட்டு முறை இந்த மந்திரத்தை சொல்லி ஆரம்பிக்கலாம்..

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினாம்
நரம் முச்யந்தி பாபானி தரித்ரமேவ யோஷித

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ வதேத்
தஸ்ய நிஸ்ஸரதே வாணீ ஜஹ்னு கன்யா பிரவாஹவத்

வாதிராஜ யதிகள், தன்னுடைய "ஹயக்ரீவ ஸம்பதா' என்னும் ஸ்தோத்திரத்தில், ஹயக்ரீவ என்னும் மந்திரச் சொல்லை மூன்று முறை உச்சரிப்பவருக்கு கங்கா பிரவாகம்போல் வாக்கு சக்தியானது ஏற்படும்' என்று கூறியுள்ளார். 
ஹயக்ரீவ !ஹயக்ரீவ !!  ஹயக்ரீவ!!!

லட்சுமி ஹயவதனப் பெருமாளை துதிப்பவர்களுக்கு, "குதிரை வேகம்' என்று சொல்லப்படும் சக்தி ஞான விஷயத்தில் ஏற்படும் ..


திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் 
ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும். 

மஹா விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்த போது  உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். 

பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.

ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறி  பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர். 

குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். 

உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. 

குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்த தாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்து "லட்சுமி ஹயக்ரீவர்' என்று ஞான அருள் மழை பொழிகிறார்...
வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். 
கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது மடியில் அமர்த்தியிருக்கிறார்.

மிகவும் பிரசித்தி பெற்ற திருவஹீந்திரபுரம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயிலுக்கும் 
நடுவில் புதுச்சேரிமுத்தியால் பேட்டை அருள்மிகு லக்ஷ்மி ஹயக்ரீவர் திருக்கோயில் அமைந்து அருள்பாலிக்கிறது...

சாளக்கிராமத்தால் ஆன பெருமாளின் திருமேனி இடது கை தாயாரையும், தாயாரின் வலது கை ஹயக்ரீவரையும் ஆலிங்கனம் செய்துள்ளது. 


பொதுவாக தாயார் மட்டுமே ஹயக்ரீவரை ஆலிங்கனம் செய்த நிலையில் சிலைகள் வடிக்கப்படும். இங்கே இருவரும் ஆலிங்கனம் செய்துள்ளதால்,  வணங்கும் தம்பதியர் ஒற்றுமையுடன் திகழ்வர் என்பது நம்பிக்கை.

பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர். 
மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.


ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனை தரிசித்ததாக கூறும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்


மூலவர் சன்னதி, கொடிமரம் உள்ளிட்ட இடங்களில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டு, சொர்ண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.  மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரமும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. 

தினமும் மாலையில் மாணவர்கள் இங்கு வந்து
"ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்ப்படிகாக்ருதிம்!
ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!
என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்கின்றனர்.


ஞானத்தின் இருப்பிடமும், ஆனந்த மயமானவரும்; படிகம் போன்ற நிர்மலமான குணம் உள்ளவரும்; எல்லாக் கலைகளுக்கும், கல்விக்கும் ஆதாரமாகத் திகழ்பவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன் என்று சொன்னபடியே தரிசிப்பவர்கள் ஜெயிப்பது நிஜம்!

[Image1]

கோயில் பிரகாரம்