Thursday, July 16, 2015

வளம் வழங்கும் வடகுரு ஸ்தலம்









சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா குருர்யுவா |
குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன ஸம்சயா:

ஆலமரத் தின்கீழ் அதிசயம் காணீர் அருங்கிழவோர் சீடராம்
ஆசான் இளைஞராம் மௌனமே ஆசான் மொழியாகும்
சீடருக்கோ முற்றிலும் தீர்ந்தது ஐயம்.



சாமத்து வேதமாகி நின்ற தோர் சுயம்பு தன்னை -
என்று பூலோக சிவலோகம் என்று போற்றப்படும் வடிவுடையம்மன் சமேத தியாகராஜர் சிவாலய ஈசனை அப்பர் புகழ்ந்து பாடியுள்ள சென்னை திருவொற்றியூரில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலயம் தனித்துவம் கொண்ட.   சிவாலயம் அருகில் வளம் தரும் வடகுருபகவான் தலமாகத் திகழ்கிறது..
\
தென் திசை கடவுள் என்று போற்றி வழிபடப் படுபவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணம் என்றால் தெற்கு என்றும் ஞானம் என்றும் அர்த்தமாகும்.

தென்திசை கடவுளான தட்சிணாமூர்த்திக்கு சாந்தமூர்த்தி என்றும்  பெயர் உண்டு.

சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் 64 வடிவங்களில் 32வது வடிவமான ; குரு, பிரகஸ்பதி, ஆசாரியார் என்றெல்லாம் போற்றப்படும் குருவின் அருள் இருந்தால் தான் தெய்வ அருள் பெற முடியும்.

. குருவும் தெய்வமும் உலகியல் வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்கள்.  தெய்வத்தை அடைய குருவே வழிகாட்டுகிறார். 
ஞானகுருவாக இருக்கும் தட்சிணாமூர்த்தியை குரு  வழிபாடு, குரு பெயர்ச்சி நாட்களில் சிறப்பு ஹோமங்கள்,  அபிஷேகத்தின் போது 21 விதமான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம்  ராசிக்காரர்களுக்கு ஏற்ற பரிகார ஹோமம் நடைபெறும். 














 சிவாயங்களில் கருவறை வெளிப்புற தென் பக்க சுவரில் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் மகன்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோர் ஞானம் பெற குருவை தேடினார்கள். அவர்களுக்கு சிவபெருமான் வடவிருட்சத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்து பதில் அளித்தார். 

கல்லால மர (ஆலமரம்) அடியில் அமர்ந்துள்ள அவர், தன்கீழ் இடது கையில் ஓலைச்சுவடி ஏந்தி, வலது கீழ் கையில் ஞானமுத்திரை காட்டியபடி உள்ளார். இதனால் தான் தட்சிணாமூர்த்தி ஞான குரு என போற்றுகிறார்கள். 

 தட்சிணாமூர்த்தியை  வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம். ஓலைச் சுவடி ஏந்தி இருப்பதால்  அறிவுச் சுரங்கமாக கருதப்படுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடான தட்சிணாமூர்த்தியை  தினமும் வழிபட்டால் வாழ்வில் மேன்மையும், அமைதியும் உண்டாகும். 

அலைபாயும் மனம், கட்டுப்பாட்டுக்குள் வரும்.  தட்சிணாமூர்த்தி வழிபாடு நம்மை ஆத்ம தியானத்துக்கு அழைத்து செல்லும்.

தமிழ்நாட்டில் . சென்னை நகருக்கு வடக்கே திருவொற்றியூர் தேரடி பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள குரு பகவான் மிகவும் விசேஷமானவர்; சிறப்பானவர். இங்கே தெற்கு நோக்கி இருக்க வேண்டிய தட்சிணாமூர்த்தி வடக்கு நோக்கி உள்ள மிகவும் அபூர்வமான கோவில் வட குரு ஸ்தலம் என்று சிறப்பிக்கப்படுகிறது...

திருவொற்றியூரை ஆதிபுரி என்றும்; பூலோக கைலாயம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.  மணலெல்லாம் திருநீறு என்று கூறினார் பட்டினத்தடிகள்.

இங்கு வேதங்கள் அதிகம் ஓதி வழிபட்டதை திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரது பதிகங்கள் கூறுகின்றன. வேத பாட சாலைகள் நிரம்பிய ஊர்.
 திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த யோகீஸ்வரர் என்ற வேதவிற்பன்னரிடம் நிறைய மாணவர்கள் வேதபாடம் கற்று வந்தனர். அப்போது அவர் வேதத்தின் வடிவமான தட்சிணாமூர்த்திக்கு 11 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைத்து வழிபாடுகள் செய்து வந்த இடத்தில்  தட்சிணாமூëர்த்திக்கு கோவில் கட்டப்பட்டது

 வைதீக முறைப்படி தினமும் 2 கால பூஜை நடந்து வருகிறது.  கொடி மரமோ, பலி பீடமோ இல்லை.  ஒரே ஒரு பிரகாரம் கொண்டது. மண்டபம் போன்ற முகப்புத்தோற்றம் உடைய கோவிலில் மூலவராக உள்ள  தனிச் சிறப்புகள் கொண்ட தட்சிணாமூர்த்திக்கு ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். 

11 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் முகத்தில் சாந்தம் நிலவும். தட்சிணாமூர்த்தி தலையில் சடாமுடி, வளர்பிறை, கைகளில் நாகம், ஓலைச்சுவடி, சின்முத்திரை, அபயஹஸ்தம் கொண்டு . வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளார். 

வட திசை செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கு உரியது. வட குருத்தலத்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் தழைக்கும் .

தட்சிணாமூர்த்தி காலடியில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோர் தான் இருப்பார்கள். 

திருவொற்றியூர் தலத்தில் மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக உள்ள அமைப்பு மிகவும் அபூர்வமானது .
இவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் தட்சிணாமூர்த்திக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்துகிறார்கள். 
 கேசரி, பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.  உற்சவரும் தட்சிணாமூர்த்தி தான்.

ஆதிசங்கரர், வேதவியாசரும் உற்சவ மூர்த்திகளாக காட்சித் தருகின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தன்று வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 
தட்சிணாமூர்த்திக்கு பூஜை நடத்தப்படும் போது தட்சிணாமூர்த்தி எதிரே முன் மண்டபத்தில் உள்ள  பாண லிங்கத்துக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

 தனிச் சன்னதியில் சிம்ம வாகனத்தில், அமர்ந்த கோலத்தில் பஞ்சமுக விநாயகரது 5 முகங்களும் ஒரே திசையை நோக்கி  சிறப்பான அமைப்பில். 6 அடி உயரத்தில் உள்ள  ஹேரம்ப விநாயகர் வணங்குபவர்களின் துயரங்களை களைந்து, எல்லை இல்லா இன்பம் தரும் சக்தி படைத்தவர். பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி
 8 திசைகளையும் பரிபாலிக்கிறார்
 கைகளில் உள்ள பாசம், தந்தம், அட்சமாலை, மாவெட்டி, கோடாரி, உலக்கை, மோதகம், கனி ஆகிய எட்டும் 8 திசைகளை பரிபாலிப்பதாக ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி நாட்களில்  சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் மற்றொரு விநாயகர் உள்ளார்.
ருத்ராபிஷேகம்  11 கலசங்கள், 11 வேத விற்பனர்கள், 11 முறை ஸ்ரீருத்ர பாராயணம் செய்து அபிஷேகம் செய்வார்கள். 

காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். வியாழக்கிழமைகள் மற்றும் குரு பெயர்ச்சி போன்ற சிறப்பு நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.

தென் திசையானது பிறவியைத் தரும் காமனுக்கும் இறப்பைத் தரும் யமனுக்கும் உரிய திசையாகும். தெற்குப்புற காற்று சுகத்தைத் தரும். எனவேதான் தெற்கிலிருந்து சுகமும் கிடைக்கிறது; மரண பயமும் உண்டாகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தியாகராஜ சுவாமி திருக்கோவிலின் நாயகராக விளங்கும் தியாகேசர் கிழக்கு நோக்கி நின்று தட்சிணாமூர்த்தியின் ஸ்வரூபத்தைக் காண்பதும்; தெற்கு நோக்கி நின்றுள்ள ஞான சக்தியான வடிவுடையம்மன் வடக்கு நோக்கி நிற்கும் குரு பகவானான
தட்சிணாமூர்த்தியைப் பார்க்குமாறு நின்றதும் வெகுசிறப்புடையதாகும். அம்பாளுக்கு ஞானோபதேசம் செய்யவே குருவானவர் வடக்கு நோக்கி நிற்பதாகத் தல புராணம் கூறுகிறது.

ஞான வடிவான அம்பாளை திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆதிசங்கரர், வள்ளல் ராமலிங்க அடிகளார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் போன்றோர் பாடி மகிழ்ந்துள்ளனர்.

அகத்தியர் தட்சிணாமூர்த்தி பஞ்சரத்னத்தையும், ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தையும், விருஷபர் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தையும் பாடியுள்ளனர்.

தினமும் ஐந்து மணிக்கு முன்பே திறக்கப்படும் குரு பகவானின் கோவில் வாசல் வியாழக் கிழமைகளில் அதிகாலை நான்கு மணிக்கே திறக்கப்பட்டு இரவு பதினோரு மணி வரைகூட திறந்து வைக்கப் படுகிறது. வியாழக்கிழமைகளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியைத் தரிசித்து குரு கடாட்சம் பெறுகிறார்கள். ஒன்பது வியாழக் கிழமைகள் அரிசிமாவில் கோலமிட்டு குருவை வணங்கினால், இல்வாழ்வு நன்றாக அமைவதாகவும்; ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6.00) இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கி புத்திரப் பேறு உண்டாவதாகவும்; 48 வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, கொண்டைக் கடலை மாலை அணிவித்தால் நல்ல வேலை கிடைக்கும் ..
வியாழக் கிழமைகளில்  குரு பகவான் தரிசனம்  , ஏக காலத்தில் பல நல்ல பலன்களை அருளும்..
திருவொற்றியூர் குரு பகவானின் அருட் கடாட்சம்.   நல்ல புத்தியும் ஞானமும் தரும் விசேஷமானது...

7 comments:

  1. இந்தக் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். இங்கு சுவாமியை விட இப்போதெல்லாம் வடிவுடை அம்மனுக்குத்தான் மவுசு!

    ReplyDelete
  2. பக்கதர்களுக்கு நல்ல பதிவு
    தொடர்கிறேன்

    ReplyDelete
  3. நல்ல தரிசனம். அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. வட குரு ஸ்தலம் பற்றிய சிறப்புகளுக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  5. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
    உடல் நலம் எப்படி இருக்கிறது? பூரண உடல் நலம் பெற்று விட்டீர்களா?

    ReplyDelete
  6. படிக்க படிக்க மனம் மகிழ்ச்சியுறுகிறது, மிக பயனுள்ள சிறப்பான விஷயங்கள்.

    ReplyDelete
  7. படங்களுடன் பகிர்வு அருமை...
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete