Tuesday, February 4, 2014

ஆன்ம நலம் பொழியும் ஸ்ரீகாயத்ரி தேவி



ஆகாயத்தில் எங்கோ வெகு தூரத்தில் இடி இடிக்கும் ஓசை நம் காதுகளை வந்தடைவதற்குக் காராணம்  அந்த ஒலிஅலைகளைக் காற்று சுமந்து வந்து நம் காதுகளில் சேர்ப்பதே ஆகும்..!

இவ்வாறு ஒலி அலைகளைச் சுமந்து செல்லும் காற்றின் தனிப்பிரிவை "ஈதர் ஒலி அலைகள்' என்று கண்டறிந்தார் கம்பியில்லாமல் ஒலியைச் செலுத்தும் ரேடியோவைக் கண்டறிந்த விஞ்ஞானி மார்க்கோனி!


இவ்வாறு காற்றில் பரவி வரும் ஒலி அலைகளிலிருந்து அற்புதமான சப்தங்களை- மந்திரங்களை அறியும் ஆற்றலை நம் நாட்டு ரிஷிகளும் முனிவர்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தனர்.

அவ்வாறு அறிந்த மந்திர ஒலிகளை அவர்கள் மிக ரகசியமாகப் பாதுகாத்து, தங்களது சிறந்த சீடர்களுக்கு மட்டுமே உபதேசித்து வந்தனர்.
மந்திர ஒலிகளின் பயனை அனைவரும் பெற வேண்டும் என்னும் எண்ணமுடைய  வியாச பகவான் ஒலி வடிவமாய் மட்டுமே இருந்த வேதத்தை வரி வடிவத்திற்கு (எழுத்திற்கு) கொண்டு வந்தவர் ..

பரவலாக இருந்த வேதத்தைத் தொகுத்து ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு பிரிவாக்கிய தனாலேயே இவர் வேதவியாசர் எனப்பட்டார்.

யாரால், எப்பொழுது சொல்லப்பட்டது என்று அறிய முடியாதது வேதம்!
எனவே கடவுளே சொன்னது என்ற நம்பிக்கை நிலைத்து விட்டது.

அதனாலேயே கவிச்சக்கரவர்த்தி கம்பனும் இறைவனாகிய பரம்பொருளை "வேதமுதற் காரணன்' என்ற பெயரால்  தனது இராம காவியத்தில் இராவணன் வாயால் இந்தச் சொல்லைக் கூற வைத்துள்ளான்.

இத்தகைய பெருமையுடைய வேதம் எண்ணற்ற மந்திரங்கள் அடங்கியது.

ஒரு சில சொற்களைப் பல்லாயிரக்கணக்கான முறை மன ஒருமைப்பாட்டு டன் சொன்னால் அதுவே மந்திரமாகிவிடும்.

அத்தகைய வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களிலெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரி மந்திரத்திற்குரிய தேவியே  ஸ்ரீகாயத்ரிதேவி!

பிரணவ வேதத்தின்படி இந்த பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தவர் ஸ்ரீவிராட் விஸ்வ பரப் பிரம்மமே! (விஸ்வம்- உலகம்). இவரது தேவியே காயத்ரி.

அவளுக்கு அகிலாண்டேசுவரி (சகல உலகங்களுக்கும் தாய்) என்ற திருநாமமும் உண்டு.

காயத்ரியே பரப்பிரம்மத்தின் சத்சித் ஆனந்த ரூபமானது.

எனவேதான் சூரிய மண்டலத்தில் சூரியனையும்; காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகியோரை ஓருருவமான காயத்ரியாகவும் மூன்று வேளையும் தியானிக்கின்றனர் இந்துக்கள்.

காயத்ரியின் உருவத்தை,

"முக்தா வித்ரும ஹேமநீல தவளவ சாயீர்முகை: த்ரீட்க்ஷணை
ருக்தா பிந்து நிபர்த்த ரத்ன மகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்
காயத்ரீம் வரதாபயாங்குச பசாம் சுப்ரம் கபாலம் கதாம்
சங்கம் சக்ரகதார விந்த்ய குளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே'

என்று வேதம் விளக்குகிறது.

முத்து, பவழம், தங்கம், கருப்பு, வெண்மை ஆகிய ஐந்து வண்ணங்களில் ஐந்து திருமுகங்களையுடையவள் காயத்ரி!

ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களுடையவள்.

சந்திரக் கலையை நவரத்தினத் திருமுடி யில் அணிந்தவள்.

தத்துவார்த்த மான 24 எழுத்து வடிவானவள்.

வரதம், அபயம், கபாலம், அங்குசம், பாசம், சங்கு, சக்கரம், 
இரு செந்தாமரை, கதாயுதம் முதலியவற்றைக் கரங்களில் ஏந்தியவள்.

ஒளி மிக்க மகர குண்டலங்களை அணிந்தவள்.

ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய 
ஐந்து சக்திகளைக் கொண்டவள் காயத்ரி.

வேத ஆகமங்களின் தாயாகி அறிவினைத் தோற்றுவித்து, 
ஞான தீபமேற்றி ஒளியை வழங்கக்கூடியது காயத்ரி மந்திரம்.

எனவேதான், "மந்திரங்களில் நான் காயத்ரியாவேன்'
என்கிறான் கீதாசார்யனாகிய கண்ணன்!

காயத்ரி மந்திரம்

"ஓம் பூர் புவஸ்வ: தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி: தியோயோந பிரசோதயாத்.'
"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

உலகில் தோன்றிய முதல் ஒலி "ஓம்' என்கிற பிரணவமே.
அந்தப் பிரணவ ஒலியுடன் தோன்றிய ஒளியே சூரியன்.

"பர்க்கன்' என்பது சூரியனைக் குறிக்கும். தமிழில் "அருக்கன்' என்பர்.

 "அருக்கன் அணி நிறமும் கண்டேன்' என்கிறார் பேயாழ்வார்.

உலகில் அணுசக்தி முதலான அனைத்து சக்திகளுக்கும்
மூல சக்தி சூரிய சக்தியே. 

சூரியனுக்கு அந்த சக்தியைத் தந்தது யார்? காயத்ரி தேவியே! எனவேதான் காயத்ரி மந்திரம் சூரியனை முன்னிலைப்படுத்திச் சொல்லப்பட்டுள்ளது.

இந்த காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதால் நற்பலன்கள் பல உண்டு.

நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

குறைந்தது 32, 64, 96, 108 முறையாவது ஜபிக்க வேண்டும். நாள்தோறும் மூன்று வேளையும் (காலை 108, நண்பகல் 32, மாலை 64) என்ற வாறும் ஜபிக்கலாம்.

இதனால் மனம் ஒருநிலைப் படும். தீய ஆசைகள் தோன்றாது.
இறை அருளையும் ஆன்மிக உணர்வுகளையும் வளர்க்கும். நினைவாற்றல் பெருகும்.

கலைமகள் அருளும் திருமகள் அருளும் ஒருசேரக் கிடைக்கும். மனம் ஒரு கோவிலாகி பெருவாழ்வு வாழலாம்; பேரின்பமடையலாம்.

தொலைபேசிக் கருவியிலுள்ள ஒலிவாங்கி  போன்ற அமைப்புடையதுதான் நமது காதுகள்.

ஆனாலும் அன்றைய முனிவர்களும் ரிஷிகளும் ஆகாயத்தில் பரவி வந்த வேத ஒலிகளைக் கிரகித்துக் கொண்டது போன்ற ஆற்றல் இன்று நமக்கு இல்லை.

அவர்கள் உடலை, உயிரை மட்டுமின்றி ஆன்மாவையும் வளர்த்து வந்தனர். நாம் ஆன்மா என்பதன் பொருளையே மறந்துகொண்டு வருகிறோம்.

ஆனால் அறிவியல் முன்னேற்றம் நம்மிடம் பெருகியுள்ளது.

அதன் பயனே இன்று சின்னஞ்சிறார் முதல் தொண்டு கிழவர்வரை கையடக்கமாய் காதோரம் வைத்துக் கேட்கும் செல்போன்.

ஆனால் அருள்வழியில் எதனையும் கேட்பதில்லை. பொருள் தேடும் வழியிலும், பொழுதுபோக்கும் வழியிலும்தான் கேட்கிறோம்.

விஞ்ஞானம் வளராத நாளில் மெய்ஞ்ஞானம் மூலம் காற்றில் பரவும் ஒலிகளின் பொருளை உணர முடிந்தது.

தற்போது அணுசக்தியும் அறிவியலாற்றலும் பெருகி இருந்தும், தன்னைத் தானே உணரும் மெய்ஞ்ஞானம் வளர அறிவியலைப் பயன்படுத்தவில்லையே.

ஆகவே மெய்ஞ்ஞானத்தால் விஞ்ஞானம் வளர்ந்தது என்று மட்டுமே மகிழலாம். விஞ்ஞானத்தால் மெய்ஞ்ஞானம் வளரும் காலம் வர வேண்டும்.

மனிதன் தேவனாகாவிட்டாலும் மனிதனாக வாழ்வாங்கு வாழ வேண்டும். அதற்கு காயத்ரி போன்ற மந்திரங்களின் பயனறிய வேண்டியது அவசியம்.

மனிதன் எப்படியாவது வாழ்ந்துவிட்டால் போதும் என்று எண்ணக்கூடாது. வாழ்வாங்கு வாழ அறிந்துகொள்ள வேண்டும்.

தொடர்புடைய பதிவு
சுபிட்சம் அருளும் காயத்ரி மந்திரம்

12 comments:

  1. தேவனாக ஆகாவிட்டாலும் மனிதனாக...
    சர்வ நிச்சயமாக!

    ReplyDelete
  2. ஒவ்வொரு தகவலின் விளக்கங்களின் மிகவும் அருமை அம்மா... சிறப்பான பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  4. அறியாதன அறிந்தேன்
    எளிமையாக அருமையாக
    விளக்கியமைக்கு மனமார்ந்த நன்றி
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தங்களின் வெற்றிகரமான 1 1 7 5 வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள். ;)))))

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான விவரங்கள்.

    ReplyDelete
  7. காயத்ரி மந்திரத்தின் அருமை பெருமைகளை வெகு அழகாக பொறுமையாக, அனைவருக்குமே புரியும்படியாக விஞ்ஞானம் + மெய் ஞானம் கலந்து ஒப்பிட்டுச் சொல்லியுள்ளது அழகோ அழகு. மிகவும் அர்த்தமுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. தினமும் மூன்று வேளையும் சந்த்யாவந்தன அர்க்யங்கள் செய்து விட்டு, ஜபம் செய்ய அமர்ந்ததும், காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் முன்பு, சந்தியாவந்தன ஜபத்தில் வரும் ஓர் அழகான மந்திரம்

    ”ஆயாது வரதாதேவி அக்ஷரம் ப்ரும்மஸம்மிதம், காயத்ரீயிம் சந்தஸாம் மாதா ............” என ஆரம்பித்து இறுதியில் ................... அபிபூரோம்

    காயத்ரீம் ஆவாஹயாமி .....
    ஸாவித்ரீம் ஆவாஹயாமி ....
    சரஸ்வதீம் ஆவாஹயாமி...

    என்று சொல்லி, இரு கைகளையும் நம் ஹிருதயத்தை நோக்கி குவித்து மூன்று தேவிகளையும் நம் மனதுக்குள் வரவேற்று, இருத்தி, நிறுத்தி, அதன் பிறகே காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது வழக்கம்.

    அந்த மூன்று தேவியர்களின் பெயர்களையும் தாங்களும் குறிப்பிட்டுள்ளீர்கள், மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  9. மெய்ஞானம் வளர நவீன விஞ்ஞானத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்ற தங்களின் கோரிக்கை நியாயமானதாக உள்ளது.

    அதற்கான ’ரிஷிமூல நதிமூல’ ஒப்பீடுகள் சிந்திக்க வைப்பதாகவும் சிறப்பாகவும் உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. தங்களின் முதல் பதிவும். 1008வது பதிவும், இந்த 1175 வது பதிவும் காயத்ரி மந்திரத்தைப்பற்றியே சொல்வதாக அமைந்துள்ளதைப்பார்க்க, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

    o o o o o

    ReplyDelete
  11. காயத்திரி தேவியைப் பற்றி அறிய முடிந்ததற்கு மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete