Monday, February 10, 2014

தித்திக்கும் தேன் மதுர வாழ்வருளும் மதுரபாஷிணி அம்மன்


வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள் விகிர்தரைச்
சிந்தையுள் இடைபெற வுரைசெய்த தமிழிவை செழுவிய
அந்தணர் புகலியுள் அழகமர் அருமறை ஞானசம்
பந்தன மொழியிவை உரைசெயு மவர்வினை பறையுமே.  

- திருஞானசம்பந்தர் இறைவன் மேல் பாடியுள்ள பதிகம் 

சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய
விளமல் திருத்தலத்தில் மார்கழி திருவாதிரையும் , சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி வழிபாடு செய்த தலங்களுள்  ஒன்று.
சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 
மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, 
தீப ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கம் தீபஜோதியாக ஜொலிக்கும் ...

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 
 153 வது தேவாரத்தலம் ஆகும்.

கிழக்கு நோக்கிய சன்னதி. கோயில்  எதிரில் உள்ள தீர்த்தம்
அக்னி தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபட்டால்
சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 
திக்குவாய் குழந்தைகள் மற்றும் வாய் பேச முடியாதவர்களும் அக்னி தீர்த்தத்தில் நீராடி ஈசன் திருவடியை வணங்கி பூஜையில் பங்கேற்றால் 
சர்வ விமோனம் பெற்று சகல சௌபாக்கியம் பெறுவர் என்பது ஐதீகம். 

கோபுரவாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம், பிராகாரம் நந்தவனமாக உள்ளது. 

பிராகாரத்தில் சனீஸ்வரர், சந்திர, சூரியர், விநாயகர், கஜலட்சுமி, உள்ளனர். 

முன்மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் உருவமும் 
மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் உருவமும் உள்ளன. 

தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை,
ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும்,
தொழில் சிறக்கவும், வழிபாடு செய்யப்படுகிறது. 

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் முன்பு மதுரபாஷினி அம்மனுக்கு அர்ச்சனை செய்து, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை  உள்ளது. 

வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் 
மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்து பலன் பெறுகின்றனர்..!
.புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,
தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  அக்னி தீர்த்தத்தில் நீராடி,
சிவனுக்கு அன்னம் சாத்தி வழிபடுகின்றனர். 

கல்வியில் சிறந்து விளங்க அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்கிறார்கள்.

மூலஸ்தானத்தில் லிங்கம், அதற்கு பின்புறம் நடராஜர், முன்புறம் சிவன் பாதம் என ஒரே சன்னதி யில் சிவனின் மூன்று வடிவங்களைத் தரிசிக்கலாம். 

திருவாரூரில் தியாகராஜரின் முகத்தையும், இங்கு சிவபாதத்தையும்
ஒரே நாளில் தரிசித்தால் பிறவாநிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல்,  
அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான 
நெற்றிக்கண் இருக்கிறது. 

பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான சவுபாக்கியங்களையும் தரும் சடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுவதால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. 

அகத்தியர் இவளை, ஸ்ரீர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, 
ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார். 
[Gal1]
குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் 
யாழினும் மென்மொழியம்மையாக அருளும் மதுரபாஷினிக்கு 
தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறை உள்ளது.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. 

வாய் பேச முடியாதவர்கள், திக்குவாய் பிரச்னை உள்ளவர்களும் மதுரபாஷினிஅம்மனை வேண்டினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை தோறும் மகா சக்தி ஸ்ரீவித்யா சக்தி பூஜை நடக்கிறது. இங்கு அம்பாள் ஸ்ரீசக்கரம் தாங்கி ஆதி அம்பிகையாகவும், மஞ்சுளா வாணியாகவும் சகல லோகத்திற்கும் சவுபாக்கியம் அருள்பவள். 

ஆதலால் வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் ஸ்ரீவித்யா பூஜை நடத்தினால் திருமணத் தடை நீங்கும். வர்த்தக வியாபாரம் செழிப்பதுடன், 
கலை, கல்வி, ஞானம் பெருகும். 

ராகுகால பூஜையில், திருமணத் தடை உள்ளவர்கள் பங்கேற்று, ஜாதகத்தை பூஜையில் வைத்து, அம்பாளை பிரசாதமாக திருவுருவம் வைத்து வழிபட்டு பூஜித்தவர்கள், தியாகராஜரை தரிசிக்க வேண்டும். இதனால் சாப விமோசனம் அடைவார்கள்.  கார்த்திகை மாதத்தில் சிறப்பு ராகுகால பூஜை  நடக்கிறது..!.

பொதுவாக சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் அன்னாபிஷேகம் செய்வர். இங்கு எல்லா அமாவாசை நாட்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. 

பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் 
அமாவாசையன்று, திருவாரூர் கமலாலய தீர்த்தத்திலுள்ள (தெப்பக்குளம்) பிதுர் கட்டத்திலும், விளமரில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். 

பின், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து,
மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவதனால் முன்னோர்கள்
மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசிர்வதிப்பர். 

புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசையன்று
இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பு. 

விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். 

ஸ்தல  விநாயகராக சித்தி விநாயகர் காட்சி தருகிறார். 

வலது கையில் சூலமும், இடது கையில் கிளியும் தாங்கி சிம்ம வாகனத்தில் சிறப்புடன் ராஜதுர்க்கை எட்டு கைகளுடன் வீற்றிருக்கிறாள். 
[Gal1]
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராஜதுர்க்கையை வழிபாடு செய்தால் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

சிவனின் பாத தரிசனம் காட்டிய தலமாதலால் 
இங்கு நவகிரகங்கள் கிடையாது. 

விளமர் தலத்தில் நந்தி, சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய வடகிழக்கு திசையை நோக்கி தலை திருப்பி இருப்பதை இன்றும் காணலாம். 

பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது. விநாயகரின் கையில் மத்தக மணியுடன் அருள்பாலிக்கிறார். 

விஷ்ணுவின் தலையில் சிவனின் திருவடி இருப்பதும், எம சண்டிகேஸ்வரர் வித்தியாசமாக அமர்ந்திருப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும். 

இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றினால்
 முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 

இரண்டு பக்கமும் ஐராவதம் நிற்க, மகாலட்சுமி 
வித்தியாசமான கோலத்தில் அமர்ந்திருக்கிறாள்.
[Gal1]
 ஈசனின் நடனக்கோலம் காண தவமிருந்த பதஞ்சலி முனிவரது தவத்திற்கு மகிழ்ந்த ஈசன் தில்லையில் தனது திருநடனத்தை காண்பித்த  நடனத்தை வியாக்ர பாதரும் கண்டு மகிழ்ந்தார். 
[Gal1]
 இரு முனிவர்களும் சிவனிடம், ஆனந்த நடனத்துடன்  அஜபா நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண விரும்பியதோடு பக்தர்களுக்கும்  திருவடி தரிசனத்தை காண்பித்து அருள வேண்டும்,என வேண்டினர். 

ஈசன், இருவரும் ஸ்ரீபுரம் என்று அழைக்கப்படும் திருவாரூர் சென்று தனது நடனத்தையும், திருவடி தரிசனத்தையும் காண்பீர்கள் என்றார்.

அதன்படி இருவரும் திருவாரூர் வந்தனர். அங்கே எங்கு பார்த்தாலும் சிவலிங்கமே காட்சியளித்தது. 

எனவே பதஞ்சலி தன் உடலை பாம்பாகவும், வியாக்ரபாதர் தன் காலை புலிக்காலாகவும் மாற்றி திருவாரூர் கமலாம்பாளை வணங்கினர்.

அவள் கூறியபடி விளமல் என்ற இடத்தில் விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணில் பதஞ்சலி முனிவர் லிங்கம் பிடித்து வழிபட்டார். 
[Gal1]
இந்த வழிபாட்டின் பலனாக சிவன் தோன்றி,
அஜபாவன நர்த்தனம் ஆடி தன் பாதத்தை காட்டி அருளினார். 

இந்த சிவன் பதஞ்சலி மனோகரர் என்று அழைக்கப்பட்டார். 

சிவபெருமான் நடனமாடிய போது காட்டிய திருவடி ருத்ரபாதம் எனப்பட்டது. 

அவர் நடனமாடிய இடம் விளமல் எனப்பட்டது. 
இதற்கு திருவடிஎனப்பொருள். 

இந்த தரிசனத்தை விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி
மற்றும் தேவாதி தேவர்கள் கண்டு களித்தனர். 

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும், தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம் திருவடி க்ஷேத்திரம், திருவிளமல், சிவபாத ஸ்தலம் என போற்றப்படுகிறது.

பைரவருக்கு தனி சந்நிதி இருப்பது சிறப்பம்சமாகும். பைரவரை தேய்பிறை, அஷ்டமி நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். பைரவர் இத்தலத்தில் நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபாலகராக இருப்பதால் இங்கு நவகிரக சன்னதி கிடையாது. 

திருவாரூர் - தஞ்சாவூர் சாலையில் திருவாரூரில் இருந்து 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. 

விளமல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது.

15 comments:

  1. மதுரபாஷினி அம்மன் அருமை அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அருமையான படங்களுடன் சிறப்பான கோயிலின் தகவல்களுக்கு நன்றி அம்மா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. மேடம் ராஜராஜேஸ்வரி அவர்கள் அன்னை
    மதுர பாஷிணி பற்றி விளக்க
    வலைச் சாரத்திலே
    மஞ்சு பாஷிணி பிரசன்னம்.

    மதுரம் இனிமையான
    மஞ்சு இதமான மிருதவான

    அன்னை என்பவள் அவள் தானே.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  4. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியையாக மஞ்சுபாஷினி பொறுப்பேற்ற முதல்நாள் தங்கள் பதிவில் மதுரபாஷிணி! நான் சொல்ல நினைத்ததை சூரி தாத்தா முந்திக் கொண்டு சொல்லி விட்டார்.

    ReplyDelete
  5. மஞ்சுபாஷினி அம்மன் பற்றிய விவரங்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  6. அருமையான புகைப்படங்களுடன், அழகான விளக்கங்களுடன்
    அற்புதமான ஆன்மீக உலா.....
    சிறப்பான சேவை...

    ReplyDelete
  7. மதுரபாஷிணி அம்மன் பற்றிய தகவல்களும் மதுரமாகவே தந்துள்ளீர்கள். அதுவும் தித்திக்கும் தேன் மதுரமாக !

    என்னவொரு அழகான அஸால்ட்டான தலைப்புத்தேர்வுகள் ! அச்சா, பஹூத் அச்சா. ;)))))

    இன்றைய வலைச்சர ஆசிரியர் மஞ்சுபாஷிணியின் நினைவுகள் தான் எனக்கும் உடனே தோன்றியது.

    >>>>>

    ReplyDelete
  8. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    அதுவும் அந்த நடராஜர் ஆட்டம் அற்புதம்.

    நிஜமாகவே ஆட்டம் போடுவது போல உள்ளது.

    கடைசியில் காட்டியுள்ள படமும் கலக்கல்.

    முதல் படத்தில் சிவனின் பாதத்தைத் தாங்கிப்பிடிக்கும் நந்தியார், ஸ்ரீராம பக்தரான அனுமனை நினைவுபடுத்துகிறார்.

    >>>>>

    ReplyDelete
  9. விளமல் = திருவடி. நல்லதோர் விளக்கம்.

    இந்த ஊரின் அமைப்பிடம், மஹிமை, கிடைக்கும் பலன்கள், அங்கு எப்படிச்செல்வது போன்ற விபரங்கள் கொடுத்துள்ளது சிறப்பு.

    விளாம்பழப்பச்சடி போன்ற ருசியான ’விளமல் பற்றிய’ பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    oOo

    ReplyDelete
  10. தித்திக்கும் சிறப்பான தெய்வீக தகவல்கள். நன்றி அம்மா.

    ReplyDelete
  11. மதுரபாஷிணி அம்மன் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  12. அம்மன் அருமை அறிந்து மகிழ்ந்தோம்…

    ReplyDelete
  13. மதுரபாஷிணி அம்மன் பற்றிய தகவல்கள் புதிது. தெரிந்துகொண்டேன். நன்றி அம்மா.

    ReplyDelete
  14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
    அன்பின் பூ - இரண்டாம் நாள்

    ReplyDelete
  15. அருமையான கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete