
உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே.
. 

துறவிகளுக்கான விரதமாக சாதுர்மாஸ்ய விரதம் விளங்குகிறது.
சதுர் என்றால் நான்கு. இதுவே சாதுர் ஆனது.
சாதுர்மாஸ்ய விரதம் என்பது மகான்கள், துறவிகள் மழைக்காலமாக விளங்கும் ஆடிமாதம், முதல் நான்கு மாதங்கள்வெளியில் செல்லாமல் ஓரிடத்தில் நான்கு மாதங்கள் தங்கி வேதங்களை ஆய்வு செய்வதாகும்
விருப்பமிருந்தால் இல்லறத்தாரும் சதுர்மாத விரதத்தை மேற்கொள்ளலாம்.
.நமக்காக நாம் இருக்கும் விரதத்தால் ஏதோ ஒரு பலன்
கிடைக்குமென நம்புகிறோம்.
முற்றும் துறந்த.....துறவிகள் தங்களுக்காக
இந்த விரதத்தை அனுஷ்டிப்பதில்லை.
மனித சமுதாயம் மட்டுமல்ல...பிற உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற பொதுநல நோக்கத்துடனேயே இந்த விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள்.
பொதுவாக இந்த விரதம் ஆடி பவுர்ணமியில் துவங்கி,
ஐப்பசியில் முடிப்பார்கள்.

ஆடிப் பௌர்ணமியன்று சதுர்மாத விரதம் தொடங்கும்
நாளில் ஆச்சார்யர்களை வழிபட வேண்டும்.
ஆடி மாதப் பௌர்ணமியை "ஆஷாட சுத்த பௌர்ணமி' என்பர். இந்நாளில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தினை மேற்கொள்வார்கள்.
அன்று துறவிகள் வியாச பூஜை செய்வார்கள்.. வியாச பவுர்ணமி என்றும், குரு பவுர்ணமி என்றும் சிறப்பிக்கப்படுகிறது..

குரு பூர்ணிமா என்று சொல்லப்படும் வியாச பௌர்ணமி நாளில்
(ஆடிப் பௌர்ணமி) குருவுடன் இருந்தால், தாங்கள் பெற்ற ஞானச்செல்வம் மேன்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வு ஒளிமயமாகத் திகழும் என்பது யோகரகசியம்.

எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு.

தனது அக வாழ்விற்கு வழிகாட்டித் தன்னையுணர வழிசெய்த அந்த தியாகத்தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தக்கூடியத் திருநாளே குருபூர்ணிமா.
மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள்,
இதில் மாதா என்றால் இடகலை என்னும் இடது சுவாசம்,
பிதா என்பது பிங்கலை என்னும் வலது சுவாசம்.
குரு என்பது சுழுமுனை சுவாசம்
இந்த சுழுமுனை சுவாசத்தின் மூலமாகவே மனமற்ற தெய்வ நிலையை உணர முடியும் என்பதே சித்தர்கள் கண்ட சிவராஜ யோகத்தத்துவம்.
சுழுமுனை என்னும் சூட்சும சுவாசம் அதிகமாக நடைபெறும்
ஒரு அற்புத நாளே குருபூர்ணிமா.
இந்தச் சூழ்நிலையைச் சாதகமாக்கிகொண்டு குருவின் துணையோடு யோகசாதனையைத் தொடங்கும் அற்புத நாளே குரு பூர்ணிமா.
யோகப்பண்பாட்டில் இந்தத் திருநாள் ஆனந்தமான ஒரு நாளாகக்
கொண்டாடப் படுகிறது
முழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குரு(ஆத்ம) தன்மையை
உணர ஒவ்வோரு உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா
குரு பௌர்ணமி என்பது சாதாரண உயிர் கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக் கூடியத் திருநாள்.
குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும், குரு பூர்ணிமா தனி மனிதன் தனதுகுருவின் வழிகாட்டுதலுடன் தன்னை உணரும் சாதனையைத் துவங்கும் தொடக்க நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைவது உறுதி என வேதம் கட்டியம் கூறுகிறது .
இந்தக் காலங்களில் மழை அதிகமாகப் பெய்யும். பூச்சிகள் அதிகமாக வெளியே நடமாடும். அந்த பூச்சிகள் தங்கள் காலில் மிதிபட்டு விடக்கூடாதே என்ற உயர்ந்த எண்ணம் ஒரு காரணம்.
இதன்மூலம், துறவிகள் மக்களுக்கு ஜீவகாருண்யத்தைப் போதித்தார்கள்.
கடவுளின் படைப்பில் மனிதன் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுமே சுதந்திரமாக வாழ வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள்.
தங்களைப் பார்த்து எல்லா மக்களும் இந்த புண்ணியச்செயலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மறைமுகமாக அறிவுறுத்துகிறார்கள்.
அது மட்டுமல்ல! இந்தக் காலத்தில் உணவுக்கட்டுப்பாட்டையும் அவர்கள் அனுசரிக்க சொன்னார்கள்.
குறிப்பிட்ட இந்தக்காலத்தில் மழை காரணமாக, சூரியனை பல நாட்கள் பார்க்காமல் போய்விடும் சூழ்நிலை உண்டு.
சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே! என்று அவர்கள் போதித்தார்கள்.
குளிரோ, மழையோ, வெயிலோ...துறவிகள் . எல்லா சீதோஷ்ணமும் அவர்களுக்கு ஒன்று தான். அவர்கள் வழக்கம் போல், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 முதல்) தங்கள் அன்றாடப் பணியைத் துவங்கி விடுவார்கள்.
அது மட்டுமல்ல! சூரியன் அன்று உதித்தால் தான் சாப்பிடவே செய்வார்கள்.
ஒருவேளை, நாள் முழுக்க மழை பெய்து சூரியன் கண்ணில் படவில்லை என்றால், சாப்பிடவே மாட்டார்கள்.
துறவிகளின் இந்தச் செயலைப் பார்த்து, மகாத்மா காந்தியின் அன்னை கஸ்தூரிபாய் அம்மையார், சூரியனை தரிசித்தால் மட்டுமே சாப்பிடும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.
தாய் பட்டினி கிடப்பதை பொறுக்க முடியாத காந்திஜி, வீட்டு வாசலில் வந்து நின்று, சூரியன் வானில் தெரிந்ததும், அம்மாவை அழைப்பார். சூரியன் தன் கண்ணில் பட்டால் தான், அவர் சாப்பிடுவார்.
துறவிகள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கும் காலத்தில், மக்கள் அவர்களைச் சந்தித்து ஆசி பெற வேண்டும்.
இடிந்த கோயில்களைப் புதுப்பிக்கவும், மடங்களுக்கும், வேதம் கற்கும் மாணவர்களுக்கும் நிதியுதவி செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் திருவருளுடன் குருவருளும், சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழ்வார்கள்.
இந்த மாதங்களில் துறவிகள் உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும் பழங்களும் இருக்கும்.
இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள்.
மூன்றாம் மாதம் தயிர் சாப்பிட மாட்டார்கள்

இம்மாதம் முழுவதும் உளுந்து மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட உணவுப் பதார்த்தங்களை விரதமிருப்போர் சாப்பிடக் கூடாது.

இவையெல்லாம் அந்தக் காலத்தில் மேற்கொண்டதாக வரலாறு சொல்கிறது. இந்தக் காலத்திலும் ஒருசில துறவிகள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த சாதுர்மாஸ்ய விரதமென்பது, ருது சரியையைக் கருத்தில் கொண்டு திரிதோசத்தைச் சமப்படுத்தும் ஒரு மருத்துவ வழிமுறையே.
