




ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் திருக்கோலம்..
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்வித்திருக்காப்பு
அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

ஸ்ரீமந்நாராயணன் வடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள திவ்யதேசம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம் பன்னிரு ஆழ்வார்களில் விஷ்ணுசித்தர் ஆகிய பெரியாழ்வாரும் அவர் தம் திருமகளாய் தோன்றிய ஸ்ரீஆண்டாளும் அவதரித்த பெருமை உடையது.

பெரிய திருவடியான கருடாழ்வாரின் அம்சமாய் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த பெரியாழ்வார் சிறுவயது முதற்கொண்டே பரமனிடம் ஆழ்ந்த பக்தி உடையவராய், அழகிய நந்தவனம் அமைத்து ஸ்ரீவில்லிபுத்தூ உறையும் வட பெருங்கோயிலுடையானுக்கு மாலை கைங்கர்யம் செய்து வந்தார்.



ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் சன்னதி, ஸ்ரீபெரியாழ்வார் திரு ஆனி ஸ்வாதி உற்சவத்தில் ஆளேறும் பல்லக்கில் ஸ்ரீஆண்டாள் திருக்கோலத்தில் பெரியபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சி..!.

ஸ்ரீமந்நாராயணனின் நியமனப்படி மதுரையம்பதிக்குச் சென்று, வல்லபதேவ பாண்டிய மன்னனின் அவையில் குழுமியிருந்த அனைத்து வித்வான்களும் இசைந்து ஏற்றுக் கொள்ளும்படி, நாராயணனே பரம்பொருள் என்று பரதத்வ நிர்ணயம் செய்தார்.

மன்னனும் அவரை கௌரவிக்க எண்ணி, தம் பட்டத்து யானை மேல் ஆழ்வாரை ஏற்றி, மற்ற வித்வான்கள் புடைசூழ நகர்வலமாக அழைத்து வர, ஸ்ரீமந்நாராயணனும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திவ்யாயுதங்களை தரித்தவராய் கருடாரூடராய் வானிலே எழுந்தருளி ஆழ்வாருக்குக் காட்சி கொடுத்தார்.



இதைக் கண்ட பெரியாழ்வார், அன்பின் மிகுதியால் ஸ்ரீமந்நாராயணனின் எழிலுக்கு கண்ணேறு பட்டு விடுமோ என அஞ்சி, அவருடைய
திவ்ய மங்கள ரூபம் நிலை பெற்றிருக்கும் வகையில் பட்டத்து யானை மீது இட்டிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டு பாடியருளினார்.
திவ்ய மங்கள ரூபம் நிலை பெற்றிருக்கும் வகையில் பட்டத்து யானை மீது இட்டிருந்த மணிகளையே தாளமாகக் கொண்டு திருப்பல்லாண்டு பாடியருளினார்.

பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளி, பாண்டியன் அரசவையில் பரிசாகப் பெற்ற பொற்கிழியைக் கொண்டு, வடபெருங் கோவிலுடையானுக்கு அரிய பல திருப்பணிகள் செய்து, உயர்ந்த கோபுரத்தையும் அமைத்தார்.

ஸ்ரீமத் பாகவத ஸாரமான பெரியாழ்வார் திருமொழியையும்
அருளிச் செய்தார்.



ஸ்ரீபெரியாழ்வார் திருநட்சத்திரத்தில் ஆனி மஹோத்ஸவம்
11 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் காலை
தங்க தோளுக்கினியானில் புறப்பாடு நடைபெறும்.
இரவு பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு மண்டபங்களில்
உற்சவர் புறப்பாடு நடைபெறும்..

நாடகசாலைத் தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆளேறும் பல்லக்கில் ஸ்ரீஆண்டாள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு ஸ்ரீபெரியாழ்வார் அருள்பாலிப்பார்.






