

குமரக் கடவுளைத் தமிழ்க் கடவுள் என்று சொந்தமும், பந்தமும் கொண்டாடுவோர்க்குக் குறைச்சலில்லை.
கந்தன் திருறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்
வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெவமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.--
என்பவை தமிழ்க்கடவுளைப் பற்றி பாமரர் வாயிலும் பயின்று வரும் அழகிய இனிய பழமொழிகள்

பச்சை மயில் வாகனனே
பழனி மலை பாலகனே
கச்சை யிலே உன் பெயரை
கச்சி தமாய் கட்டிக் கொண்டோம்
பச்சைமயில் மீதேறி இக்கணமே வந்திடுவாய

திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து, குமரன் அருளைப் பாடி வரும்!
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து, பேரும் புகழும் சேர்த்து விடும்!

மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா
இளம்பச்சைக்கும் இச்சைக்கும் நடுப்பொருளே
உன் ஏறுமயில் நடனம் கண்டலாச்சே
புனிதமான அறுபடை வீடுடையாய்
புகுமதக் களிறு நடையுடையாய்
அன்னயினும் சிறந்ததான அருளோடு
நிறைந்ததான அறுமுகவடிவே ...வருவாய்..
அருள்வாய்.. குரு குஹ பரம்பொருளே!
.

முத்துக் குமரன், பக்திச் சரவணன், வைத்திய நாதனை மறவேன்!
முடியுடை மன்னன், திருமுடி அருகே, கொடியுடைச் சேவலைக் கண்டேன்!
கொத்தும் நாகம் பொல்லாதாக கத்தும் தோகையைக் கண்டேன்!
கோலம் மாறிட, ஞானக் கண்களும், ஊனக் கண்களும் கொண்டேன்!




மனைவி மக்கள் சுற்றமுடன் கந்தா மலையேறித் தொண்டனிட்டேன்
வினைகள் தமைப் போக்கிக் கந்தா வேண்டும் வரம் தாருமையா
அன்பன் படும் துயரை கந்தா அலட்சியமாய் நீ நினைத்தால்
முன்னே யுனைப் புகழ்ந்த கந்தா முதுமொழியும் செய்யாமே
வண்ண மயிலேறி கந்தா வாடுமெங்கள் துன்பமற
கண்ணன் மருகோனே கந்தா கடுகிவந்து காருமையா

திருச்செந்தூரில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப் பெருமானின் திருக்கோவிலில் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தில் நான்கு வேதங்களும் பன்னீர் மரங்களாக மாறிச் செந்தில் முருகனை வழிபடுவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. அதற்கேற்றாற் போலப் பன்னீர் மரங்கள் மிகுந்த அளவில் இங்குண்டு.
விஸ்வாமித்திரரைப் பிடித்திருந்த குன்ம நோய் இந்த பன்னீர் இலை விபூதியால் குணமானதாக நம்பப்படுகிறது.

முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.
வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.


ஓம் றீம் ஐயும் கிலியும் ஒளவும் சௌவும் சரவண பவ!

மயில் வாகனத்தில் கல்யாணக் கோலத்தில் சிவ சுப்பிரமணீய சுவாமி

சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண பவன்.
கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.
விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்னி ஏந்தியதால் அக்னி பூ.
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.
ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.
தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்-அதனால் முருகன்


பச்சைக் கடைசல் சப்பரத்தில், உற்சவர் சண்முகரை அமர்த்திப் பச்சைப்பட்டாடை அணிவித்து, பச்சை நிற மரிக்கொழுந்து பூ மற்றும் இலைகளால் கட்டப்பட்ட மாலைகள் சூட்டி பச்சை சாத்தி வரும் போது சுவாமிக்கு பக்தர்களால் செய்யப்படும் பன்னீர் அபிஷேகத்தால், தேரோடும் வீதிகள் சேறாகின்றன. பச்சை செழுமையைக் குறிக்கும். தன்னைத் தரிசித்தவர்கள் வீட்டிலும், தரிசிக்க வராவிட்டாலும் வீட்டில் இருந்தே நினைத்தவர்கள் வீட்டிலும் செல்வச்செழிப்பு ஏற்படுவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.








