Tuesday, December 30, 2014

வைகுண்ட ஏகாதசி திருவிழா









ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரம் :

 காவிரி நதியின் நடுவில் ஏழுமதில்களால் சூழப்பட்டு, நடுவில் தாமரை மொட்டுப் போன்று விளங்கும் விமானத்தின் கீழ், மிகவும் மென்மையான ஆதிசேஷனின் உடலாகிய கட்டிலில் யோகநித்திரையில் துயில்பவரும், இடது கையை இடுப்பில் வைத்திருப்பவரும், ஸ்ரீதேவியும், பூதேவியும் தாங்கிநிற்கும் திருப்பாதங்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை வணங்குகிறேன்.

கஸ்தூரி திலகம் இட்டவரும், காது வரை நீண்டிருக்கும் திருக்கண்களைக் கொண்டவரும், முத்துக்களால் இழைக்கப் பட்ட கிரீடத்தைச் சூடியவரும், தன்னைத் தரிசிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்பவரும், தாமரை மலர் போன்ற திருமுகத்தைக் கொண்டவருமான ரங்கநாதரே! உம்மை மறுபடியும் எப்போது பார்ப்பேன்?

 காவிரிக்கரையின் அருகில் வீற்றிருப்பவரும், இந்திர நீலமணியை போன்ற பிரகாசமுடையவரும், மது என்னும் அரக்கனைக் கொன்றவருமான ரங்கநாத மூர்த்தியே! உம்மை ஹே நாராயணா! ஹே முராரே! ஹே கோவிந்தா! என்று திருநாமங்களை சொல்லி மகிழும் பாக்கியம் என் வாழ்நாளில் எப்போது கிடைக்கும்?
எப்போது காவிரியில் ஸ்நானம் செய்து என் பாவங்களைப் போக்குவேன்? அடர்ந்த மரங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், பசுமையானதுமான காவிரிக்கரையில் எப்போது நான் வாசம் செய்வேன்? ஆதிசேஷன் மீது துயில்பவரும், செந்தாமரைப்பூ போன்ற கண்களைக் கொண்டவருமான ஸ்ரீரங்கநாதரை எப்போது சேவிப்பேன்?

ஸ்ரீரங்கத்தையும், காஞ்சிபுரத்தையும், திருப்பதியையும், அஹோபிலத்தையும், சிம்மாசலத்தையும்(சோளிங்கர்), கூர்மத்தையும் (ஆந்திரா), புரு‌ஷோத்தமத்தையும், பத்ரிகாசிரமத்தையும், நைமிசாரண்யத்தையும், அழகு பொருந்திய துவாரகா பட்டினத்தையும், பிரயாகையையும், மதுராபுரியையும், அயோத்தியையும், கயாக்ஷத்திரத்தையும், புஷ்கரத்தையும், சாளக்கிராமத்தையும் நேரில் கண்டு உம் திருப்பாதங்களை சேவிக்கும் பாக்கியத்தை அருள் செய்வீராக.

“பசியாக இருக்கிறது. அதனால் உடம்பு நடுங்குகிறது’ என்று கூறினால் கருணை கொண்ட தாய், எப்படி குழந்தையை நோக்கி ஓடிவருவாளோ, அதுபோல பக்தர்களின் துன்பத்தைப் போக்க ஓடிவந்து அருள்செய்யும் ரங்கநாதரே! உம்மைப் பணிந்து வணங்குகிறேன்.
 - ஏகாதசியன்று இரவில் விழித்திருக்கும் போது, 
 ஸ்ரீ ரங்கநாதர் ஸ்தோத்திரத்தை 1008 முறை சொல்பவர்களுக்கு,  செல்வவளம் அமையும்.

.
பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனாகிய திருமாலே, ஏகாதசி விரதத்தினை மேற்கொள்கிறார் என்பார்கள்.

எனவே, இதன் மகிமையை அளவிட கருவியே இல்லை.

அனைத்தையும் கடந்தவர் கடவுள். நமக்குத் தான் விரதம், ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம். கடவுளுக்கு ஏது என நமக்குத் தோன்றலாம். சத்தியத்தைக் காக்க மகாவிஷ்ணுவே திரேதாயுகத்தில் ராமனாகப் பிறந்தார். சாதாரண மனிதனைப் போல பலவிதமான துன்பங்களை அனுபவித்து, தர்மத்தை மீறாமல் வாழ்ந்து காட்டினார்.

அப்பரம்பொருளே துவாபரயுகத்தில் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநிறுத்தி உதாரண புருஷராகத் திகழ்ந்தார்.

அதேபோல, பரம்பொருளான விஷ்ணுவே, ஏகாதசியின் சிறப்பினை உணர்த்தும் வகையில், அவரே விரதம் இருந்து அருள் செய்கிறார்.


.வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறது.

 ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க "பரம்பத வாசல்", சொர்க்க வாசல்"  வழியே உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்

திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் கொண்டாடப்படும் சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும்
 ..

12 comments:

  1. மனதிற்கு நிறைவான தலப்பயணம் அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. வைகுண்ட ஏகாதசி திருவிழா அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. அருமையான படங்கள் ...

    ReplyDelete
  4. தாய் சேயின் அழைப்பை கேட்டு ஓடி வருவது போல் இறைவன் நமக்கு இறங்கி வருவார் என்று சொல்லும் விள்ளம் அருமை.
    ரங்கநாதர் அனைவருக்கும் நல்ல பலன்களை தரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  5. நகரிழைத்து,
    நித்திலத்து
    நாண்மலர் கொண்டு,
    ஆங்கே…
    திகழும் அணிவயிரம் சேர்த்து, -
    நிகரில்லாப் பைங்கமல மேந்திப்
    பணிந்தேன் !
    பனிமலராள்,
    அங்கம்வலம் கொண்டான்
    அடி.!!

    சிறந்த பதிவு !
    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  6. படங்களுடன் பகிர்வு அருமை அம்மா...

    ReplyDelete
  7. தகவல்களும் படங்களும் அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமை அருமை!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும் நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  9. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு. தகவல்கள். நன்றி.

    ReplyDelete