Monday, May 9, 2011

திருப்பதி




எந்தக் கோவிலுக்குச் செல்லத்திட்டமிட்டாலும் அந்தக் கோவிலகளைப் பற்றிய முழுவிவரங்களையும் படித்துவிட்டுச் செல்வதே என் வழக்கம். செல்லும் கோவில்களிலும் ஸ்தலபுராணங்கள் வாங்கிப்படித்தும், அர்ச்சக சுவாமிகள், அங்கு பணிபுரிபவர்களிடமும் தகவல்கள் கேட்பேன். 


அருகில் இருக்கும் அம்மன் கோவிலில் குழுமி வெள்ளிகிழமைகளில் மாலை விஷ்ணு, லலிதா சகஸ்ர நாமங்களும் மகாலஷ்மி அஷ்டகமும் வாசிப்போம். அனுமன் கோவிலில் தினசரி மாலை வேளைகளில் இரு சகஸ்ரநாமங்களுடன் அனுமன் சாலீஸாவும் வாசிப்பதுண்டு. புரட்டாசி மாத சனிக்கிழ்மையில் காரமடை, தென்திருப்பதி, மொண்டிபாளையம் வெங்கடாசலபதிகோவில், அன்னூர், இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில் என்று ஐந்து கோவில்களுக்கு குழுவாகச் சென்று இரு சகஸ்ர நாமங்களும், வாசித்து வந்ததும் உண்டு. 


சமீபத்தில் விஷ்ணு சகஸ்ரநாம குழுவுடன் இணைந்து நாற்பதுபேர் திருப்பதி சென்றிருந்தோம். அகில இந்திய அளவில் நிறைய குழுக்கள்  ஒன்றிணைந்து அந்தந்த குழுக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, மேடையில் திருவேங்கடமுடையான் திருதம்பதிகளின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவங்களின் முன்னே அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் வாசித்தது இனிய நிகழ்வு. அத்தனை பெரிய ஆஸ்தான மண்டபத்தில் அனைவரும் ஒரே குரலில் சஸ்ரநாமம் சொன்னது பிரமிப்பு த்ந்தது. எங்கள் முறை நிறைந்து அருகிலிருந்த அறைக்குத் திரும்பிய பின்னரும் பக்திப்பரவசமாய் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.



அதிகாலை எழுந்து குளித்து மூலவரைத் தரிசிக்க வரிசையில் நின்றோம். அப்போது என்க்குப் பின் நின்றிருந்த தம்பதிகளைப் பார்க்க நேர்ந்தது. அவர் நெற்றியில் பளிச்சென திருநாமம் துலங்க பஞ்சகச்ச உடையுடன் லேப்டாப் தோளில் தொங்க், அருகில் மடிசார் புடவை அரக்குக் கலரில் பாந்தமாக அணிந்து அலர்மேல் மங்கையாய் உதட்டில் தவழும் புன்சிரிப்புடன், மூக்கிலும் காதிலும் வைரமாய் ஆபரணங்கள் ஜொலிக்க என்னைப் பார்த்து நட்பாய் சிரித்தவாறே விஷ்ணு சகஸ்ர நாமத்தை இனிய குரலில் ஆரம்பித்தார்கள். நானும் வரிசையில் நின்ற நேரம் முழுவதும் அவர்களுடன் சேர்ந்து கூறிக்கொண்டே இருந்தேன்.
பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

 கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலபதி ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு "குலசேகர படி" என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது, "செடியாய வல்வினைகள் தீர்க்கும் 
திருமாலே! நெடியானே! வேங்கடவா! 
நின் கோயில் வாசல்
அடியாரும் வானவரும் 
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் 
பவளவாய் காண்பேனே!''
என்ற பாடல் நம் நினைவில் நிழலாடும்.


அனந்தாழ்வான் கடப்பாறை என்ற குறிப்போடு திருமலை கோயிலின் கோபுரத்தில் மாட்டி வைத்துள்ள கடப்பாறையை தரிசிக முடிந்தது. அனந்தாழ்வான், பகவத் ராமனுஜரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமலை சென்று புஷ்ப கைங்கர்யம் செய்ய புறப்பட்டார். அவரே மண்வெட்டியும் கடப்பாரையும் கொண்டு ஏரியும் மலர்கள் தோட்டமும் நிர்மாணிக்க விழைந்தார். உதவிக்கு அவருடைய கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை அமைத்துக்கொண்டார். ஒரு நாள், திருமலை வேங்கடவேனே ஒரு சிறுவன் வடிவு எடுத்துக்கொண்டு ஆனந்தாழ்வானிடம் உதவி செய்ய முன்வந்தார். 


அனந்தாழ்வான் மறுக்க, அந்த சிறுவன் அனந்தாழ்வானின் துணைவியாருக்கு உதவினார். ஆழ்வான் கையிலிருந்த கடப்பாறையை அந்த சிறுவனின் மேல் எறிந்தார். அது, அந்த சிறுவனின் முகவாயில் பட்டு,ரத்தம் கொட்டிற்று. அங்கே, திருமலையாநின் முகவாயில் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது. அதை மறைக்கத்தான், இன்றும், திருமலை பெருமாளின் முகவாயில் பச்சை கற்பூரம் வைத்து இருப்பார்கள். திருமலை பெருமாளையே காயப்படுத்திய அந்த கடப்பாறையை இன்றும் திருமலை கோயிலின் கோபுரத்தில் மாட்டி வைத்துள்ளார்கள்.

ராமானுஜர் திருமலைக்கு வந்தபோது, பல நந்தவனங்களை அமைத்தார். பெருமாளுக்கு தினமும் புத்தம்புதிய மலர்கள் கிடைக்க வேண்டுமென்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார். பல முக்கிய வழிபாடுகளை ஏற்படுத்தியவரும் இவரே. 13ம் நூற்றாண் டில் இவரது சன்னதி அமைக்கப் பட்டது. இவரது சன்னதியின் நுழைவுப்பகுதியில் பாண்டியர்களின் சின்னமான மீன்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சகஸ்ரநாம அர்ச்சனை: கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. 
சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.
 மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம்' என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். 

சிலா தோரணம்: திருமலையில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் மலைப்பாதையில் சிலாதோரணம் என்ற அறிவியல் ஆர்ச் உள்ளது. இது ஒரு பாறைப்படிமம். மிகமிக அரிதாக அமைந்துள்ள இப்பாறைப்படிமம் இயற்கையாக அமைந்த ஒன்றாகும். ஆசியாவில் இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை. இரண்டாயிரத்து 500மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தோரணத்தின் நீளம் 25 அடி. உயரம் 10அடி. இவ்விடத்தில் இருந்த புற்றில் இருந்தே வெங்கடேசப் பெருமாள் சீனிவாசனாக வெளிப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்த படிமத்தில் சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், கருடாழ்வார், ஐராவதம் ஆகிய உருவங்கள் இயற்கையாக அமைந்துள்ளன. இவ்விடத்திற்கு ஜீப்கள் சென்று வருகின்றன.

மலையின் சிகரத்தில் திருமால் பாதம் பதித்து நின்ற இடம் நாராயணகிரி என்று அழைக்கப்படுகிறது.இப்பாதங்களை "ஸ்ரீவாரி பாதம்' என்று அழைக்கின்றனர். ஒரு அழகான மண்டபத்தின் நடுவில் பாததரிசனத்தை இப்போதும் காணலாம். 



மலையுச்சியிலிருந்து கீழுள்ள கோயிலையும் ரசிக்கலாம். ஜீப்பில் சென்றால் சிலாதோரணத்தையும், ஸ்ரீவாரி பாதங்களையும் ஒரே நேரத்தில் தரிசித்து விடலாம். இவ்விரண்டு பகுதிகளும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

வெங்கடாசலபதி கோயிலின் வடபுறத்தில் வராக சுவாமி கோயில் அமைந்துள்ளது. புராணங்களின்படி இதுவே ஆதி வராக க்ஷேத்ரம்


[Gal1] 

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். 



அதிகாலை குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.


அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும்.


ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.


சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.


அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம். 
ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
கல்வெட்டுக்கள் ஓரளவுக்குப் படித்துப் புரிந்துகொள்கிற மாதிரி எழுத்துக்கள் இருந்தன. திருப்பதியில் கல்வெட்டுகள் சுமார் 650 இருக்கின்றன.

புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது.

திருப்பதியில் உற்சவப் பெருமாள் "ஆடு மேய்க்கும்' கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.

ரங்க மண்டபம்:சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது. அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஐனா மகால் மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.

நடிமி படி காவிலி: இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோயிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள் ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. "வெண்டிவாகிலி' என்று இந்த கதவுகளுக்கு பெயர்.

திருமாமணி மண்டபம்: கொலுவு சீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார்.

வைகானஸ ஆகம விதிப்படி பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் விஷ்வக்சேனரை அவசியம் வழிபட வேண்டும் என்பது விதி. வெங்கடாசலபதியின் கழுத்திலிருந்து கழற்றப்படும் மாலைகள் விஷ்வக் சேனருக்கு அணிவிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. பிரம்மோற் ஸவத்தின்போது இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. இவரே விழா ஏற்பாடுகளை கவனிப்பதாக நம்பிக்கை. இவரது விக்ரகம் ஊர்வலத்தின் போது எடுத்துச்செல்லப்படும்.
வரதராஜ சுவாமி சன்னதி: திருப்பதி கோயில் விமானத்தின் கிழக்கு பகுதியில் வரதராஜ சுவாமி சன்னதி உள்ளது. சங்கு, சக்கரத்துடன் அபயஹஸ்த நிலையில் இவர் காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் மிகப்பெரும் அளவு செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வேங்கடமுடையானுக்கு சாத்துவதற்காக வந்திருந்த பிரும்மாண்ட மாலை குளிர் கண்ணாடிப்பெட்டியில் தரிசனம் தந்தது.


வெங்கடாசலபதியின் எதிரே கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் அமர்ந்திருக்கிறார். இவருக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது


















 












11 comments:

  1. திருப்பதி வந்தால் திருப்பம் என்பார்கள்...

    திருப்பதியின் அனைத்து அம்சங்களும் தங்கள் பதிவு விவரிக்கிறது..
    இவ்வளவு விஷயங்கள்.. இவ்வளவு புகைப்படங்கள் ஓரே இடத்தில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியான இருக்கிறது..

    தொடரட்டும் தங்கள் ஆன்மீகப்பணி...

    ReplyDelete
  2. திருப்பதி பற்றிய தங்கள் பதிவு நேரில் திருப்பதிக்கே சென்று வந்ததுபோல திருப்தியளிக்கிறது. பாராட்டுக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  3. இல்லத்தில் இருந்தே இனிய தரிசனம்.நன்றி

    ReplyDelete
  4. உங்க வலைப்பூ மூலம் ஸ்ரீவாரி தரிசனம் செய்து கொண்டிருக்கிறேன், இதுவரை தந்தவற்றுக்கும், இனி தர போகிற நல்லவைகளுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே...

    ReplyDelete
  5. தங்ககோபுரமும் வெங்கடாசலபதி படமும்... கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து தான் நிச்சியமா... அந்த கோபுரத்தை எத்தனையாவது முறையா பாத்தாலும் மனசுல ஒரு சிலிர்ப்பு ஓடுறதை தவிர்க்க முடியல... Thanks for sharing wonderful pictures...

    ReplyDelete
  6. அற்புதமான படங்கள். பெருமாள் நூற்றுப்பத்து டிகிரி வெப்பத்தில் இருப்பார் என்பது புதிய செய்தி. ஒரு சிலர் அவர் பெருமாள் அல்லர், முருகன் என்றும் சொல்லேக் கேட்டிருக்கிறேன்!

    ReplyDelete
  7. தாமரை, வலைப்பூவில் தங்களின் சின்னமும் கூட. தங்கள் பதிவுகள் அனைத்துமே தங்கக்கோபுரம் போன்று பிரகாசிப்பவை.

    கோவிலின் தங்கக்கோபுரம் தாமரை மலர்களின் உள்ளே கண்டபோது, எனக்குள் மிகவும் பொருத்தமே என்று ஓர் எண்ணம் தோன்றியது.

    தொடரட்டும் உங்கள் நற்பணிகள் !
    ஜொலிக்கட்டும் தங்கக்கோபுரமாக தங்களின் எழுத்துக்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன் vgk

    ReplyDelete
  8. நல்ல தகவல்கள். உங்கள் பதிவை படித்தவுடன் கூட்ட நெரிசலில் இடிபடாமல் சுவாமி தரிசனம் கிடைத்த மாதிரி ஒரு நல்ல அனுபவம். கண்ட குப்பைகளை எழுதி பதிவுகளாக போடுபவர்கள் மத்தியில் நல்ல விஷயங்களை போடும் உங்களை மாதிரி உள்ளவர்களுக்கு எங்கள் உள்ளத்திலும் சொர்க்கத்திலும் இடம் நிச்சயம் உண்டு. வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  9. Wow!!!!!!!!!!!!!!
    Today morning is precious. I got Thirumalaivasans darshan.
    Very very pretty photos. Nice writeup.Lot of informations.
    Thanks Thanks a lot Rajeswari.
    viji

    ReplyDelete
  10. நல்ல தகவல். நல்ல படங்களோட எழுத்துக்கள் சூப்பர்.

    ReplyDelete