Wednesday, November 13, 2013

ஸ்ரீசக்ர நாயகி ..!



     
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. 

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்.. 
சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. 
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே.. 
நின்ற நாயகியே.. இட வாகத்திலே.
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ (3) 


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்.. 
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்..

அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்.. 
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே..
அலை மாமகளே கலை மாமகளே.. 

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த 
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே..

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்.. 
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.

சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ 
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. 

கொல்லூரில் தவமிருக்கும் மூகாம்பிகே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
எங்கள் குறைகளைப் போக்கிடுவாய் மூகாம்பிகே

நல்லறிவு வழங்கிடுவாய் மூகாம்பிகே எங்கள்
ஞான ஒளிபெருக்கிடுவாய் மூகாம்பிகே 
ஓம் சக்திஓம் சக்திஓம் சக்தி

பரசுராமரால் கர்நாடகத்தில் உருவாக்கப்பட்ட ஏழு முக்தி ஸ்தலங்களில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் ஒன்று. 

இங்கு மூகாம்பிகை அம்மன் பத்மாசன தோற்றத்தில் காட்சி தருவது விசேஷம்.. 

சங்கொடு சக்கரம் ஏந்தி மகாவிஷ்ணுவைப் போல் ஜொலிப்புடன் ஸ்ரீசக்ர பீடத்தின் மேல் அமர்ந்து, ராஜபரிபாலனம் செய்து  இடர் களைந்து , கொடிய நோயையும் நீக்கும் வல்லமை கொண்டவள் அன்னை கொல்லூர் மூகாம்பிகை..!
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் அன்னை கொல்லூர் தேவி. மகாலட்சுமி, மகா சரஸ்வதி, மகாசக்தி ஆகிய மூன்று மாதாக்களின் சங்கமம் ஆகவே, இவரை மூகாம்பிகை தேவி என்று ஆதிசங்கரர் அழைக்க, இதுவே இன்றும் புகழுடன் வழங்கலாயிற்று. 

பத்மாசனத்தில் அமர்ந்துள்ள தேவி மூகாம்பிகை சிவபெருமானைப் போல மூன்று கண்களை உடையவள். ஸ்ரீசக்ரத்தின் மேல் சேவை சாதிக்கின்றாள்.

ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் பீடை, சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் பெண் தேவதை. ..!

மகிஷாசுரமர்த்தினியின் அம்சம். கல்வி, வித்தை, கலைகளை விருத்தி செய்பவள். அரசியலில் வரும் கோளாறுகளைக் களைபவள். சங்குடன் சக்கரம் ஏந்தும் தடக்கையவள்.
ரிஷிகளும் சித்தர்களும் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கும் புண்ணியத் தலமான  குடசாத்ரி என்ற புனிதமான மலையில் உற்பத்தியாகும் சௌபர்ணிகா நதி கரையில் கருடபகவான் தவம் செய்து தனது குலத்தில் நிலவியிருந்த பலவிதமான சாபங்களையும் தோஷங்களையும் நீக்கிக்கொண்டான். 
கருடனின் பெயர் சுபர்ணன் என்பதால், இந்த ஆறு 
சௌபர்ணிகா என்று வழங்கலாயிற்று
ஆக, ஒரு குடும்பத்தில் தீராத பிரச்னைகள் தொடர்ந்து இருந்து வருத்துமேயானால், இந்த சௌபர்ணிகா தீர்த்தத்தில் நீராடி
தூய மனத்தினராய் இறைவழிபாடு செய்தால் பேரானந்தம் கிட்டும். 

அக்கினி தீர்த்தமும் உண்டு. இதில் சூரியனால் எழும் தோஷமும்
சனியினால் தோன்றும் துன்பமும் நீங்க நீராடல் நலம் ...!

 அக்கினிச் சௌபர்ணிகத்து நீராடி நிற்பரே -
பொய்யுரை யன்றுயன்று - ஊமையருந் 
செவிடரும் பைசாச பிணக்கு பூண்
டோரும் விமோசனங் காணலாமே’’

-என்கிறார் கோலர் என்னும் சித்தர் தவம் செய்து நின்றதாலேயே
கொல்லூர் எனப் பெயர் வழங்கலாயிற்று. 

ஒருமுறை கௌமாசுரன் என்ற கொடிய அரக்கன் சிவபெருமானை நோக்கி கோரத் தவம் செய்தான். சிவபெருமான் இவன் முன் தோன்றி வேண்டுவன கேள் என அருள, அதைக் கண்ட தேவர்கள் நடுநடுங்கி பிரம்ம தேவனை தஞ்சமடைய, பிரம்மன் தனது துணைவியாம் வாக்தேவியை அழைத்து அந்த கொடிய அரக்கனை ஊமையாக்கி, வரம் ஏதும் சிவனிடம் பெற இயலாது தடுத்தான். 

மூகன் என்றால் ஊமையான அசுரன் என்பது பொருள்..!

வெகுண்ட அசுரன் தேவர்களைத் துன்புறுத்த, எல்லா இறைவனும் சக்திகளும் ஒன்றாகி அன்னை கொல்லூர் தேவியாக தோன்றி மூகாசூரனை வதம் செய்தாள். இவரே அன்னை மூகாம்பிகை.
 பரமேஸ்வரன் தனது வலது காலால், பெருவிரல் அடிப்பாகத்தை
கொண்டு ஸ்ரீசக்ரம் வரைந்தார் ...
‘‘தென்னாடுடைசிவனும் முன்னங் கால் வலத்து திருச்சக்ரமது
பொறிப்ப, பலமீந்தோம் பூசைபல புரிந்தே - சுவர்ண வரை கொண்ட
சுயம்பாய் நின்ற லிங்கமே உத்பல மாம்’’

உத்பவ லிங்கத்திற்கு உயிர் தந்தவர் கோலமகரிஷி. 

 லிங்கத்தில், தங்கத்தால் உயர்ந்த, விரிந்த ஒரு கோடு உண்டு. 

இடப்புறமான இந்த கோட்டில் மகா சரஸ்வதி, மகாலட்சுமி, மகாசக்தி உள்ளிட்ட அனைத்து பெண் தெய்வங்களும் தமது சக்திகளைத் தாங்கி நிற்க, வலப்புறம் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட தெய்வங்களும் தேவர்களும் சக்தி பீடமாக  இருக்கின்றனர். 
பாரத யுத்தத்திற்கு தேவையான அஸ்திரங்களை அர்ஜுனன் திரட்டினார். பாசுபதாஸ்திரம் சிவனிடம் இருந்துபெற எத்தனிக்கையில், சிவபெருமான் என அறியாது அர்ஜுனன் சிவனை அடிக்க, அது ஒரு வடுவாக  உத்பவ லிங்கத்தில் இன்றும் உள்ளது. அருகில் கோபாதம் என்ற பசுவின் பாதமும் உண்டு.
திப்பு சுல்தான் சென்று தொழுதபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களார்த்தி, இங்கே பிரசித்தம்.

வாழுங்காலத்தில் ராஜ போகமாய் வாழ்ந்து, வயோதிக காலத்திலும் ராஜாவாய் வாழ்ந்து விண்ணுலகம் செல்ல  தொழ வேண்டியது மூகாம்பிகையே. கர்நாடகா, உடுப்பி மாவட்டத்தில், குந்தாப்பூர் தாலுகாவில் இருக்கிறது, கொல்லூர் மூகாம்பிகைத் திருத்தலம்.

16 comments:

  1. கல்வி,செல்வம்,வீரம் மூன்றும் வழங்கும் மூகாம்பிகையின் பெருமை அறிந்தேன். நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. மூகாம்பிகை வரலாறு படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. பிராப்தமிருந்தால் நேரில் தரிசிக்கலாம். ஏக்கம் போக்க தங்கள் பதிவின் படங்கள்!!

    ReplyDelete
  3. மிகவும் சிறு வயதில் சென்றதாக அம்மா கூறுவார்.. உங்க பதிவை படித்ததும் அங்கு ஒருமுறை செல்ல வேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது.

    ReplyDelete
  4. இன்று மூகாம்பிகையை அறியும் நாள். மிக நன்றி

    ReplyDelete
  5. அழகான படங்களும் அருமையான வரலாறும்.

    பகிர்வினுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  6. எனக்கு மிக..மிக..மிகப் பிடித்த பாடல்.. பார்த்ததுமே மனமெல்லாம் சந்தோசமாகிட்டுது... ஜனனீ..ஜனனீ.... ஆனா கொப்பி பண்ண முடியல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    இனிய பதிவு.

    ReplyDelete
  7. ஜனனி.... ஜனனி .... பாடலுக்கு அடுத்து காட்டியுள்ள அம்பாள் படம் அருமை.

    குண்டு மல்லிகைச்சரம் நெருக்கமாக அடர்த்தியாக மொட்டுமொட்டாக சூப்பராகத் தொடுக்கப்பட்டுள்ளது.

    மஞ்சள் ஜவந்தியுடன் எடுப்பாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. கடைசியில் காட்டப்பட்டுள்ள கட்டை குட்டையான குண்டு யானையும் நல்லா இருக்கு.

    >>>>>

    ReplyDelete
  9. கோயில் பற்றிய வரலாற்றுக்கதைகள், விளக்கங்கள் எல்லாமே வழக்கம் போல சிறப்பாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. ஸ்ரீசக்ர நாயகி என்ற தலைப்பும் அழகு !

    அந்த தலைப்பினிலேயே ஆரம்பித்து ஒரு பாடல் உண்டு.

    [ஸ்ரீசக்ர ராஹ சிம்மாஸனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே]

    அதுவும் ... அதில் வரும் சில வரிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    >>>>>

    ReplyDelete
  11. அன்னை கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அநேக விஷயங்கள் அறிய முடிந்தது.

    செளபர்ணிகா ஆற்றில் குளித்தது போன்ற திருப்தி ஏற்பட்டது.

    நம் [எல்லோருடைய] தீராத பிரச்சனைகளும் தீர்ந்து மனநிம்மதி கிடைத்தால் பேரானந்தமே.

    >>>>>

    ReplyDelete
  12. சலாம் மங்கள ஹாரத்தி !!!!! ;)

    சலாம் மாலே கும் ...... மாலே கும் சலாம் !

    -oOo- [ 6 ] -oOo-

    ReplyDelete
  13. வணக்கம் அம்மா.
    மூகாம்பிகை வரலாற்றை அழகாக சொல்லிய விதம் ரசிக்க வைக்கிறது அம்மா. படங்கள் காட்சியைக் கவியாய் மனதில் பதிய வைக்கின்றன. அழகான பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  14. மனதையுருக்கும் ஜனனி பாட்டைப் பதிவில் போட்டு,
    கொல்லூர் மூகாம்பிகை படமும் போட்டு அசத்தி விட்டீர்கள்.நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  15. ஜனனி... சிறப்பான பாடல் கேட்டாலே மெய்உருகும்.

    எல்லாம்வல்ல தாயை வணங்கி நிற்கின்றோம்.

    ReplyDelete