Sunday, December 1, 2013

கோவை ஸ்ரீ சங்கமேஸ்வரர் - சங்கமேஸ்வரதுறை சங்கரா போற்றி, போற்றி!


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

தென்னாடுடைய சிவனே போற்றி ..!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! என அருளாளர்களால் முழங்கப்படும் சிவபெருமானுக்காக கரிகாற் சோழமன்னன்  கொங்குநாட்டில் காடுகளை இருளர்கள்  துணைகொண்டு திருத்தி நாடு உண்டாக்கியதோடு நாடு முழுக்க முப்பத்தாறு கோவில்களைக் கட்டி திருப்பணி செய்து முடித்தான் ..

சான்றோர் போற்றும்  சங்கமேஸ்வரர் திருக்கோவில் புத்திரபாக்கியம் வேண்டி கரிகாலன் கட்டிய 36 சிவத்தலங்களில்  31வது தலமாக விளங்குகிறது.

 கோவன் என்ற இருளர் தலைவன் ஏற்படுத்திய  
கோவன்புத்தூர் தான்  இன்றைய சிறப்புமிக்க கோயமுத்தூர் ,,

சங்கு புஷ்பங்கள் மண்டிய புதரை சீராக்கும் போது தோன்றிய லிங்கவடிவான ஈசனை சங்கீஸ்வரர் என்றும் சங்கீஸ்வரமுடையார் என்றும் அழைத்து நாளடைவில் சங்கமீஸ்வரர், சங்கமேஸ்வரர் என்றும் புகழ்பெற்றார்..
கோயமுத்தூரில், கோட்டைமேடு எனும் இடத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது. 

ஈசனைத் தவிர வேறு யாராலும் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அசுரர்களின் தொல்லைகளிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி தேவர்கள் இறங்கிவந்து தரிசித்த ஸ்தலம் இது. 

அவர்கள் வந்தபோது, ஸ்ரீசங்கமேஸ்வரர் சங்கு புஷ்பக் கொடிகளுக்கிடையே லிங்க வடிவமாய் எழுந்தருளிக் காட்சியளித்தார். 
ஸ்ரீசங்கமேஸ்வரர் என்று பெயர் பெற்றுள்ள லிங்க வடிவத்தின் உச்சியில் ப்ரும்ம சூத்திரம் பொறிக்கப்பட்டுள்ள அமைப்பு நம் படைப்பில் கோளாறு இருந்தாலும், விதியையே மாற்றும் வல்லமையுள்ளது .

பிரும்ம சூத்திரம் எண்கோணவடிவில் சிவலிங்கத்தின் 
மேற் கூரைமேல் வரையப்பட்டிருக்கிறதாம் ..!

மரணத்தருவாயில் உள்ள இளைய தலைமுறையினருக்காக 
இங்கு பிரார்த்தித்தால் அவரது தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உண்டு.
[Gal1]
ஈசனுக்கு சங்கு புஷ்பங்களைச் சாத்தி வழிபட்டு வேண்டிக் கொள்ள- 
குடும்பப் பகை, வியபாரப் பகை என அனைத்துப் பகைகளும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை...
கார்த்திகை சோமவரங்களில் சங்கபிஷேகம் சங்கமேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் செய்வது மிக சிறப்பானது.
கார்த்திகை பௌர்ணமியன்று அன்னாபிஷேகம்  நடைபெறுகிறது
[Gal1]
பராந்கசோழன் காலத்திலும் ,விஜயநகர மன்னர்கள் காலத்திலும் பின்னர் வந்த திருமலைநாயக்கர் காலத்திலும்  கோவில் விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளனர்.
[Image1]
ஆங்கிலேயர் காலத்தில் கொங்குநாடு திப்புசுல்தான் வசமிருந்தது.

 1792 ஆண்டு டிசம்பர் மாதம் வெள்ளையர் கம்பெனியார் திட்டமிட்டபடி கோயமுத்தூர் கோட்டையை அவர்கள் வசம் சிக்கவிடாமல் கோட்டையை இடித்து தரைமட்டமாக்கும் படி திப்புசுல்தான் உத்தரவிட்டான் 
கோட்டைமண் மேடானது. அதன்பின் அந்தபகுதியின் பெயர் 
கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது..!

அந்த கோட்டைக்கு அகழியாக வாலாங்குளம் அமைந்திருக்கவேண்டுமென்று கருதப்படுகிறது ..!

தரைமட்டத்திலிருந்து ஆறடிஆழத்தில் அம்பாள் சன்னதியும், 
ஈஸ்வரர் சன்னதியும் அமைந்திருந்தது.  தரிசிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதால் இப்போது வாஸ்து  முறைப்படி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.
 
சோமஸ்கந்தராக உள்ள முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் கருவறையில் காட்சிதருவது அபூர்வ அமைப்பு ..!. 

வடக்குநோக்கிய மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற பெயருடன் ஆறுமுகங்களும் நேரே நோக்கியநிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களைத் தாங்கியபடி காட்சி தருவது சிறப்பானது. 

கோயில் அமைப்புப்படி இவரே மூலவராக அருள்பாலிக்கும் 
தோற்றத்தில் அமைந்துள்ளார். 

சுவாமிக்கு இடப்புறத்தில் அகிலாண்டேஸ்வரி சன்னதி உள்ளது.
அம்பாள் சன்னதி அர்த்தமண்டபத்திற்கு முன்பாக இருபக்கங்களிலும்  சுமார் ஐந்து அடி உயரமுள்ள இரு தூண்களிலும் புடைப்புச்சிற்பமாக அனுமன் இருக்கிறார்..

வட புறமுள்ள தூணில்  தெற்கு நோக்கிய  ஆஞ்சநேயர்  பெண் உருவமும் ,
தென்புறமுள்ள தூணில் வடக்கு நோக்கிய ஆஞ்சநேயர் ஆண் உருவம்  உள்ள சிறபமும் வரலாற்றுச் சிறப்புக்கொண்டவை  ..ஆஞ்சநேயர் உருவம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது ..!

ஆண் பெண் என இரு தோற்றங்களிலும் இரு தூண்களில் அனுமன் தரிசனம் அன்னையின் சன்னதி முன் காட்சியளிப்பது வியப்பளிக்கிறது..
[Gal1]
சுற்றுப்பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், நீலகண்டேஸ்வரர், சூரியன், காப்புவிநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர் அருள்பாலிக்கின்றனர்.
தனி சன்னதியில் துர்க்கை அம்மன் அமைந்திருக்கிறார்..!

அரசமரத்தடியில் நாகர்களுடன் சக்திகணபதி வீற்றிருக்கிறார்..

கன்னி மூலை கணபதிக்கு  தன் பூத்துச் சொரியும் மலர்களால் அர்சனை செய்தபடி  மரமல்லிகை மரம் புன்னகைக்கிறது ..

அறுபத்துநான்கு நாயன்மார்கள் , தட்சிணமூர்த்தி , கன்னி மூலை கணபதி முன்னிலையில் தேவர்கள் மந்திரம் சொல்லி பூக்களை அர்ச்சிப்பது போல ஒவ்வொரு மரமல்லிகை புஷபமும் சுழன்று சுழன்று மரத்திலிருந்து அழகாக சிவலிங்கத்திற்கு வர்ஷிப்பதாக அமைந்திருக்கும் அற்புதக்காட்சி ...!

சங்குபுஷ்பக் கொடிகள் .. தன் புதரில் ஈசனை பெருமையோடு பொக்கிஷமாக பாதுகாத்த பெருமையோடு செழித்திருக்கிறது ..

அருகில் அருமையான நாகலிங்கமரம் கருத்தைக்கவருகிறது..

பவளமல்லி ,அரளி போன்ற மலர்கள் பூத்துக்குலுங்கும் சிறு நந்தவனம் 
மனம் நிறைக்கிறது ..!

13 -ம் நூற்றாணடைச்சேர்ந்த அழகிய யோக தட்சிணாமூர்த்தி வன்னி  மரத்தடியில் வழிபாட்டிற்குரியவராக திகழ்கிறார்..!
இவரை லகுலீசர் என்றும் அழைக்கிறார்கள்..!
வன்னிமரம் தன் இலைகளால் ஆதிசிவனை அர்ச்சிக்கிறது ..!
[Gal1]
63 நாயன்மார்களின் சன்னதியில் பொல்லாப்பிள்ளையார் ,அஞ்சைகளத்தப்பர் , மனோன்மணி அம்மன் , நால்வர் ஆகியோர் திரு உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன..!

மூலவர் கருவறையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கல்வெட்டுச்சின்னங்கள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு சன்னதி பீடத்திற்குக் கீழே வரிசைப்படுத்தப்பட்டிருப்பது சிறப்புடையது ..!
அன்னை அகிலாண்டேஸ்வரியை வணங்கிட திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல நோய்களும் நீங்கும், குடும்பபிரச்சனைகள் தீரும், தொழில்விருத்தி அடையும், அகால மரண தோஷம் நீங்கும்.

சுற்றுப்பிரஹாரத்தில் வாராஹி அன்னை கொலுவிருக்கிறாள்..!

அகிலாண்டேஸ்வரி சன்னதி முன்புறம் மகிழ்ச்சிதரும் கந்தம் மிகுந்த மகிழ மலர்களை பைரவர் சன்னதி , நவக்கிரகங்களின் முன்னிலையில் பவழம்ல்லிப்பூக்களுடன் கலந்து தேவதைகள் மந்திரம்  சொல்லி கிளைக் கரங்களால் பூக்களால் பூஜிப்பது போல இனிமையாய் தூவி தான் விருட்சமாகப்பிறந்ததன் பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கும் மகிழமரமே ஸ்தல விருட்சமாகத் திகழ்கிறது ..!
சிவராத்திரி அன்று 108 முறை வலம் வருதல், கண் விழித்து விரதம் இருத்தல். சிவ நாமங்களை உச்சரித்தல், திருவைந்தெழுத்து ஓதியும் செய்தல்.அடிபிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
இந்த கோவிலுக்கே உரிய சிறப்பு அஷ்டமிவழிபாடு. கோவிலில்உள்ள
மகாபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று நெய் தீபமேற்றி சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து அன்னதானம். வுழங்குவோருக்கு குழந்தையின்மை குறை நீங்கும்.

பஞசதீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாத் துன்பங்களும் தீரும், கடன்தொல்லை தீரும். காரியசித்தி உண்டாகும்..!  பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை விளக்கெண ணை,தேங்காயெண்ணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகியவற்றை தனித்தனி தீபமேற்ற வேண்டும்,,!

மாசிமாத மகா சிவராத்திரி. அன்று 108முறை வலம் வருவது சிறப்பு.. 
108முறை எண்ணிக்கை மாறாமலிருக்க 108 காசுகளை உண்டியலில் போட்டுவணங்குவது இக்கோவிலின தனிச்சிறப்பு.திருமண பாக்கியம் கிட்ட. சுகல ஐஸ்வர்யமும்கூட வியாபாரம் விருத்தியாக,, நன்மக்கட்பேறு கிட்ட சிவராத்திரி வலம் பலனளிக்கிறது..!

சித்திரைத்திருவிழா.சித்ரா பௌர்ணமி அன்று சங்கமேஸ்வரரும் சண்முக சுப்ரமணியரும் இரு தேர்களில்நகரின்முக்கிய வீதிகளில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள தேர்களில்  உலாவருவது. கண்கொள்ளாக் காட்சி. 

மாதத்தில் கிருத்திகை, சஷ்டி, பௌர்ணமி, பிரதோசம் ஆகிய உற்சவங்கள் எப்பொழும்நடைபெறுகின்றன.

கோவிலின் முன்புறத்தில் அரசமரத்தடி விநாயகருக்கு தனி ஆலயம் உண்டு ..

கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் கல்வி வரமருளும் ஹயக்ரீவர் சன்னதிக்கு செல்லும் வழி என்னும் வழிகாட்டிப்பலகை இருக்கிறது ..
அவசியம் குழ்ந்தைகளை அழைத்துச்செல்லவேண்டிய அருமையான ஆலயம்  ..!

கோவை நகரின் மையத்தில் மாநகராட்சி கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ளது சங்கமேஸ்வரர் ஆலயம்.

ரயில நிலையம், பஸ்நிலையம் ஆகியவற்றி லிருந்து புறப்படும் டவுன்பஸ்கள் அனைத்திலும் செல்லலாம். 

டவுன்ஹால் என்ற ஸ்டாப்பில் இறங்கி தென்புறம் செல்லும் சாலையில் ஐந்துநிமிட நடையில் கோவிலை அடையலாம்.









17 comments:

  1. VERY GOOD MORNING !

    HAVE A VERY NICE DAY !!

    ஏனோ இப்போது அதிகாலையில் நான் சீக்கரமாக எழுந்து கொண்டும் தூக்கம் கண்ணைச் சொக்குகிறது. !!!!!

    அதனால் நான் மீண்டும் பிறகு வருவேன். ஜாக்கிரதை. ;)))))

    >>>>>

    ReplyDelete
  2. கோவை ஸ்ரீ சங்கமேஸ்வரர் பற்றி பலவிஷயங்கள் அறிய முடிந்தது. சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  3. கரிகாலன் கட்டிய கோயில். அதுவும் அவன் கட்டிய 36 கோயில்களில் 31வது ஸ்தலம். அதுவும் அவன் கட்டியதன் நோக்கம் படிக்கவே வேடிக்கையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. ;)

    கோவன்புத்தூரே இன்றைய கோயமுத்தூர் ..... !

    ”முத்தான முத்தல்லவோ ........ முதிர்ந்து வந்த முத்தல்லவோ ,.........
    கட்டான கலையல்லவோ ........ கடவுள் தந்த பொருளல்லவோ ................ ;)))))”

    மகிழ்ச்சியான தகவல்கள்.

    >>>>>

    ReplyDelete
  4. சங்கு புஷ்பங்கள் படத்தில் பார்க்கவே அழகாக உள்ளன.

    அவைகள் சுழன்று சுழன்று சிவன் மேல் அர்சிப்பது போல விழுவதை நன்றாகவே வர்ணித்துள்ளீர்கள்.

    கோட்டைமேடு பெயர்க்காரணமும், சரித்திர ஆதாரங்களுடன் மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  5. அங்குள்ள அம்பாளின் பெயரும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்பது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    நாளுக்கு நாள் அனுமார் வால் போல வளர்ந்து வருவதாகச்சொல்லும் ஆஞ்சநேயரின் பெண் உருவம் + ஆஞ்சநேயரின் ஆண் உருவம் என ஏராளமான புதுப்புது வியப்பளிக்கும் தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். .

    >>>>>

    ReplyDelete
  6. கோயிலுக்குச்செல்ல மட்டும் அழகாக ரூட் சொல்லி ஒதுங்கிக்கொண்டு விட்டால் எப்படி ? !!!!! ;)

    பொல்லாப்பிள்ளையாரே தான் ..... பொல்லாத பிள்ளையாரப்பாவே தான் .... ;)

    அனைத்துத்தகவல்களும், படங்களும், பதிவும் அருமையோ அருமை.

    ooo ooo

    ReplyDelete
  7. கோவை சங்கமேஸ்வரர் பற்றிய கட்டுரையும் படங்களும் மனதுக்கு மகிழ்வூட்டின. வாழ்க உங்கள் இறைத்தொண்டு!

    ReplyDelete
  8. சங்கமேஸ்வரதுறை சங்கரா போற்றி, போற்றி!
    கோவை போனால் போக ஆவல் வந்து விட்டது. அந்த கோவில் போய் வெகு காலம் ஆகி விட்டது.
    படங்களும் நேரில் பார்த்த உணர்வை தந்து விட்டது.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. கரிகாலன் கட்டிய கோயில் விளக்கமும் படங்களும் அருமை சகோதரி

    ReplyDelete
  10. சிறப்பான விளக்கங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. information about two hanuman and bramma sutra is new . thanks for sharing

    ReplyDelete
  12. அருமையான விளக்கம்
    அழகான படங்கள்
    சங்கமேஸ்வரரைப் பற்றி அறியத் தந்தீர்கள்...
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  13. கோட்டைமேடு மற்ற பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் வாசிகளுக்கே அதிகம் தெரியாமல் இருந்த இடம். இப்போது பரவாயில்லை. இந்தக் கோவிலுக்கு நான் ஒரே ஒரு முறை போயிருக்கிறேன்.

    ReplyDelete
  14. சங்கமேஸ்வரர் கோவில் - கோவைக்கு பல முறை சென்றிருந்தாலும் இக்கோவிலுக்குச் சென்றதில்லை.....

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  15. சங்கமேஸ்வரர் பற்றி அருமையான தகவல்களும்
    படங்களும் வெகு சிறப்பு!

    பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

    ReplyDelete
  16. தெரியாத தகவல்கள் கொட்டிக் கிடக்கும் பதிவு. கோவன்புதூர்,ஆஞ்சநேயரின் ஆண் வடிவம், பெண் வடிவம் என்று புதுப்ப்து தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி.

    ReplyDelete
  17. கோவை சங்கமேஸ்வரர் கோவில் பற்றிய விவரங்கள் அங்கு போக வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. உங்கள் ஆன்மீக சேவைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete