Wednesday, January 29, 2014

நிறைவாழ்வருளும் குறுக்குத்துறை முருகன்


திருநெல்வேலி - குறுக்குத்துறை முருகன் கோயிலில், 
தாமிரபரணி ஆற்றின் கரையில் கோயிலை தொட்டபடி செல்லும் ஆறு, 
முருகனின்  பாதம் தொட்ட சிலிர்ப்புடன் சலசலத்துச் செல்கிறது. 
தாமிரபரணி தண்ணீர்தான் இப்பகுதியில் அனைத்துக் கோயில் 
கருவறை மூர்த்திகளின் அபிஷேகத்துக்குப் பயன்படுகிறது. 
ஆனால், தாமிரபரணியே வருடந்தோறும் ஒரு கோயிலையே அபிஷேகம் செய்கிறது என்றால், அது இந்த குறுக்குத்துறை  முருகன் கோயில்தான். 
 அடை மழை காலங்களில் தாமிரபரணியின் வெள்ளம் கோயிலை 
மூழ்கடித்து விடுகிறது! 

இந்தச் சமயத்தில், இங்குள்ள உற்சவர் சிலைகளை 
மேலக்கோயிலுக்கு எடுத்துச் சென்று விடுவார்கள். 

பழனிக்கும், திருச்செந்தூருக்கும் ஒரே நேரத்தில் 
செல்வது கடினம் என்பார்கள். 

ஆதலால், குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கும்,  மேலக்கோயிலுக்கும் சென்று வந்தால் பழனிக்கும், திருச்செந்தூருக்கும் சென்ற புண்ணியம் கிட்டும் என்றும் சொல்வார்கள். 
திருச்செந்தூர் முருகன் கோயில் தோன்றிய காலத்திலேயே குறுக்குத்துறை முருகனின் மேலக்கோயில் தோன்றியுள்ளது. 

அதற்குக் காரணம், குறுக்குத்துறையில் உள்ள கற்கள். இந்த இடத்துக்கு திருவுருமாமலை என்று பெயர். இங்குள்ள கற்கள் சிலை வடிக்க ஏற்றவை. 

திருச்செந்தூர் மூலவர் சிலை இங்குதான் உருவாக்கப்பட்டது. 

அப்போது, ஒரே மாதிரியான இரண்டு சிலைகளை உருவாக்கி, ஒன்றை திருச்செந்தூர் கருவறையிலும், மற்றொன்றை குறுக்குத்துறை மேலக்கோயில் கருவறையிலும் வைத்து வணங்கி வருகிறார்கள். 

 குறுக்குத்துறையில் உள்ள பாறையில் முருகன் சிலை வடிக்கப்பட்டு திருச்செந்தூர் சென்றதால், இந்த கோயிலை திருச்செந்தூரின் தாய்வீடு என்றழைக்கிறார்கள். 

திருவுருமாமலை என்ற குறுக்குத்துறை பாறையில் ஒரு முருகன் சிலை வள்ளி-தெய்வானையுடனான முருகன் சிலையை செதுக்கப்பட்டது. 

ஆனால்,  இந்தச் சிலையை பாறையிலிருந்து பிரித்து 
எடுக்க முடியாமல் சிற்பி அப்படியே விட்டுவிட்டார். 

ஆனாலும் இந்தச் சிலையை மக்கள் வழிபட்டு வந்தார்கள்.
இந்த சிலை வெயில் பட்டு, மழை பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் கிடந்தது. 

வடமலையப்ப பிள்ளை என்ற பெரிய சீமானின் தாயார் இந்தத் துறையில் வந்து நீராடியபோது அந்த அழகான முருகனின் சிலையைப்  பார்த்தார். 

வெயிலாலும், மழையாலும் சிலை சேதமுறாமல் இருக்க, ஓலையால் நிழல் அமைத்து தினமும் பக்தியுடன் தாமிரபரணியில் நீராடி  முருகப் பெருமானுக்கும் நீராட்டி மலர் சூட்டி வணங்கியதைக்கண்டு பிற அனைவரும் வணங்க ஆரம்பித்தனர். 

கோயிலில் பல அற்புதங்கள் நிகழத் தொடங்கியது. 
திருவாவடுதுறை ஆதீனத்தார் குறுக்குத்துறை கோயில் 
நிர்வாகப் பொறுப்பை ஏற்று விரிவாக்கினார்கள். 
ஆகம விதிப்படி கர்ப்ப கிரகம், முன்மண்டபம், அர்த்த மண்டபம், 
மகா மண்டபம்  ஆகியவற்றை உருவாக்கினார்கள். 

தற்போது கோயில் மிகச் சிறப்பாக விளங்குகிறது.
திருச்செந்தூர் வள்ளி குகைபோல குடவரைக்கோயிலாகத்திகழ்கிறது..! -
திருச்செந்தூர் கோவில் சிலையை டச்சுக்காரர்கள் திருடி கொண்டு செல்லும் போது நடுக்கடலில் முழ்கி விட்டது. இதற்காக வடமலையப்ப பிள்ளை புதிய சிலையை செய்தார். 

இதற்கிடையில் நடுக்கடலில் முழ்கிய சிலை கிடைக்கப்பெற்றதால் புதிதாக உருவாக்கப;பட்ட சிலை தற்போது குறுக்குத்துறை கோவிலில் உள்ளது. 

கோயில் கர்ப்ப கிரகத்தில் பஞ்ச மூர்த்திகள், 
தம்பதி சகிதமாகக் காட்சி தருகிறார்கள். 
தாமிரபரணிக்கு வெகு அருகிலே உள்ளதால் 
நீராழி மண்டபம் நீர் வற்றாமல் இருக்கிறது. 
ஒரு அன்பர் தன் தந்தையின் அஸ்தியை கலசத்தில் 
எடுத்துக் கொண்டு, புண்ணிய தீர்த்தம் தேடி அலைந்துள்ளார். 
காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று அஸ்தியை கரைத்தார். 
ஆனால் ஏனோ மனதில் நிறைவில்லை. 
தாமிரபரணியில், கருப்பன் துறையில் கரைத்த போது,
வெண்மையான அஸ்தி கருமை நிறமானது. 





















குறுக்குத்துறைக்கு வந்தபோது, அஸ்தி குருத்து விட்டது. 

சிந்து பூந்துறையில் கரைக்க முற்பட்ட போது, 
மலர்களாகப் பூத்துவிட்டதாம். 

ஆகவே உலகத்தில் உள்ள அனைத்து தீர்த்தக் கட்டங்களிலும், இந்த கோயிலுக்கு அருகேயுள்ள மூன்று தீர்த்தக் கட்டங்களை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறுகிறார்கள்.

கடுமையாக தவம் இயற்றினால் முக்தி அடையலாம் என்று சொல்வார்கள். ஆனால், குறுக்குத்துறை கோயிலை வலம் வந்து வணங்கி நின்றாலே  முக்தி கிடைக்கும். 
அதனால்தானோ என்னவோ இந்தக் கோயிலை 
குறுக்கு(வழி)த்துறை என்றழைக்கிறார்கள் போலிருக்கிறது! 
திருச்செந்தூர் முருகனுக்கு நேர்ந்து கொள்வதை நிறைவேற்ற முடியாதவர்கள் குறுக்குத்துறையில் வந்து நிறைவேற்றலாம். 
கோயில் கிழக்கு பார்த்து உள்ளது. 
உள்ளே பிள்ளையாரும், பாலசுப்பிரமணியரும் வரவேற்கிறார்கள். 

 அணிக்கை விநாயகர், வீரபாகு, வீர மகேந்திரர் அருள் தருகின்றனர். 

கருவறையில் சுயம்பு சுப்பிரமணியர், 
வள்ளி-தெய்வானையுடன் காட்சி தருகிறார். 
தாமிரபரணியில் வெள்ளம் வரும்போது, 
அந்த அபிஷேகத்தில் அப்படியே மூழ்கிக் கிடப்பார்  இவர். 
நெல்லையப்பர், காந்திமதி, சொக்கர், மீனாட்சி,  நடராஜர், சிவகாமி சந்நதிகள் உள்ளன. ஆறுமுக நயினார் தெற்கு நோக்கி  அமர்ந்திருக்கிறார். 

அருகிலேயே ஷண்முகர் வள்ளி-தெய்வானையுடன் காட்சி தருகிறார். 

இவர்களை தரிசித்துவிட்டு பாறையில் குடையப்பட்ட உள்சுற்று  வழியாக வந்தால் பஞ்சலிங்க மூர்த்திகள் அம்பாளோடு காட்சி தருகிறார்கள். 

திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து செவ்வாய்க்கிழமைகளில் பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மாலை சாத்தினால் தடை நீங்கும். 

குழந்தைகளுக்கு தோஷம் இருப்பதாக கருதுபவர்கள் குழந்தையை தவிட்டுக்கும், கருப்பட்டிக்கும் முருகன் முன்னால் வந்து விற்று, பிறகு வாங்கிச் செல்வார்கள். 
தைப் பூசம், மாசி அமாவாசை இரண்டும் 
மிக விமரிசையாக கொண்டாடப்படும். 
மாசி அமாவாசை அன்று பத்தாயிரம் தீபங்கள்  ஏற்றப்படுகின்றன. 
ஆறு வருடங்களுக்கு ஒருமுறை இந்த நாளில்  லட்ச தீபம் ஏற்றப்படும். 
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்தும், டவுன் ரயில் நிலையத்தில் இருந்தும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

கோயில் காலை 6 முதல் 12 மணி வரையிலும், 
மாலை  4 முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

10 comments:

  1. குறுக்குத்துறை முருகன் பெருமைகளை உணர்ந்தோம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. குறுக்குத்துறை முருகன் பற்றிய தகவல்கள் + படங்கள் அனைத்தும் சிறப்பு அம்மா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்களின் கருத்துரைக்காக : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html

    ReplyDelete
  4. பின்னணியில் ஆகாயத்துடன் கோவில் கோபுரம் படம் அழகு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. மனம் நிறைய சங்கதிகள்.
    முருகா !!

    உன் கருணையே கருணை !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. கடந்த ஒன்பது வருடங்களாக - வருடந்தோறும் திருச்செந்தூர், உவரி , நெல்லை - செல்லும் எங்களுக்கு இன்னும் குறுக்குத்துறை முருகனை தரிசிக்க நேரம் வரவில்லை. பேருந்திலிருந்தே ஆலய தரிசனம் தான்.
    அழகிய படங்களுடன் கூடிய பதிவு மனதில் நிற்கின்றது.

    ReplyDelete
  7. குறுக்குத்துறை முருகன் கோவிலைப் பற்றி நிறைய தகவல்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது. நன்றி அம்மா.

    ReplyDelete
  8. நெல்லையப்பர் கோவில் மட்டும் திருநெல்வேலியில் போயிருக்கிறோம். குருக்குத் துறை கோவில் படங்களும் விளக்கங்களும் அருமை . பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. முதல் படமும் கடைசிபடமும் பார்க்கப்பார்க்க கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.

    முருகனைப்போன்ற மிக அழகான பதிவு. பகிர்வுக்கு மனம் நிறைந்த சந்தோஷங்கள் + பாராட்டுக்கள் + நன்றிகள்.

    ReplyDelete
  10. சென்ற மாதம் 25.5.2014 அன்று திருநெவேலி நண்பர் ஒருவருக்கு திருமண பத்திரிக்கை வைக்க சென்னையிலிருந்து சென்றபோது இந்த குறுக்குத்துறையில் நண்பருடன் குளித்தோம், அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றதால் கோவில் முழுவதும் தெரிந்தது.ஆனால் அன்று கோவிலுக்கு செல்ல இயலவில்லை, அந்த குறையை இந்த பதிவின் புகைப்படங்கள் போக்கிவிட்டது ...இன்னுமொரு முறை சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த கோவிலுக்கு நிச்சயம் செல்வேன்...

    ReplyDelete