Wednesday, September 28, 2011

பூரண வரமருளும் பூவராக சுவாமி


ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை
மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் பெற்றார்

அப்படி உத்தாரணம் செய்யப்பட்ட பூமியில் தான் நாம் வாழுவதே ஸ்வேத வராஹ கல்பத்தில் தான்.. ..
[IMG_0555.JPG]
ஒரு சமயம் பிரம்மனுக்கும் திருமாலுக் கும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் ஏற்பட, சிவபெருமான் வானுக்கும் பூமிக்கும் நடுவே ஒரு பெரிய நெருப்புத் தூணாய் வந்து நின்றார். 

பிரம்மன் தூணின் முடியைக் காணச் சென்றார். 

திருமால் மீண்டும் வராகத் திருவுருவம் எடுத்து ஈசனின் அடியைக் காண பூமியை அகழ்ந்து கீழே சென்றார். 
வெகுதூரம் சென்றும் ஈசனின் அடிகளைக் காணமுடியவில்லை. 

 இரண்யாட்சன் என்ற அரக்கன் பூமியைப் பாய்போலச் சுருட்டி கடலுக்குள் கொண்டு சென்று விட பகவான் மீண்டும் வராக வடிவெடுத்து கர்ஜனை செய்தார்.

வராக மூர்த்தியின் கர்ஜனையால் அண்ட பகிரண்டமும் அதிர்ந்தன.

நான்கு வேதங்கள் நான்கு பாதங்களாகவும், 
ஸ்மிருதிகளும் புராணங்களும் செவிகளாகவும், 
சூரிய- சந்திரர் இரு கண்களாகவும், 
நாகராஜன் வாலாகவும், 
யாகங்கள் கோரைப் பற்களாகவும், 
அனைத்து மந்திரங்களும் தேக அவயங்களாகவும் கொண்டு, 
கட்டை விரல் அளவுள்ள வராக வடிவெடுத்து, சில நொடிகளில் பிரம்மாண்டமாக வளர்ச்சியுற்று சமுத்திரத்தினுள் மூழ்கினார்.

இவ்விதம் பலமுறை பகவான் வராக அவதாரம் எடுத்துள்ளார்.


அரக்கனுடன் போரிட்டு அவனை சம்ஹரித்து பூமிதேவியைக் காத்து ரட்சித்தார். அதனால் சுவாமி பூவராக மூர்த்தி எனப்பட்டார். 

அரக்கனுடன் போர் புரிந்ததால் ஏற்பட்ட களைப்பு தீர ஒரு இடத்தில் இளைப்பாறிய போது அவர் தேகத்திலிருந்து வியர்வைத் துளிகள் ஆறாகப் பெருகி ஓடி நித்ய புஷ்கரணி எனும் புனிதமான தீர்த்தக் குளமாகியது. சுவாமி இளைப்பாறிய இடம் ஸ்ரீ முஷ்ணம் என்னும் திருத்தலமாகியது. 

பூவராக சுவாமி கர்பகிரஹத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்திய இருகரங்களையும், பாண்டுரங்கனைப் போல இடுப்பில் கை வைத்த படி பிராகிருத விமானத்தின் நிழலில் தரிசனம் தருகிறார்.

அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார்.

இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும்.

முகம் தெற்கு நோக்கியதாக, பூமியை மேலே கொண்டு வந்த வெற்றிப் பெருமிதத்தில் கைகளை இடுப்பில் வைத்து, முகத்தை நிமிர்த்தி கம்பீரப் பார்வை பார்க்கிறார். மூர்த்தி சாளக்ராமத்தால் ஆனது.
கர்பகிரஹத்தின் முன்பாக உள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீ யக்ஞவராஹ மூர்த்தி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார்.

அருகிலேயே ஆதிவராஹரும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர்.

இதற்கும் முன்பாக உள்ள மஹா மண்டபத்தில் போகநாராயணர்
தமது தேவியருடன் காட்சி தருகிறார்.

கோவில் மேற்கு நோக்கிய அழகிய ராஜ கோபுரத்துடன் கூடியது. 

 நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. 

புருஷ சூக்த மண்டபம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறது. 

உடையார் மண்டபம் என்ற பெயரில் உடையார் பாளைத்து ஜமீன் செய்த மண்டபமும் அதன் நடுவில் கண்ணாடி அறையும் உள்ளது. 

விசேஷ காலங்களில் பெருமாளும் தாயாரும் இங்கு சேவை சார்த்தி அருள்வராம்.

ஆலயத்திலுள்ள 16 தூண் மண்டபம் சிற்பக்கலைக்கு 
உறைவிடமாகத் திகழ்கிறது.
 
ஸ்ரீ வராஹ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்த புண்ய க்ஷேத்திரம் ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீமுஷ்ணம் 
அதாவது பூமியில் யாராலும் தோற்றுவிக்கப்படாது, அனாதி காலம் முதல் இருந்து வரும் க்ஷேத்திரம். 

இவ்வாறான மற்ற க்ஷேத்திரங்களாவன; வேங்கடாத்ரி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அகோபிலம், நரநாராயணம், துவாரகை, மதுரா, ஜனார்த்தனம் போன்றவை

நதிகளில் எப்படி கங்கை முக்கியமானதோ அது போல ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு க்ஷேத்திரங்களில் முக்கியமானது இந்த வராஹ க்ஷேத்திரம் .....

ஸ்ரீமுஷ்ணத்தில் எல்லா தீர்த்தங்களும் சேர்கின்றனவாம்.

எல்லா தேவதைகளும் இங்கிருக்கும் ஸ்வேதவராஹனுக்கு சேவை சாதிக்கும் பொருட்டு வசிப்பதாகச் சொல்கின்றனர்.

இப்பெருமாளை ஆராதித்து வந்தால் வைகுந்த பதவி நிச்சயம் என்று வராஹ புராணம் கூறுகிறதாம்.

பெருமாள், கடலில் இருந்து பூமியை மேலே கொணர்ந்ததன் மூலம் தேவர்களுடைய துயரைத் துடைத்து அவர்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றியவுடன் வைகுண்டம் திரும்ப எண்ணினாராம். 

அப்போது பூதேவி பெருமாளை வேண்டி அவர் தன்னுடனேயே வாசம் செய்ய விரும்பிய வேண்டுகோளை ஏற்று வாசம் செய்யும் இடமே ஸ்ரீமுஷ்ணம் 

பூதேவியுடன் வாசம் செய்வதால் பூவராஹர் என்று பெருமாளுக்கு பெயர்.

தான் ஸ்ரீமுஷ்ணத்தில் தங்கிய சமயத்தில் தனது பரிவாரங்களையும் அங்கேயே தன்னைச் சுற்றித் தங்கச் செய்ததாகவும், அதன்படி
சங்கு தீர்த்தத்தில் சங்கும், 
சக்ர தீர்த்தத்தில் சக்ரமும், 
பிரம்ம தீர்த்தத்தில் ப்ரம்மாவும், 
பார்க்கவ தீர்த்தத்தில் கருடனும், 
கோபுரத்தில் வாயுவும், 
பலிபீடத்தில் ஆதிசேஷனும், 
வாயிற்படியில் விஷ்வக்சேனருமாக 
அவர்கட்கு உரிய இடத்தை நிர்ணயம் செய்து கடமைகளையும் விதித்தார் என்று கூறுகின்றனர். 

இவர்களது கடமையாக, பகவானை சேவிப்பவர்களை எமதூதர்கள் அண்டாதிருப்பது ஆதிசேஷனுக்கும், இங்கு இறைவனை வழிபடுபவர்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வது இந்திரனுக்கும் கடமையாம். 

இந்த க்ஷேத்திரத்தில் இருக்கும் தீர்த்தங்கள் சிறப்புற்றுத் திகழ்கிறது, 

அவை, நித்ய புஷ்கரிணி, லக்ஷ்மி நாராயண தீர்த்தம், பூமி தீர்த்தம், சக்ர தீர்த்தம், சங்கு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம் போன்றவையாம்.
Nitya Puskarni

[srimushnam+2.jpg]
கல்லால மரத்தின் கீழ் இருந்து வேதத்தை அருளிய ஈசனைப் போல இங்கே, நித்ய புஷ்கரிணி தீர்த்தத்தின் அருகில் இருக்கும் அஸ்வத்த மரமானது மிக பழமையானதாக, யுக-யுகாந்தரங்களாக இருப்பதாகவும், அதன் அடியில் இருந்து ஸ்வேத வராஹப் பெருமாள் தேவர்களுக்கு வேதாத்யயனம் செய்து வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இங்கே பெருமாளே யக்ஞரூபமாகவும், யக்ஞாங்கமாகவும், யக்ஞத்துக்கு உரியவனாகவும், யக்ஞத்தை புசிப்பவனாகவும், யக்ஞேஸ்வரனாகவும், யக்ஞபலத்தை தருபவனாகவும் இருக்கிறானாம். 

இம்மரத்தடியில் உட்கார்ந்து வேத பாராயணம், மந்திர ஜபம் போன்றவை செய்தால் அளவற்ற பலன் ..

உபநிஷத் என்றால் குருவின் அருகில் இருந்து அவர் மூலமாக அறியப்படும் மெய்ஞான உபதேசம் என்று பொருள்.

ரிபு என்ற முனிவர் 12 ஆண்டுகள் ஸ்ரீவராஹரை நோக்கித் தவமிருந்து பெர்ற தரிசனத்தின் போது வராஹர் ரிபு முனிவருக்கு அளித்த உபதேசம் 'வராஹோபநிஷத்' என்று கூறப்படுகிறது. 
[bhoovaraha+swami+teple+8.jpg]
பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த வராஹ அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி ஆகும்.

இந்த க்ஷேத்திரமானது பிரம்மாதி யோகிகளுக்கு வேதாத்யயன பூமியாகவும், தேவர்களுக்கு யாக பூமியாகவும், மனிதர்களுக்கு மோக்ஷ பூமியாகவும் திகழுமென பெருமாளே அருளியிருக்கிறாராம்.

வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது.இங்கே அம்புஜ வல்லித் தாயாரின் தோழிமார்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.



பிராகாரத்தில், தென்மேற்கு திசை மூலையில் பெருமாளை நோக்கியவாறு அம்புஜவல்லித் தாயார் சன்னதி.
சன்னதியின் முன்மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
Thayar Sannidhi
[IMG_0550.JPG]
கோதை நாச்சியார் மற்றும் உடையவர் சன்னதிகள். வடப்புறத்தில் வேணுகோபாலன், மற்றும் விஷ்வக்சேனர் சன்னதிகள் இருக்கிறது.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் சன்னதியில் வித்யார்த்திகள் ஸ்வரம் பிசகாது வேதம் பயின்று கொண்டிருப்பது கண்ணுக்கும், காதுக்கும் இனிமை சேர்க்கும்

திருமங்கை மன்னன், திருக்கச்சிநம்பி மற்றும் மணவாள மாமுனிகளது சன்னதிகளும் ம் வாசல் வைகுண்ட வாசலும் சிறப்பானவை..!.
Sorga Vasal
[IMG_0541.JPG]
 பெருமாளுக்கு 2 பிரம்மோத்சவங்கள் (மாசி மற்றும் சித்திரை மாதங்களில்), மற்றும் மார்கழிச் சிறப்பு பகல்-ராப்பத்து உற்சவங்களும் நடக்கிறது.

வெள்ளிக்கிழமைகளில் அம்புஜவல்லித் தாயாருக்கு டோலோர்சவமும், வைகாசி விசாகம், ஆவணியில் ஸ்ரீஜெயந்தி, புரட்டாசி கொலு, மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் மற்றும்
அட்சய திருதியை அன்று கருட சேவையும் நடைபெறுகிறது..


ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நான்கு பாதங்கள் நான்கு வேதங்களாகவும், 
வராஹம் எழுப்பும் சப்தம் சாம கோஷமாகவும், 
அதன் தந்தம் யூபஸ்தம்பமாகவும், 
நாவே வேள்வித்தீயாகவும், 
உடலில் இருக்கும் உரோமங்கள் தர்பைப் புல்லாகவும் 
அதன் உமிழ்நீரானது நெய்யாகவும், 
மூக்கு சுருவம் என்று சொல்லப்படும் ஹோமக் கரண்டியாகவும், 
எலும்புகள் மந்திரமாகவும், 
ரத்தம் சோமரசமாகவும், 
அதன் பிராணன் அந்தராத்மாவாகவும், 
இதயம் தக்ஷிணையாகவும், 
தலை பிரம்மனாகவும், 
குடல் உத்காதாவாகவும், 
குறி ஹோதாவாகவும், 
சரீரம் யக்ஞசாலையாகவும் 
நடை ஹவ்பகவ்யம் என்றும் வாயு புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாம். 

கோபாயேத் அநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட: ப்ரள்யோர்மிகோஷ குருபிர் கோணாரவை: குர்குரை
மத் தம்ஷட்ராகுர கோடி-காட-கடநா-நிஷ்கம்ப-நித்யஸ்திதி:
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸெளத் அஸெள் பகவிதீமுஸ்தேவ் விச்வம் பரா:

என்று ஸ்ரீவேதாந்த தேசிகர் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் இந்த அவதாரத்தைப் போற்றுகிறார்.

 மஹாப் பிரளய காலத்தில் கரைபுரண்டு பொங்கியெழும் சமுத்திரத்தின் அலைகளின் ஓசைபோல் குர்-குர் என்று மூக்கிலிருந்து வரும் சப்தத்தால் இவ்வுலகினைப் பரிசுத்தமாக்கிய பன்றியாக அவதரித்த பெருமான், எல்லா உலகங்களையும் காப்பாற்றக் கூடியவர். மகிமை பொருந்திய இந்த பூமிதேவி அந்த வராஹப் பெருமானின் கோரைப் பல்லின் நடுவில் ஒரு கோரைக் கிழங்கு போல கெட்டியாக அசைவற்று இருத்தப் பெற்றாள். இவ்வாறாக பூமிதேவியே உறைந்திருப்பது இப்பெருமானின் பல் நுனியில் என்றால் அந்த உருவத்தில் பெருமை சொல்லவும் தகுமோ? 

பெருமாளுக்கு இங்கு கோரைக் கிழங்கால் செய்த லட்டு போன்ற உணவே நிவேதனம் 

கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் . அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக "ஸ்ரீயக்ஞ வராஹாய நம:" என்ற நாமம் வரும்.

இவ்வாறான பெருமைசேர் ஸ்வேத வராஹனைத் தொழுது நாமும் நமக்கு விதிக்கப்பட்ட யக்ஞாதிகளில் நாட்டம் ஏற்படப் பிரார்த்தனை செய்வோம்.

வேங்கடமும் ஆதி வராகத் தலம் அல்லவா!

அங்கும் முதல் வழிபாடு வராகப் பெருமாளுக்குத் தானே!
 வராக சரம ஸ்லோகம்
 நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!
இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.

ஸ்ரீ வராக பெருமாளை வணங்குவோர் சிறந்த வாக்கு வன்மை, பெரிய பதவி, நிலைத்த செல்வம், மக்கட்பேறு , நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் ஆகியவற்றை பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்று புராணங்களும் மந்திர சாஸ்திரங்களும் சொல்கின்றன.
குரு, ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அத்தகைய தோஷம் நிவர்த்தி ஆகும்.

புதிய வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு கொண்டு வந்து அர்ச்சனை செய்வது வழக்கமாக உள்ளது.இதற்கு வாகனம் படைத்தல் என்று கூறுகிறார்கள்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் ஸ்ரீ முஷ்ணம் உள்ளது.



[IMG_0566.JPG]

Mushnam Temple stambha, utsavmurthy and ratha car




16 comments:

  1. இந்த நவராத்திரி ஆரம்ப தினத்தில் வராக மூர்த்தியின் அருள் கிடைக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி.

    அனைவருக்கும் நவராத்திரி சிறப்பு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வழக்கம் போல் அருமை!

    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்.

    ReplyDelete
  3. வெங்கட் நாகராஜ் said...
    இந்த நவராத்திரி ஆரம்ப தினத்தில் வராக மூர்த்தியின் அருள் கிடைக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி.

    அனைவருக்கும் நவராத்திரி சிறப்பு வாழ்த்துகள்./

    தங்களுக்கும் தங்கள் இனிய குடும்பத்தினருக்கும் நவராத்திரி சிறப்பு வாழ்த்துகள்.

    கருத்துரைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  4. middleclassmadhavi said...
    வழக்கம் போல் அருமை!

    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_28.html - உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். முடிந்த போது பார்க்கவும்./

    அருமையாய் வலைச்சரத்தில் அறிமுகத்திற்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நவராத்திரி வாழ்த்துக்கள்மற்றும் வலைச்சர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. பூரண வரமருளும் பூவராக சுவாமியை தரிஸித்தோம். சந்தோஷம்.

    வலைச்சரத்தில் மீண்டும் அடையாளம் காட்டப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வராக மூர்த்தியின் அருளை கிடைக்கப் பெற்றோம்.

    நவராத்திரி வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. படங்கள் என்னை மிகவும் கவர்கின்றன. நீண்ட நேரம் ரசித்தேன்.

    ReplyDelete
  9. ஸ்ரீமுஷ்ணம் என்றால் என் நினைவுக்கு வருபவர் ராஜாராவ்தான்(மிருதங்கம்).
    பூவராக ஸ்வாமி பற்றி இப்போது தெரிந்து கொண்டேன்.அருமை;நன்றி.

    ReplyDelete
  10. முழுமையான தகவல்கள்.படங்கள் நன்று.

    ReplyDelete
  11. வழக்கம் போல் அருமை...இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அற்புதம்
    உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.
    இதில் உள்ள கோவில், கண்ணைக்கவரும் சிற்பங்கள் மிக மிக அருமை.
    எனது முகநூல் பக்கத்தில் உங்கள் பதிவை பகிர்ந்திருக்கிறேன்.
    உங்களுக்கு கோடி புண்ணியம் அம்மா.

    ReplyDelete
  13. wow
    Fentastic writing Rajeswari.
    I enjoyed ward by ward.
    Fentastic pictures.
    i really really Thanking you dear for your dedicated issues.
    I enjoyed well.
    viji

    ReplyDelete
  14. வழக்கம் போல படங்களோட கலக்கிடீங்க

    ReplyDelete