Wednesday, August 7, 2013

வாராஹி நவராத்திரி


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா 
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே 
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே. 
  
பைரவன் சிவனின் துணைவியானதால் பைரவி, 

பிரம்மா விஷ்ணு சிவன் முருகன் இந்திரன் எனும் ஐந்து கடவுளர்களின் சக்தி வடிவான அழகியென்பதால் பஞ்சமி, 

கைகளில் பாசக்கயிறும் அங்குசமும் தாங்குவதால் பாசாங்குசை, 

ஐவகை மலரம்புகளை ஏந்தியதால் பஞ்சபாணி, 

தீயோரின் உயிரைக்குடிப்பதால் சண்டி, 

காலன் (காலபைரவன்) எனப்படும் சிவனின் சக்தியானதால் காளி, 

ஒளிமிக்க வைர இடையணி அணிவதால் வயிரவி, 

சூரிய சந்திர மண்டலங்களை ஆபரணங்களாகக் கொண்டதால் மண்டலி, 

பலவித மாலைகள் அணிவதால் மாலினி, 

சூலமேந்தி உலகைக் காப்பதால் சூலி, 

வராக அவதாரத்தின் சக்தியென்பதால் வராகி… 

என்று குறையில்லாத வகையில் நான்கு வேதங்களிலும் போற்றப்படும் அன்னை அபிராமியின் பெயர்களைச் சொல்லி வழிபடுவோம்.
ஆடி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி. வாராஹி நவராத்திரியாக தேவி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது. 
பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, வாராஹி, போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாசேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ முதலான நாமாக்களைக் கூறி வாராஹியை வழிபட  துயர்கள் யாவும் தூசாய்ப் பறந்துவிடும். 
வாராஹி மாலை எனும் தமிழ்த்துதி, நிக்ரஹாஷ்டகம், அனுக்ரஹாஷ்டகம் என்னும் வடமொழி துதி ஆகியவை புகழ்பெற்றவை 

கோலாம்பா என்றும் வழிபடப்படுகிறாள் வாராஹி 
என்ன பேசுவது என நடுக்கம் வந்தால் வாராஹி என நினைத்தால் வார்த்தைகள் தானே வரும். 

காட்டுப்பன்றியின் முகத்தோடு அழகிய பெண்ணின் உடலுடன் எட்டுக் கைகளோடு காட்சி தரும்  வாராஹி ஏந்தியுள்ள கலப்பை, நான்கு விதங்களாகச் செயல்படுகிறது. 
முதலாவதாக கடினமான பூமியைப் பிளந்து, 
இரண்டாவதாக ஆழமாக உழுது 
மூன்றாவதாக மண்ணை மிருதுவாக்கி, 
கடைசியில் அதிக பயிர்கள் செழித்து வளர்ந்து, அதனால் நமக்கு உணவு கிடைக்கும்படி செய்கிறது. 
அதுபோல், நாம் உண்ட உணவு செரிக்காமலிருந்தாலும் அதையும் உழுது உணவைப் பக்குவப்படுத்தி மிருதுவாக்கி, திசுக்கள் வளர உதவி செய்கிறது.
நம் ஐம்புலங்களாலும் நுகரும் இறுகிய மனதையும் தெளிவில்லா புத்தியையும் மிருதுவாக்கிமென்மையான நெஞ்சத்தில் அன்பு வளரவும், தெளிவடையும் புத்தியில் இறை உணர்வு வளரவும் வழி வகுக்கிறது. 
பல பிறவிகளின் கர்ம வினையால் கெட்டிப்பட்ட ஆன்மாவை பூமியில் புதைந்துள்ள கிழங்கைக் கலப்பையால் அகழ்ந்து மேலே கொண்டு வருவதைப்போல், ஞானக்கலப்பையால் நம் ஆத்மாவைத் தோண்டி ஞானம் ஏற்படும்படியும் செய்கிறது.

லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்துக்கும் தலைவியாக தண்டநாதா எனபோற்றப்படும் வாராஹி தேவி திகழ்கிறாள்..! 

பல்வேறு வடிவங்களில் வழிபடப்படும் வாராஹி. லலிதா தேவியின் ஸ்ரீபுரத்தின் 16-வது பிராகாரமான மரகத மணியாலான பிராகாரத்தில் வசிப்பவள். 

மகாபத்மாடவீ எனும் கோடிக்கணக்கான தாமரை மலர்கள் பூத்த தடாகங்கள் உள்ள அந்தப் பிராகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் சர்வாலங்கார பூஷிதையாக அருள்பவள். 

ஆராதனைக்குரியதும், அமைதி, வளம், ஆரோக்கியம் போன்றவற்றைத் தரக்கூடிய வளமான பகுதியானதுமான அப்பகுதியில் வசிப்பதால் வாராஹி தன்னை வழிபடுவோரின் வாழ்வையும் வளம் கொழிக்கச் செய்கிறாள்.

வாராஹி தேவியின் நிவேதனத்தில் பூமக்கடியில் விளையும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றோடு கட்டாயமாக பூண்டும், வெங்காயமும் சேர்த்த பலகாரம் இடம் பெற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. பூஜை முறை 

 சர்க்கரைப்பொங்கல், வெல்லம் சேர்த்த பாயசம், மிளகு, சீரகம் கலந்த தோசை, தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்ந்த ஆமைவடை, வாசனைப் பொருட்கள் சேர்த்த எருமைப்பால், எருமைத் தயிர், எள்ளுருண்டை, தயிர்சாதம், மொச்சை சுண்டல், தேன் போன்றவையும் வாராஹிக்கு உரிய நிவேதனங்கள். 

இரவு நேர பூஜையும் வெண்தாமரையும், செந்தாமரையும் வாராஹிக்கு உகந்த மலர்கள்.

வழக்குகளிலிருந்து விடுபட, 
மனம் ஒருமைப்பட, 
வாக்குபலிதம் பெற, 
எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க வாராஹியருள் உதவும். 
எலும்பிற்கு அதிதேவியான வாராஹி கோபமுற்றால், வாதமும் பித்தமும் ஏற்படும். 
மயில் தோகை விசிறியால் விசிறி பிரார்த்தனை செய்து, முறுக்கு, வெள்ளரிக்காய் நிவேதனம் செய்து, மக்களுக்கு விநியோகித்தால் நலம் பெறலாம். 
பஞ்சமி நாளில் தேங்காயை இரண்டாக உடைத்து அந்த மூடிகளில் நெய் ஊற்றி விளக்கேற்றி இவளை வணங்கினால், கேட்ட வரங்களைப் பெறலாம்.

17 comments:

  1. வாராஹி நவராத்திரி பற்றிய தகவல்களுக்கு நன்றி. படங்கள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  2. rare pictures of varagi thanks for sharing

    ReplyDelete
  3. வாராஹி தேவியின் தகவல்கள், படங்கள் அனைத்தும் அருமை. நன்றி.

    ReplyDelete
  4. வாராஹி தேவியைப்பற்றி நிறைந்த தகவற் பதிவு. படங்களும் அருமை!

    பகிர்விற்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வாராஹி நவராத்திரி அம்மனுக்கு அடியேனின் வந்தனங்கள்.

    >>>>>

    ReplyDelete
  6. //ஆடி மாத அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் ஆஷாட நவராத்திரி. வாராஹி நவராத்திரியாக தேவி உபாசகர்களால் கொண்டாடப்படுகிறது. //

    பயனுள்ள தகவல்கள்.

    >>>>>>

    ReplyDelete
  7. சிறப்பான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  8. முதல் படத்தில் உள்ள அம்மனின் புடவைக்கலரும், புடவைக்கட்டும், ஆபரணங்களும், கையில் வைத்துள்ள கரும்பும் அடிக்கரும்புச்சாறு போல, இனிப்போ இனிப்பாக உள்ளது.

    படத்தேர்வுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  9. கடைசி படத்தில் அம்மன் சிறு குழந்தையாக பாவாடையுடனும் பூவாடையுடனும் ..... அதுவும் அழகோ அழகு தான்.

    “சின்னஞ்சிறு பெண் போலே ..... சிற்றாடை இடையுடுத்தி”

    >>>>>

    ReplyDelete
  10. //மயில் தோகை விசிறியால் விசிறி பிரார்த்தனை செய்து, முறுக்கு, வெள்ளரிக்காய் நிவேதனம் செய்து, மக்களுக்கு விநியோகித்தால் நலம் பெறலாம். //

    மயில் தோகையால் வருடிக்கொடுத்தது போன்ற அற்புதமான செய்திகள். !

    தினமும் இதுபோல எதையாவது சொல்லிண்டே இருங்கோ. இதுவரை ஒரு விநியோகமும் நீங்க எனக்குச் செய்தது இல்லை.

    ஏராளமான சமாச்சாரங்கள் பெண்டிங் உள்ளன..

    வாயைத்திறந்து ஏதாவது சொன்னால் தானே! [வாயில் கொழுக்கட்டை!]

    என்னவோ போங்க ! ;(

    நானாக எதுவும் கேட்பதாக இல்லை.

    கேட்டுக்கேட்டுச் சலித்துப்போய் விட்டேன். ;(

    >>>>>

    ReplyDelete
  11. வழக்கம் போல மிக அழகான அருமையான படங்கள் + விளக்கங்களுடன் கூடிய பதிவு.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ’ஆறு மனமே ஆறு .... அந்த ஆண்டவன் கட்டளை ஆறு .....’

    வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க இன்னும் ஆறே ஆறு பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன.

    மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ooooo 994 ooooo

    ReplyDelete
  12. வராஹி அம்மனை வழிபடுவோர்க்கு உதவியாக நிறைவான தகவல்கள். நல்ல பதிவு .. படங்கள் மிகவும் அருமை!..

    ReplyDelete
  13. வராஹி அம்மனைப் பற்றிய தகவல்களும்... படங்களும் அருமை..

    ReplyDelete
  14. வராஹி நவராத்திரி பற்றித் தெரிந்து கொண்டேன்;நன்றி

    ReplyDelete
  15. வராஹி நவராத்திரி செய்திகளும் படங்களும் அருமை.

    ReplyDelete
  16. வராகி தகவல்கள் படங்கள் அருமை நன்றி

    ReplyDelete
  17. வராஹி நவராத்திரி நாட்களைபோற்றும் நிறைவான பகிர்வு.

    அன்னையவள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவோம்.

    ReplyDelete