Wednesday, December 11, 2013

பாறை ஸ்ரீ மாங்கரை அம்மன்




கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும்,
கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,

சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும்,
தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,

தொலையாத நிதியமும், கோணாத கோலும்,ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில்அன்பும்உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,

அலை ஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே, ஆதி கடவூரின் வாழ்வே,
அமுத ஈசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி அருள்வாய் அபிராமியே!


கேரள மாநிலத்தில் பாறை என்னும் பகுதியில்  மாங்கரை அம்மன். ஆலயம் வடக்கு நோக்கி இருக்கிறது. மிகவும் பழமை வாய்ந்த  கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது!

அழகான கணபதியின் கோபுரத்தில் ஔவையார்  கணபதி பூஜை செய்யும் கோலம் கருத்தைக் கவருகிறது ..!

அன்னையின் அழகைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. கருணையான கண்கள், மெல்லிய உதடு, புன்னகை பூக்கும் முகம். கண் கொட்டாமல் பார்த்து மகிழத் தோன்றுகிறது.

அன்னையின் வலப்புறம், கிழக்குப் பக்கம் பார்த்து லிங்க வடிவில்எழுந்தருளியிருக்க்கும் சிவனுக்கு  பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
பிரணவ மந்திரம் ஓதிய அவர் செல்ல மைந்தன் முருகன், வள்ளி தெய்வானையுடன் தம்பதி கோலமாக நின்று அருள்புரிகிறார்.

 விசாலாட்சி, நடராஜர், தட்சிணாமூர்த்தி ,திருமகள், நவக்கிரஹ சன்ன்தி  , கருப்பண்ணசாமி , பைரவர் சன்னதிகள் உண்டு ..!

சண்டிகேஸ்வரர் சன்னதியின் அருகில் மூலவர் விமானத்தைப்பார்க்க  மேற்கூரையில் சிறிய  திறப்பு உண்டு ..! 

 மாங்கரை அம்மன் எழுந்தருளியது ஓர் அதிசய வரலாறு! 

அந்தக் காலத்தில், வணிகர்கள் சிலர் திருச்சியிலிருந்து கேரளாவுக்கு வியாபார நிமித்தம் அடிக்கடி செல்வது வழக்கம். அவர்கள் இங்கிருந்து பாசிப்பயற்றை எடுத்துச் சென்று விற்று, அங்கிருந்து குறுமிளகு வாங்கி வருவார்கள். 
திரும்பி வரும்போது களைப்பு ஆற பாறை ஊரில் வந்து இரவில் தங்கிய
 சமயம் , ‘ஜில் ஜில்’ என்று கொலுசுச் சத்தம் கேட்டது. அந்த இரவில், ஒரு சிறுமி வந்து நின்றாள். கொல்கொல்லென்று இருமினாள். 

“யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?” என்று சிறுமியைக் கேட்ட வியாபாரியிடம்“ தலைவலி. கூடவே இருமலும். தலைக்கு மிளகுப் பற்று போட்டுக்கொள்ளக் கொஞ்சம் மிளகு வேண்டும்!” என்றாள்.

“எங்களிடம் ஏது மிளகு? இந்த மூட்டைகளெல்லாம் பாசிப்பயறு மூட்டைகள்.  என்றான் வியாபாரி. சிறுமி, முகத்தில் புன்னகை தவழ அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

மறுநாள் காலை. வியாபாரிகள் மிளகு மூட்டைகளுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பின், தங்கள் இடமான நாகப்பட்டினத்திற்கு வந்து மூட்டைகளைப் பிரித்தனர். ஆனால், அவற்றில் மிளகு இல்லை. எல்லாம் பச்சைபயறாக இருந்தன.

“ஐயோ! என்ன காரியம் செய்தோம்! சிறுமியிடம் பொய் சொல்லிவிட்டோமே! அந்தச் சிறுமி கடவுள் வடிவமாக இருப்பாளோ?” என்று வருந்தி எல்லோரும் அன்னையிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். 

சிறுமி வந்த இடத்தில் அன்னைக்கு ஆலயம் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டனர். 

உடனே, என்ன ஆச்சரியம்! மூட்டைகளில் இருந்த பச்சைப்பயறெல்லாம் குறுமிளகாய் மாறின! வணிகர்கள் தம் வாக்கைக் காப்பாற்ற பாறையில் அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டினர்.

இந்த வரலாறு படங்களாக் அமைத்திருக்கிறார்கள்..!

ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் இல்லத்தில் வைத்து பூஜித்த அருமையான ஐயப்பன் விக்ரஹம் , தனி சன்னதியில் அமைத்திருக்கிறார்கள்..

வீட்டில் விக்ரஹம் வைத்துக்கொள்ளக்கூடாது என்று ஐதீகப்படி இந்த கோவிலுக்கு கொடுத்துவிட்டாராம்..!

கோயில் காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு 11 மணி வரை பூஜை, அபிஷேகம் எல்லாம் நடைபெறுகின்றன. 

பின், மாலை ஐந்திலிருந்து இரவு எட்டு மணி வரை. உற்சவமூர்த்தியின் ஊர்வலம் அடிக்கடி நடைபெறுகிறது. 

பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சதுர்த்தி, கிருத்திகை எல்லாம் மேளதாளத்துடன் கொண்டாடப்படுகின்றன. 

ஆடியில் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகளைப் பார்க்கக் கூட்டம் அலைமோதுகிறது. 

விஷு பண்டிகையும் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. 

முருகனின் விழாவான சூர சம்ஹாரம்,  கல்யாண உற்சவம் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். 

மார்கழி மாதம் முழுவதும் விழாதான். முதல் நாள் கொடியேற்றம், கடைசி நாள் ஊஞ்சல் சேவை, பின் பஞ்ச மூர்த்தி ஊர்வலம். அதில் சிவன் யானை வாகனத்தில் எழுந்தருளுகிறார். 

நந்தி வாகனத்தில் சந்திரசேகரர் - சௌந்திரவல்லி காட்சியளிக்க, மூஷிக வாகனத்தில் கணபதியும், காமதேனு வாகனத்தில் பார்வதியும் தரிசனம் அளிக்கிறார்கள். 
எல்லாவற்றையும் பார்க்கக் கோடிக்கண்கள் வேண்டும்!

கடைசியில், சக்கர வாகனத்தில் மாணிக்கவாசகரும் ஊர்வலம் வருகிறார்.

இந்தக் அம்மனைப் பிரார்த்திக்கத் தீராத வினைகளும் தீர்ந்து பாபங்கள், தோஷங்கள் நீங்கி நோய்களும் மறைந்து போய்விடுகின்றனவாம்.

மனோரஞ்சித பூக்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனம் உண்டு ..!

கரும்பு சாறு எடுத்து அபிஷேகம் செய்ய 
கரும்பு சாறு பிழியும் இயந்திரம் உண்டு ..!

கோவிலுக்கு முன்புறம் உள்ள பெட்டிக்கடையில் ஜீரக சோடா
அருமையாக இருக்கும் ..!

கோவிலில் சமையலுக்கு நிறைய தேங்காய்கள் பயன்படுத்த உடைக்கும் போது கிடைக்கும் தேங்காய் தண்ணீரை ஒரு பெரிய பாத்திரத்தில் பிடித்து வைத்திருப்பார்கள்.. அத்தனை சுவையாக இருக்கும் ..!

பிரசாதமாக சுக்கு மணம் கமழும் 
வெல்ல அவல் தேவம்ருதமாக மணக்கும்...!

 திருப்பூரைச் சேர்ந்த செட்டியார் சமூகம் பராமரித்து வருகிறது.
அவர்கள் வருவாயில் பன்னிரண்டில் ஒரு பங்கு இறைவனுக்குச் சேர்ப்பதால் அவர்களுக்கு பன்னிரண்டாம் செட்டியார்கள் என்ற பெயர் ஏற்பட்டது...இவர்கள் சாப்பிடும் போது இடையில் எழுந்து செல்லமாட்டார்களாம் .. அப்படி தவிர்க்கமுடியாமல் செல்லநேரிட்டால் பின் அந்த உணவை ஏற்கமாட்டார்களாம் .. நாய்க்குத்தான் போடுவார்களாம்..!

தலைமுறைதாண்டிய வியாபார - குடும்ப  நண்பர்களானதால் திருவிழாக்களுக்கு அழைப்பு அனுப்புவார்கள்..

கோவில் வளாகத்திற்குள்ளேயே கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு குடியுருப்புகளும் , வந்து தங்குபவர்களுக்கு பெரிய  ஹாலும் குளியலறை வசதிகளும் உண்டு ..!

நான்கு தலைமுறை அந்தணர்களை தரிசிக்கும் பேறு கிடைத்தது ..

ஏக தின லட்சார்சனையாக லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்துகொண்டதுண்டு..!

கோவில் வளாகத்திற்குள் மரங்கள் சூழ்ந்த இயற்கை எழில்மிக்க சோலைகளின் நடுவில் குளம் அமைந்திருக்கிறது..

எங்கள் காரில் எப்போதும் மாற்று உடைகள் வைத்திருப்போம் .. பயணங்களில் குளிப்பதற்கான ஆறு போன்றவை பார்த்தால் குழந்தைகள் குளிக்க அனுமதிப்போம் ..
அங்கே குளித்துக்கொண்டிருந்த .. பெண்களோ அடுத்த படியில் கால் வைக்காதீர்கள்..மிகவும் ஆழத்தில் இருக்கிறது .. உண்மையில் இது கிணறு .. தண்ணீர்பாம்புகளும் அதிகம் .. எங்களுக்கு பழக்கமானதால் எங்களால் நீந்தி குளிக்கமுடிகிறது..புதிதாக நீங்கள் வந்திருப்பதால் நான்கு படிகளுக்கு மேல் இறங்காதீர்கள் என்று எச்சரித்தார்கள்..அப்போதிலிருந்து தீர்த்தமாக தெளித்துக்கொள்வதோடு சரி.. குளிக்க முயலுவதில்லை..!

என் கணவர் இந்த குளக்கைரையில் அமர்ந்து
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி
மாங்கரை குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்

என்று அருமையாகப்பாடுவார்..

அந்தச்சூழலுக்கும் அந்தப்பாட்டுக்கும் அத்தனை பொருத்தமாக இருக்கும் ..!

கோவையிலிருந்து மாங்கரை கோவிலுக்குச்செல்லும் வழி மிகவும் பசுமை மிக்கதாக இருக்கும் ..

செம்பருத்திப்பூக்கள் அந்த மண்ணில் செக்கச்செவேல் என்று 
செழித்து பூத்திருக்கும்..

சித்திரை மாதங்களில் மரங்களில் இலைகளே தெரியாமல் மஞ்சள் வண்ணத்தில் கொன்றைப்பூக்கள் , சிவப்பு வண்ணத்தில் மேபிளவர் பூக்கள் , சுற்றிலும் பச்சைப்பசுமையாக வயல்கள் , பச்சை இலைகளின் பின்னனியில் பவழங்களைக்கோர்த்தது போன்ற ஆலமரங்கள் என கண்கொள்ளாக்காட்சியாக கருத்தைக் கவரும்..!

சில இடங்க்ளில் மருதாணி செடிகள் வேலியாக செழித்திருக்கும் ..! .. வாகனத்தை நிறுத்தி பறித்துக்கொண்டிருந்தோம் ..

வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண் அரிவாளுடன் ஓடிவந்து ஒரு கிளை வெட்டி கையில் கொடுத்து வீட்டில் போய் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.. நன்கு சிவக்கும் அரிய வகை இது என்று கள்ளமில்லாமல்  சிரித்த்வாறே தந்தார்...!

19 comments:

  1. ///சின்னஞ்சிறு பெண்போலே ///
    பாடலுக்கு உகந்த இடங்கள்தான்
    அருமையான படங்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. வணக்கம்
    அம்மா

    பதிவு மிகச்சிறப்பு. படங்களும் மிக அருமை வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மாங்கரை அம்மன்
    நீக்கமற நெஞ்சம் உறைந்தாள்...
    படங்களும் தகவல்களும் அருமை.

    ReplyDelete
  4. விளக்கங்களும், படங்களும் மிக அருமை. அருமையான பதிவு. கோவிலுக்கு செல்லும் வழி பற்றி ஒன்றும் சொல்லவேயில்லையே.

    ReplyDelete
  5. விடியற்காலையில் அழகான அம்மன் தரிசனம். மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. அருமையான படங்கள்... சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. மிளகு பயறானதும் மீண்டும் மிளகானதும் அற்புதம். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. மிளகு- பயறு- பயண விவரணம் அனைத்தும் நன்று
    இனிய வாழ்த்து தங்கள் பணிக்கு.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  9. இதுவரை தெரியாத, அறியாத, புதிய செய்தியாக கேரளப் ’பாறை’ மாங்கரை அம்மன் பற்றிப் பல தகவல்கள் அறிந்து கொண்டோம். மகிழ்ச்சி ;)

    >>>>>

    ReplyDelete
  10. சின்னஞ்சிறு சிறுமியாய வந்து மிளகு கேட்ட அம்பாளின் செயல் ரஸிக்க வைத்தது. ;)

    >>>>>

    ReplyDelete
  11. ஜீரக சோடா, தேங்காய் தண்ணீர், சுக்கு மணம் கமழும் வெல்ல அவல் .... ஆஹா கேட்கவே சாப்பிட்டது போன்ற திருப்தியளிக்கின்றன. ;)

    >>>>>

    ReplyDelete
  12. ’சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை உடையுடுத்தி ’ ......... மிக அழகான பாடல்.

    அதை அந்த இனிய சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற்றிப்பாடிய தங்களவருக்கு மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். ;)

    >>>>>

    ReplyDelete
  13. சென்ற இடத்தில் சிவக்க வைக்கும் மருதாணி அதுவாகவே தங்களைத்தேடி வந்து கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கும் செய்தி தான். ;)

    >>>>>

    ReplyDelete
  14. படங்கள் எல்லாமே மிக அழகாக உள்ளன. கடைசி படத்தில் அம்பாளின் சிற்றாடை [பாவாடை விசிறி மடிப்பு] கலர் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;)

    o o o o o o

    ReplyDelete
  15. மாங்கரை அம்மன் பற்றிப் படித்ததும் ,உங்கள் மேல் பொறாமை வருகிறது. நல்ல சிவக்கும் அரிய வகை மருதாணி கிடைத்திருக்கிறதே.
    மருதாணி வைத்துக் கொண்டீர்களா? சிவந்ததா?

    ReplyDelete
  16. பாறை ஸ்ரீ மாங்கரை அம்மனின் தகவல்களை அழகிய படங்களுடன் மிகவும் ரசனையுடன் பகிந்தமைக்கு நன்றிகள்.அம்மனின் படங்கள் அழகு.

    ReplyDelete
  17. அம்மனின் வரலாறு சிறப்புக்குரியது... அழகான படங்களுடன்.சிறப்பான பகிர்வு..

    ReplyDelete
  18. படங்கள் ரொம்பவே அழகு.

    ReplyDelete