
புரட்டாசி மாத அமாவாசையே மஹாளயபட்ச அமாவாசையாகும். அதாவது சூரிய- சந்திர கிரகங்களின் சங்கமத்தில் தோன்றுகின்ற சோமாதித்ய (சோம + ஆதித்ய) யதி மண்டலத்தின் தோற்றமாகும்.

சிருஷ்டியின்போது இறைவன் ஜீவன்களது ஜீவசக்தி நிறைந்த கும்பத்தை வைத்து சிருஷ்டியைத் தொடங்குகிறாரோ, அதே போன்று பித்ருக்களின் ஜீவசக்தி அமுதகலசமாக உற்பவிக்கும் இடமே சோமாதித்ய மண்டலமாகக் கருதப்படுகிறது.

முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச் சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதே மஹாளயபூஷித லோகமாகும்

இங்குதான் மஹாளயபட்சத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும் கொண்டாடுகிறார்கள்.
அதாவது, நமது மூதாதையர்களது பித்ரு லோகங்களில் கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளய பட்சமாகும்.
பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு, பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ரு பத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப் பெறுகின்றனர்.


மஹாளய பட்சத்தின் பதினான்கு திதிகளிலும், பித்ருக்கள் நடத்துகின்ற பூஜா பலன்களுக்காக பித்ருக்களின் தேவதையான ஸ்ரீமந்நாராயணனே சோமனாகிய சந்திரனையும் ஆதித்யனாகிய சூரியனையும் இயங்க வைத்து, யதி மண்டலத்தைத் தோற்றுவிக்கிறார்.
இதில்தான் பித்ருக்களுடைய ஜீவசக்தியை இறைவன் யதி மண்டலக் கலசமாய் ஆராதனை செய்து தருகின்றார்.

புரட்டாசி மாத மஹாளயபட்ச அமாவாசையன்று, சர்வகோடி லோகங்களிலுமுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து ஜீவன்களும் தேவதைகளும் பூலோகத்திற்கு வந்து, புண்ணிய நதிக்கரைகளிலும் சமுத்திரங்களிலும் மற்றும் காசி, ராமேஸ்வரம், கயை, அலகாபாத் திரிவேணி சங்கமம், கும்பகோணம் சக்கரப்படித்துறை போன்ற புனித தலங்களிலும் தர்ப்பண பூஜையை மேற்கொள்கின்றனர்.
வசு, ருத்ர, ஆதித்ய, பித்ரு தேவர்களே இந்நாளில் தர்ப்பணம் இடுகின்றனர் என்றால், மஹாளய பட்ச மகிமை சொல்லவும் அரிதன்றோ?
நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத் திற்கு வர இயலாது.
ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக் கின்றனர்.

பொதுவாக அனைத்து அமாவாசை திதிகளிலும் ஸ்ரீ அக்னி பகவானின் பத்தினியான ஸ்வதா தேவியானவள், நாம் இடுகின்ற எள்ளையும் நீரையும் வாங்கி வானத்தில் எங்கெங்கோ உள்ள நீத்தார் உலகங்களுக்கு எடுத்துச் செல்கிறாள்.
ஆனால், மஹாளய பட்ச அமாவாசையில் எல்லா மூதாதையர்களும் சூரிய- சந்திர உலகிற்கு வந்துபோவதால் ஸ்வதா தேவியால் அனைத்து உறவினர்களையும் அங்கு சந்திக்க முடிகிறது.
எனவே மஹாளய பட்ச அமாவாசையில் நாம் சமர்ப்பிக்கும் எள், நீர் ஆகியவற்றை இறந்த நமது உறவினர்களிடையே உடனடியாக அவள் சேர்த்துவிடுகிறாள்.
இறந்த உறவினர்கள் மீண்டும் எந்தப் பிறவி எடுத்தாலும், அந்தப் பிறவியில் அவர்களுக்கு மிக முக்கியமாகத் தேவைப்படுகின்ற காரியத்துக்குத் தேவையான உதவியை, காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு "மாற்றுப் பண்டங் களாக' உருவாக்கித் தந்துவிடுகிறாள் ஸ்வதா தேவி.
புரட்டாசி மாத அமாவாசைக்கு முன்பாக கிருஷ்ணபட்சம் பிரதமையிலிருந்து அமாவாசை வரை பதினைந்து திதிகளிலும் தினசரி தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது.
பித்ரு தர்ப்பணம் என்பது ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரும் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றாகும்.
நமது மூதாதையர்களுக்குரிய அமாவாசை, கிரகணகால, மாதப்பிறப்புத் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாமையால்தான் உலகில் பல துன்பங்கள் உண்டாகின்றன.
எனவே இதுகாறும் செய்யா மல் விட்ட தர்ப்பணங்களுக்கு ஓரளவு பிராயச் சித்தமாக மஹாளயபட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினந்தோறும் தர்ப்பணம் செய்வது அவசியம்.
மேலும் அந்நாட்களில் அன்னதானம் செய்வது வெகு விசேஷமானது! அப்படிச் செய்வது, தர்ப்பண பலன்களைப் பன்மடங்காகப் பெற்றுத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை!
இறந்துபோன மூதாதையர்களின் நினைவாக நாம் அளிக்கும் உணவானது, (இந்த மஹாளயபட்ச காலத்தில்) உடனே அவர்களைச் சென்று அடைவதாய் ஐதீகம்.
நமது மூதாதையர்களுக்கே உரித்தான இந்த தர்ப்பண பூஜையானது பித்ருக்களுக்கு மட்டு மின்றி, நமது வம்சாவளியினரான நமக்குத்தான் பெரிதும் பயன் தருவதாய் உள்ளது. இதனாலேயே மஹாளயபட்சத் திதி வழிபாடு மிகவும் சிறப்புடையதாய் விளங்கு கிறது.
மஹாளயபட்ச பதினைந்து நாட்களிலும், தர்ப்பணத்தைச் செய்யும் தத்தம் கணவன்மார் களுக்கு உதவிபுரிவது ஒவ்வொரு இல்லறப் பெண்ணின் தலையாய கடமையாகும். அதாவது தர்ப்பணத்திற்கான பலகை,
தாம்பாளம், எள், தர்ப்பை போன்றவற்றை எடுத்து வைத்து கணவனுக்கு ஆர்வமூட்டி தர்ப்பணம் செய்ய வைத்தல் என்பது அவளது முக்கிய கடமைகளுள் ஒன்றாகக் கருத வேண்டும்.
பொதுவாக வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலுக்கும், கட்டை விரலுக்கும் (சுக்கிர விரல்) இடையிலுள்ள "பித்ரு- பூம்ய' ரேகைகள் வழியாக தர்ப்பணங்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல்நோக்கி எழும் பிச் சென்று, எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள பித்ரு லோகத்தை அடைகின்றது.
சாதாரணமாக, அமாவாசையன்று கீழிருந்து மேல் செல்வதே இந்த "பித்ரு லோக- அந்தர ஆகர்ஷண' சக்தியின் தெய்வீகத் தன்மையாகும். மஹாளயபட்ச அமாவாசையன்று இச்சக்தியானது மிகவும் அபரிமிதமாகப் பெருகுகின்றது.
பித்ருக்களுக்கு தர்ப்பணமிடும்போது பசுந்தயிர் கொண்டு தர்ப்பணமிடுவது வெகு விசேஷமானது.
மேலும் அவர்களுக்கு ஆத்ம திருப்தியளிப்பதாய் கருதப்படுவது
புடலங்காயாகும். (பித்ரு லோகத்திலுள்ள மூலிகையாய் விளங்குவது புடலங்காயே; இதன் நிழலில்தான் பித்ரு- தேவர்கள் இளைப்பாறுவதாய் ஐதீகம்.)
ஆக, அதியற்புதமான- தெய்வீக ஆற்றல்களைக் கொண்ட நமது பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள், திவசங்கள், படையல்களை முறையாக அளித்து, பல்லாயிரக்கணக்கான கர்ம வினைகளுக்குப் பரிகாரம் தரும் மஹாளய பட்ச தர்ப்பண தான- தர்மங்களை நிறைவேற்றி நல்வழி காணலாம்..!
!வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.
மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம்.
திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். ""மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது'' என்பது பழமொழி.
இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் - குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான்.

இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.





மஹாளய அமாவாசை பற்றிய
ReplyDeleteஎண்ணிலடங்கா தகவல்கள் ..
அறியப்படுத்தியமைக்கு நன்றிகள் பல சகோதரி...
மகாளயசட்ச திதி வழிபாடு அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
எத்தனை தகவல்கள்.... வடக்கிலும் இந்த நாட்களில் திதி கொடுப்பதுண்டு.
ReplyDeleteமகாளயபட்ச திதிவழிபாட்டில் பெண்களின் பங்கை அழகாய் கூறினீர்கள்.
ReplyDeleteஎல்லா தகவல்களும் அனைவருக்கும் பயன்படும்.
நன்றி.
இந்த விசேட அமாவாசை பற்றிய தகவலுக்கு மிக மிக நன்றி.
ReplyDeleteஇனிய பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
அறியாத பல தகவல்கள் இன்றறிந்தேன்.
ReplyDeleteமிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோதரி!
விழிப்புணர்வு தரும் பதிவு. சில சம்பிரதாயங்கள் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவையாக உள்ளன. சந்ததியினருக்கு அறியச் செய்வது சிறப்பு.
ReplyDelete