வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தேஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள், மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக் கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக் குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள் இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
அழகே உருவாக அருளாட்சி நடத்தும் அன்னை சாரதாம்பாள் ஆலயத்திற்குள் உள்ள பிள்ளையார் மற்றும் முருகன் திருமேனிகள் வெள்ளை சலவைக்கல்லால் ஆன சிறப்பம்சத்துடன் வெள்ளை நிறத்தில் பளீரென காட்சி தரும் இந்தத் திருமேனிகள் சிலிர்க்க வைப்பவை.
கருவறையில் மூலவரான அன்னை சாரதாம்பாள் பத்மாசன நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் அருள்பாலிக்கும் அன்னையின் திருமேனி வெண்பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், அன்னையின் முகம் வெள்ளை வெளேரென்ற நிறத்துடன் ஒளிர்விடுகிறது. . .
அம்பாள் கரத்தில் இருக்கும் புத்தகம் கல்வியையும், ஜபமாலை தியானத்தையும், கிளி ஞானத்தையும், அமர்த கலசம் அழிவற்ற நிலையான முக்தியையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது..!
அன்னையின் முன் ஸ்ரீசக்கரபூர்ண மகா மேரு அருள் பொழிகிறது..!
சிவ–விஷ்ணு பேதம் களையும் தலமாக விளங்குகிறது.
அன்னை சாரதாம்பாளின் கருவறையில் சிறிய அளவில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி உள்ளது. பிரதோஷ நாட்களில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது..
அனைத்து பௌர்ணமி நாட்களிலும் ஸ்ரீ சக்கர நவாவரண பூஜை , சுமங்கலி கன்னியா பூஜை ஆகியவையும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
சுமங்கலி பெண்களுக்கு புடவை, சட்டைத்துணி,
மங்கலப் பொருட்களும் , சிறுமிகளை அம்மனாகப் பாவித்து
பாவாடைத் துணியையும் அன்பளிப்பாகத் தருகின்றனர்.
அன்னை சாரதாம்பாளுக்கு ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அன்று கண்ணாடி வளையல்களால் அலங்காரம் செய்வார்கள். ஒரு லட்சத்து இருபதாயிரம் வளையல்களைச் சரங்களாக அமைத்து, அம்பாளைச் சுற்றி வண்ண வண்ண வளையல்களால் சரங்களை அலங்கரித்திருப்பது தரிசிப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.
ஸ்ரீசக்கர மேருவிற்கும் பட்டாடை அணிவித்து,
வளையல்களை சரங்களாக அணிவித்து அழகு பார்க்கிறார்கள்.
இந்த வளையல்களையெல்லாம் பக்தர்கள் அம்பாளுக்கு
காணிக்கையாக அளிக்கிறார்கள்.
அம்பாளுக்கு அணிவித்த வளையல்களை
ஆடிப்பூரத்திற்குப்பின் பிரசாதமாக வழங்குகிறார்கள்.
சாரதாம்பாள் ஆலயத்தில் வருடத்தில் நான்கு நவராத்திரி விழாக்கள் ஒவ்வொரு முறையும் 9 நாட்கள் கொண்டாடப்படுகின்றன...
தை–மாசி மாதத்தில் ராஜ மாதங்கி நவராத்திரியும்,
ஆடி மாதத்தில் வாராகி நவராத்திரியும்,
பங்குனி–சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும்,
புரட்டாசியில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படும் நாட்களில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளும், மாலையில் யந்திரத்தை வைத்து ஆவரண பூஜையும் நடைபெறும். அன்னைக்கு தினசரி லலிதா சகஸ்ரநாம பாராயணமும் செய்யப்படுகிறது.
தை மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறுகிறது.
மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கூட்டு வழிபாடு நடைபெறுகிறது. பெண்கள் கலந்து கொண்டு குங்கும அர்ச்சனை செய்து பயன்பெறுகின்றனர்.
புரட்டாசி மாத நவராத்திரியின் கடைசி நாளன்று, உலக நன்மைக்காக அன்னையின் முன் சண்டிஹோமம் நடத்தப்படுகிறது.
அன்னை சாரதாம்பாள், தத்துவ ரூப சரஸ்வதி, கர்வமற்ற வீணை இல்லாத சரஸ்வதி என்று போற்றப்படுகிறாள்.
நவராத்திரி விழாவின் அலங்காரத்தின்போது மட்டும் வீணையுடன்
அன்னை காட்சி தருவாள்.
திருமணமாக வேண்டி கன்னிப் பெண்கள் அம்பாளிடம் தங்கள் கோரிக்கைகளைக் கூறி வேண்டிக் கொள்கின்றனர். மணமானதும் அன்னைக்கு புடவை கொண்டு வந்து சாத்துகின்றனர். இந்த புடவைகளை ஆலய நிர்வாகம், குடிசை வாழ் பெண்களுக்கு தானமாகத் தந்து உதவுவது பாராட்ட வேண்டிய செயலாகும்.
கல்விச் செல்வம் வேண்டி ஏராளமான மாணவர்கள் அன்னையை வேண்ட, அவர்களின் பிரார்த்தனைகள் பலிப்பதும் கண்கூடாகக்காணலாம் ..
தினசரி காலை 6 மணிக்கு இரண்டு மயில்கள் இந்த ஆலயம் வந்து, இறைவியின் விமானத்தின் அருகே சுமார் ஒரு மணி நேரம் அமர்ந்து மெல்லிய குரல் கொடுத்துவிட்டு பின் பறந்து சென்று விடுவது இன்றும் காணக்கூடிய அதிசய காட்சியாகும்.
தினசரி 3 கால பூஜை நடக்கும்.
ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் இருந்து, அம்மா மண்டபம் சாலையில் அமைந்துல்ள இந்த ஆலயத்திற்கு நடந்தே சென்று விடலாம்.
கல்வி கண்ணை திறக்கவும், கன்னியருக்கு விரைந்து
மணம் நடந்தேறவும் அன்னை சாரதாம்பாள் அருள்புரிவாள் !
திருச்சி தில்லை நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள அன்னை சாரதாம்பாள் திருக்கோயில், பாம்பன் சுவாமிகளால் உருவானது.
பாம்பன் சுவாமிகள் திருச்சிக்கு வருகை தந்தபோது இப்பகுதி முழுவதும் வயல்வெளியாக இருந்தது. இந்த இடத்தினைப் பார்த்த சுவாமிகள் இங்கு தெய்வத்தின் அருள் நிறைந்த பகுதியாக இருப்பதை அறிந்தார். கோயில் கட்டும்படி உடனே தனது பக்தர்களுக்கு அருளாணை இட்டார். அவ்வாறு உருவான இந்தக் கோயிலும், இதன் சுற்றுப்புறமும் இப்போது பரபரப்பு மிக்கதாக உள்ளது.
கோயிலின் மூலவராகத் திகழும் சாரதாம்பாளின் இடதுபுறத்தில் தனிச் சந்நதியில் பாலமுருகன் நின்ற கோலத்தில் தனித்து எழுந்தருளியிருக்க, முருகன் காலடியில் பாம்பன் சுவாமிகள் அமர்ந்த நிலையில் காட்சி தருவது அரிய தரிசனம்
சாலையை ஒட்டியுள்ள கோபுர வாசலிலிருந்து பார்த்தாலே மேற்கு திசை நோக்கி அருள்புரியும் சாரதாம்பாளின் பளிங்குத் திருவுருவம் நன்கு தெரிகிறது.
கோயிலுக்குள் நுழைந்ததும், பன்னிரண்டு தூண்கள் கொண்ட
பெரிய அர்த்த மண்டபத்தின் கன்னி மூலையில்
விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
கருவறையின் வலதுபுறத்தில் தனிச் சந்நதியில்
பாலகணபதி எழுந்தருளியுள்ளார்.
வடக்குக்குச்சுற்றில் விஷ்ணு துர்க்கை தரிசனம் அருள்கிறாள்.
கிழக்குப் பகுதி சுற்றில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே நவகிரகங்கள் தத்தமது பத்தினியரோடு அவரவர் திசை பார்த்து வீற்றிருக்கிறார்கள். நீளாதேவியுடன் காட்சி தரும் சனிபகவான், நர்த்தன கணபதியைப் பார்த்துள்ளதால் இங்கு எழுந்தருளியுள்ள சனிபகவானை வழிபட அனைத்துத் தோஷங்களும் நீங்கும் என்பது சிறப்பு...
கருவறையின் பின்புறம் கிழக்குப் பகுதியில், நடுநாயகமாக மகாலட்சுமி கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்க, அவருக்குப் பக்கத்தில் கு ருவாயூர் கிருஷ்ணன் சிறிய திருவுருவில் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
தென்பகுதியில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில்
கைகூப்பிய நிலையில் தனித்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
தெற்குப்புற சுவர்ப் பகுதியில் சந்தோஷி மாதாவையும்
தரிசித்து பலன் பெறலாம்.
பொதுவாக அன் னையின் எதிரில் சிங்க வாகனம் இருக்கும். இங்கோ அன்னையின் எதிரில் எழுந்தருளியுள்ள நந்தி நெற்றியில் சிவபிரானின் சின்னம் உள் ளது தனிச்சிறப்பாகும். நந்தியின் பின்புறம் சிறிய பலிபீடம் உள்ளது.
இந்த நந்தி தியான நந்தீஸ்வரராகப் போற்றப்படுகிறார்.
பிரதோஷ கால வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது.
அன்னை சாரதாம்பாள் அறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
நேற்று எம்பெருமானின் நினைவாகவே இருந்தது.
ReplyDeleteதிருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் மற்றும் தாயாரை தரிசித்து அமர்கையில் அன்னை சாரதாம்பாளின் நினைவு வந்தது! இன்று பதிவாக தங்கள் தலத்தில்!
இறைவனின் கருணையினை என்னவென்று சொல்வது! அன்னையை தரிசிக்கச் செய்த தங்களுக்கு நன்றி!
இனிய பதிவு. அன்னை சாரதாம்பிகையின் அருள் முகங்கண்டு மகிழ்ந்தேன்.
ReplyDeleteதிருவுருவங்கள் அனைத்தும், விபரங்களும் அழகோ அழகு கண்டு களித்தேன் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழி ....!
ReplyDeleteஅன்னை சாரதாம்பாள் பற்றிய அனைத்து சிறப்பான தகவல்களை அறிந்துகொண்டேன்..அழகான அன்னையின் படங்களுடன் அருமையான பகிர்வு. நன்றி
ReplyDeleteஅன்னை சாரதாம்பாள் அனைத்து செய்திகளும், படங்களும் அருமை.
ReplyDeleteஅன்னை சாரதாம்பாள் கோவிலில் அம்மனின் புடவைகளை ஏழை பெண்களுக்கு தானமாக அளிப்பது மிக நல்ல விஷயம் . கோவில் நிர்வாகத்தை பாராட்ட வேண்டும்.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அழகு. ஒருமுறை செல்ல வேண்டும். நன்றி.
வாழ்த்துக்கள்.