Wednesday, October 8, 2014

அமிர்தபுரி அமிர்தேஸ்வரர் ஆலயம்


சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா - உன்னை
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே (

பக்திப் பெருக்கில் எந்தன் ஊண்  உருக - அந்த
பரவசத்தில் உள்ளே உயிர் உருக

சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய இறைவா
அமிர்தபுரிவாழ் அமிர்தேஸ்வரா அருள்வாயே..!  

கர்நாடக மாநிலம், சிக்மகளூரிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில், டரிகெரே என்ற கிராமத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில்  பிரம்மாண்டமாக அமைந்துள்ள அமிர்தேஸ்வரர் சிவன்  கோவிலுக்கருகில் ராமாயண காவியம் முழுவதும் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்ட ஆலயம். இரண்டாம் ஹொய் சாள மன்னன் வீரபல்லாலா என்பவரால் கட்டப்பட்டது.

 எழுபதுக்கும் மேற்பட்ட ராமாயண சிற்பங்கள் சதுர- நீள் சதுர கட்டங்களில் உள்ளன. இவற்றில் தற்போது 16 சிற்பங்கள் மட்டுமே பார்த்து மகிழும் நிலையில் உள்ளன. மற்றவை சேதமுற்றுள்ளன.

ஏழு காண்டங்கள் கொண்ட வால்மீகி ராமாயணக் கதையில், 
ஆறு காண்டங்கள் இங்கு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

ஆலயத்துக்குள் நுழைந்ததுமே ஹொய்சாள நாட்டின் வெற்றிச் சின்னம் சிற்பம் பிரம்மிக்கச் செய்கிறது. சிறுவன் ஒருவன் சிங்கத்துடன் 
சண்டை யிடுவதுபோன்ற மிகப்பெரிய சிற்பம்!

நல்ல நிலையிலுள்ள 16 சிற்பக் கட்டங்கள்

1. அசோகவனத்தில் அனுமன் சீதையை வணங்குதல்.

2. இலங்கையில் அரக்கர்களுடன் அனுமன் சண்டை யிடுதல்.

3. இலங்கையைக் காவல் காக்கும் அரக்கர்கள்.

4. ராம- லட்சுமணர்களின் மாயத் தோற்றத் தலைகளை சீதைக்குக் காட்டும் பெண்.

5. வானரர்கள் இலங்கை செல்ல பாலம் அமைத்தல்.

6. இராவணனால் தாக்கப் படும் ஜடாயு.

7. இந்திரஜித்தும் லட்சுமண னும் போரிடுதல்.

8. மயக்கமுற்ற லட்சுமணன் ராமன் மடியில் கிடத்தல்.

9. மாயமானைப் பார்க்கும் ராம- லட்சுமணர்.

10. ராமர் போரிட, பின்னால் நிற்கும் லட்சுமணன்.















11. தூங்கும் கும்பகர்ணனை எழுப்பும் அரக்கர்கள்.

12. அங்கதனுக்கு ராமர் முடிசூட்டுதல்.

13. சீதையிடம் அனுமன் கணையாழியைக் கொடுத்தல்.

14. விஸ்வாமித்திரரைத் தொடர்ந்து செல்லும் ராம- லட்சுமணர்கள்.

15. சீதையை சிறையெடுத்தல்.

16. லட்சுமணன் சூர்ப்பனகையின் அழகை சிதைத்தல்.


பெரிய மண்டபத்தின் வெளிப்புறத் தடுப்புச் சுவர்களில்
 140 சிற்பப் பலகைகளில் இந்து இதிகாசங்கள், புராணங்கள் 
ஆகியவற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன



கோவில்களின் உட்புறச் சுவர்களிலும், வெளிப்புறச் சுவர்களிலும் தெய்வங்கள், பறவைகள், மிருகங்களின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.

டரிகெரே அமிர்தேஸ்வரர் கோவிலிலும் அருகிலுள்ள ராமாயணக் கோவிலிலும் தினசரி பூஜைகள் காலை 6.00 மணிக்குத் தொடங்கிவிடுகின்றன.

கோயில் கட்டிடத்தின் சிறப்பு மண்டபக் கூரையைத் தாங்கி நிற்கும் மினுமினுப்பான தூண்கள்,. மண்டபத்தின் கூரை கொடி வேலைப்பாடுகளுடன் கூடிய பல குழிந்த மாட அமைப்புக்களைக் கொண்டதாக கருத்தைக் கவர்கிறது..!

முதலில் மணியோசை கேட்கிறது, பின்னர் ஒலிபெருக்கிகள் மூலம் ராமாயணம் சம்பந்தப்பட்ட சுலோகங்களும், பக்திப் பாடல்களும் இனிமையாக ஒலிக்கின்றன.

சாதுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலமர்ந்து ராமநாம பஜனை செய்கின்றனர்.

பூசாரிகள் நித்திய பூஜைகளை ஒவ்வொரு சந்நிதியாக ஓடி ஓடிச் செய்கிறார்கள்.

இயற்கையான சூழலில் அமைந்திருக்கும்  அழகிய ஆலயங்கள்
பேளூர், ஹளபேடு போல  கலை பொக்கிஷமாக விளங்குகிறது

7 comments:

  1. சில வருடங்களுக்கு முன் சிக்மகளூர் சென்றிருந்தோம். இந்தக் கோவிலைக் காணத் தவறி விட்டோம். விரிவான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. //பக்திப் பெருக்கில் எந்தன் ஊர் உருக//
    அது ஊன் உருக இல்லை?

    எப்படியோ அருமையான பாடல்.

    கோவில் படங்களில் அந்த சந்நிதிப் படம் (முதல்) மிகக் கவர்கிறது.

    அருமையான படங்கள். அருமையான பகிர்வு.

    ReplyDelete
  3. சிற்பங்கள் வெகு அழகு! சிறப்பானதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  4. பேளூர் ஹளேபேட் சென்றிருக்கிறோம். இந்த அமிர்தேஸ்வர் ஆலயம் அறியாதது. ராமாயணச் சிற்பங்கள் பற்றிப் படிக்கும் போது கும்பகோணம் ராமஸ்வாமி கோவில் சுற்றுச் சுவர்களில் ராமாயண ஓவியங்கள் பார்த்தது நினைவுக்கு வருகிறது. கர்நாடகக் கோவில்கள் சிலவற்றின் சிற்பங்கள் அழகு கொள்ளை போகும்

    ReplyDelete
  5. இந்தக் கோவிலைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. உங்கள் தளம் வழியாக அரிய தகவல் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  6. சிற்பங்களின் போட்டோக்கள் அருமை அம்மா...
    அருமையான பதிவு... அழகான படங்கள்...

    ReplyDelete
  7. நல்ல விரிந்த தகவற் பதிவு.
    மிக அருமையான கட்டிடம், சிற்பங்கள்.
    இனிய நன்றியுடன் பாராட்டுகள்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete