தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;
ஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே.
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்
கணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.
-குருக்கள் ஸ்துதி(குள்ளச்சாமி புகழ்) ஆசிரியர் : மகாகவி பாரதியார்.
திருச்செங்கோட்டிலிருந்து சேலம் செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் ஞானானந்தகிரி ஆசிரமம் அமைந்திருக்கிறது..
ஆசிரமத்தில் பூஜை செய்யும் திரு .மாரியப்பன் ,அவர்கள் , ஆசிரமத்தைப்பற்றி பல விஷயங்கள் அறியத்தந்தார்.. பூஜை செய்துவிட்டு காலை ஒன்பதரை மணிக்கு கதவைப்பூட்டிவிட்டு சென்றுவிடுவார் என அறிந்து,.. அதற்கு முன்பே ஆசிரமத்தை அடைந்து பல தகவல்கள் திரட்டினோம்..
ஞான ஒளி என்னும் தபோவனப் பிரசுர புத்தகங்கள் அளித்தார்.. ..
ஞானானந்தகிரி சுவாமிகளின் குருநாதர் இரத்னானந்தகிரி சுவாமிகள் சமாதியடைந்தபின் அவரது நீளமான ஜடாமுடியை சுற்றி வைத்து பாதுகைகளுடன் சேர்த்து தினமும் பூஜை செய்து வந்தார்களாம்.
சென்னையிலிருந்து நான்கு கார்களில் நீதிபதிகள் வந்து அங்குள்ள மடத்தில் பூஜை செய்கிறோம் என வாங்கிச்சென்றுவிட்டார்களாம்..
சுவாமிகள் பயன் படுத்திய மரக்கட்டிலையும் எடுத்துச்சென்றுவிட்டார்களாம்..
இப்போது சுவாமிகள் பயன்படுத்திய நாற்காலியும் அவர் தவம் செய்யப்பயன்படுத்திய தோலாசனமும் தான் நினைவுகளைப் பறைசாற்றியபடி இருக்கின்றன..
பாரதியார் பாடிய குள்ளசாமிகள்பற்றிய பாடல்கள் கல்வெட்டாக செதுக்கி இருக்கிறார்கள். குள்ளசாமி என்பது ஞானானந்தரைக்குறிக்கிறதாம்..!
நவராத்திரி சமயமாதலால் கொலு அலங்காரமும் ,
சமய சொற்பொழிவும் களைகட்டி இருந்தது..
மாடியிலிருந்து தீபாராதனை பார்க்க வசதியான அமைப்பு
மாடியில் இருந்த அறையில் சுவாமிகள் படமும் தீபமுமாக புனித சூழல்
ஞானானந்தகிரி ஆசிரமத்தில் அருமையான இராமர் பட்டாபிஷேகப்படம்
சுரங்கப்பாதையின் ஆரம்பத்தில் சுவாமிகள் பயன்படுத்திய நாற்காலி
ஞானானந்தகிரி ஆசிரமத்தின் சுரங்கக் கதவும் தரைகீழ் படிக்கட்டுகளும்..
சுரங்கப்பாதையின் படிக்கட்டுகள்..
ரத்னானந்தகிரி சுவாமிகளும் தவம் செய்த புனித இடம்..
மடத்தில் அருமையாக நந்தவனம் பராமரிக்கப்படுகிறது..
சுற்றுச்சுவருக்கு வெளியில் , அருகில் நடைக்கிணறு சமீபத்தில் பெய்தமழையால் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தது..அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதற்கு இந்தக்கிணற்றில்தான் பூஜைகள் நடைபெறும்..
மடத்துக்கு எதிர் புறம் அடுத்த தெருவில் பர்வதம் அம்மா என்பவரின் தந்தையார் வாழ்ந்த இல்லத்தில் இதே சுரங்க அமைப்பு இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம்..
பர்வதம் அம்மாவுக்கு ஆண்வாரிசு சிறுவயதிலேயே காலமாகிவிட்டதாலும் ,அவரது மூன்று பெண்வாரிசுகளும் வெளியூர்களில் திருமணமாகி சென்றுவிட்டதாலும் இந்த இல்லத்தை எங்கள் உறவினர் ஒருவர் வாங்கியிருக்கிறார்..
இந்த சுரங்கத்தைப்பற்றி ஆவலுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த இல்லத்தையும் சுரங்கத்தையும் காணும் வாய்ப்பு கிட்டியது..
சந்திரமுகி படத்தில் பாழடைந்த அரண்மனையின் தோற்றத்தில் பிரம்மாண்டமாக, இடிபாடுகளுடன் நூற்றாண்டுகள் கடந்த அந்தக்கால இல்லம் காட்சிப்பட்டது..
அந்த இல்லம் நல்ல புழக்கத்தில் இருக்கும்போது தயக்கத்தின் காரணமாக பார்க்க முடியாமல் போனதற்காக வருந்தினேன்..
அந்த இல்லத்தின் சுரங்கத்தில் இருந்த ரத்னானந்தகிரி சுவாமிகளின் பெரிய படம் மடத்திற்குக் கொடுத்துவிட்டார்களாம்..
குடும்பவாழ்க்கை துறந்து தனித்து தவம் செய்யவும் , இந்த இல்லத்தின் சுரங்கம் பயன்படுத்தப்படிருக்கலாம்.. மற்றபடி மடத்துக்கும் வீட்டிற்கும் இடையில் சுரங்கப்பாதை ஏதாவது இருந்திருந்தால் இடைப்பட்ட காலங்களில் கட்டிடங்கள் கட்ட அஸ்திவாரங்கள் தோண்டியபோது தூர்ந்து போயிருக்கலாம் என்றும் அபிப்ராயப்பட்டார்கள்..
ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் மக்களுக்கு பல்வேறு
உபதேசங்களையும் செய்துள்ளார். அவர்றுள் சில..!
சுறுசுறுப்பாயிரு; ஆனால் படபடப்பாயிராதே
பொறுமையாயிரு; ஆனால் சோம்பலாயிராதே
சிக்கனமாயிரு; ஆனால் கருமியாயிராதே
அன்பாயிரு; ஆனால் அடிமையாயிராதே
இரக்கங் காட்டு; ஆனால் ஏமாந்து போகாதே
கொடையாளியாயிரு; ஆனால் ஓட்டாண்டியாகி விடாதே
வீரானாயிரு; ஆனால் போக்கிரியாயிராதே
இல்லறத்தை நடத்து; ஆனால் காமவெறியனாயிராதே
பற்றற்றிரு; ஆனால் காட்டுக்குப் போய் விடாதே
நல்லோரை நாடு; ஆனால் அல்லோரை வெறுக்காதே.
உன் மனதிற்கு நீ அடிமையானால் உலகிற்கு நீ அடிமையாவாய்.
உன் மனம் உனக்கு அடங்கினால் உலகம் உனக்கு அடங்கும்.
ஒவ்வொரு மனிதனின் லட்சியமும் ஆத்ம தரிசனத்தை அடைவதே ஆகும். புலனடக்கம், தியானம், நாம சங்கீர்த்தனம், பொறுமை இவையே
அதற்கு உதவி செய்யும்.
உண்மையான ஆன்ம உணர்வு உடைய ஒருவன் குருவைத் தேடி சதா சர்வ காலமும் அலைய வேண்டியதில்லை. குருவே அவனைத் தேடி வருவார். ஆனால் குருவின் அருள் இல்லாமல் ஒருவன் இறை அனுபூதி பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். கடலில் பயணம் செய்ய படகு மட்டும் போதாது. துடுப்பும் வேண்டும். அது போல சம்சாரமாகிய கடலைக் கடந்து, ஞானமாகிய இறைநிலையை ஒருவன் அடைய குருவின் ஆசி அவசியம் தேவை.
ஞானானந்த சுவாமிகளின் தபோவனம் திருக்கோயிலூரிலும், கும்பகோணம் கோவிந்தபுரத்திலும் உள்ளது. எமக்கு ஓய்வு கிடைக்கும் காலங்களில் திருக்கோயிலூர் தபோவனம் சென்று மகிழ்வேன். ஆட்டையாம்பட்டியிலும் இருப்பதனை யாமறியோம்! இன்று, தங்களால் அறிந்தேன். மனமாற்றமும் குணமாற்றமும் இத்தகைய அடியவர்களின் ஆசிரமங்களுக்கு செல்வோருக்கு ஏற்படுவது உறுதி! பகிர்விற்கு நன்றி அம்மா!
ReplyDeleteஞானந்த சுவாமிகள், ரத்னகிரி சுவாமிகள் பற்றிய
ReplyDeleteதகவல்கள், போற்றத்தக்கவை.
தஞ்சையில் இருந்த போது,என் வீட்டுக்கு எதிரில் இருந்த
காலஞ்சென்ற சுதந்திர போராட்ட தியாகி திருவாளர் கிருஷ்ணன் அவர்களும் அவரது துணைவியார் மங்களம் அவர்களும் ஞானந்த சுவாமிகளின் பக்தர்களாக, அவரது ஆஸ்ரமத்தில் அவ்வப்போது சென்று வருவார்கள்.
அவர்கள் வாயிலாக சுவாமிகள் பெருமை தனை கேட்டு இருக்கிறேன். நான் போய் சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என எண்ணியது உண்டு. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சுப்பு தாத்தா.
ஞானானந்த சுவாமிகள் பற்றிஅறிந்தேன் உணர்ந்தேன்
ReplyDeleteநன்றி சகோதரியாரே
ஞானனந்த சுவாமிகள் தபோவனம் சென்று தரிசித்து இருக்கிறேன்.
ReplyDeleteநவரத்தினமாலை படிப்பேன்.(பாடுவேன்)
அவரின் போதனைகள் அனைவரும் கடைபிடிக்க எளிதானது.
விரிவான செய்திகளும், படங்களும் அருமை.
வாழ்த்துக்கள்.
ஏதோ பெயர் குழப்பமாய் இருக்கிறது. பாரதியார் பாடிய குள்ள சாமியார்தான் ஞானாநந்த சுவாமிகளா..சுவாமிகளுக்கு சுரங்க வீடு எதற்கு. ? படிக்கும்போதே கேள்விகளும்... வழக்கம்போல...
ReplyDeleteவணக்கம் . வாழ்க வளமுடன்.
Deleteகருத்துரைகளிக்கு இனிய நன்றிகள்..
பாரதியார் ஞானானந்தரை சந்தித்து , பாடல்கள் பாடியதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.
ஆசிரமத்தில் இருக்கும் சுரங்கம் சுவாமிகள் தவம் செய்யப்பயன்படுத்தியது..!
அடுத்த தெருவில் அதே அமைப்பில் இருந்த சுரங்கம்
ஆசிரமத்தின் பக்தர் ஆசிரமத்தில் உள்ளது போலவே
குரு சுவாமிகள் படத்தை வைத்து , குடும்பவாழ்வைத் துறந்து தவம் செய்ய அமைத்துக்கொண்டது.
தபோவனம் பற்றிய தகவல்களும் படங்களுடன் விளக்கமும் அருமை.
ReplyDelete