Friday, June 7, 2013

மதுரமாய் அருளும் மதுர வல்லித் தாயார்






பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுபலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா ! உன் சேவடி செவ்விற் திருக்காப்பு

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு

வடிவின் சோதி வலத் துறையும் சுடரா ழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்குமப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு

பாண்டிய மன்னனுக்கு மீன் வடிவில் பெருமாள் காட்சி கொடுத்ததால், பாண்டியர்களது சின்னம் மீனாக அமைந்ததாம்...!

மீன் போன்ற கண்களால் கருணையுடன் நோக்கும் அம்பிகை
அன்னை மீனாட்சியாக மதுரையில் கோலோச்சி அருளுகிறாள்..

இந்த மீன், திருக்கூடல் தலத்தில் வைணவக் கோலமும் பூண்டிருக்கிறது. 

புராண காலத்தில் பெருமாள் மேல் பேரன்பு கொண்ட சத்திய விரதன் என்ற பாண்டிய மன்னனை, மச்சாவதாரம் எடுத்திருந்த நாராயணன், சோதிக்க அந்தி வேளையில் அவன் வையை நதியில் ஜல தர்ப்பணம் செய்ய தன் இரு கரங்களைக் குவித்து நீரை முகந்து எடுத்த கரங்களில் சிறு மீன் வடிவில் தோன்றினார் ..

அதிசயத்துடன்  பார்த்த சத்திய விரதன், அதை மீண்டும் நதியிலேயே விட்டான். ‘‘இந்த நதியில் என்னை ஒரு சிறு பொருளாக நீ பார்க்கிறாய். ஆனால், நான் புகும்  பாத்திரத்துக்கு ஏற்ப வளரக்கூடியவன்
அதாவது, யார் மனது எவ்வளவு விசாலமானதோ அந்த அளவுக்கு நானும் வளர்ந்து அவர்கள் மனதை ஆக்கிர மித்துக் கொள்வேன்’’
என்று அந்த மீன் பேசியது. 

ஒருவர் கொள்ளும் பக்தியின் அளவுக்கேற்ப அந்த பக்தியை ஏற்கும் பரந்தாமனும் பிரதிபலன் செய்வான் என்ற உண்மையை உணர்ந்துகொண்டான் மன்னன். 

இரு கைகளுக்குள் இருந்த சிறுநிலை மாறி, அவனது கமண்டலத்திற்குள் புகுந்த மீன்  அந்த அளவுக்குப் பெருத்தது.  மேலும் வளர்ந்து  நிறைத்தது. 
மீன் வடிவிலிருந்த மச்சாவதார மூர்த்தி
மன்னனுக்கு வாழ்வியல் தத்துவங்களை போதித்தார். 

விரைவில்  பிரளயம் நிகழ இருக்கிறது என்றும், அச்சமயம் உலகிற்கு இன்றியமையாத பொருட்களுடன் ஒரு படகில் மன்னன் ஏறிக்கொள்வது என்றும், பிரளய  வேகத்தில் படகு கவிழாமல் இருக்கும் பொருட்டு தன் மூக்கால் அதனைத் தான் தாங்கிப் பிடித்துக் கொள்வதாகவும் பரந்தாமன் திருவாய் மலர்ந்தருளி னார். 
சத்திய விரதனின் வம்சாவழியினரான ஆரிய விரதனின் ஆட்சிக் காலத்தில் மதுரை மாநகருக்கு கடுமையான மழைப் பொழிவால் பேரழிவு நேர இருந் தது. மக்களையும் மாக்களையும் காக்க மன்னன் பெருமாளை நோக்கி மனமுருகி பக்தி செலுத்தினான். 

நாராயணனும் அவன் மீதும், மதுரை மீதும்  பரிவு கொண்டு, நான்கு மேகங்களை அனுப்பி மழைப் பொழிவைத் தடுத்து நிறுத்தினார். 

மேகமே மழையை நிறுத்திய இயற்கைக்கு முரண் பட்ட நிகழ்வு! இந்த மேகங்கள் மதுரைக்கு மேலே நான்கு திசைகளிலும் நான்கு மாடங்களைப் போல நின்று மழையைத் தடுத்ததால், மதுரை ‘நான்மாடக்கூடல்’ என்று பெயர் பெற்றது. 

அதிசயித்த மன்னன் தன் நன்றியைப் பரவலாக்கும்  விதத்தில் பாண்டியர் என்றாலே மீன் சின்னம் நினைவுக்கு வருமாறு தன் நாட்டின் இலச்சினையாக மீன் உருவை அங்கீகரித்தான். 

ஸ்ரீரங்கத்தை காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகள்  ஒரு மாலையாக அணைத்து கொண்டிருக்கிறது போல மதுரையையும் வையை, கிருதமாலா  என இரு  நதிகள் அரவணைக்கின்றன. 

பகவான் திருவிக்கிரமனாக அவதாரம் எடுத்தபோது, சத்திய  லோகம்வரை நீண்ட திருமாலின்  தாமரைப் பாதத்தை, தன் கமண்டலத்து நீரால் பிரம்மன் அபிஷேகித்து வழிபட, அந்த நீர், பூலோகத்தில் இறங்கி, தென் பகுதியில் வையை, கிருதமாலா என்ற நதிகளாக ஓடின. 

நீடுநீர்  வையை நெடுமால்’ என்று இந்தப் பெருமாளைச் சிறப்பிக்கிறார் இளங்கோவடிகள். 

திருநின்றவூரில் பெருமாள் நின்றத் திருக்கோலம் என்றால்,  
இருந்தையூர் என்ற கூடலழகர் கோயிலில்  
இருந்த கோலம்.கொண்டிருக்கும் மதுரைத் திருத்தலமே!

‘இருந்தையூர் அமர்ந்த  செல்வ’ என்று பரிபாடல் 
ஊர்ப் பெயரின் காரணத்தை விவரிக்கிறது. 
மதுர வல்லித் தாயார் சந்நதி. அன்னையின் பார்வையும் ,
மெலிதான புன்னகையும் மதுரம்தான்.

தாயாருக்கு வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி
என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. 
 ஒரு தூணில் அனுமன் தரிசனம் காணலாம். 

மண்டபத்தில் ஒரு தூண், தட்டினால் சப்தஸ்வரங்களை ஒலிக்கின்றது. 

பக்கத்திலுள்ள படிகள் ஏறி விமான தரிசனமும் பெறலாம். 

தாயாருக்கு வலப்பக்கம் சக்கரத்தாழ்வார் சந்நதி. 
சக்கரத்தாழ்வார் உருவாக்கிய சக்கர தீர்த்தம் காட்சி தருகிறது. 

 ஆலயம் மூன்றடுக்குக் கோயிலாக விளங்குகிறது. 
தரைத் தளத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கும் பெருமாள், 
மேலே முதல் தளத்தில்  சூரிய நாராயணனாகப்
புதுமைக் கோலம் காட்டுகிறார். 
தரைத் தளத்திலேயே இவர் சூரிய ரதத்தில் வீற்றிருக்கும் மாதிரி 
கல் சிற்பத்தை ஒரு கண்ணாடி தடுப்புக்குள் காணலாம்.
சூரிய நாராயணரை தரிசித்து விட்டு, அதற்கு மேல் தளத்திற்குச் சென்றால் அங்கே க்ஷீராப்தி நாராயணர் -  பாற்கடல் நாயகன் சந்நதியில் அலை ஓசை கேட்பதும், பால் மணம் கமழ்வதும் வெறும் பிரமை அல்ல. 
லட்சுமி நரசிம்மர் சாந்த சொரூபியாய், பக்தர்களின் பகைவர்களை அழித்து, அவர்களது பகைமை குணத்தை துவம்சம் செய்து, அற்புத நலன்களையும் செல்வங்களையும் வழங்கும் பாதுகாவலராகத் திகழ்கிறார். 
நவகிரக சந்நதி, வைணவத் தலத்தின் அபூர்வ காட்சி. பொதுவாகவே வேறெந்த திவ்ய தேசத்திலும் நவகிரக சந்நதி இல்லை என்றே சொல்கிறார்கள்.  ஒன்பது கிரகங்களுக்கும் திருமண் சாத்தி, துளசி மாலை இட்டு அலங்கரித்திருக்கிறார்கள்; 
அர்ச்சனையும் துளசி தளத்தாலேயே செய்கிறார்கள். 

திருமங்கையாழ்வாரும், திருமழிசையாழ்வாரும், மணவாள மாமுனிகளும்  மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 
மதுராபுரி என்று வழங்கப்பெறும் திருக்கூடல் நகராகிய திவ்ய தேசத்தில், வ்யூக சுந்தரராஜப் பெருமாள் (கூடலழகர்) என்ற திருப்பெயரில் கொலுவிருக்கும் பெருமாளே நமஸ்காரம். 
வரகுணமங்கை நாச்சியாருடன், அஷ்டாங்க விமான நிழலில், ஹேம புஷ்கரணிக் கரையில் கிழக்கு  நோக்கிய அமர்ந்த திருக்கோலத்தில் பிருகு முனிவருக்குக் காட்சி கொடுத்தருளி விளங்கும் பெருமாளே, நமஸ்காரம்

10 comments:

  1. அற்புதம் அத்தனையும் அற்புதம்

    ReplyDelete
  2. தகவல்கள் படங்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமை... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தகவல்கள் அனைத்தும் அற்புதம்

    ReplyDelete
  4. ”மதுரமாய் அருளும் மதுரவல்லித் தாயார்”க்கு அடியேனின் வந்தனங்கள்.

    வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற அழகான அருமையான பதிவு.

    படங்களும் விளக்கங்களும் சூப்பர்.

    முதலில் காட்டியுள்ள கஜலக்ஷ்மி ஜோர்.

    கடைசியில் காட்டியுள்ள யானை க்யூட். ;)))))

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ooooo 933 ooooo

    ReplyDelete
  5. மிக மிக அருமை. அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. பகிர்விற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  6. 'நான்மாடக் கூடல்' பெயர் காரணம் தெரிந்து கொண்டேன்.
    கூடலழகரும், மதுரவல்லித் தாயாரும் எல்லோருக்கும் எல்லா செல்வங்களையும் அளிக்கட்டும்!

    ReplyDelete
  7. படிக்க திவ்யமா இருக்கு!

    ReplyDelete
  8. படங்களும் தகவல்களும் மிக நன்று.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. madurai name very excellent, Alagar & his family would wishes our family

    ReplyDelete
  10. every madurai person must know that temple and the godss, Excellent definition to the temple. i like to visit another time

    ReplyDelete