Sunday, September 7, 2014

மதுரை ஆவணி திருவிழா






இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்  உயிர் ஓவியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற் காடேந்தும்இள வஞ்சிக் கொடியே வருகவே
மலயத் துவசன் பெற்ற பெரு வாழ்வே வருக வருகவே..

இமயமலையில் விளையாடும் பெண்யானையைப் போன்றவள் மீனாட்சி. 

உலகத்தைக் கடந்த ஒப்பற்றவன் இறைவன். அவன் திரு 
உள்ளத்தில் எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம் போன்றவள் மீனாட்சி. 

வண்டுகள் தேனைக் குடித்துக் கூந்தலில் துயில்கின்றன. 

அந்தக் கூந்தலாகிய காட்டைத் தாங்கி நிற்கும் 
வஞ்சிக் கொடி போன்றவள் மீனாட்சி. 

மலயத்துவசன் பெற்றெடுத்த பெருவாழ்வுக்கு நிகரானவள் மீனாட்சி.



மதுரையில் அன்னை  மீனாட்சியை மணமுடிக்க, சிவன் சுந்தரேஸ்வரராக வந்த போது,  குண்டோதரனின் தாகம் தீர்க்க உருவாக்கப்பட்டது வைகை ஆறு., 
ஆவணி பூராடம் நட்சத்திரத்தன்று, சிவன், ஒரு கூலி ஆளாக, வைகை கரையை அடைக்க வந்தார்.

மதுரையில், அரிமர்த்தன பாண்டியன் ஆண்டபோது, மாணிக்கவாசகர்  அமைச்சராக இருந்தார். நாட்டின் படை பலத்தைப் பெருக்க, குதிரைகள் வாங்கி வரும்படி பணம் கொடுத்து அனுப்பினான் மன்னன். 

 மாணிக்கவாசகர்  வழியில், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில், ஒரு குருந்த மரத்தடியில், சிவன் குருவாக தியானத்தில் அமர்ந்திருந்து, மாணிக்கவாசகருக்கு திருவடி தீட்சை அளித்தார். 

அதன்பின், சிவனடிமையாகி விட்ட மாணிக்கவாசகர், குதிரை வாங்க கொடுத்திருந்த பணத்தை, கோவில் திருப்பணிக்கு செலவு செய்தார். 
விஷயம் மன்னனுக்கு தெரிந்து, மாணிக்க வாசகர் அழைத்து வரப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 

சிவன், வைகையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்து தன் திருவிளையாடலை நிகழ்த்தினார். 

மன்னனுக்கு ஆச்சரியம், திடீரென இந்த வெள்ளம் எப்படி வந்தது என்று! இருப்பினும், ஊரைப் பாதுகாக்க கரைகளை உயர்த்த ஆணையிட்டு, "வீட்டுக்கு ஒருவர் பணிக்கு வர வேண்டும்...' என, உத்தரவிட்டான்.

வந்தி என்ற முதிய சிவபக்தையின் வீட்டில் யாருமில்லை. அவள் புட்டு விற்று பிழைப்பவள். அவள் வீட்டுக்கு, கூலிக்காரன் வடிவில் வந்த சிவன். அவள் சார்பில் கரையை அடைக்க, புட்டை கூலியாகப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார்; 

வேலைக்குப் போன இடத்தில், வேலை செய்யாமல் படுத்து விட்டார். சோதனைக்கு வந்த மன்னன், வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, பிரம்பால் முதுகில் ஒரு அடி அடித்தான். 

அந்த அடியின் வலி, மன்னன் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது.

உண்மை வெளிப்பட்டதும், மாணிக்கவாசகருக்கு மரியாதை செய்தான் மன்னன். வைகையில் வெள்ளம் கட்டுப்பட்டது.

இத்திருவிளையாடலின் மூலம் சிவன், ஆறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை, வலியுறுத்தி, அதற்காக, அடியும் வாங்கியிருக்கிறார். 


ஆவணி பூராடம் நட்சத்திரத்தன்று, மதுரையில் 
புட்டுத்திருவிழா நடத்தப்படுகிறது. 

"சிவனே... அன்றொரு நாள் நீ, சுந்தரேஸ்வரனாக வந்து, வைகையை உற்பத்தி செய்தாய்; கூலியாளாக வந்து வைகையைப் பாதுகாத்தாய்.உன் அருளை வாரி வழங்கி, வைகையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓட அருள் செய்...' என்று, மனமுருகி பிரார்த்திப்போம்..!








9 comments:

  1. ஆவணித் திருவிழா அறிந்தேன் நன்றி சகோதரியாரே
    படங்கள் அழகோ அழகு

    ReplyDelete
  2. ஒவ்வொரு கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட சிற்பங்களை நேரில் கண்டு மெய்மறந்து நிற்பது போல, ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் போது, நேரில் கண்டு மகிழ்ந்த உணர்வு மேலோங்கியது.

    ReplyDelete
  3. ஸ்ரீமீனாட்சி சுந்தரேசனின் இனிய தரிசனம் .. மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. மிகவும் சுவாரஸ்யமான தகவல்...........

    ReplyDelete
  5. மிக அருமையான படங்களுடன் அற்புதம் நிகழ்ந்த வரலாறு!..
    அனைத்தும் சிறப்பு!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. மிக அழகான படங்களுடன் பதிவு ஜொலிக்கிறது

    ReplyDelete
  7. ஆம் ஆண்டு முழுவதும் நீரோடச் செய் என்று பிரார்த்திப்போம்.
    சிறப்புப் படங்கள். வெள்ளை யானை பிரமாதம்.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. ஆவணி மாதத் திருவிழா பற்றியப் பதிவு படங்களுடன் மிக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  9. புகைப்படங்களும் ஆவணித்திருநாள் பற்றிய உங்களின் பதிவும் அருமை!!

    ReplyDelete