Wednesday, November 6, 2013

கந்தசஷ்டி உற்சவம்



திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா... வருவாய் அருள்வாய்...... முருகா!
தீபாவளி பண்டிகைக்குப்பின் ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பார்கள்.

சஷ்டி விழா சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடும் திருச்செந்தூரில்தான் செந்தில்நாதன் சூரனை சம்ஹரித்தார்.

சூரபத்மன் முற்பிறவியில் தட்சனாக இருந்தான்.

மாயைக்கும் காஸ்யப முனிவருக்கும் சூரபத்மனாகப் பிறந்து, தன் பேரன் குமரனால் வதம் செய்யப்பட்டு- வாழ்வளிக்கப் பட்டு, பேரனுடனேயே மயிலாகவும் சேவலாகவும் எப்போதும் இருக்கும் பேறு பெற்றான்.
முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு.

மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.

சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கி தேவ மயில்.

பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில்.

"சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்' என்பர். 

சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார்.

சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர்.

அசுர குரு.சுக்ராச்சாரியார்  அசுரர் குலம் தழைக்க அவர் விருப்பப்படி, அசுரமங்கை மாயை காஸ்யப முனிவரை மயக்கினாள்.

இருவருக்கும் பிறந்தவர்கள் சூரபத்மன், சிங்க முகன், தாரகாசுரன்
எனும் மூன்று மகன்கள்.

மகள் அஜமுகி. பின் மாயை முனிவரை விட்டு விலகிவிட்டாள்.

இந்த மூன்று அசுரர்களும் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து
பற்பல வரங்கள் பெற்றனர். .

சிவனின் சக்தியால் மட்டுமே அழிவு வரவேண்டும் என வரம் பெற்று அனைவருக்கும் பல துன்பங்களைத் தந்தனர்.தேவர்களை அடிமைப்படுத்தினர்.

 தேவர்கள் சிவனிடம் முறையிட்ட னர். "என் ஆற்றலால் உருவாகும் மகனால் நன்மை பெறுவீர்கள்' எனக் கூறிய சிவன் தவத்தில் ஆழ்ந்தார்.

சிவனின் தவத்தைக் கலைக்க தேவர்கள் மன்மதன்  எய்த அம்பால்
சிவன் நெற்றிக்கண் திறக்க, மன்மதன் தகனமானான்.

சிவன் தன் ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜா தம், அதோமுகம் என்ற ஆறு முகங்களின் நெற்றிக்கண்களில் இருந்து
ஆறு பொறிகளைத் தோற்றுவித்தார்.

 ஆறு பொறிகளும் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகள் ஆயின. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்ட இவர்களை பார்வதி பாசத்துடன் சேர்த்தணைக்க, ஓராரு முகமும் ஈராறு கரமும்  கொண்டு ஆறுமுகன் தோன்றினான்.

இவன் வளர்ந்து குமரன் ஆனதும் (கர்ப்பவாசமின்றி பிறந்தவன்) சிவன் முருகனது அவதார நோக்கத்தைக் கூறி சூரனை வதம் செய்யச் சொன்னார்.

சிவன் தன் ஆற்றல்களைத் திரட்டி ஒரு வேலாக்கி, அந்த சிவசக்தி வேலை முருகனுக்குக் கொடுத்து, வீரபாகு தலைமையில் படைகளை உருவாக்கி அவர்களையும் முருகனுடன் அனுப்பினார்.

சக்தியும் தன் சக்தியத்தனையையும் திரட்டி ஒன்றாக்கி சக்தி வேலாயுதம் செய்து முருகனிடம் கொடுத்தாள். -அதைத்தான் சிக்கலில் வாங்குகிறார்.

இப்படி போரிடச் சென்ற முருகன், முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

குமரன் சூரனை வதம் செய்யப் போரிடும்போது சூரபத்மன், "இந்த சிறுவனையா கொல்வது? வேண்டாம். எனினும் போரில் நான் வெல்ல வேண்டும்' என எண்ணிப் போரிட்டான்.

இதை அறிந்த கந்தன் தன் விஸ்வரூபத்தை ஒரு நொடி காட்டினான்.

அப்போது சூரன் இந்த சிறுவன் தன் பேரன் என்பதை உணர்ந்தான்.

ஒரு நொடிப் பொழுதுதான்; பின் மறந்தான். அந்த ஒரு நொடியிலேயே முருகனிடம் "உன்னைத் தாங்கும்பேறு தருவாயா?' என கேட்டும் விட்டான்.

எனவே தாத்தாவைக் கொல்ல மனமின்றி முருகன் போர் செய்து
கொண்டிருந்தபோது, சூரபத்மன் மாமரமாகி கடலில் தலைகீழாய் நின்றான்.

குமரன் தன் கூர்வேலால் மாமரத்தை இருகூறாக்கி, ஒன்றை தன்னைத் தாங்கும் வாகனமான மயிலாகவும்; ஒன்றை சேவலாக்கி தன் கொடியிலும் வைத்துக்கொண்டு சூரனுக்குப் பெருவாழ்வு கொடுத்தான்.

சூரசம்ஹாரம் முடிந்தது. சூரன் மாமரமான இடம் மாம்பாடு
எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. 

ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை
சஷ்டி விழாவின்போது மட்டுமே முழுதாகத் தரிசிக்கலாம்.
மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பி அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில்.

இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த
சிவலிங்கத் தைக் காணலாம்.

சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களும் வேள்விக் கூடத்தில் காலையும்  மாலையும் வேள்வி நடத்துவார்கள். 

 செந்தில்நாதன், வள்ளி, தெய்வானை உற்சவர்களை தங்க சப்பரத்தில் இருத்தி வீதியுலா வரச் செய்து சண்முக விலாச மேடையில் தீபாராதனை செய்வர்.

ஒவ்வொரு நாள் இரவும் சஷ்டி மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்கத் தேரில் வலம் வரச் செய்வார்கள். அப்போது அடியார்கள் வேல் வகுப்பு, திருப்புகழ், வீரவாள் வகுப்பு பாடியபடி செல்வார்கள்.

முருகனின் ஒரு திருநாமம் கோடி நாமங்களுக்குச் சமம் என்பர்.

ஆறாம் நாள் மாலை கடற் கரையில் சூரசம்ஹாரம் நடக்கும். அப்போது கடலும் உள்வாங்கி இடம் தரும். இந்நிகழ்ச்சியைக் காண பக்தர் கூட்டம் அலை மோதும். பார்க்கும்போது            தலையா கடல் அலையா எனத் தோன்றும். 

16 comments:

  1. அருமையான பகிர்வு.. படங்களும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  2. கந்த சஷ்டி விழாவின் அர்த்தங்களை உள்ளடக்கிய நிறைவான பதிவு. படங்களும் அருமை.. அழகு!..

    ReplyDelete
  3. கந்த சஷ்டி விழாவின் அர்த்தங்களை உள்ளடக்கிய நிறைவான பதிவு. படங்களும் அருமை.. அழகு!..

    ReplyDelete
  4. கந்தசஷ்டி உற்சவம் பற்றிய இன்றைய தங்களின் பதிவும் படங்களும் மிக அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  5. மந்திர மயில், தேவ மயில் + அசுர மயில் பற்றிய தகவல்கள் அருமையாய் தெரியவந்தன.

    தட்சனே சூரபத்மன் அவனே மயிலாகவும் சேவலாகவும் தன் பேரன் முருகனுடன் எப்போதும் இருப்பவன்.

    ஆஹா, இந்தக்கதையும் புதுமையாக அருமையாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. அசுரகுரு சுக்ராச்சார்யார் விருப்பப்படி அசுரகுலம் தழைக்கவேண்டி, அசுரமங்கை மாயை காஸ்யப முனிவரை மயக்கினாள். ;)

    இந்தப்பெண்களே இப்படித்தான். யாரையுமே எளிதில், ஏதாவது சொக்குபொடி போட்டு, எப்படியாவது, மயக்கித்தான் விடுகிறார்கள்.

    அதுவும் அசுரமங்கை ...... அதுவும் மாயை .... என்றால் கேட்கவா வேண்டும்?

    >>>>>

    ReplyDelete
  7. சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்றபின், அதற்குப் பரிசாக இந்திரன் மகள் தெய்வானையுடன் திருக்கல்யாணம்.

    மிகவும் சந்தோஷம்.

    >>>>>

    ReplyDelete
  8. தலையா ....... கடல் அலையா ! ;)

    சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  9. தலையா ....... கடல் அலையா ! ;)

    சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    -oOo-

    ReplyDelete
  10. ஜீனியஸ் மேடம், முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு என்பது அறியாத தகவல். தெரிந்திருந்தால் “ சூரா உன் சதியா” என்ற பதிவு எழுதி இருக்க மாட்டேனோ என்னவோ. அதை நீங்கள் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். சுட்டி இதோ
    gmbat1649.blogspot.in/2012/11/blog-post_30.html நன்றி.

    ReplyDelete
  11. முதல் படம் :-

    இரட்டைப்பட்டைகளாக மிகப்பெரிய வடிவில் பிரணவ மந்திரமாக

    ஓ ம்

    இரண்டு முக்கோணங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக, ஆறு எழுத்துக்களுக்கு ஆறு முனைகள், அவற்றில் அழகாக

    ச ர வ ண ப வ

    பின்புறம் கோபுரம், நடுவில் அழகன் பாலமுருகன், இருபுறமும் இரண்டு விளக்குகள் என மிகவும் அழகாகவும் அருமையாகவும் உள்ளது.

    சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா !

    ReplyDelete
  12. அருமையான பதிவு. திருப்புகழ் வகுப்புகளுக்குப் போகும்போது டில்லியில் ஷஷ்டி பஜனைக்குத் தவறாமல்ப் போவோம். இவ்வளவு விவரங்கள் எல்லாம் தெரியாது. மிக்க மகிழ்ச்சியாக யிருந்தது.நன்றி அன்புடன்

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி.
    பக்தி மணம் மணக்க அழகான படங்களுடன் கந்த சஸ்டி கவசத்தைப் பற்றி அருமையாக விளக்கியுள்ளீர்கள். அறியாத தகவல்கள் அறிந்து கொண்ட மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. கந்த சஷ்டி விழாவைப் படங்களுடன் பார்க்க பக்தி பரவசமாயிருக்கிறது.
    கந்த சஷ்டியன்று முருகப் பெருமானை வணங்கி அவனருள் பெறுவோம்.

    ReplyDelete
  15. கந்தசஷ்டி விழாவை உங்கள் பதிவின் மூலம் கண்டு தரிசனம் பெற்றேன்.
    நன்றி.

    ReplyDelete
  16. information about peacock is new

    ReplyDelete