Sunday, April 27, 2014

பொன்னான வாழ்வருளும் புன்னைநல்லூர்அன்னை

         



 புன்னைநல்லூர் அருட்தலத்தில் புன்னை வனத்தில் புற்றுருவில் அமைந்த அன்னை மழை வளம் தரும் மாரியாகவும், வெப்பத்தின் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களுக்கு மருந்தான முத்துமாரியாகவும், மனக் குறைகளைப் போக்கி நலமருளும் மகா மாரியாகவும் அருள் பாலித்து வருகிறாள்.

 பிரம்மோற்சவத்தில், இன்றும் சித்தர்கள் பலருடன் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் கலந்துகொண்டு வழிபடும் கண்கண்ட தெய்வம் அன்னை புன்னை மாரியம்மனே மகாலட்சுமி. அவளே சரஸ்வதி தேவி- அவளே பரமேஸ்வரியாம் வரமகாலச்சுமி
மகா மண்டபத்தின் முகப்பில் கொடிமரம், பலிபீடம் காட்சி அளிக்கிறது.  கருவறை  மூலஸ்தான அம்மனுக்கு எதிரில் உற்சவ அம்மன் அருள் புரிகிறாள்.

பால் சுரந்த பசுவால் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு துர்க்கை, அம்பாளின் வலப்புறத்தில் வடக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள்.

அனைத்து அபிஷேகங்களும் உற்சவ அம்பாளுக்கும்
விஷ்ணு துர்க்கைக்கும் மட்டுமே நடைபெறும்.

மூலவருக்கு தைலாபி ஷேகமும் புஷ்பாபிஷேகமும் மட்டும் நடைபெறும்.

 தென்கிழக்கு திசையில் பேச்சியம்மன் சந்நிதி உள்ளது.

பேச்சியம்மனுடன் பரிவார தேவதைகளாக காத்தவராயன், வீரன், லாட சன்னாசி, முனி ஆகியோர் அம்பாளைப் பார்த்த வண்ணம் மேற்கு திசை நோக்கிக் காட்சி அளிக்கிறார்கள்.

பேச்சியம்மன் சந்நிதியின் தென் பக்கச் சுவரில் "பாவை விளக்கு அம்மனுக்கு  மாவிளக்குப் படையலிட்டு வழிபடுகிறார்கள்., 

மார்கழி மாத வெள்ளிக் கிழமைகளில் பாவை விளக்கு அம்மன் எதிரில் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறுகிறது..!

அம்மன் சந்நிதானத்தின் பின் புறம் மராட்டிய மன்னர்களின் திருப்பணிகளுக்குத் துணை நின்ற பைரவ உபாசகர் பாடகச்சேரி சுவாமிகளின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது.

மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாம்புப் புற்றுக்கு பக்தர்கள் பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர்.

12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று   சட்டை உரித்து விட்டுச் சென்றிருக்கற- அதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழி பட்டால் விரைவில்
திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஸ்தல விருட்சம் வேம்பு.

புன்னை வனத்தின் நினைவாக முத்துப் பல்லக்குக் குழுவினரால் மூன்றாம் பிராகாரத்தில் புன்னை மரம் வளர்க்கப்படுகிறது.

 வேண்டுதல் செய்து கொண்டவர்கள் குளத்தில் வெல்லம் போடும்
மிக ஆழமான வெல்லக்குளம் உள்ளது

கோவில் நடை காலை 5.30 மணிக்குத் திறக்கப்பட்டு வேத ஆகம முறைப்படி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. (பூஜை நேரங்கள்: காலை 9.00 மணி, நண்பகல் 12.00 மணி, மாலை 6.00 மணி, இரவு 9.00 மணி.)

 மதியத்தில் நடை சாற்றப்படுவதில்லை என்பது இக்கோவிலின் சிறப்பு.

ஆடி மாதத்திலிருந்து பண்டிகைகள் துவங்கு கின்றன. ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக் கிழமை பூச்சொரிதல் விழா சுக்கிர வார வழிபாட்டுக் குழுவினரால் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தஞ்சையிலிருந்து வியாழக்கிழமை மாலை ஸ்ரீராஜராஜேஸ்வரி ரதம் மங்கள இன்னிசை முழங்க, மந்திர கோஷங்களுடன் பூக்கூடைகளைச் சுமந்த வண்ணம் புன்னை நல்லூர் வந்தடையும்.

அந்த ரதத்தைத் தொடர்ந்து எண் திசைகளிலிருந்து எட்டு அலங்கார ரதங்கள் அம்மன்களைத் தாங்கிய வண்ணம் வருகின்றன.

வெள்ளிக்கிழமை நடக்கும் பூச்சொரிதல் விழா
கண்கொள்ளாக் காட்சியாக அமையும்.
ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும், கடைசி ஞாயிறன்று தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும். 

புரட்டாசி மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை தெப்போற்சவமும் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
புரட்டாசி மாத தெப்பத் திருவிழாவை சிவனே, நந்தி 
உள்ளிட்ட கணங்களுடன் வந்து நின்று களிக்கின்றார் என்கின்றார் 
கொங்கணர் சித்தர்
கார்த்திகை மாதத்தில் தினந்தோறும் அதிகாலையில் பக்தர்கள் அம்மன் சந்நிதியை வலம் வருதலும், தை மாதம் விளக்குப் பூஜையும் பக்தர்களின் சிறப்பு வழிபாட்டு முறையாக உள்ளது.

கோடைகாலத்தில் பக்தர் களுக்கு வெப்பத்தைத் தணித்து, குளுமையான நிழல் தரும் மாரியை சித்திரையில் வணங்க வருவோர் ஏராளம்.

அம்மை நோய் கண்டவர்கள் ஆலயத்தில் வந்து தங்கி குணம் பெறுவதில் நம்பிக்கை உண்டு..!
உலக அமைதிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் யாகங்களும் சிறப்புப் பூஜைகளும் நடத்தப் பெறுகின்றன.

புன்னைநல்லூர் மாரியை இங்கே கோவில் கொள்ளச் செய்தவர்
சதாசிவப் பிரம்மேந்திரர்!

வெங்கோஜி மகாராஜா சத்ரபதி என்ற மராட்டிய மன்னனின் கனவில் சென்று, ‘புற்றில் மறைந்து வாழ்கின்றேன். எமை  எடுத்து கோயில் கட்டு’ என்று புன்னை நல்லூர் அன்னையே சொல்ல, புன்னை மரங்கள் அடர்ந்த காட்டினுள், கரையான் புற்றில் இருந்த அம்மையை  எடுத்து கோயில் கட்டினார் மன்னர்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஸ்ரீ ஆகர்ஷ்ண யந்த்ரம் செய்து அன்னையை ஸ்தாபிதம் செய்தார்.

சக்திபீடம் அமைக்க அவர் வானுலகிலிருந்து பாரிஜாதம்  என்ற
தேவ மலரையும் அமிர்த ஆற்றின் நீரையும் கொணர்ந்தார் என்கின்றார், அகத்தியர்.

சதாசிவ பிரம்மேந்திரர் அஷ்டமாசித்தி பெற்றவர். கூடுவிட்டுச் சென்று வானுலகிலிருந்து பாரிஜாத பூ எடுத்து, தேவர்கள் நீராடும், அமிர்தம் என்ற
ஆற்றின் நீரையும் கொண்டு வந்து, சுயம்புவாய் தோன்றிய புன்னை நல்லூர் மாரியம்மனை, அந்த அம்மனை கண்டெடுத்த இடத்திலேயே நிறுவினர்.

புன்னை நல்லூர் மாரியம்மனைத் தொழுதால் மங்களம் பெருகும். பெண்களுக்கு வளையல், மஞ்சள், புஷ்பம், பட்டு வஸ்திரம், தாலி பாக்யம், சந்தான விருத்தி என்பன  எந்தக் குறையுமின்றி சேரும்.

தட்டம்மை, பெரிய அம்மை, விளையாட்டு அம்மை, முத்து அம்மை போன்ற கொடுமை நிறைந்த அம்மை நோய்கள் வம்சத்தில் வராது தடுப்பாள்.

டெங்கு போன்ற கொடிய நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பவள் .

கண் நோய்க்கு கண் கண்ட மருந்தாய் அருள்பாலிப்பவர் புன்னை மாரியம்மன்.

ஒருமுறை தஞ்சை மன்னர் துளஜா மகாராஜாவின் இரண்டாவது புத்திரிக்கு பார்வை பறிபோனது. சிறு மூளையில் சிறுகட்டி. பார்வை போனது மட்டும் அன்றி, தீராத தலைவலியும் வந்தது.

வைத்தியர்கள் கைவிட, நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரை மனதில் ஆராதித்த மன்னர், புன்னை மாரியம்மன் ஆலயத்தில் பன்னிரண்டு நாட்கள் தங்கி,  வழிபாடு மேற்கொண்டார். கற்றோர் வியக்க, மற்றோர் போற்ற, இளவரசி கண் பார்வை முழுமையாக பெற்றார். சிறுமூளையில் தோன்றிய கட்டி சட்டென மறைந்தது.

இது நடந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளை. அன்று தொட்டு புன்னை மாரியம்மனை ஞாயிறுதோறும் மன்னர் குலம்  போற்றி தொழுது ஆராதித்தது.

தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சையிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர்
height of faith:Devotees pulling the car of Punnainallur Mariamman temple in Thanjavur on Sunday.Photo:B.Velankanni Raj

15 comments:

  1. வணக்கம்
    அம்மா
    சிறப்பான விளக்கம். படங்கள் எல்லாம் அழகு பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. புன்னை நல்லூர் அறிந்தேன்.

    எங்கள் ஊர்தான் என்றபோதிலும்
    வலையில்படித்து மகிழும் இன்பமே இன்பம்தான்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. பொன்னான வாழ்வருளும் அம்பாளுக்கு
    அடியேனின் வந்தனங்கள். நமஸ்காரங்கள்.

    பூச்சூடலால் மணம் கமழ்ந்து
    மனதை மயக்கிடும் பதிவு

    காட்டியுள்ள நுழைவு வாயில் ...
    அடடா .... எவ்ளோ நீளம் .. அகலம் .. உயரம் !
    மொத்தத்தில் மிகவும் பிரும்மாண்டம் .... தான் !!.

    இருப்பினும் சூப்பர் கவரேஜ் ....
    சுவைத்திட இனிமை.
    கண்களுக்கு நல்ல விருந்து.

    தெப்பப்படமும் ஆனந்தத்தில்
    மிதக்க வைக்கிறதே !!!

    காணொளிகள் உள்பட
    அனைத்துக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. நிறைய தடவை போய் இருக்கிறேன். கணொளிகள் அருமை.
    தங்கபாவடை அலங்காரம், மற்றும் அனைத்து படங்களும் அழகு.
    அனைவரையும் உடல் நலத்துடன் வைத்து இருக்கட்டும் அன்னை.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  5. புன்னை நல்லூர் அன்னையின் சிறப்புகள் அனைத்தும் அருமை... காணொளி மிகவும் சிறப்பு அம்மா... நன்றி.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. எங்க ஊர் மகமாயி...
    நினைக்குந்தோறும் நெஞ்சில் இனிப்பவள் அவள்!..

    ReplyDelete
  7. புண்ணை நல்லூர் அன்னையின் பெருமை அறிந்தேன்.நன்றி ! வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  8. பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. புன்னை நல்லூர் மாரியம்மனின் சிறப்புக்களை அறிந்துகொண்டேன். படங்கள்,காணொளி எல்லாமே அருமை. நன்றி.

    ReplyDelete
  10. புன்னை நல்லூர் மாரியம்மன் பற்றிய தகவல்களை ஆர்வத்துடன் படித்தேன். புகைப்படங்களும், காணொளியும் பதிவிற்கு அழகூட்டுகின்றன.

    ReplyDelete
  11. அம்மனின் சிறப்பான பதிவுக்கு நன்றி.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இருபத்து இரண்டு வருடங்கள் நான் இருந்த ஊர் தஞ்சை என்றாலும் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு இரு தடவைகள் தான் போய் இருக்கிறேன்.

    என்னுடைய மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான திரு கே.கோபாலக்ருஷ்ணன் கே.ஜி.கே. என அழைக்கப்படுபவர், )(மெடிகல் காலேஜ் ரோடில் இருக்கும் எல். ஐ. சி. காலனியில் இருப்பவர் தனது 77 வது வயதிலும் ஆடி மாதம் தஞ்சை மேல வீதி இலிருந்து புறப்படும் பாற்குடங்கள் எடுத்து செல்லும் ஊர்வலத்திலே எனக்குத் தெரிந்து 55ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து சென்று வழி படுகிறார். ஒரு ஆண்டு கூட இவர் தவற விட்டது இல்லை. தானும் பாற்குடம் எடுத்து பாடிக்கொண்டே செல்கிறார்,

    புன்னை நல்லூர் மாரியம்மன் தெப்பம் வெகு பிரசித்தம்.

    தஞ்சை செல்லும்போது, கண்டிப்பாக செல்ல வேண்டும்.

    எங்கள் ஊர் மாரியம்மன் என் கண் முன் நிற்பது போன்ற எண்ணம் உங்கள் பதிவைப் பார்த்தபின் ஏற்பட்டது.

    சமயபுரம் மாரியம்மன் , நாகை நெல்லுக்கடை மாரியம்மன், புன்னை நல்லூர் மாரியம்மன் , கொள்ளிடத்தின் இந்தப்பக்கம் அன்பில் மாரியம்மன்

    என்ன மாறினாலும்
    இவர்கள் அருள் வெள்ளம் மாறாது. குறையாது.

    சுப்பு தாத்தா.
    www.pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  13. புன்னை நல்லூர் அம்மனை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தக்டு நன்றி அம்மா.

    ReplyDelete
  14. ஓரிரு முறை சென்று தரிசித்திருக்கிறோம் ஆனாலது பற்றிய நினைவுகள் அதிகமில்லை. வழக்கம்போல் பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete