Wednesday, April 30, 2014

அஷ்டலட்சுமி கடாட்சம் அருளும் அட்சயதிருதியை



நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே! 
சங்கசக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே! 

ஸர்வஜ்ஞே ஸர்வவரதே ஸர்வ துஷ்ட பயங்கரி! 
ஸர்வதுக்க ஹரே தேவி மகாலக்ஷ்மி நமோஸ்துதே!
திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. 

 தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 
3வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது

அட்சய திருதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு 
மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

நல்ல காரியங்கள் தொடங்கவும் 
சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘

மகிழ்வித்து மகிழ்’ என மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெறலாம்..
 சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.   சித்திரை மாத வளர்பிறையில் வரும்   எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர்.

திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை

பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது.

 பூஜை அறையில் கோலமிட்டு. அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இட்டு இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்கி அதனுள் காசுகளைப் போடுவதும், காசுகளைப் பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பதும்  வழக்கம்.

கலசத்தின் அருகே  நெல் நிறைத்து வைத்து  கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து. லட்சுமி நாராயணர் படம் வைத்து அலங்கரித்து , குத்துவிளக்கினை ஏற்றி மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வைக்கலாம்..
அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் வீடு தேடிவந்துவிடும்.

முதலில் விநாயகரை வேண்டி. பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்திக்கலாம்...

 விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லலாம்... அல்லது கேட்கலாம்..

 குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.

 வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யலாம்..!

 பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் 
நிவேதிப்பது சிறப்பானது.

அட்சயதிருதியை தினம்  சிவாலயம், பெருமாள் கோயில் என்று 
 இயன்ற தலத்திற்குச் சென்று தரிசிக்கலாம்..

 அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக.கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.

பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான்.

எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.
 இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் 
லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, .தீராத வியாதி உள்ளவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் அந்த ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து இறைவனின் நாமத்தை ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும்
கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி பாலரிஷ்ட தோஷங்கள் கழியும் என்பது ஐதீகம்.

அட்சய திரிதியை அன்று ஆல இலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபித்து கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும். 

அட்சய திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும். 

அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

அன்றைய தினம் மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும். அட்சய திரிதியை தினத்தன்று சிவனே அன்னபூணியிடம் உணவு பெற்றதால், நமசிவாய மந்திரத்தை அன்று முதல் சொல்லத் தொடங்கலாம் பிறகு நாள்தோறும் 108 முறை சொல்லிவந்தால் பார்வதி பரமேஸ்வரரின் பூரண அருள் கிட்டும்.
அமிர்த சஞ்சீவினி மந்திரம்:-
ஓம் நமோ பகவதி |மிருதசஞ்சீவினி |சாந்தி குரு குரு ஸ்வாஹா||

தன்வந்திரி மந்திரம்:-

ஓம் |நமோ பகவதே வாசுதேவாய|தன்வந்திரியே |அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு,சக்கரம்,அட்டைபூச்சி,அமிர்தகலசம் இவற்றுடன்  தோன்றியவர்தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான்.

தன்வந்திரி மந்திரத்தை ஜபித்து வந்தால் வியாதிகள் நீங்கும்.வெண்ணையில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை கையில் வைத்துதன்வந்திரி மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.


அட்சயதிருதியை அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும்.  தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

இல்லத்தில்  கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் செய்யலாம். குறிப்பாக, சகல வெற்றிகளும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லி ஹோமம் செய்யலாம்.

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
அட்சய திருதியை அன்று லட்சுமி தேவியை மனதார பிரார்த்தனை செய்தாலே , "கனகதாரை'' நிச்சயம் செல்வம் பெருக செய்வாள்.

ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

 அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில்  முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

உடல் ஊனமுற்றவர்கள்  அருளும் விசேஷமான அட்சய திருதியை பூஜை!
ஸ்ரீ சனீஸ்வரர் மானுட ரூபத்தில் விளங்குளத்தில் அட்சய திருதியை அன்று பிட்சை ஏற்று. அன்னதானம் அளித்துத் தனக்கு ஏற்பட்ட ஊனக் குற்றங்களைப் போக்கிக் கொண்டார்.

எனவே, உடல் ஊனமுற்றவர்கள்.திருதியைத் திதி நாட்களில் அட்சயத் திரிதியைத் தலங்களில் மற்றும் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சன்னதி கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரர் தனிச் சிறப்பு கொண்டுள்ள இடங்களில் ஸ்ரீ சனீஸ்வரருக்கு நவதானியங்களும் ஏனைய பருப்பு வகைகளும் பதித்த சந்தன அட்சயக் காப்பும் சார்த்தி முழு முந்திரி பாதாம் பருப்புகளால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் உடல் வகைத் துன்பங்கள் தணியலாகும்.

வழிபாட்டிற்குப் பிறகு தான்யங்களையும் முந்திரிகளையும் தானமாக ஏழைகளுக்கு அளிக்கவேண்டும்...

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்குரிய நாளாக இருப்பதால் லட்சுமி சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி செந்தாமரை மலரால் அர்ச்சிப்பது நன்மை அளிக்கும்.
கிருஷ்ணருக்கு குசேலர் அவல் அளித்த நாள் என்பதால், காய்ச்சிய பாலுடன் அவல், வெல்லம் சேர்த்து கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது சிறப்பு.

அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம்.. இந்நாளில் பிதுர்தர்ப்பணம் செய்வதும், பசுவிற்கு கீரை,பழம் கொடுப்பதும் நல்லது.

அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்' எனப்போற்றுவர்.

லட்சுமி நாராயணருக்கு துளசியும், யவை என்னும் தானியத்தையும் (கோதுமை போல் இருக்கும்) படைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். யவை பூஜைபொருள்கள் விற்கும்  கடைகளில் கிடைக்கும்

அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

 இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கிய பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி - அட்சய திருதியை தினத்தன்றுதான்அன்னை  காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான 
அன்னபூரணி அவதரித்தாள்

அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்' என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
தங்க ஆபரணங்க கட்டுமான பொருட்கள், கலைபொருட்கள் இப்படி எதையும் வாங்கலாம். இதன் மூலம் ஆண்டு முழுதும் சுபிட்சமாக அமையும் என்பது ஐதீகம்

அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை' நாளில் செய்யப்படுகிறது.

கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.


வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.


ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை..

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

10 comments:

  1. அருமையான படங்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  2. அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விளக்கங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா..அறியாதன அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.விரிவாக அத்தனை சிறப்புக்களையும்,அழகான படங்களுடன் தந்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்மை செய்யவும் நல்லதே நினைக்கவும் அக்ஷய திரிதியை வேண்டுமா. எந்நாளும் நன்னாளே.

    ReplyDelete
  5. அட்சய திருதியைக்கு நாங்கள் என்றும் ஸ்பெஷலாக எதுவும் செய்ததில்லை! படங்களுடன் பதிவு அருமை.

    ReplyDelete
  6. அழகழகான படங்களுடன்,

    அதி அற்புதமான செய்திகளை

    அக்ஷயமாக வழங்கி

    அசத்தியுள்ளது

    அகம் மகிழ வைக்கிறது !


    அனைத்து

    அன்னைகள் +

    அம்பாள்களுக்கு

    அடியேனின்

    அன்பு வந்தனங்கள் + நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  7. அக்ஷய திரிதியை பற்றி விரிவான தகவல்களைக் கண்டு மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  8. அட்சய திருதியை குறித்து விரிவான தகவல்கள்! உப்பை வாங்கி வைத்தால் போதுமானது என்ற தகவல் புதிது. மந்திர பகிர்வுகள் சிறப்பு! படங்கள் அழகு! நன்றி!

    ReplyDelete
  9. அட்சய திருதியை குறித்து நீண்டதொரு விளக்கம் அருமை அம்மா. படங்கள் கொள்ளை அழகு.
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  10. அட்சய திருதியை பற்றி அருமையான பதிவு.


    படங்கள் எல்லாம் மிக அழகு.

    வாழ்த்துக்கள்.
    எல்லோருக்கும் வளங்களை , நலங்களை தரட்டும்.

    ReplyDelete