Friday, January 23, 2015

குடை தந்த விநாயகர்



வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்               
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு. 

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் 
காதலால் கூப்புவர் தம்கை  

நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், 105 மாணலூர் கிராமத்தில் அமைந்துள்ள  மிகவும் தொன்மை வாய்ந்த சிவாலயம் அதீத சிறப்பம்சம் கொண்ட திருக்கோயில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகின்றது.

 சிவபக்தர் ஒருவர் தான தருமங்களை செய்து வந்தார்.
தானம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமானதால் பக்தரால் தானதருமங்களை நிறைவாக வழங்கமுடியவில்லை.

மிகவும் வேதனையடைந்த அவர், சிவபெருமானை வணங்கி
கண் கலங்கினார்.

 அவ்வழியே தானம் பெற வந்த ஒருவர், சிவபக்தரின் மனக்கவலையை அறிந்து "தான் ஒரு ஜோதிடர் என்றும் தங்களின் ஜாதகத்தை தாருங்கள் பலன் சொல்லுகிறேன்' எனவும் கூறி சிவபக்தரின் ஜாதகத்தை பார்த்து ""ஐயா! தாங்கள் அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசிக்கு சொந்தக்காரர், எனவே பெரிய பணக்காரராக நீங்கள் இருந்தாக வேண்டும்'' என்று கூறி சென்றார்.

நிறைய தானம் செய்ய வேண்டும் என்று எண்ணிய சிவபக்தர், சிவபெருமானை நோக்கி புன்னை வனத்தில் தவமிருந்தார்.

 தவத்தினை கண்ட பிரம்மாவும், விஷ்ணுவும் பக்தருக்கு வேண்டும் வரம் அளிக்கக்கூடியவர் சிவ பெருமான் என்பதை உணர்ந்து, வரத்தை கும்பராசிக்கு மட்டும் தந்துவிட்டால் மற்ற கிரகங்களுக்கு பலன் இல்லாமல் போய்விடுமே என்று வருணணை அழைத்து மழை பெய்து சிவ பக்தரின் தவத்தினை கலைக்க வேண்டினர்.

உடனே வருண பகவான் மழை பொழிய வைத்தார். அப்போது சிவ பக்தர் கவலையுற்று மழையை நிறுத்துமாறு விநாயகரை வேண்டினார்.

விநாயகர் தனது ஆள்காட்டி விரலை தனது தலைக்கு மேல் சுற்றினார். இதனால் மழையானது இவ்வூரில் மட்டும் நின்று பிற்பகுதியில் பெய்தது.

பக்தரின் தவம் நிறைவடைய, சிவபெருமான் நேரில் தோன்றி ஆசி வழங்கி, "கிரகங்கள் தனது பணியை சரியாகச் செய்யும்போது அதை நாம் தடுக்க இயலாது. உனது நோக்கத்தை மெச்சி வரம் தருகின்றேன்'' என்று கூறி, ""கும்பராசி அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய கிரக கோளாறுகள் நீங்க, இத்திருத்தலம் வந்து என்னை வழிப்பட்டு நிவர்த்தி பெறட்டும். மேலும் உனது வீட்டில் தவிட்டு பானையெல்லாம் தங்கமாய் இருக்கும்! உனது தரும காரியம் தடையில்லாமல் நடக்கும்'' என அருளாசி வழங்கினார்.

மழையை நிறுத்தி சிவபக்தனின் தவத்தை காத்ததால் விநாயகர் தலையில் குடையுடன் காட்சி அளிக்கின்றார்.

 குடை விநாயகரை வழிபடுவோர் விபத்துக்களிலிருந்து காப்பாற்றப்படுவார் என்பதுடன் குபேர யோகமும் கிடைக்கும் என்பது ஐதீகம்!

இங்கு சுந்தரவள்ளி அம்மனை வழிபடுவோருக்கு அழகிய மேனியையும், திருமண யோகத்தையும் அருள்கிறார்.

அதோடு வெண்புள்ளி நோய் உள்ளவர்கள் ஆலயத்திற்கு எதிரில் உள்ள திருத்தேர் குளத்தில் நீராடி தாமரை மலர்களை அம்மனுக்கு சாற்றி 11 வாரம் வியாழக்கிழமையில் வழிபட்டால் அந்த நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

சிவன் புன்னை வனத்தில் தோன்றியதால் புன்னைவன நாதர் எனவும் விநாயகர் மழையை தடுத்ததால் குடை தந்த விநாயகர் எனவும் அம்மன் அழகு மேனியை அருள்வதால் சுந்தரவள்ளி எனவும் தானதருமங்கள் சிவபக்தர் நிறைய செய்ததால் அவர் வாழ்ந்த ஊர் மாநல்லூர் எனவும் அழைக்கப்படுகிறது.

இன்றளவும் மழையானது இவ்வூரைச் சுற்றி பெய்து விட்டு கடைசியில் இங்கு பெய்யும் அதிசயம் நடைபெறுகிறது.

இத்தகைய தலவரலாற்றுப் பெருமைமிக்க இக்கோயிலில்திருப்பணியில் பங்குபெற்று இறைவனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

தொடர்புக்கு: 89405 87036/ 90036 99973. (மாணலூருக்குச் செல்ல: கீழ்வேளூர்} திருத்துறைபூண்டி மார்க்கத்தில் கிள்ளுக்குடி என்கிற ஊரில் இறங்க வேண்டும்.

Tuesday, January 20, 2015

பிராங்ஸ்டன் கடற்கரை -Frankston-Beach





உலகத்தின் மிக சுத்தமான கடற்கரை எனப் பெயர் பெற்ற ஃப்ராங்ஸ்டன் பீச்சுக்குச்சென்றிருந்தோம்.
பளிங்குபோன்ற சுத்தமான ஜில் என்ற கடல் நீர் நாங்கள் அண்டார்டிகா பனிப்பாறைகளை தொட்டுவிட்டு வருகிறோமாக்கும் என அறிவித்தன..
கடல் விளையாட்டுகள், சிறு சிறு படகுகள் கொண்டு வந்து அலைகளுடன்
விளையாடினர்.
உயிர் காக்கும் வீரர்கள் ஜீப்களில் சுற்றிவந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்..
 .
கடற்கரையில் சிறுவர்கள் விளையாட்டு பொம்மை வண்டிகளில் பிளாஸ்டிக் கரண்டிகளில் மண்லை அள்ளிப்போட்டு கொஞ்சதூரம் உற்சாகமாக வண்டியை இழுத்து சென்று ஈர மணலை ஓரிடத்தில் குவித்து வீடுகள் கட்டி விளையாடினர்..

ஒரு சிறுவன் கையில் பெரிய மீன் ஒன்று அகப்பட அதை கோக் டம்ளரில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வீட்டுக்கு எடுத்துச்சென்று மீன் தொட்டியில் வைத்து வள்ர்க்கப்போவதாக நண்பர்களிடம் கூறி மகிழ்ந்து கொண்டிருந்தான்..

வெள்ளைகாரர்கள் க்ரீம் பூசிக்கொண்டு வெயிலில் காய்ந்து தங்கள் தோலின் நிறம் மாறிவிட்டதா என ஆராய்ந்து கொண்டிருந்தனர்..

 Frankston is named after the British army general Sir Thomas Harte Franks.






மணல் சிற்பங்கள்..




Balloon float in a parade  Christmas Festival of Lights



Saturday, January 17, 2015

காணும் பொங்கல் விழாக் கொண்டாட்டங்கள்..




கோகுலத்தின் மீது கல் மழை பொழிந்த இந்திரனின் கோபத்திலிருந்து  ஏழுநாட்கள் கோவிந்தனும் , கோவர்த்தனமலையும் காத்துநிற்கவே- மழைப்பொழிவு நின்றதும் தங்கள் சேதமடைந்த இல்லங்களை கோபர்கள் புதுப்பித்து செம்மண் பூசி அழகு படுத்தினர்.
பூளைப்பூக்கள் , வேப்பிலைகள் . மங்களகரமான் மாவிலைகள் ஆவாரம்ப்பூக்கள் ஆகியவற்றை இணைத்து இல்லத்தின் நான்கு மூலைகளிலும் வைத்து நோய் அணுகாமல் பாதுகாத்துக்கொண்டனர்...
இந்திரன் கோபம் தணிந்து கோவிந்த பட்டாபிஷேகம் செய்தபின் , கதிரவனின் அருளினால் வயல்களில் செந்நெல்லும் ,கரும்பும் விளைந்து செழித்தன
வாழை ,அவரை பூசணி,கிழங்கு வகைகள், மற்றும் பல காய்கனி வர்க்கங்கள் அளவில்லாமல் பலன் கொடுத்து செழித்தன..
மகிழ்ச்சியடைந்த ஆயர்கள் அவற்றை மகிழ்ழ்சியுடன் பறித்து வந்து புதுக்கோலம் பூண்டிருந்த இல்லங்களில் சேர்ப்பித்தனர்..
கோகுலப்பெண்கள் , புத்தரிசியைப் புதுப்பானையில் பாலுடன் கலந்து , இனிப்பான பொங்கல் செய்து , ஏழுநாட்களுக்குப்பின் பிரகாசித்த சூரியனுக்கு
பொங்கல் , கரும்பு , பலவகை காய்கள் நிறைந்த குழம்பு ,கரும்பு ஆகியவற்றைப்படையலிட்டு தங்கள் நன்றியை கதிரவனுக்குத்தெரிவிக்கும் விழாவாகக்  கோண்டாடினர்..

அடுத்த நாள் தங்களுக்கு ஆச்சார்யன் போல் திகழ்ந்த மாடுகள் அவர்கள்
கவனத்தைக்கவர்ந்தன்  ..

கல் மழை பொழிய ஆரம்பித்ததும் தங்கள் கன்றுகளை பாதுகாப்பாக அரண் போல்  அமைத்து கொம்புகளைத்தாழ்த்திக்கொண்டு மாடுகள் தான்  முதலில் கோவிந்தனின் குடைக்குக்கீழ் சென்று வழிகாட்டின..
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் அவர்கள் செல்வம் ஆயிற்றே..:ஆகவே மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி,சலங்கை கட்டி, குளிப்பாட்டி, வர்ண, வர்ணமாய் அலங்கரித்து பொங்கல் ஊட்டி  மகிழ்ந்தனர்..
அடங்காத காளைகளை ஏறு தழுவி வீர விளையாட்டுகள் நிகழ்த்தினர்..
அடுத்த் நாள் தங்கள் துன்பங்களெல்லாம் தீர்ந்த மகிழ்ச்சியில் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் கண்டு  மகிழும் காணும் பொங்கலாக மலர்ந்தது..
இன்றைய , கதிரவன் பொங்கல் , மாட்டுப்பொங்கல்.காணும் பொங்கல் ஆகியவற்றின் அடிப்படை கோவர்த்தன மலை உத்தாரணமே..!


Tuesday, January 13, 2015

இந்திர விழா




கடுங்கால் மாரி கல்லே பொழிய, அல்ல எமக்கு அன்று
கடுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்சஅஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்திநிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாம்ம் நமோ நாராயணமே

என்ற திருமங்கை மன்னன்  பாடல் வழி கல்மாரி பொழிந்த திறத்தையும் கண்ணன் காத்த கருணையையும் விளக்கமாக அறியலாம்...

 தன் ஐந்து விரல்களை மேலுயர்த்தி குன்றத்தை குடை எனப் பிடித்திருக்கும் காட்சியை பெரியாழ்வார் தம் பாசுரத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். 

கண்ணபிரானின் மணி நெடுந்தோள் குடைக்காம்பாகவும், அவன் கைவிரல்கள் குடையின் உள் விட்டங்களாகவும் விளங்க அதன் மேல் மலை கவிழ்ந்து குடையாக இருப்பதாக் காண்கிறார். 

கண்ணபிரான் விரல்களை விரித்து கோவர்த்தன மலையைத் தாங்கும் காட்சி ஆதிசேடன் தன் ஐந்து தலைகளை படமாக விரித்து அதன் மேல் பூமியை தாங்குவது போல் தோன்றிற்று. 

கண்ணன் வலப்பக்கத்தில் பலதேவர் நிற்க
குன்றமேந்திக் குளிர் மழை காத்த திருக்கோலம் வெகு அற்புதமானது..


அமரர்தம் கோனார்க் கொழியக் 
கோவர்த்தனத்துச் செய்தான் மலை

ஆய்ப்பாடியில் ஆண்டுதோறும் இந்திரனுக்கு சமைத்துப் படைப்பார்கள். 

கண்ணன் பிறந்த பிறகு , இதனைத் தடுத்து, "எல்லா நன்மைகளும் செய்யும் கோவர்த்தனமலைக்கே இனி  படைப்போம்," என்று கூற ஆயர்களும் அவ்வாறே  கோவர்த்தன மலைக்கே படைத்தார்கள். 

கோபமடைந்த இந்திரன் ஏழு நாட்களுக்கு அடை மழையை பொழிந்து ஆயர்பாடியை வெள்ளமாக்கினான். இந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற கண்ணனும் தன சிறு விரல் நுனியால் கோவர்த்தன மலையை அனாயாசமாக தூக்கி குடையாகப் பிடித்தான்.

குன்றேடுத்து மாரி காத்ததை அறிந்து அவமானப்பட்ட இந்திரன் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டி கண்ணன் கையில் இருந்த கோவர்த்தன மலைக்கும், கண்ணனுக்கும் 
"கோவிந்த பட்டாபிஷேகம்" செய்தான். 

இதனால் கண்ணனுக்கு "கோவிந்தன்" என்ற பட்டப்பெயர் கிடைத்தது. 

 மார்கழி கடைசி நாளன்று போகி என இந்திரனுக்குரிய விழாவாக கொண்டாட கோவிந்தன் அருள்புரிநதான்..

அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.

ராமன் பாதுகைக்குக் கிடைத்த பாக்கியம் கோவர்த்தன மலைக்கும் கிடைத்தது . இந்த உணவு படைக்கும் உத்சவம் "அன்னக் கூட உத்சவம்" என்று பல கோயில்களில் இன்றும் நடைபெறுகிறது. -

21 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கோவர்த்தன மலையை "பரிக்ரமா", அதாவது ப்ரதிக்ஷிணம் செய்வது சிறந்தது - 


ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்