Friday, November 30, 2012

கார்த்திகை தீப ஒளித் திருநாள்
”அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான் ”கார்த்திகை மாதத்தில்  மாலையில் விளக்கேற்றி வழிபட அருமையான துதி !

சிவனுடன் சக்தி சேர்ந்த பொன்னாள்

ஆறுமுகம் அவதரித்த சுப நாள் கார்த்திகை  தீபத் திருநாள்..!

அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமிகளும்  இல்லத்தில் இஷ்டமாக வந்து குடியேறி மங்களங்கள் மலர்விக்கும் பொன்னாளாகத் திகழ்கிறது...


தமிழ் மக்களின் வாழ்வியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய  ஒளித்திருநாள் கார்த்திகைத் தீபம் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது....
.
 பஞ்சபூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்  இவைகளால் ஆனதே பிரபஞ்சம். 

அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத் திருவிழா. 

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில்தான். மகா தீபம் ஏற்றப்பட்டு பதினேழு நாட்களுக்கு பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. 

கார்த்திகைப் பெளர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்தால் சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக அன்று இறைவன் இருக்கிறான்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும்; 
உண்ணா மலை அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுத்துச் செல்கிறார்கள்....

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும், மாலையில் மலையுச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகின்றன.
திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. 

பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே.
திருவண்ணாமலை கிரிவலத்தில் முதல் அடியில்
உலகை வலம் வந்த பலனும், 
இரண்டாவது அடியில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனும், 
மூன்றாவது அடியில் அஸ்வமேத யாகம் செய்த பலனும், 
நான்காவது அடியில் அஷ்டாங்கயோகம் செய்த பலனும் கிடைக்கும்.
திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.
அருட் பெருஞ்ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் விளங்குவது போன்று அக்னியும் பிரகாசிக்கின்றது. 

அக்னியிலே பல விதமான தீபங்கள் தோன்றுவது போல் 'சிவம்' என்ற நாமம் ஒன்றே பல தத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதி ஸ்வரூபமாகக் காட்சி தருகிறது. 

அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. 

பிரம்மாவும், திருமாலும் சிவபெருமானின் அடி, முடியைக் காணாது தோல்வியுற்றனர். 

ஆதி அந்தம் கடந்தவனை, முதலும் முடிவுற்றவனை இறுதியில் ஜோதிப் பிழம்பாக திருவண்ணாமலையில் கண்டு களித்தனர். 

அதுவே ”லிங்கோத்பவ மூர்த்தி” ஆகும். 

சிவ கார்த்திகை, விஷ்ணு கார்த்திகை என கார்த்திகை இரண்டாக கொண்டாடப்படுகிறது. 

 திரிபுர அசுரர்களை அடக்கிய திருநாள் சிவகார்த்திகை என்றும், 

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள் விஷ்ணு கார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். 

கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்

கார்த்திகைத் திருநாளன்று அவல் பொரியில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி 'கார்த்திகைப் பொரி' செய்து நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு.

 கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் உண்டு. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காய் துருவலைச் சேர்க்கிறோம். 

தூய்மைக்கு அடையாளமாக வெல்லத்தைச் சேர்க்கிறோம். 

வெண்ணீறு பூசிய சிவபெருமானை இந்த வெண்மையான நெல் பொரியும், வள்ளல் தன்மை கொண்ட மாவலியை தேங்காய் துருவலும் உணர்த்துகிறது. 

பக்திக்கு வசப்படும் இறைவன், பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே கார்த்திகைப் பொரி நமக்கு உணர்த்தும் தத்துவம்.

சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர். ‘சொக்கப்பானையை வணங்குவது சொக்கப்பனை.........’. 
சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை .
கார்த்திகை சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும்.  காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும் 


கார்த்திகைதீபம் உயரமாக மலைமீது ஏற்றப்படுவத்ற்கு
 விஞ்ஞான விளக்கம் உண்டு..

சுழல் காற்றை சமன் செய்யும் குணம் அக்னிக்கு உண்டு.. தை மாதம்  அறுவடையாக வேண்டிய பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்தில் காற்று சுழன்றடித்தால் விளைச்சல் பாதிக்கப்ப்டும்.. அதனைக்குறைத்து திசைதிருப்பவே மலைமீதான தீபமும், வீடுகள் தோறும் ஏற்றிவைக்கும் தீபமும் பல்வழிகளில் பயன்படுகின்றன்.. 

ஆன்மீகத் தேனில் குழைத்துத் தந்த அருமையான விழா.. 

பன்முகப்பயன்பாடு.. சந்திர ஒளிக்கிரணங்கள்,,,மலையின் ஆன்மீகக்கதிவீச்சு எல்லாம் கிடைக்கும் அரிய தத்துவ விளக்கம்...

சகல ஜீவராசிகளும் பயன் பெறும் ஜீவகாருண்ய விழா.  

ஐப்பசி பட்டாசு வெடிப்பும் வாணவேடிக்கைகளும் வெறும் விளையாட்டல்ல.. மழை அந்தப்பருவத்தில் பெய்தால் பயிர்கள் பாதிக்கப்படும் 

.பட்டாசுகளின் கந்தகப்புகை மழை மேகங்களை கலைத்து வானிலையை சமப்படுத்தச் செய்த அற்புதக்கொண்டாட்டம்!  


சமுதாயமாகசேர்ந்து பல கைகள் தட்டினால் ஓசை பெரு வெடிப்பாய் நிகழ்வதைப்போல வானிலை கால நிலையை மாற்றவே தீபத்திருநாட்கள் கொண்டாட்டம். 

பெரும் புயலைத் தடுக்கும் வெப்பம் ..
காற்றை திசைதிருப்பும் அழல்.
.
உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம் நம் மெய்ஞானிகளை.. 


http://www.vallamai.com/literature/articles/29068/
வல்லமை மின் இதழில் வெளியான எமது ஆக்கத்தை
இங்கும் பகிர்ந்துகொள்கிறோம்...

கார்த்திகை பேரொளி


எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

பாடும் பறவை கூடங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே

இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் ரெண்டும் ஒன்றுதான்

 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி
 
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற  நன்னாள்  கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது 
அர்த்தநாரீஸ்வரர்”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்த நாளே தீபத் திருநாளாக  கொண்டாடப்பட்டு வருகிறது.


‘குன்றத்து உச்சிச் சுடர்’ என்று சீவக சிந்தாமணி விரித்துரைக்கும் சிறப்புப் பெற்ற திருநாள்..


ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடும் கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம். 
பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது.
அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். “எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!  
- ரவீந்திர நாத் தாகூரின் கவிதை.  
அகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம். 

Thursday, November 29, 2012

ஓம் அருணாசலேஸ்வராய நம:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தரிசிக்கும்போது  சிவனுக்குத் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்டு அருளிய பொக்கிஷம் திருவெம்பாவை.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி,
சிவலோகன், 
தில்லைச் சிற்றம்பலத்து ஈசன்,
அத்தன்,
ஆனந்தன் அமுதன்,
விண்ணுக்கு ஒரு மருந்து,
வேத விழுப்பொருள்,
சிவன்,
முன்னைப் பழம்,
தீயாடும் கூத்தன் 
என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.

அன்பருக்கு மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை”
என்று 
போற்றப்படும் திருத்தலம் திருவண்ணாமலை எனப்படும் அருணாசலம்

  பார்வதி தேவி விளையாட்டாய் சிவகின் கண்களை பொத்தியதனால் உலகம் இருண்டது. 

ஈசனின் வல, இடக் கண்களான சந்திர, சூரியர்கள் களையிழந்தனர். 

நெற்றிக் கண்ணாகிய அக்னியும் அன்னையின் கைவிரல் பட்டுக் குளிர்ந்து போனதனால் வேள்விகள் தடைப்பட்டன. யாகங்களும், பூஜைகளும் இல்லாமல் போயின. 

உலகத்தில் அருள் ஒழிந்தது. இருள் சூழ்ந்தது. உலகங்கள் இருண்டதால் முனிவர்களும், தேவர்களும் அஞ்சினர். மதி மயங்கினர். கடமைகளை மறந்து முடங்கியதால் உலகம் தன் நிலையிலிருந்து தவறியது. 

சினம் கொண்ட ஈசனின் கட்டளைப்படிஅன்னை தவம் செய்து ஈசனின் அருள் பெற்று, சாப நிவர்த்தியான தலம் தான் அண்ணாமலை. 

சாப நிவர்த்தி மட்டுமல்ல; ஈசனின் உடலில் சரி சமமாக இடப்பாகம் பெற்றாள். 

அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது 

”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்” என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

Adi Annamalai Temple 


Wednesday, November 28, 2012

தீபஜோதி வழிபாடுஇல் அக விளக்கு அது இருள் கெடுப்பது,
சொல் அக விளக்கு அது, சோதி உள்ளது,
பல் அக விளக்கு அது, பலரும் காண்பது,
நல் அக விளக்கு அது, நமச்சிவாயவே!


என்று திருநாவுக்கரசு சுவாமிகள்  அருள் பொழியும் தீபத்தை பாடியுள்ளார்..


கார்த்திகை விளக்கு திரு கார்த்திகை விளக்கு 
கம்பன் நீலன் கடம்பனுக்கு கார்த்திகை விளக்கு 
நெஞ்சில் கருணைக்கொண்டு ஏற்றிவைக்கும் கார்த்திகைவிளக்கு 

பார்க்கும் இடமெல்லாம் சுடரும் தீபஜோதிகள்  ஆணவம், அகங்காரம், பொறாமை போன்ற தீய குணங்களை பொசுக்கி, ஞானம் எனும் அறிவொளியை ஏற்படுத்துவதாக ஐதீகம்.

தீபஜோதி வழிபாடு இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமசனி போன்வற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. 

இமயமலையைவிட திருவண்ணாமலை மிகவும் பழமையானது என்பதை ஆதாரத்துடன் புவியியல் அறிஞர் நிரூபித்துள்ளார்.

அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.

ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும் பஞ்சகிரியாக அருளும் திருக்காட்சியை கிரிவலம் வரும்போது தரிசிக்கலாம்

திருமால், பிரம்மா ஆகியோரின் அகந்தையை நீக்கி சிவபெருமான் லிங்கோத்பவராக- ஜோதிப் பிழம்பாகக் காட்சி தந்த ஜோதி திருவுருவத்தின் வெம்மை தாங்காமல் தேவர்கள் வருந்தித் துன்பப்படவே, சிவபெருமான் மலையாகி நின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.திருவண்ணாமலையில் தவமிருந்த பார்வதிக்கு சிவபெருமான் தன் உடலில் பாதி இடத்தை அளித்து, அர்த்தநாரீஸ்வரர் என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றார்.

திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றி வலம் வந்த சிறப்பினை பார்வதிதேவி பெற்ற நாள் திருக்கார்த்திகை என்று புராணம் கூறுகிறது.
கிரிவலப் பாதையில் ஏராளமான கோவில்கள் உள்ளன.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் லிங்கத்தைப் பார்த்த வண்ணம் காட்சி தராமல் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையே சிவபெருமான் என்பதால் அனைத்து நந்திகளும் மலையைப் பார்த்த வண்ணம் உள்ளன. 

thiruvannamalai girivalam tabel - annamalaiyar