Friday, July 31, 2015

ஆயிரம் கண்ணுடையாள், அங்கயற்கண்ணி




அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாய் விளங்கும் அன்னை ஆதிபராசக்தி திரும்பிய இடமெல்லாம் திருக்கோவில்களாகத் திகழும்  
பிருந்தாரண்ய க்ஷேத்திரம் என்று முற்காலத்தில் வழங்கப் பட்ட  திருவல்லிக்கேணி திருத்தலத்தில்  அளப்பருங் கருணையைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது ரேணுகா பரமேஸ்வரி கோவில்

கேட்கும் வரங்களை கேட்டவாறே தரும் தாய் ஆயிரம் கண்ணுடையாள், அங்கயற்கண்ணி என்பது பக்தர்களின் அனுபவ  நம்பிக்கை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலுக்கு வாயு திக்கில் (வடமேற்கில்) கோவில்கொண்டு ஆயிரம் கண்ணுடையாள், அங்கயற்கண்ணி, மாரி என பல திருப்பெயர்கள் கொண்டு விளங்குபவள் எல்லையம்மனான  ரேணுகா பரமேஸ்வரி.

 ஆலயம் சமீபத்தில் புனராவர்த்தனம் செய்யப்பெற்று. மூலவர் சந்நிதி முழுவதும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 

சாலாகார விமானம், அலங்கார மண்டபம் ஆகியவையும் புதிதாக அமைக்கப்பட்டு, கண்கவரும் வண்ணங்கள் தீட்டப்பட்டு காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது .

அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி முதலியவற்றோடு தொடங்கிய, அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு ஹோமங்கள் மிகச்சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டு சமீபத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தேறியிருக்கிறது..!

 ஐந்து நாட்களும் ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, தோரண வாயில், மின் விளக்கு அலங்காரம் என திரும்பிய பக்கமெல்லாம் ஒளிவெள்ளம், பக்தி வெள்ளம்.இந்த கும்பாபிஷேக விழா அம்மனின் கீர்த்தி எத்தகையது என்பதை
பறைசாற்றுகிறது..!.

சென்னை திருவல்லிக்கேணியில், ஜாம்பஜாருக்கு தெற்கில், தேவராஜ முதலி தெருவில் அமைந்துள்ளது .  அன்னையிடம் முறையிட்டால் தீராத துன்பங்கள் இல்லை; வாராத இன்பங்கள் இல்லை

Wednesday, July 29, 2015

அகிலம் காக்கும் அன்னையின் அருந்தவம்












ஸூலம் சக்ரம் பாஞ்சஜன்யம் கபாலம் தததம் கரை: 
ஸ்வஸ்வபூஷார்த்த நீலார்ததேஹம் ஹரிஹரம் பஜே.                 

 ஈசனும் திருமாலும் ஒருவராய் அமைந்த அற்புத வடிவினரான சங்கர நாராயணரே நமஸ்காரம். சூலம், சக்கரம், பாஞ்சஜன்யம் என்ற  சங்கு, கபாலம் ஆகிய சிவ-விஷ்ணு அம்சங்களை ஒருங்கே தாங்கி நிற்கும் சங்கரநாராயணரே நமஸ்காரம். 

சிவனும் விஷ்ணுவும் ஒரு சக்தியே  என்பதை இந்தத் திருவடிவத்தால் விளக்கும் சங்கர நாரயணரே நமஸ்காரம்.  இந்த ஸ்லோகத்தை ஜபித்தால் பரமேஸ்வரன்,  திருமால் இருவரின் திருவருளையும் பெற்றலாம்.  

அகிலம் ஆளும் உமாதேவியார் சிவபெருமானிடத்தில், ஹரியும் சிவனும் ஒன்று என உணர்த்தும்விதமான திருக்கோலத்தைக் காட்டவேண்டுமென வேண்டிக்கொண்டாள். 
"பொதிகை மலையின் பக்கத்தில் புன்னைவனத்தில் தவமிருந்தால்  ஆசை நிறைவேறும்' என சிவன் பார்வதியிடம் கூறினார். 
அதுபோலவே பார்வதி சுழல் நடுவே ஒற்றைக் காலில் ஊசிமுனையில் நின்று தவம்புரிந்ததுதான் ஆடித்தபசு ஆகும். இது ஆடிப் பௌர்ணமியன்று நடந்தது.
தேவியின் தவத்தைக் கண்டு கருணைகொண்டு, அன்று உமாதேவிக்கு இடப்பாகம் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனதுபோல், இன்று திருமாலுக்கு இடப்பாகம் தந்து சங்கரநாராயணராக காட்சிகொடுத்தார்.
ஆடிப் பௌர்ணமி அன்று காலை 9.00 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். 

பகல் 12 மணியளவில் கோமதியம்மன் தங்கச்சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வந்து, தெற்கு ரத வீதியிலுள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வாள். 
மாலை 4.00 மணிக்கு கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவன் சங்கரநாராயணராக அலங்கரிக்கப்பட்டு, காட்சி மண்டபம் வந்துசேர்வார். அங்கிருந்து காட்சிப் பந்தலுக்கு போவார்.
தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் புறப்பட்டு காட்சிப் பந்தல் வந்தவுடன் பட்டு, பரிவட்டம், மாலை மரியாதை நடைபெறும். 
அம்பாள் சுவாமியை மூன்று முறை வலம்வருவாள். சிவன் அம்பிகைக்கு 6.15 மணிக்கு சங்கர நாராயணராக காட்சிதருவார். இது சைவ- வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் காட்சி. கண்டுமகிழ்ந்த அம்மை, தபசு மண்டபம் அடைவாள். பின் சுவாமி ஆலயத்திற்குச் செல்வார்.
இரவு சுவாமி சங்கரலிங்கராக ஆலயத்தினின்று புறப்பட்டு யானைவாகனத்தில் வீதியுலாவாக வந்து காட்சிப் பந்தல் அடைவார். அப்போது இரவு 12.00 மணியாகிவிடும். அம்பிகை சுவாமி அருகே வந்து காட்சிப் பந்தலில் மகிழ்வுடன் திருக்கண்மாலை மாற்றிக்கொள்வாள்.

அதன்பிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். விழாக்காட்சிகாண திருநெல்வேலியே திரண்டுவரும்.
சங்கரநாராயணர்- கோமதியம்மன் முன் உள்ள ஸ்ரீசக்கரம் அருகே மாவிளக்கேற்றி வைத்து சக்கரத்தின்மேலமர்ந்து தவம்செய்தால் பிணிகள் அனைத்தும் நீங்கிடும் சக்தி மிக்கது..

Thursday, July 23, 2015

நவநிதி நல்கும் நவ பிருந்தாவனம்



பத்மநாபம் கவீந்திரம் ச வாசீகம்
வ்யாசராஜகம் ஸ்ரீநிவாசம் ராமதீர்த்தம்
ததைவச் ஸ்ரீ சுதீந்திரம் ச கோவிந்தம்
நவபிரிந்தாவனம் பஜே

=நவ பிருந்தாவனம் தியான ஸ்லோகம்

கர்நாடக மாநிலத்தில், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி தாலுக்காவில் ஆனேகுந்தியில் நுங்கபத்ரை ஆற்றின் நடுவில் உள்ள ஒரு திட்டில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் நினைத்தாலும், துதித்தாலும்  மனக்குறைகளை நீக்கி நன்மைகளை வழங்கி பிரார்த்தனைகள் நிறைவேற செய்யும்.

ஸ்ரீ ராகவேந்தரின் ஒன்பது மாதவ ஆசார்ய குருமார்களின் சமாதி  அமைந்து உள்ள மிகவும் புனிதமானதும் சக்தி வாய்ந்ததுமான ஸ்தலமாக திகழ்கின்றது.

இந்த ஒன்பது சமாதிகளில் அந்த மகான்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

 இந்த இடம் தான் ராமாயணத்தில் சொல்லப்படும் கிஷ்கிந்தா.சுக்ரீவரும் அவரது வானர சேனையும் இங்கு தான் இருந்ததாக சொல்லப்படுகிறது.

நவபிருந்தாவனம் அமைந்து இருக்கும் இடம் ஒரு தீவு.

ஒரு புறம் துங்கா நதி ஓடுகிறது.மறுபுறம் பத்ரா நதி ஓடுகிறது.இரண்டும் சங்கமித்து துங்கபத்ரா நதியாக மாறும் இடத்தில் ஒரு பாறையின் மேல் உள்ளது நவபிருந்தாவனம்.

அநேகொந்தியில் இருந்து மோட்டார் படகு மூலம் தான் இந்த இடத்தை சென்று அடைய முடியும்.சீதையை தேடி புறப்பட்ட ராமரும் லக்ஷ்மணரும் இந்த பாறையின் மேல் தங்கி இருந்ததாக வரலாறு.மேலும் இந்த இடத்தில் தான் ராமர் ஆஞ்சநேயரை சந்திக்கிறார்.அந்த இடத்தில் தான் ஒன்பது மகான்களின் சமாதி அமைந்துள்ளது
 நவ பிருந்தாவனம்
1. ஸ்ரீ பத்மநாப தீர்த்தர் : . நவபிருந்தாவனத்தில் முதல் பிருந்தாவனம் ஸ்ரீமத்வமதயதி. காகதீய ராஜனின் அமைச்சராக இருந்த ஸோபன பட்டர் வியாகரணம், தர்க்கம் போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்கினார்.

2. ஸ்ரீ ஜய தீர்த்தர் : இரண்டாவது பிருந்தாவனம் ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரின்
 ( மத்வாச்சாரியாரின் நான்கு சீடர்களுள் ஒருவர்) சீடரான
ஸ்ரீ ஜய தீர்த்தருடையதா அல்லது ஸ்ரீ ரகுவர்யரின் பிருந்தாவனமாப என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

3. ஸ்ரீ கவீந்த்ர தீர்த்தர் : மூன்றாவதாக இங்கு பிருந்தாவனம் கொண்ட
 ஸ்ரீ ஜய தீர்த்தரின் சீடரான ஸ்ரீ வித்யாதிராஜரின் சீடர் ஆவார்.

4. ஸ்ரீ வாகீச தீர்த்தர்  : இவர் கவீந்த்ர தீர்த்தரின் சீடர். தனது குருவைப்போலவே பாண்டித்யம் கொண்டவர். இவர் தனது குருவின் அருகிலேயே நவபிருந்தாவனத்தில் பிருந்தாவனஸ்தராகி அருளுகின்றார்.

5. ஸ்ரீ வியாசராஜர்  : நவபிருந்தாவனத்தில் நடு நாயகமாக ஸ்ரீ பிரகலாதர் தவம் செய்த அதே இடத்தில் பிருந்தாவனம் கொண்டவர் வியாசராஜர். 
முன் அவதாரத்தில் இவரே பிரகலாதன், பின்னர் இவரே நாம் எல்லோரும் வழிபட ராகவேந்திரராக திருஅவதாரம் செய்தார்.

6. ஸ்ரீ ஸ்ரீநிவாச தீர்த்தர் : இவர் ஸ்ரீ வியாசராஜ சுவாமிகளின் பூர்வாச்ரம தமக்கையின் மகன் மற்றும் சீடர் ஆவார்.

7. ஸ்ரீ ராமதீர்த்தர்  : இவர்  ஸ்ரீநிவாச தீர்த்தருக்குப் பின் பட்டத்திற்கு வந்தார். இவர் வியாசராஜர் அருளிய கிரந்தங்களை போதிப்பதிலும், பிரவசனம் செய்வதிலும் பெரும் பங்காற்றினார்.

8. ஸ்ரீ சுதீந்த்ர தீர்த்தர்  : காமதேனுவாய், கற்பக விருட்சமாய் திகழும், இன்றைக்கு பூலோகமே மெய்மறந்து கொண்டாடும் ஸ்ரீராகவேந்த்ர சுவாமிகளை நமக்கு தந்தருளியவர் ஸ்ரீசுதீந்த்ர தீர்த்தர்.

9. ஸ்ரீ கோவிந்த ஓடயர்: இவர் ஸ்ரீவியாசராஜரின் சமகாலத்தவர், அவருக்கு முன்பே இங்கு பிருந்தாவனஸ்தரானவர்.

.நவபிரிந்தாவனத்தில் ஒன்பது சமாதி போக ஆஞ்சநேயர் மற்றும் ரங்கனாதருக்கும் சிறு சன்னதிகள் உள்ளது.

இந்த ஒன்பது மகான்களில் முதல் ஆசார்யர் ஸ்ரீ பத்மநாபா தீர்த்தர்.இவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.இவர் தான் மத்வசார்யரின் முதல் சீடர்.உலகின் முதல் ஜீவா சமாதி இவருடையது தான்.பல கால கட்டத்தில் வாழ்ந்த ஒன்பது மகான்களின் சமாதிகள் இங்குள்ளது.




Thursday, July 16, 2015

வளம் வழங்கும் வடகுரு ஸ்தலம்









சித்ரம் வடதரோர் மூலே வ்ருத்தா: சிஷ்யா குருர்யுவா |
குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்ன ஸம்சயா:

ஆலமரத் தின்கீழ் அதிசயம் காணீர் அருங்கிழவோர் சீடராம்
ஆசான் இளைஞராம் மௌனமே ஆசான் மொழியாகும்
சீடருக்கோ முற்றிலும் தீர்ந்தது ஐயம்.



சாமத்து வேதமாகி நின்ற தோர் சுயம்பு தன்னை -
என்று பூலோக சிவலோகம் என்று போற்றப்படும் வடிவுடையம்மன் சமேத தியாகராஜர் சிவாலய ஈசனை அப்பர் புகழ்ந்து பாடியுள்ள சென்னை திருவொற்றியூரில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலயம் தனித்துவம் கொண்ட.   சிவாலயம் அருகில் வளம் தரும் வடகுருபகவான் தலமாகத் திகழ்கிறது..
\
தென் திசை கடவுள் என்று போற்றி வழிபடப் படுபவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணம் என்றால் தெற்கு என்றும் ஞானம் என்றும் அர்த்தமாகும்.

தென்திசை கடவுளான தட்சிணாமூர்த்திக்கு சாந்தமூர்த்தி என்றும்  பெயர் உண்டு.

சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி சிவபெருமானின் 64 வடிவங்களில் 32வது வடிவமான ; குரு, பிரகஸ்பதி, ஆசாரியார் என்றெல்லாம் போற்றப்படும் குருவின் அருள் இருந்தால் தான் தெய்வ அருள் பெற முடியும்.

. குருவும் தெய்வமும் உலகியல் வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்கள்.  தெய்வத்தை அடைய குருவே வழிகாட்டுகிறார். 
ஞானகுருவாக இருக்கும் தட்சிணாமூர்த்தியை குரு  வழிபாடு, குரு பெயர்ச்சி நாட்களில் சிறப்பு ஹோமங்கள்,  அபிஷேகத்தின் போது 21 விதமான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம்  ராசிக்காரர்களுக்கு ஏற்ற பரிகார ஹோமம் நடைபெறும். 














 சிவாயங்களில் கருவறை வெளிப்புற தென் பக்க சுவரில் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் மகன்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோர் ஞானம் பெற குருவை தேடினார்கள். அவர்களுக்கு சிவபெருமான் வடவிருட்சத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்து பதில் அளித்தார். 

கல்லால மர (ஆலமரம்) அடியில் அமர்ந்துள்ள அவர், தன்கீழ் இடது கையில் ஓலைச்சுவடி ஏந்தி, வலது கீழ் கையில் ஞானமுத்திரை காட்டியபடி உள்ளார். இதனால் தான் தட்சிணாமூர்த்தி ஞான குரு என போற்றுகிறார்கள். 

 தட்சிணாமூர்த்தியை  வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம். ஓலைச் சுவடி ஏந்தி இருப்பதால்  அறிவுச் சுரங்கமாக கருதப்படுகிறார்.

ஞானத்தின் வெளிப்பாடான தட்சிணாமூர்த்தியை  தினமும் வழிபட்டால் வாழ்வில் மேன்மையும், அமைதியும் உண்டாகும். 

அலைபாயும் மனம், கட்டுப்பாட்டுக்குள் வரும்.  தட்சிணாமூர்த்தி வழிபாடு நம்மை ஆத்ம தியானத்துக்கு அழைத்து செல்லும்.

தமிழ்நாட்டில் . சென்னை நகருக்கு வடக்கே திருவொற்றியூர் தேரடி பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள குரு பகவான் மிகவும் விசேஷமானவர்; சிறப்பானவர். இங்கே தெற்கு நோக்கி இருக்க வேண்டிய தட்சிணாமூர்த்தி வடக்கு நோக்கி உள்ள மிகவும் அபூர்வமான கோவில் வட குரு ஸ்தலம் என்று சிறப்பிக்கப்படுகிறது...

திருவொற்றியூரை ஆதிபுரி என்றும்; பூலோக கைலாயம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.  மணலெல்லாம் திருநீறு என்று கூறினார் பட்டினத்தடிகள்.

இங்கு வேதங்கள் அதிகம் ஓதி வழிபட்டதை திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரது பதிகங்கள் கூறுகின்றன. வேத பாட சாலைகள் நிரம்பிய ஊர்.
 திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த யோகீஸ்வரர் என்ற வேதவிற்பன்னரிடம் நிறைய மாணவர்கள் வேதபாடம் கற்று வந்தனர். அப்போது அவர் வேதத்தின் வடிவமான தட்சிணாமூர்த்திக்கு 11 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைத்து வழிபாடுகள் செய்து வந்த இடத்தில்  தட்சிணாமூëர்த்திக்கு கோவில் கட்டப்பட்டது

 வைதீக முறைப்படி தினமும் 2 கால பூஜை நடந்து வருகிறது.  கொடி மரமோ, பலி பீடமோ இல்லை.  ஒரே ஒரு பிரகாரம் கொண்டது. மண்டபம் போன்ற முகப்புத்தோற்றம் உடைய கோவிலில் மூலவராக உள்ள  தனிச் சிறப்புகள் கொண்ட தட்சிணாமூர்த்திக்கு ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி என்று பெயர். 

11 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் முகத்தில் சாந்தம் நிலவும். தட்சிணாமூர்த்தி தலையில் சடாமுடி, வளர்பிறை, கைகளில் நாகம், ஓலைச்சுவடி, சின்முத்திரை, அபயஹஸ்தம் கொண்டு . வடக்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளார். 

வட திசை செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கு உரியது. வட குருத்தலத்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் தழைக்கும் .

தட்சிணாமூர்த்தி காலடியில் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோர் தான் இருப்பார்கள். 

திருவொற்றியூர் தலத்தில் மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக உள்ள அமைப்பு மிகவும் அபூர்வமானது .
இவரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் தட்சிணாமூர்த்திக்கு பால், பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்துகிறார்கள். 
 கேசரி, பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.  உற்சவரும் தட்சிணாமூர்த்தி தான்.

ஆதிசங்கரர், வேதவியாசரும் உற்சவ மூர்த்திகளாக காட்சித் தருகின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தன்று வேத வியாசருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. 
தட்சிணாமூர்த்திக்கு பூஜை நடத்தப்படும் போது தட்சிணாமூர்த்தி எதிரே முன் மண்டபத்தில் உள்ள  பாண லிங்கத்துக்கும் பூஜை நடத்தப்படுகிறது.

 தனிச் சன்னதியில் சிம்ம வாகனத்தில், அமர்ந்த கோலத்தில் பஞ்சமுக விநாயகரது 5 முகங்களும் ஒரே திசையை நோக்கி  சிறப்பான அமைப்பில். 6 அடி உயரத்தில் உள்ள  ஹேரம்ப விநாயகர் வணங்குபவர்களின் துயரங்களை களைந்து, எல்லை இல்லா இன்பம் தரும் சக்தி படைத்தவர். பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி
 8 திசைகளையும் பரிபாலிக்கிறார்
 கைகளில் உள்ள பாசம், தந்தம், அட்சமாலை, மாவெட்டி, கோடாரி, உலக்கை, மோதகம், கனி ஆகிய எட்டும் 8 திசைகளை பரிபாலிப்பதாக ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி நாட்களில்  சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பிரகாரத்தில் அரச மரத்தின் கீழ் மற்றொரு விநாயகர் உள்ளார்.
ருத்ராபிஷேகம்  11 கலசங்கள், 11 வேத விற்பனர்கள், 11 முறை ஸ்ரீருத்ர பாராயணம் செய்து அபிஷேகம் செய்வார்கள். 

காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும். வியாழக்கிழமைகள் மற்றும் குரு பெயர்ச்சி போன்ற சிறப்பு நாட்களில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறந்து இருக்கும்.

தென் திசையானது பிறவியைத் தரும் காமனுக்கும் இறப்பைத் தரும் யமனுக்கும் உரிய திசையாகும். தெற்குப்புற காற்று சுகத்தைத் தரும். எனவேதான் தெற்கிலிருந்து சுகமும் கிடைக்கிறது; மரண பயமும் உண்டாகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தியாகராஜ சுவாமி திருக்கோவிலின் நாயகராக விளங்கும் தியாகேசர் கிழக்கு நோக்கி நின்று தட்சிணாமூர்த்தியின் ஸ்வரூபத்தைக் காண்பதும்; தெற்கு நோக்கி நின்றுள்ள ஞான சக்தியான வடிவுடையம்மன் வடக்கு நோக்கி நிற்கும் குரு பகவானான
தட்சிணாமூர்த்தியைப் பார்க்குமாறு நின்றதும் வெகுசிறப்புடையதாகும். அம்பாளுக்கு ஞானோபதேசம் செய்யவே குருவானவர் வடக்கு நோக்கி நிற்பதாகத் தல புராணம் கூறுகிறது.

ஞான வடிவான அம்பாளை திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஆதிசங்கரர், வள்ளல் ராமலிங்க அடிகளார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் போன்றோர் பாடி மகிழ்ந்துள்ளனர்.

அகத்தியர் தட்சிணாமூர்த்தி பஞ்சரத்னத்தையும், ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தையும், விருஷபர் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தையும் பாடியுள்ளனர்.

தினமும் ஐந்து மணிக்கு முன்பே திறக்கப்படும் குரு பகவானின் கோவில் வாசல் வியாழக் கிழமைகளில் அதிகாலை நான்கு மணிக்கே திறக்கப்பட்டு இரவு பதினோரு மணி வரைகூட திறந்து வைக்கப் படுகிறது. வியாழக்கிழமைகளில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தட்சிணாமூர்த்தியைத் தரிசித்து குரு கடாட்சம் பெறுகிறார்கள். ஒன்பது வியாழக் கிழமைகள் அரிசிமாவில் கோலமிட்டு குருவை வணங்கினால், இல்வாழ்வு நன்றாக அமைவதாகவும்; ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6.00) இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கி புத்திரப் பேறு உண்டாவதாகவும்; 48 வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, கொண்டைக் கடலை மாலை அணிவித்தால் நல்ல வேலை கிடைக்கும் ..
வியாழக் கிழமைகளில்  குரு பகவான் தரிசனம்  , ஏக காலத்தில் பல நல்ல பலன்களை அருளும்..
திருவொற்றியூர் குரு பகவானின் அருட் கடாட்சம்.   நல்ல புத்தியும் ஞானமும் தரும் விசேஷமானது...